பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா

1

செய்தி மற்றும் படங்கள்: புதுவை எழில், தகவல்: ஆல்பர்ட், அமெரிக்கா.

பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா – 12ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்  இனிதே நடைப்பெற்றது

இலக்கிய விழா:

முத்தமிழ் மன்றமும் ‘தமிழ் வாணி’ இணையத்தளத் தாளிகையும் சேர்ந்து ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விழா நடத்துவது வழக்கம். இவ்விரண்டின் நிறுவனரும் தலைவருமான அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன், இந்த ஆண்டும் நடந்தது. சிரமங்கள் இருந்தாலும் சிகரம் தொடும் அளவுக்குச் சிறப்பாகவே நடத்தி முடித்தார்.

விழா நடந்த இடம்: Maison de l’Inde, 7 (R) Boulevard Jourdon, 75014 PARIS. நாள்: சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில்  விழா தொடங்கியது. திரு & திருமதி வீரபத்திரன் இணையர் மங்கல விளக்குக்கு ஒளியூட்டினர். ‘அகர முதல…’ எனத் தொடங்கும் திருக்குறளைத் தம் கணீரென்ற குரலில் கடவுள் வாழ்த்தாகப் பாடிய ஆசிரியர் பி. சின்னப்பா,  தொடர்ந்து,   ”வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே…” என்ற பாவேந்தன் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடினார். (புதுச்சேரி மாநிலத்தில் இந்தப் பாடலைத்தான் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடுவது மரபு).

வரவேற்பு நடனம்:

செல்விகள் கோதண்டம் சாரா, ழுலியா இருவரும் பரத நாட்டியம் அழகாக ஆடி அனைவரையும் வரவேற்றனர். திரான்சி  நகர மன்ற உறுப்பினரான அலன் ஆனந்தன் தலைமை ஏற்க, பேராசிரியர் ப. தசரதன்  (தலைவர், பாரிஸ் தமிழ்ச் சங்கம்) முன்னிலையில் விழா மெல்லத் தொடங்கியது. அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் அனைவரையும்  வரவேற்றார். செல்வி கரீன் இலட்சுமி செயராமன் பிரஞ்சு மொழியில் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு  விருந்தினர்களாக அழைக்கப்பெற்றவர் இருவர். அவர்களுள் ஒருவர் கவிஞர்  ழிழோழ் புரோஸ்பர், (இவர் மொரீசியஸ் தீவின் தேசியக் கீதம் இயற்றிய கவிஞர்; அந்நாட்டின் கலை பண்பாட்டுத் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்) மற்றவர், திருமிகு ரஜோல். இவர் மடகாஸ்கார் நாட்டுத் தூதுவராலய அதிகாரி. இவர்கள் இருவரும் மேடை ஏற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர். அடுத்து, இந்திய சினி விழாத் தலைவரான தமிழியக்கன் தேவகுமாரன் மேடை ஏறினார். எம்.ஜி.ஆர்.

பேரவை தலைவர் முருகு பத்மநாபன், திருவள்ளுவர் கலைக்கூடம் தலைவர் அண்ணாமலை பாஸ்கர், வொரேயால் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் பாண்டுரங்கன் இலங்கைவேந்தன் வாழ்த்துரைகள் வழங்கினர். பின்னர், விழாத் தலைவர் அலன் ஆனந்தன் தம் தலைமை உரையை ஆற்றினார். தமிழியக்கன் தேவகுமாரன் சிறப்பு விருந்தினர்களைப் பற்றிப் பிரஞ்சு மொழியில் எடுத்துரைத்தார். பின், சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை, பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்கள் பிரஞ்சு மொழியில் ஏற்புரை நிகழ்த்தி நன்றி கூறினார்கள்.

கவியுரைகள்:

அடுத்த நிகழ்ச்சியாகக் கவியுரை நடைபெற்றது. முதுபெருங் கவிஞர் கவிதைச் சித்தர் கண. கபிலனார் ‘இலக்கியமும் வாழ்வும்’ என்ற தலைப்பில் அழகிய கவிதையை வடித்தார். இலக்கியமும் வாழ்வும் தனித்தனி அல்ல ; இரண்டும் ஒன்றே என்ற கருத்து அவர் கவிதையில் ஒலித்தது. ‘வெளிநாட்டில் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் கவிதாயினி பூங்குழலி பெருமாள், கவிதை ஒன்றைச்  சிறப்பான முறையில் எழுதிப் படித்தார். நகையும் சுவையுமாக அவர் கவிதை அமைந்தது.

நாட்டிய விருந்துகள்:

இடை இடையே  மோ நகரப் பூக்கள் கழக் கண்மணிகள் செல்விகள் திக் சந்தியா, ராஜி செல்வதாரணி, சக்ரேசு பெரோத்தா, சக்ரேசு ப்ரீத்தா முதலியோரும்  போந்துவாசு கலா பவனம் மாணவியர் செல்விகள் தீபிகா மித்திரன், பிரியங்கா மித்திரன், கணேஷ் ஆர்த்தி, அர்த்தனா, ஆர்த்தி முதலியோரும் நாட்டிய விருந்துகளை வழங்கி அவையை மகிழ்வூட்டினார்கள். செல்வன் இராமு பாலாஜி   வள்ளுவனாகவும் பாரதியாகவும் வேடம் புனைந்து வந்து திருக்குறள்களையும்  பாரதி பாடல்களையும் மழை எனப் பொழிந்தபோது அவையினர் கை தட்டி ஆரவாரித்து ரசித்தனர். செல்வனுக்கு மிகப் பொருத்தமாக ஒப்பனை செய்து வள்ளுவனாக, பாரதியாக நம் முன் காட்டிய கண்ணுள் வினைஞர் அண்ணாதுரைக்குப் பொனாடை போர்த்திப் பாராட்டினார் கோவிந்தசாமி செயராமன். பிறகு, வந்திருந்தோர் வயிறு நிறையும் வண்ணம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இலக்கியச் சிறப்புரைகள்:

பின், சிவனருட் செல்வர்  சுகுமாரன் முன்னிலையில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் இலக்கியச் சிறப்புரைகள் நடைபெற்றன. தம் தலைமை உரையில் ‘தற்காலப் பார்வையில் திருக்குறள்’ என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் நகைச்சுவை விசிறி வீசியது; புதுப் புதுக் கருத்துகள் மின்னலடித்தன. இக்கால இளைஞர்கள் எப்படித் திருக்குறளை அலசுகிறார்கள், இக்கால அறிவியல் கருத்துகள், மருத்துவக் கருத்துகள்… எப்படி அக்காலத் திருக்குறளில் பொதிந்துள்ளன… என்பனவற்றை அவர் சிறப்புற விளக்கினார்.

இக்காலக் கணினியின் படைப்பான web cam concept, ‘கண்ணும் கொளச் சேரி நெஞ்சே…’ என்ற குறளில் பொதிந்து இருப்பதை அவர் விளக்கியபோது அவையினர் வியப்பில் ஆழ்ந்தனர்.

பல்வேறு இலக்கியங்கள்:

‘ஊழ் வினை உறுத்து வந்தூட்டுமா?’ என்ற தலைப்பில் அடுத்து உரை ஆற்றியவர் ஆல்பர்ட் அறிவழகன். ஆன்மிகம் கலந்து பேசிய அவர், ஊழ் வினை கண்டிப்பாக உறுத்து வந்து ஊட்டும் என்பதை வலியுறுத்தி எப்படி என்பதை விளக்கினார். ‘கம்பனுக்கு மிஞ்சிய கொம்பன் எவனும் இல்லை’ என்ற தன் கருத்தைக் கேட்டார்ப் பிணிக்கும்  தகைமையில் நிலை நாட்டிப் பேசியவர் பேராசிரியர் தலின்ஞான் முருகையா. ‘பாரதி எப்படித்  தமிழ்க் கவிதைக்குச் சாரதி ‘ஆனான் என்பதை அழகாக விளக்கினார் புலவர் இரா. பொன்னரசு.

இறுதியாக உரை ஆற்ற வந்த திருமதி லூசியா லெபோ, ‘பாரதிதாசனைப் பார், அவன் தமிழுக்கே அதி தாசன் பார்’ என்று கற்பனை வளத்தோடு சுட்டிக் காட்ட இலக்கியச் சிறப்புரைகள் நிறைவு பெற்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம், பாரதி, பாரதிதாசன் பாடல்கள் எனப் பல இலக்கியங்கள் அலசப்பட்டு, அருமையான பல கருத்துகள் புலபடுத்தப்பட்டதை மக்கள் பேரார்வத்துடன் ரசித்து வரவேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும்

நாட்டியமாடிய நடன மணிகளுக்கும் செல்வன் பாலாஜிக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கினார் சந்திரன்.

முடிவுரை:

இடைவேளையின் போது புதுச்சேரிக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தார் பேராசிரியர் பெஞ்சமின். சுய  அறிமுகத்துக்குப் பின் பேசிய கோவிந்தசாமி செயராமன், புதுச்சேரிக் கல்லூரி  முன்னாள் மாணவர் சங்கம் ஒன்று தொடங்கலாம் என்ற கருத்தை முன் வைத்த போது பலத்த கைத்தட்டல். வழக்கம் போல், தன் நகைச்சுவை கலந்த பேச்சால் அவையைக் கவர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, நிகழ்சிகளைச் சுவையாகத் தொகுத்து வழங்கினார்.

முத்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பாலா ரவி, இறுதியில் நன்றி கூற, இலக்கிய விழா இனிதே நிறைவு அடைந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *