தர்மங்கள் எனப்படுபவை… – விமலா ரமணி

16

வர வர ஆன்மீகம் என்ற பெயரில் அக்கிரமங்கள் அதிகமாகிவிட்டன! மனிதனுக்கு வாழ்வில் ஒரு பாதுகாப்பின்மை, அச்சம், சமுதாயத்தில் தன்னைச்  சுற்றி நடக்கக் கூடிய வன்முறைகள்… நாளை நமக்கும் இக்கதி ஏற்பட்டால்..? என்கிற பயம்….. இவை போன்ற சாத்தியக் கூறுகளை நினைத்து ஏற்படும் குழப்பம்….. ஆக மனம் எதையாவது பற்றிக்கொள்ள  ஆசைப்படுகிறது… ஆசையில் தப்பில்லை…ஆனால் அதே ஆசை நம்மைப் படுகுழியில் வீழ்த்தாத வரை… யாவையும்  நலமே!

தண்ணீரில் நீந்தத் தெரியாத ஒருவன் ஒரு சிறு துரும்பைப் பற்றிக் கொள்வதைப் போல் இவனும் ஒரு  சாமியாரின் தாடியைப் பற்றிக் கொண்டு மூழ்கிப் போகிறான்! இவர்களது பலவீனம் அவர்களுக்குப் பலம்…. இவர்களது குழப்பம், அவர்களுக்குக் கோடிப் பணம். மறுபடியும் மறுபடியும் இது போன்ற நிகழ்வுகளின் காரணங்கள்தான் என்ன? நமக்கும் ஆண்டவனுக்கும் இடையில் தரகர் தேவை தானா?குழந்தை தடுக்கி விழுந்துத் தடுமாறித் தானே நடை பயிலக் கற்றுக் கொள்வதைப் போல் நாம் முன்னேற நாம் தானே நடை பழகிக்கொள்ள வேண்டும்?

பாடம் பயில ஆச்சாரியர் தேவை என்பார்கள். ஆனால் ஆசாரியாருக்கே அரிச்சுவடியில் சந்தேகம் வரலாமா? இது தான் பிரச்சனை. அரை குறையான ஞானம், பேச்சுத் திறமை, சாமர்த்தியமான சமாளிப்புகள்..இவைதான்… போலிச் சாமியார்களின் முதலீடுகள்… சென்செக்ஸ் புள்ளி விவரம் குறித்த கிராப்புக்கள் உள்ளன.. ஆனால் இது போன்றப் போலிச் சாமியாருக்குக் கிராப்புக்கள் இல்லை..! இவன் பிடிபடும் வரை எந்தக் கணினியும்  விவரம் சொல்வதில்லை!

உண்மை தான். நாம் தென்றலைப் பற்றிப் பேசுவது இல்லை. வாடைக் காற்றைப் பற்றி கவலைப்படுவது இல்லை… ஆனால், அதே தென்றல் புயலாக மாறிச் சேதத்தை ஏற்படுத்தும் போது தான் அது செய்தியாகிறது! அவனவன் வயிற்றுப் பிழைப்புக்கே  அல்லாடும் போது கோடிகளில் புரளும் இவர்களின் கொட்டங்கள் அடக்கப்பட வேண்டாமா?

இந்தியா ஏழை தேசம்.. எங்கிருந்து வந்தது  இத்தனை ஆடம்பர வாழ்க்கை? ஏஸி காரும் சொகுசு மெத்தையும் பாலும் பழமும் கைகளில் ஏந்தி வர ஒரு பெண்ணும்…. இதையெல்லாம் பார்த்து நம் ரத்தம் கொதிக்கவில்லை..ஆனால் செய்திகளை மட்டும் சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் ஞானம்  தேடிக் காட்டுக்குப் போனானாம். ஞானம் கிடைத்ததா என்று கேட்டபோது அவன் சொன்னான்.. ஞானம் என்ற பெண்ணை மணந்துகொண்டு விட்டேன்… இவனுக்குக் கிடைத்த ஞானம் இது. சொக்கனுக்குச் சட்டி அளவு என்பார்கள். நம் மக்களுக்கு சாமியார் அளவு! ஒரு காவி உடையும்,  ஒரு ஆஸ்சிரமும், காலடியில் பணத்தைக் கொட்டப்  பக்தர்களும்….சாமியாருக்கு ராஜ யோகம் தான்..அவர் பங்குக்கு யோகம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால்  அது  ராஜ ராஜ யோகம்….. இப்படி எல்லாம் ஆன்மீகம் அசிங்கப்படுத்தப்படுவதால் தான் உண்மை  சன்னியாஸிகளை அடையாளம் காண முடியாமல் போகிறது.

நதி தன் நீரைத் தான் பருகுவதில்லை, மரம் தன் நிழலில் தான் இளைப்பாறுவதில்லை.. தான் தருகிற கனிகளைத் தானே சுவைப்பதில்லை. இதே போல் தான் உண்மையான சாதுக்கள் தங்களுக்காக வாழ்வதில்லை  உலக நன்மைக்காக மக்களைக் கடைத்தேற்ற  வாழ்கிறார்கள்….. எத்தனை எத்தனை  சாதுக்கள்.. எத்தனை  எத்தனை  அடியார்கள்.. எத்தனை எத்தனை  பக்தர்கள்… ஆழ்வார்கள், நாயன்மார்கள்… சித்தர்கள்… மனத்துள் ஆண்டவனுக்குக் கோவில் கட்டிய பூசலார், தன் கண்களையே அர்ப்பணித்த கண்ணப்பர், பிள்ளைக் கறி சமைத்த சிறுத் தொண்டர்… தன் தலையாலேயே கயிலாயம் சென்ற  காரைக்கால் அம்மையார்.. இன்னும் யார் யாரெல்லாமோ… இந்தப் பக்திப் பட்டியல் மிகப் பெரிது. இந்து மதத்தின் புராதானத்தையும் பிராசீனத்தையும் காப்பாற்றிய அன்பர்கள்  அவர்கள் தான் உண்மையான தொண்டர்கள்.

பெரிய பெரிய புத்தகங்களைப் படிப்பவன்  பண்டிதன் அல்ல. உண்மையான அன்பைப் புரிந்து கொள்பவனே  பண்டிதன் என்கிறார் கபீர் தாஸ். இதனால் தான் வள்ளலார் ஆருயிருக்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்றார்.

யோகா வகுப்பு, தியான வகுப்பு  பாடம் நடத்தும் போலிச் சாமியார்களின் தியானம் எங்கு இருக்கிறது என்பது நமக்குப் புரியாமல் தான் நாம் சிஷ்யர்களாகக் கண்களை மூடிக் கொண்டிருக்கிறோம்…. கடைசியில் தியானம் முடிந்து கண்களைத் திறந்து பார்த்தால் எல்லாமே முடிந்து போய்க் கிடக்கிறது… நாம்  எல்லாவற்றையும் இழந்து, நஷ்டத்தை வெளியில் சொல்லவும் வெட்கப்பட்டு மெளனத்தைத் தொடர்வதால் தான்  போலிச் சாமியாருக்கு  இன்னும்

அதிக வகுப்புகள் எடுக்க வாய்ப்புக் கிடைக்கிறது… இவர்களை வளர விட்டதே நாம் தான்….. பெண்களைக் கருவியாக்கி இதுபோல் தன்  காமத் தாகத்தைக் தீர்த்துக்கொள்ளும் சாமியார்களை ஆரம்பத்திலேயே களை எடுத்திருந்தால் இத்தனை பயிர்கள் நாசமாகி இருக்காது!

இது விளம்பர யுகம்… எதையோ  செய்து எப்படியோ பேர் எடுக்க வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருக்கிறது. குறிக்கோள் என்பது லட்சியம் அதன் இலக்கணமே மாறிவிட்டது. இன்று சாமியார் அறைக்குக் காற்றோடு தானும் உள்ளே நுழைந்த நடிகையைத் தேடி இப்போது  அனைவரும்  அல்லாடுகின்றனர்….. எவ்வளவு விளம்பரம்…. நல்லதற்குத் தான் விளம்பரம் என்பது இல்லை…..

உண்மை தான்..இப்போது ஸானிடரி நாப்கின்லிருந்து  எல்லாவற்றிருக்கும்  விளம்பரம் தான்… எனக்கு ஆச்சரியம் அந்தக் காலத்தில் பத்துப் பிள்ளைகள் பெற்றவர்கள் எப்படித்தான்  வாழ்ந்தார்களோ? போகட்டும்… பல் தேய்ப்பதிலிருந்து… படுத்து உறங்கும் நேரம் வரை  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விளம்பரம்! பல் தேய்ப்பது நமது ஆரோக்கியத்துக்காக இல்லை…ரயிலில் கூட டிக்கெட் வாங்காமல் பயணிக்கலாம் என்று கூறுவதும்… ரொட்டி வாங்க வந்த கஸ்டமரிடம் தன் மொபைல் நம்பரை எழுதிக் காட்டுவதும்…. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

எதிலுமே நமக்கு அக்கறை இல்லாமல் போய்விட்ட காரணத்தால் தான் இப்படி  போலிச் சாமியார்கள்   ஆன்மீகத்திலும்  திருவிளையாடல் புரிய ஆரம்பித்துவிட்டார்கள்….

அதிர்ஷ்டம் என்பது ஆகாயத்திலிருந்து போலிச் சாமியார் அள்ளித் தருகிற மந்திர தந்திர மாயாஜால லேகியம் அல்ல…அதை உட்கொண்டால் அதிர்ஷ்டம் வராது…மயக்கம் தான் வரும்… மனம் தெளிவாக இருந்தால் குழப்பம் இல்லை. அதை விட்டு விட்டு அமைதி தேடி சாமியாரிடம் போய் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொண்டால் மிஞ்சுவது அசிங்கம் மட்டுமே!

நிம்மதித் தேடிப் போனவர்கள் நிம்மதி இழக்கிறார்கள். ஞானம் தேடிப் போனவர்கள் மானம் இழக்கிறார்கள். விடியலைத் தேடிப் போனவர்கள் இருளில் மூழ்கிச் சாகிறார்கள். சாமியார் மோட்சத்தைக் காட்டவில்லை… மூழ்கும் வழியைத் தான் காட்டுகிறார். சாமியார் பாஷையில் சொர்க்கம் என்றால்… அதற்கு அர்த்தமே  வேறு!

சில சித்து வேலைகளைச் செய்து அற்புதம் காட்டுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் இவர்களின்  செயல்கள் ஒரு குடுகுடுப்பைக்காரனின்  செயல்களே! ஜக்கம்மா சொல்கிறாள் என்று அவன் சொல்வதைக் கூட நம்பலாம்..ஆனால் ஜகன்மாதா சொல்கிறாள் என்று இவர்கள் சொல்வதை நம்பக் கூடாது.

புதுப் புது பைனான்ஸ் கம்பெனிகள் மக்களின் அறியாமையைப பயன்படுத்தி காளான்களாகத் தோன்றுவதைப் போல் இவர்களும் நம்புவது மக்களின் அறியாமையைத் தான். வாழ்வில் நான்கு வர்ணாசிரமத் தர்மங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்….. இன்றையச் சூழலில் அவை இப்படியாக அர்த்தம் செய்துகொள்ளப்படுகின்றனவோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது…

1.பிரும்மச்சர்யம்

அதாவது இன்றைய இளைஞர்கள் தன் கேர்ல் பிரண்டைத் தேடி அலைகிற கட்டம்! செல்போனும் மிஸ்ட் காலும் இந்தத் தர்மத்தின் பால பாடங்கள்! விளம்பரங்கள் கூட அப்படித் தான் சொல்கின்றன. ‘உங்கள் காதலனுடன் நாட் கணக்கில் பேச வேண்டுமா? எங்கள் கம்பெனியின்  மொபைலை பயன்படுத்துங்கள்  நிறைய ப்ரீ கால்கள்…..’ இது ஆரம்பம்  அதன் பின் காபி ஷாப்கள்  ரிசார்ட்கள் இது அடுத்த கட்டம்… மாஸ்டர் டிகிரி.

2.கிருகஸ்தாஸ்ரமம்

அதாகப் பட்டது….வரதட்சிணை என்ற பெயரில் மனைவியை அடிமைப்படுத்தி அவளை அண்டவிடாமல் செய்து விட்டு பின் தன் பசியைத் தீர்த்துக்கொள்ள கண்ட இடம் தேடி அலைவது. அலுவலகமோ அல்லது வேறு ஏதாவது ஏரியாவோ.. தேடி அலைவது…. இதன் அடுத்த கட்டம்.. மது, போதைப் பொருட்கள், நீலப் படங்கள்  போன்றவை.. இதற்குப் பட்டப் படிப்புக்கு உதவுவது, சில தரமற்ற  சினிமாக்கள். ஊடகங்களின் சில அபத்த சீரியல்கள்! ஒருவனுக்கு ஒருத்தி என்பது எய்ட்ஸ் நோயின் விளம்பரம் மட்டும் தான்! கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்று பாரதி சொன்னதற்கு அர்த்தம் புரியாமல் பெண்மையைப் பொதுவில் வைத்துவிட்டோம்! இதற்குப் பட்டி மன்றங்கள் வேறு…..

3.வானப்பிரஸ்தம்

முதியோர் இல்லத்தில் தன் மக்களால் புறக்கணிக்கப்பட்ட முதுமை, தனிமையில் அல்லாடுவது… தன் பையன் அனுப்பும் பணத்தை எதிர்பார்த்து பாசத்திற்காக ஏங்கும் அவல நிலை. கோவிந்தா கொள்ளி போடப்பட்டு, சாம்பலாகிப் போகும் தாய் மற்றும் தந்தை இவர்கள் சாகும் வரை செத்தவர்களாகவே வாழும் வானப்பிரஸ்த நிலை!

4.சன்னியாசம்

இதைக் குத்தகைக்கு எடுக்க, பல போலிச் சாமியார்கள் வந்துவிட்டார்கள்.

ஆக இவை தான் இன்றைய வர்ணாஸ்சிரம  தர்மங்கள். இனி ஆண்டவன் தான் அவதாரம் எடுத்து புதிய தர்மத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் அந்த ஆண்டவன் போலியாக இல்லாமல் இருக்கவேண்டும்!

வாழ்க இந்து தர்மம்! வாழ்க ஆன்மீகம்!! வாழ்க பாரதம்!!!

பதிவாசிரியரைப் பற்றி

16 thoughts on “தர்மங்கள் எனப்படுபவை… – விமலா ரமணி

  1. Dear Vimala Madam,

    I am lakshmi kothandaraman, from kumabakonam your netlog friend.

    You have given a short and sweet explanation about the latest happenings in the world, which is 100% right. I agree with you.

  2. The article makes a very interesting reading throwing light on the present social evils prevailing in our society in the name of spiritualism.

  3. தற்காலத்திற்கேற்ற பயன் தரும் நல்ல கட்டுரை

    அனைவரும் படிக்க வேண்டிய பாடம்

  4. I am 4m U.S.I dont know in India how spiritualism gone to the bottom!Any

    way still more people r there to protect Induism.Thank God

  5. very good article. every one should think about this and lead the life in good/correct way.

  6. Lot to think and action to be taken by every one.

    I have a doubt
    தன் தலையாலேயே கயிலாயம் சென்ற ஒளவையார் is it correct or Shree
    ” Karaikkal Ammaiyar ”

    By Lakshmanan

  7. தன் தலையாலேயே கயிலாயம் சென்ற காரைக்கால் அம்மையார் என்பதே சரி. குறிப்பிட்டமைக்கு நன்றி.

  8. Just I happen to see this article.Really it is wonderful.thanks for giving us such a nice article

  9. 100 % உண்மை..இந்தியாவில் அயல்நாட்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது .

    இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

    அதற்க்கு இனைய தளங்கள் வழிகாட்டுகின்றது …

  10. Excellent….fantastic article…The author with her beautiful flow of words, has shown us v clearly our present state of affairs…an eye opener…:):)

  11. தவறுவதே மனித வாழ்க்கை. வேசியின் பின்னே சுற்றியவரை ஆழ்வார்களில் ஒருவராக (விப்ர நாராயணர்) ஏற்கவில்லையா? ஆண்டவனுக்கு தரகர் தேவையில்லைதான், ஆனால் வழிகாட்டலுக்கு குரு என்றொருவர் தேவைப் படுகிறார். நீங்கள் சொல்கிற அந்த குருவிடமும் நல்ல ஆன்மீகம் கற்றவர் இருக்கவே செய்கின்றனர். ஆன்மீகத்திற்காக செல்லும் எவரும் எவரிடத்தும் ஏமாற மாட்டார்கள். பேராசைக் காரர்களும், அரை குறைகளுமே ஏமாறும். ஆண்டவனின் விருப்பம் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடந்துவிடுவதில்லை. பாவம் செய்யாதவர்கள் முதல் கல் எறியட்டும் என்றார் யேசு. அனைத்தும் இறைவன் சித்தம்!

  12. ‘…சொக்கனுக்குச் சட்டி அளவு என்பார்கள். நம் மக்களுக்கு சாமியார் அளவு! ஒரு காவி உடையும், ஒரு ஆஸ்சிரமும், காலடியில் பணத்தைக் கொட்ட…’
    – உண்மை தான். இந்த சட்டி இருக்கிறதே. அதை அவரவர் பராமரித்து வந்தால், ஆன்மிகம் வியாபாரப்பொருள் ஆகாது. நான் சொல்லும் சட்டி: உள்மனது. என் சட்டி பிரம்மாண்டம் என்று ஒரு வாழும் நெறி அமைத்துக்கொள் என்று தான் முண்டகோபநிஷத் சொல்கிறது.

  13.  இனி ஆண்டவன் தான் அவதாரம் எடுத்து புதிய தர்மத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் அந்த ஆண்டவன் போலியாக இல்லாமல் இருக்கவேண்டும்!
    வாழ்க இந்து தர்மம்! வாழ்க ஆன்மீகம்!! வாழ்க பாரதம்!!!

    என்றும் பயன் தரும் நல்ல கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *