சீனப்பெண் கவிகள் வரிசையில் –
(காலம்: 9ஆம் நூற்றாண்டு)
தமிழில்: ஜெயந்தி சங்கர்
1.
மூங்கில் நிழலில் ஒரு குளம்
– ச்சாங் வென்ச்சி
யோசிக்கிறான் என் காதலன்
குளத்தருகில்,
கிளைகள் தொங்கும் நீரருகில்.
மரகத சிற்றலைகளோ
வட்ட வரிகளாக
தினமும் தினமும்
முடிவின்றி.
2.
மிதக்கும் செவ்விலைக்கு ஒரு கவிதை
– ஹான் ட்சுயூபின்
எத்தனை வேகம்
இந்த நீரின் ஓட்டம் !
பெண்களின் அந்தப்புரத்தில்
உறைந்து,
கடக்கின்றன,
நாட்கள் வெறுமையில்.
செவ்விலையே,
போ.
போய்க் கண்டு பிடி
ஆணுலகில்
யாரேனும் ஒருவனை.
3.
ச்சின் மெங் மாவட்டத்துக்கு ஒரு பாடல்
– ஹ்சுவே ச்சியுங்
படபடத்தன
பறவைகள்
செவ்விலைகள் மூடிய
கிளைகள் மீது.
ஓய்வெடுத்தன
கருப்பு எருமைகள்
பச்சைப் புல்வெளி மீது.
முன்னொரு காலத்தில்
நின்றது இவ்விடத்தில்
ச்சூ அரச மாளிகை.
ஆடலும் பாடலும்
நிறைந்த ஓரிடமாக.
இப்போதோ இங்கே
மெல்லிய மூடுபனி படர்கிறது
கோபுரங்கள் மாடங்கள் மீது.