ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 13

“ஆயிரங்கால் மண்டபமும், ஐயாத்துரை வாத்தியாரும்”

கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையின் படித்துறைக்கு மிக அருகிலேயே ஆயிரங்கால் மண்டபம் ஒன்று இருக்கிறது. அதன் மேற்குப் பக்கத்தில், “ஸித்தி” அடைந்த சன்யாசிகளின் அதிஷ்டானகள் (சமாதிகள்) நிறைய இன்றும் இருக்கின்றன. இந்த ஆயிரங்கால் மண்டபத்தில்தான் ஒரு காலத்தில் “ஸமிஸ்கிருத கல்லூரி” சிறப்பாக நடந்து வந்தது என்றும், சரித்திர ஆராய்ச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி போன்ற அறிஞர்களும் இந்தக் கல்லூரியில் கற்றதாகவும் அவனுக்கு அப்பா அவனிடம் கூறுவார். இரவு நேரங்களில் “ஸமிஸ்கிருத நாடகங்கள், சொற்பொழிவுகள் நடைபெறும் என்றும், ப்ரும்மஸ்ரீ முத்துராமலிங்க அண்ணாவி (M.R. ஆதிவராகன் அவர்களின் தந்தை) கல்லூரியின் நிர்வாகியாக இருந்தார் என்றும் அவனுக்கு அப்பா அவனிடம் கூறுவார்.

சங்கர ஜயந்தி உத்சவம் வெகு விமர்சையாக ஐந்து நாட்கள் இந்த மண்டபத்தில் தான் நடந்து வந்தது. அந்த நாட்களில் அவனை அவனுக்குத் தாத்தாவும், அப்பாவும் அங்கு தவறாமல் அழைத்துச் சென்றதும், வேத பண்டிதர்களின் வேதகோஷம் அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்ததையும், பூஜை, தீபாராதனைகள் முடிந்தவுடன் மகாப்பிரசாதமாக அன்னதானத்தில் கிராம மகாஜனங்கள் கலந்து கொண்டு மகிழ்ந்ததையும், வீட்டிற்குத் திரும்பும் பொழுது அந்தக் கோடை வெயிலின் சூடு அவன் கால்களைத் தாக்காமல் இருப்பதற்காக அவனுக்கு அப்பா அவனைத் தனது இரு தோள்களின் மீது அமர்த்திக்கொண்டு, தான் செருப்பணியாத கால்களுடன் நடையும் ஓட்டமுமாக வந்ததெல்லாம் அவனுக்கு இன்றும் குளிர்ந்த நினைவுகளாகத்தான் இருக்கின்றன.

அந்த ஆயிரங்கால் மண்டபத்துள் வலம்புரி விநாயகர் , ஸ்ரீ காசிவிஸ்வநாதர், ஸ்ரீ விசாலாக்ஷி, ஸ்ரீ சங்கரர் சந்நிதிகள் இருந்தன. அதற்கு நித்யபடி பூஜையை பிரும்மஸ்ரீ ஐயாத்துரை வாத்தியார் செய்து வந்தார். அவர் ஒரு நல்ல வைதீகர். தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர். மிகச் சாதாரணக் குடும்பத்தை சேர்ந்தவர். வடக்கு மாடத் தெருவில் உள்ள பஜனை மடத்திற்கு எதிரில் ஒரு சிறிய வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.

ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் அவனுக்கு அம்மா, ஒரு சிறிய பித்தளை அடுக்குச் சட்டியில் அரைப்படி பச்சரிசியும், சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் பாசிப்பருப்பும், கொஞ்சம் நெய்யும், கொஞ்சம் மண்டை வெல்லமும் வைத்து ஒரு காகிதத்தால் நன்கு மூடி, அதன் மீது பழம், பாக்கு, வெற்றிலையுடன் தட்சிணையாக “ஒரு ரூபாயும்” வைத்து அவனிடமோ அல்லது அவனது அக்கா பாலாவிடமோ தந்து ஐயாத்துரை வாத்தியாராத்தில் கொண்டுக் கொடுக்கச் சொல்வாள். அதில்தான் பிரதோஷ பூஜைக்காக சிவனுக்கு சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்யத்தை வீட்டில் செய்து கொண்டு ஆயிரங்கால் மண்டபத்துக்கு மாலை நான்கு மணிக்கெல்லாம் ஐயாத்துரை வாத்தியார் சென்று விடுவார். பூஜை முடித்து மாலை ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் ஒருகையில் சர்கரைப் பொங்கல் பாத்திரமும், ஒருகையில் விபூதி, குங்குமப் பிரசாதமுமாக அவர் அவனது வீட்டிற்குள் நுழைவதை, தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் அவன் பார்த்து விட்டு ஓடியே வீட்டிற்குள் வருவான். அவன் வரும் வேகத்தைப் பார்த்து,” டேய் கண்ணா….மொதல்ல கையையும் காலையும் அலம்பிண்டு அப்பறமா எங்கிட்ட வா….” என்று ஐயாத்துரை வாத்தியார் அவனிடம் சொல்வார். அவருக்கு அவன் “சக்கரைப் பொங்கலுக்காகத்தான்” இப்படி ஓடி வருகிறான் என்று நன்றாகத் தெரியும். அந்தச் சர்கரைப் பொங்கலுக்கேன்றே ஒரு தனி ருசி உண்டு. அவன் வந்தவுடன் அவனுக்கு வீபூதி இடுவார். ஒரு சிறிய பாத்திரத்தில் சக்கரைப் பொங்கலை எடுத்து வைப்பார். அதன் பிறகு அவனது வலது கையில் கொஞ்சம் சர்கரைப் பொங்கலைத் தந்து,” ஒசத்தி வாயில போட்டுக்கோ…எச்சிப்பண்ணாதே” என்பார். “பெரியவரை நமஸ்காரம்” பண்ணிக்கோ என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். அவனும் செய்வான். அகஸ்தியரை அவனுக்குத் தெரியாது. குட்டையான, உடல்முழுவதும் விபூதி அணிந்த, பஞ்சகச்ச வேஷ்டியும், இடுப்பில் இறுக்கி கட்டிய அங்கவஸ்திரமும் , கைகளில் பிரசாதப் பையுமாக நடந்துவரும் “ஐயாத்துரை வாத்தியாரின் தோற்றத்தில்தான் “அகஸ்தியரை” அவன் கண்டான். இன்றும் பிரதோஷ வேளைகளில் அவன் சிவனோடு ஐயாத்துரை வாத்தியாரையும் நினைத்துக் கொள்ளுகின்றான்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரைப் பகுதியில் இருக்கும் சில கோவில்களில் தொடர் திருட்டு நடந்தது. அப்பொழுது இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கோவில் சிலைகளைத் திருடர்கள் உடைத்துப் போட்டனர். சில நாட்கள் அங்கு பூஜை நடந்தது. உடைந்த சிலைகளைப் பார்த்து ஐயாத்துரை வாத்தியார் கண்ணீர் விட்டார். மிகுந்த வேதனையுடன் ஒருநாள் அவனுக்கு அப்பாவிடம்,”சுந்தரம்..நல்ல அழகான வலம்புரி விநாயகரோடு தும்பிக்கையை ஓடைச்சுட்டானே” என்று தழுதழுத்த குரலில், கண்களில் நீர் முட்ட ஐயாத்துரை வாத்தியார் சொன்ன வார்த்தையால் அருகில் நின்ற அவனது மனதும் வலித்தது.

மிகவும் பாழடைந்து விட்ட அந்த ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியைச் சீர் செய்து “அண்ணாமலை” என்ற சின்னத்திரைத் தொடருக்கான படப்பிடிப்பும் நடந்தது. சமீபத்தில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், ரங்க்வாத்யாரின் மகன் “விஸ்வநாதனின்” முயற்சியுடன், கரந்தையார்பாளையம் பிராமண சமூகத்தின் இடமான அந்த “ஆயிரங்கால் மண்டபத்தை”த் தூய்மை செய்துள்ளனர். அதில் ஒரு பகுதியை “நீத்தார் கடன்” செய்யும் இடமாகப் பயன்படும் வகையில் சீர்செயதுள்ளதை அவன் சமீபத்தில் நேரில் பார்த்து மனம் ஆறுதல் கொண்டான். நல்ல செயல்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும், அது ஒருநாள், பாறைக்கு இடுக்கிலே விழுந்த அசுர வித்தாக அனைத்தையும் பிளந்து கொண்டு வெளிவரத்தான் செய்யும்.

தேரோட்டி “கிருஷ்ணையர்”

amv1அப்படி ஒரு ஆல, அசுர வித்துத்தான் “GLAD” கிருஷ்ண ஐயர். சந்திரா அப்பளம் டெப்போ என்ற ஒரு அப்பளக் கடையிலே அவரும் அவரது சகோதரரும் அப்பளம் எண்ணும் தொழிலாளியாக வேலைபார்த்து, பின்னாளில் “கணபதி லிங்கம் அப்பளம் டெப்போ” (GLAD) என்ற பெயரில் தன் மூத்த சகோதரர் ராமலிங்கம் ஐயருடன் சொந்தமாக அப்பளக் தொழிற்சாலையைத் துவங்கி, பலகாலம் அதை வெற்றிகரமாகச் செய்து வந்தார். அவருடைய அப்பளக் கடையில்தான் அவனுக்கு அம்மா வழித் தாத்தா சுப்பிரமணிய ஐயர் “கணக்கராக” வேலைபார்த்து வந்தார். இப்பவும் கிருஷ்ணையரின் குடும்பத்தினர் “கணக்கையர்” பேரன் என்றுதான் அவனை அறிமுகம் செய்து வைப்பார்கள்.

கிருஷ்ணையருக்கு டுண்டிவிநாயகர் மீதும், ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள்மீதும், சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாள் மீதும் அபார நம்பிக்கை. தன்னை வளர்த்த கிராமத்தின் நன்மைக்கு அவர் செய்த தொண்டுகள் அநேகம். அவன் நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடைபெற்ற “டுண்டிவிநாயகர்” கோவில் கும்பாபிஷேகத்திற்கு “GLAD” குடும்பத்தினர் சிறப்பாகத் திருப்பணிகளைச் செய்தனர். அப்பொழுது அரை டிராயரைப் போட்டுக் கொண்டு அவன் அந்தக் கோவிலைச் சுற்றி நண்பர்களோடு விளையாடியதும், கிருஷ்ணையர் அவனது இரண்டு கைகளிலும் சக்கரைப் பொங்கலையும், பஞ்சாமிருதத்தையும் இரண்டு பெரிய தொன்னைகளில் தந்து, “போருமோடா” என்று கேட்ட அன்பும் எத்தனை சுகமான நினைவுகள். அதேபோல “ஸ்ரீ ஆதிவராகர் கோவில்” தேர்த் திருப்பணிக்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், இளைஞர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு பாடம்.

ather
ஸ்ரீ ஆதிவராகர் கோவில் தேர், நூறாண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானது. அதன் நான்கு வெளிச் சக்கரங்களும், உட்புறமுள்ள இரண்டு சக்கரங்களும் ஒவ்வொரு வருடத் தேரோட்டத்தின் பொழுதும் ஒவ்வொரு பலகையாக ஓட்டுப் போட்டே ஒட்டி வந்தனர். தேரின் கனம் அதிகமென சில தட்டுகள் குறைக்கப் பட்டன. தேர்ச் சிற்பங்கள் எல்லாம் சிதிலம் அடைந்தும் கயவர்களால் களவாடப் பட்டும், தேருக்கடியில் எப்பொழுதும் பன்றிக் கூட்டத்தின் கழிவுகளுமாகத் தேரைப் பார்க்கவே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். நம்ம ஊர்த்தேருக்கும் நல்ல நாள் வராதா. நம்ம பெருமாளுக்கு நல்ல தேர் வேண்டாமா? என்று தவித்த எத்தனயோ உள்ளங்களில் கிருஷ்ணையரின் உள்ளமும் ஒன்று. அவனது உள்ளமும் ஒன்று.

அவன் அந்த ஏக்கத்தை “தேர்” என்ற சிறுகதையாக எழுதி, “கோமல் சாமிநாதனின்” வேண்டுகோளுக்கிணங்க அவரை ஆசிரியராகக் கொண்ட “சுபமங்களா” என்ற பத்திரிகைக்கு அனுப்பினான். அது 1993ம் வருடம் “மே” மாத இதழில் வெளியானது. அதைப் படித்துப் பாராட்டிய எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் “யானைச் சவாரி” என்ற பெயரில் தான் தொகுத்த சிறந்த சிறுகதைகள் தொகுதியில் சேர்த்து,” ஏய்..விஸ்வநாதா…உன்னோட “தேர்” சிறுகதைய “யானைச் சவாரி”த் தொகுப்புல சேர்த்திருக்கேன்டா” என்று நட்போடு சொன்னது அவனுக்குப் பெருமையாகவே இருந்தது.

கிருஷ்ணையர் தன் சிந்தனையைச் செயலாக்க விரும்பி அவரது கிராமத்து நண்பர்களுடன், முக்கியமாக ஆசிரியர் குருசாமி, கல்கத்தா கண்ணன் (லெஷ்மணவாத்தியாரின் மாப்பிள்ளை), “புரூக்பாண்டு” கோபாலகிருஷ்ணன், V.G.R(v.g.ramachandran) என்ற ராமன் போன்ற நண்பர்களின் துணையுடன் ஒரு நல்ல நாளில் தேர்த் திருப்பணிக்கான வேலைகளை அந்தப் பெருமாளை நம்பியே தொடங்கினார்.

கிராமத்துப் பெரியவர்களிடமும், வெளியூர்களில் உள்ள பக்தர்களிடமும் திருப்பணிக்கான காணிக்கைகளைப் பெற்றுவரத் தீர்மானித்து விரைவிலேயே செயல்படத் துவங்கினார். தேர்த்திருப்பணி குறித்த கடிதமும், பெற்றுக் கொண்ட பணத்திற்கான ரசீது புத்தகங்களும் தயார்செய்தனர். தங்களுது முயற்சியைத் திருவினையாக்க இறைவனையும், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளையும் வேண்டிக் கொண்டு “ரத வீதியில்” இறங்கினர். சென்ற இடமெல்லாம் பெருமாளுக்குக் காணிக்கை தடையின்றிக் கிடைத்தது. சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி என்று ஊரூராகச் சென்று பக்தர்களின் ஆதரவைப் பெற்றனர்.

இதற்குள் 1999ம் வருடம் கிருஷ்ணையர் இருதய வலியால் பாதிக்கப்பட்டு சென்னை, மந்தைவெளியில் உள்ள BSS மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த செய்தி அவனுக்குக் கிடைத்தது. அவன் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தான். உடல் நலிவுற்றிருந்தாலும் மனம் நல்ல திடமாகவே இருந்தது. “டேய்..விஸ்வநாதா..ஸ்ருங்கேரிக்குப் போனயா..” என்று கேட்டு விட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல், “நம்ம ஆச்சார்யாள் எல்லாம் நன்னா நடக்கும்னு சொல்லிருக்கார்…அதனால எனக்கு உடம்பு சரியாயிடும்..தேர் வேலைகளச் சீக்கிரம் முடிச்சு அடுத்த வருஷம் தேர ஓட்டிடணும் …நான் இவா கூட திருச்சிக்குப் போய் “BHEL”ஆபீஸ்ல தேர்ச் சக்கரத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யணும்…இந்தா நீயும் ஒன்னால முடிஞ்சத வசூல் பண்ணிக் குடு” என்று ஒரு ரசீதுப் புத்தகத்தை அவனிடம் தந்தார். என்ன ஒரு உற்சாகம் அவருக்கு. அவன் அவருக்காக பிராத்தித்துக் கொண்டான். அவர் குணமாகி வீட்டிற்கு வந்து சில தினங்களிலேயே தேர்த் திருப்பணி வேலைகளுக்காகப் புறப்பட்டுவிட்டார். அலுவலக விடுமுறை நாளில் அவன் ஊருக்குச் சென்றிருந்தான். அன்று இரவில் அவன் “தேர்” வேலைகளைப் பார்த்துவரத் தேரடிக்குச் சென்றான். அங்கு ஒரு பெரிய மரத் திண்டில் கிருஷ்ணையர் உட்காந்திருந்தார். பக்கத்தில் குருசாமி சார் நின்று கொண்டிருந்தார். சில நண்பர்களும் இருந்தனர். “என்ன மாமா…எதுக்கு இப்படி ராத்திரிக்கும் வந்து ஒக்காந்திருக்கேளே…கொஞ்சம் தூங்கிட்டு வாங்கோ ” என்றவனிடம்,” இத நல்ல படியா முடிச்சு சுவாமி தேரோட்டம் முடிஞ்சாத்தான் தூக்கமெல்லாம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கிருஷ்ணையர்.

அவரது ஆசையை பெருமாளும், ஆச்சார்யாளும் நிறைவேற்றி வைத்தனர். தேர் மிக அழகாக அமைந்து விட்டது. அவன் எப்படி ஒரு தேரை பெருமாளுக்குக் கனவு கண்டானோ அதே போல ரொம்ப அழகான தேரை பெருமாள் “கிருஷ்ணையர்” மூலமாகச் செய்து கொண்டார். 2000மாம் ஆண்டு சித்திராப் பௌர்ணமிக்கு முந்தய தினம் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளின் ப்ரும்மோஸ்ஸவத் “தேரோட்டம்” வெகு விமர்சையாக நடந்தது. பெருமாள் தேரில் அமர்ந்து அசைந்தசைத்து வரும் அழகை “கிருஷ்ணையரும்” பக்தர்களும் அணு அணுவாக ரசித்து மகிழ்தனர். அவனுக்கு ஆனந்தம் கரைபுரண்டோடியது. பெருமாள் சீக்கிரமே நிலையத்திற்கு வந்து விட்டார். நிலையத்திற்கு வந்ததும் “கிருஷ்ணையர்” சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து பெருமாளை வணங்கினார். எழுந்து நின்று பெருமாளை கண்ணீர்மல்க கைகூப்பினார். பக்தர்கள் கிருஷ்ணையரைப் பாராட்டினர். அவர் பெருமாளைக் கைகாட்டினார். ஊருக்கு உழைத்தல் யோகம் என்று மஹாகவி பாரதியார் சொன்னது இதைத்தானே.

தந்த வேலையை சரியாக முடித்ததனால் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளே, ஸ்ரீமான் கிருஷ்ணையரை 2000ம் வருடம் புரட்டாசி மாதம் சரஸ்வதி பூஜை தினத்தன்று தன்னோடு வைகுண்டத்திற்கு அழைத்துக் கொண்டார்.

(21.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

படங்கள் உதவிக்கு நன்றி :  அஸ்வின்,  K.V,. அன்னபூர்ணா

பதிவாசிரியரைப் பற்றி

15 thoughts on “” அவன், அது , ஆத்மா” (13)

 1. வணக்கம்

  பாராட்ட சில தகுதி வேண்டும் வெறுமனே நல்லா இருக்கிறது என்று சொன்னால் எப்படி ஆனால் எப்படி எழுதுவதென்று புரியவில்லை இருந்தாலும் மிக நேர்த்தியாக உள்ளது பழைய சம்பவம் கதையாக்கியுள்ளீர்கள் தொடரட்டும்

 2. அன்பரின் கருத்துக்கு நன்றி.
  மீ.வி.

 3. Really He s great…..nanga appove velambi mama kuda niraya service pannirukkom…..rengavadyar raman appove romba support to glad mama and velambi mama…iva uzhaippa yaralayum kutham solla mudiyadhu….kathu kidapargal….gurusamy sir kuda solluvar….dei…neenga thanda varungala thondargal….neenga than seyyanumnu sollirukkar…ippo nanga endha functionleyum vittu kodukama Aadhivarga perumal function ellam avar vitta edatha piduchu thondattri varugirom…pizhaigal irundal mannikavum…pl………..

 4. அவன் அது ஆத்மா
  கல்லிடைக்குறிச்சியில் வசிக்கும் எனது சகோதரர் சுப்பிரமணியம் சென்ற வாரம் எனக்கு அறிமுகப் படுத்தினார்.

  நாங்கள் கல்லிடைக்குறிச்சியில் வளர்ந்தவர்கள். எழுத்துக்கள் மிக அருமை . பலமுறைகள் படித்தேன். கல்லிடையில் வளர்ந்த எங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மனதில் மலர்ந்தன.

  அவரது ஆற்றொழுக்கு போன்ற நடை மிகவும் கவர்ந்தது.
  வாழ்த்துக்கள். வாழ்க ! வளர்க!!

 5. அன்பர் திரு. கணபதிராமன் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
  மீ.வி.

 6. மிக அழகான பதிவுகள். என்னை வீயெஸ் (V.S) என்றழைப்பார்கள் (வீரப்புரம் தெரு).கல்லிடைகுறிச்சியில் கிட்டு, ஆதிமுல வாத்தியாராத்து நீலகண்டன், ராமலிங்க சார் மருமான் விசு மற்றும் சீத்தாராமன் அப்பளாம் குட்டி சங்கர் ஆகியவர்களின் வகுப்பு. நீங்கள் அப்போது பிரபு என்றழக்கப்படுவீர்கள் என நினைக்கிறேன். வளர்க தங்கள் பணி.

  தற்போது சென்னையில் கோயம்பேட்டில் இருக்கிறேன்.

 7. Really nice.long ago  Lord krishnaa has driven the chariot for war! Now krishna (iyer) driven chariot for peace. Good Pulavar R.Ramamoorthy.  

 8. very many thanks kannan anna.  i am daughter of glad krishna iyer and on behalf of my mother, brothers and sister and his great grand children, i thank you very much from the bottom of my heart to have remembered my father and paid rich tributes to him.  

 9. I am the daughter of Dr.Mani of Kic.  Your article is very nice. I joined the group recently. Where can I get the first 12  parts.of Avann adu atthma..Really a nice tribute to Kicchamama. We should be proud that we know those great people and their family.Dedicated people .

 10. புலவரின் கருத்து அழகு. நன்றி.
  மீ.வி.

 11. அன்பு சகோதரி மீனாவின் பதிவுக்கு மிக்க நன்றி.
  அன்பன்,
  மீ.வி.

 12. அன்பு சகோதரி திருமதி. கோமதி அவர்களுக்கு,
  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முதல் பன்னிரண்டு அத்தியாயங்களும் இந்த “vallamai.com” மின்நூலிலேயே search என்ற இடத்தில் மீ.விசுவநாதன் என்று தட்டச்சு செய்தால் படிக்கலாம். உங்களது தந்தையார் திரு. மணி டாக்டர் அவர்கள் அம்மன் தரிசனத்தில்  ஆதிசங்கரரின் வாழ்க்கையை  கவிதையாக எழுதி வந்த பொழுது அதைப் பாராட்டிச் சொல்லுவார்.
  அன்பன்,’
  மீ.விசுவநாதன்
   

 13. I was borne and brought up in kallidai. My husband K.S. Lakshmanan is also from kallidai. Our hearts felt heavy after the achievement of Krishaiyar

 14. I WOULD LIKE TO INTRODUCE MYSELF AS KALLIDAIKURICHI RAMAKRISHNA DEEKSHITER SECOND SON STAYING IN MUMBAI THANE. I WAS BORN AND BROUGHT UP FROM KALLIDAI KURICHI.

  I
  I READ ARTICLE REGARDING KRISHNA IYER . AS WE ARE VERY CLOSE TO KRISHNA IYER AND FAMILY WE FELT VERY HAPPY ABOUT THE ARTICLE..

  MAY GOD GIVE YOUR MORE STRENGTH TO WRITE ABOUT MORE ARTICLES REGARDING ABOUT OUR ANCESTORS.

  MANI 

 15. Kanna – U had taken me to the good old days when I was proud to be a ‘chizhyan’ for Glad krishnan. I do not know when our village might a person of his like.

  I was pleasantly surprised to find my name also in your article about Glad Krishna Iyer. Kanna why cannot our village rename ‘Theradi Theru’ as ‘Glad Krishna Iyer Theru’. He deserves the gratitude of our villagers much more than this. I shall hereafter regulaaarly visit ur site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *