கால(ன்) நிர்ணயம் …

0

இரா.சந்தோஷ் குமார்.

இந்த தேசிய நெடுஞ்சாலை ஏன் கறுப்புக் கம்பளத்தை விரித்துச் செல்கிறது? எதையும் நேர்மறையாக சிந்திக்க பழகியிருந்த எனக்கு இன்று ஏனோ எதிர்மறைச் சிந்தனையில் தடுமாறுகிறது மனம்.

பெங்களூருவிலிருந்து தருமபுரி வழியாக சேலம் பை பாஸ் சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நான் ஓட்டிக்கொண்டிருப்பது இன்னோவா கார். இன்று காலையில் தான் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடமிருந்து இந்த காரை வாங்கினேன். நண்பர் என்பதால் சில லட்சத்தை விலை குறைத்து எனக்கு கொடுத்தார். இந்த காரின் வயது ஒன்றரை ஆண்டு,

காரைச் செலுத்திக்கொண்டிருக்கிறேன். மித வேகமாக, கொகுசாக என்னை பயணிக்க வைத்தது இந்த இன்னோவா கார். கருமை நிற தேவதையின் அழகுப்போல கறுப்பு நிற இன்னோவா கார். அழகு என்றால் அப்படி ஓர் அழகு. இன்னோவாவின் உள்ளே இருக்கை மடியில் அமர்ந்து இவளை இயக்குகிறேன். ஒவ்வொரு கியர் மாற்றி , ஏற்றி குறைக்கும்போதெல்லாம் என்னுள் ஹார்மோன்கள் சந்தோஷக் கூத்தாடுகிறது.

வசதி படைத்த குடும்பத்தின் கடைக்குட்டி தான் நான் என்றாலும். நானாக ஒரு கார் வாங்க வேண்டும். என் சொந்த உழைப்பில் வாங்க வேண்டும். இதுதான் எனது ஒருவிதமான வினோத லட்சியமாக சிறுவயது முதல் இருந்தது.

இன்னும் சில மணிநேரம் தான். என் இல்லத்திற்குச் சென்றடைந்துவிடுவேன். என் அம்மா அப்பா விடம் நான் வாங்கிய இந்த காரை காண்பித்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று மகிழ வேண்டும். நான் கார் வாங்கிய விஷயத்தை இன்னும் அம்மாவிடம் சொல்லவில்லை. ஓர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் அல்லவா.

அம்மாவின் ஆசைப்படி நான் கார் ஓட்ட, அம்மா அப்பா காரின் பின் இருக்கையில் அமர்ந்தவாறே கோவை மருதமலைக்கு சென்று அம்மாவின் பேவரைட் கடவுள் முருகனை தரிசித்து வர வேண்டும். இந்த முறையாவது அம்மாவிற்காக அந்த முருகனை பார்த்து ஒரு ’ஹாய் ’சொல்ல வேண்டும்.

பின்பு இந்த இன்னோவை அழைத்துகொண்டு என் அண்ணன் அண்ணி இருக்கும் ஊருக்கு சென்று அவர்களையும் அழைத்துக்கொண்டு ஏதேனும் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உணவருந்தி விட்டு, மீண்டும் என் அம்மாவின் இருப்பிடத்திற்கு இவர்களை அழைத்து வர வேண்டும். என் அண்ணா என் அம்மாவிடம் “தம்பி நல்லா கார் ஓட்டுறான் மா. அவன் கஷ்டப்பட்டு வாங்கின கார்ல நான் வந்தது என்னை ரொம்ப ஆனந்தமாக்கியது அம்மா. இவளுக்கு சந்தோஷம் தாங்கல. பாருங்க.. “ என பெருமிதத்துடன் அவன் பேசும் அழகை புதிதாக நான் வாங்கிய ஐ போனில் படம் பிடித்து நான் ரசிக்க வேண்டும். கூடவே என் அன்னைப்போன்ற என் அண்ணியின் விழியில் பொழியும் பெருமித கண்ணீரை ரசிக்க வேண்டும். எனக்காகத் துடிக்கும் உயிர்களின் ஆனந்த உற்சாகமிடும் அந்த நொடியை நான் பார்க்க ஆவலாகச் செல்கிறேன்.

ஆசைகள்… ஆசைகள்… தீரா ஆசைகள்.

இந்தக் கார் வெறுமனே சொகுசு உபயோகத்திற்கு வாங்கப்பட்டது அல்ல. கெளரவத்தின் அடையாளத்திற்கும் அல்ல. இந்த கார் வாங்கிய பிண்ணனியில் என் வாழ்கை அடங்கியிருக்கிறது. என் கொடூர கஷ்டங்கள் புதைந்திருக்கிறது. பல துரோகிகளின் அனல் அம்புகளில் ரணப்பட்டு ரணப்பட்டு… உடம்போடு மனமும் கதறி கதறி புண்ணாகி மண்ணாகி வீழ்ந்து ஒரு முறை செத்து, ஃபீனிக்ஸ் பறவைப்போல எழுந்து எழுச்சியுடன் ஒரு சாதனையின் பரிசாக வாங்கப்பட்ட கார்.

வாழ்க்கையில் நமக்கான விமர்சகர்கள் எங்கிருந்து வேண்டுமானலும் கிளம்புவார்கள். அவர்களுக்கு நாக்கில் நரம்பு இருக்காது என்றாலும் அவர்களின் விமர்சன வாக்கில் நமக்கு ஒர் உந்துதல் கிடைக்கும். அள்ளி வீசும் நெருப்பு சொற்களை எல்லாம் இருதயத்தில் ஏந்தி இரத்த நதியில் கொதிக்க வைத்து மூளையை சூடாக்கி வேகமாக முன்னேறவேண்டும். அப்படித்தான் முன்னேறினேன். சமபளத்திற்கு வேலையா ? நானா அடிமை? விட்டெறிந்த வேலையோடு வீட்டில் வெட்டியா ஆறுமாதம் கழிந்த அந்த காலத்தில் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, அந்நிய சொந்தங்கள், நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பாடாய் படுத்தி வறுத்து எடுத்த அந்த ரணத்தில் மீண்டதே பெரிய விடயம்.

மீண்டு விட்டேன். ஓர் சொந்த அலுவலகம். தன்னம்பிக்கை 300 சதவீதம் வந்தப்போது அம்மாவிடம் சொன்னேன் ”அண்ணாகிட்ட இருக்கிற காரை போல ஒரு கார் சீக்கிரமா வாங்கிவிடுவேன் அம்மா” என சொல்லிய அடுத்த நாளில் எதிர்பாரா விதமாய் தொழில் பங்குதாரனாகிய நண்பன் துரோகி ஆனான். ஓடியவனை தேடும் தேடலில் சில்லரைகள் கரைந்தது. காசோலைகள் கிழிந்தன. வங்கியிருப்புக்கள் முடங்கின. அம்மாவிடம் சொன்னேன். “முடியும் அம்மா. அஞ்சு வயசுல நான் சொல்லியிருக்கேன்ல மா. உங்கள கூட்டிட்டு கார்ல போவேன்னு. செய்வேன் அம்மா. இப்போ முடியாது… ஆனா முடியும்மா “ என்றேன். அம்மா சொன்னார் “ நீ உன்னையக் காப்பாத்திக்கோடா கார்லாம் நமக்கு எதுக்கு “ அம்மாவின் ஆறுதலில் ஒரு ஏமாற்றத்தையும் கண்டேன்.

” கார் எல்லாம் நமக்கு எதுக்கு ? ” அம்மா ஏன் இப்படி விரக்தியாகச் சொன்னார். மனம் வலித்தது. ச்சே… அம்மாவின் ஆசையைக்கூட நிறைவேற்ற முடியல. பெத்தவங்க எப்போதும் நாம நல்லா இருந்தா போதுமுன்னுதான் யோசிப்பாங்க. அதுக்காக அவங்க ஆசைப்பட்ட சின்ன சின்ன விஷயத்தை நாம செய்யலைன்னு நாம பொறந்து என்ன பிரயோசனம்? அந்த ஆசையும் நான் தானே உருவாக்கி விட்டேன். செய்யனும்…

மீண்டும் புதிய அலுவலகம். புதிய முயற்சி, புதிய நம்பிக்கை, புதிய உதயம். நோ, பார்டனர். சாவோ வாழ்வோ அது நான் தான் முடிவு பண்ணனும். நினைச்சேன், உழைச்சேன், சாதிச்சேன். 8 மாத கடும் தவம். உறக்கம் என்றால் எப்படி இருக்கும் என கேட்ட காலம் அது.

” அம்மா இன்னும் ஒரு வாரத்தில நம்ம வீட்டு முன்னாடி கார் நிக்கும்மா. பாருங்க. இல்லனா பேரை மாத்திக்கிறேன். “ அம்மாவிடம் சொன்னப்போது, அம்மா என் தலையைக் கோதி, மெதுவாக வருடிவிட்டு, ”மெல்லமா வாங்கலாம் டா. முதல்ல பணம் சேர்த்து வை. உனக்கு கல்யாணம் ஆகணும். ஒரு பேரக்குழந்தை பார்க்கணும்டா. இதுதாண்டா ஆசை. கார் எல்லாம் சும்மாடா. உன் ஆசைக்கு என் விருப்பம் அவ்வளவுதான் “ அம்மா ஏதோ ஏதோ சொன்னாலும் , எனக்கு கார் வாங்குவதில் மட்டுமே கவனம் இருந்தது.

அது ஒரு மார்ச் மாதக் கடைசி வாரம். கார் வாங்கக் கூடிய நாட்கள் நெருங்கியது. முதலில் டவேரா வாங்கிப்போம், அப்புறம் இன்னோவா வாங்கிக்கலாம். புது மாடல் டவேரா பார்த்து விட்டேன். சந்தனமும் வெள்ளையும் கலந்த ஒரு நிறம். ரிவர்ஸ் பார்க்க டிஸ்ப்ளே. ஏசி எல்லாம் உயர் ரகம். முடிவு பண்ணிட்டேன். இரண்டு நாள் கழித்து வந்து அட்வான்ஸ் கொடுத்து எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தப்போது ……………………………………..

அந்த தீ………………! மின்சார விபத்து… திகு திகுவென… என் இலட்சியங்களை எல்லாம் அந்த தீ நாக்குகள் தின்று கொன்றுவிட்டு சென்றுவிட்டது. அது விடுமுறை நாள் என்பதால் நாங்கள் தப்பித்துக்கொண்டோம். அன்று நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என் இலட்சியக்கனவுளோடு நான் பொசுங்கியிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன். ஆனாலும் மனம் பதறவில்லை. கண்ணில் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை. இருதயத்தை இரும்பாக்கி கொண்டேன். யாரிடமும் இந்த விபத்து குறித்துப் பகிரவில்லை. அம்மாவிடம் அலுவலகம், பராமரிப்பு வேலை, என்று மற்றொரு பொய் சொல்லிவிட்டேன். ” கார் வாங்க முடியல அம்மா. ஆனா எப்படியும் வாங்கிடுவேன். சாரி அம்மா.” அம்மாவிடம் சொல்லாமல் என் மனதில் பேசிக்கொண்டேன். பேரை மாத்துறேன்னு சொன்னேன்ல … மாத்திட்டேன்…

” அதிர்ஷ்டமற்றவன் ”

அலுவலகத்திற்கு செய்த இன்சூரன்ஸ், விசாரணை எல்லாம் தோல்வி. அலுவலக தோழர்கள் பாவம், அவர்களை வேறு வேலைக்கு சேர்த்துவிட்டேன். அதிர்ஷ்டமற்றவனோடு அவர்களுக்கு இனி என்ன வேலை இருக்க போகிறது. கையில் ஒத்த ரூபாயில்லை. அன்று எனக்கு இருந்த ஒரே தோழன் மடிக்கணினி. கூட ஒரு தோழி ..

விழிகளால்
எதையும் குறையாக
பார்க்காதே… மனமே…
எதையும் நிறைவாக
பார்…
பரந்தமனதுடன் பார்!
இந்த பூமி
பல தத்துவங்களை ஒளித்திருக்கும்
அந்த வானம்
சில பொன்மொழிகளை மூடியிருக்கும்

குயிலும் காக்கையும்
புது மெட்டுகளை யாசகமிடும்
மயிலும் மானும்
நளின நடனங்களை சொல்லித்தரும்
எல்லாமே ரசித்திடு…
எல்லாமே… எல்லாமே …
எதையுமே எதையுமே
ரசித்திடு…
ஆனால் சொந்தமாக்கிக்கொள்ளாதே!
அது உன் காதல் தேவதையே என்றாலும்…
ரசித்துக்கொள்… ரசிக்க மட்டுமே செய்…
ஒருப்போதும் உறவாக்கி கொள்ளாதே.
உறவாக்க நினைத்து ஏமாற்றமடையாதே.

இந்த உலகம் வினோதமானது
எதுவோ ஒன்று சொல்லிக்கொடுக்கும்
கேட்காதே.
உலகத்திற்கு நீ சொல்
உலகத்தின் செவிகளில்
உன் சொற்களை கேட்க வை.

அதற்கு ஒரே வழி
நீ கவிஞனாக வேண்டும்.
கவிதையாகவே நீ மாற வேண்டும்.

கவிதை….. ஆஹா….. கவிதை….! கவிதைதான் என் தோழி. அன்று துரோகியான நண்பன் எனக்குப் பல இலட்சங்களை இழப்புக்கொடுத்து ஒடியப்போதும், இந்த தீ என்னை கொன்றப்போதும் என்னை ஃபீனிக்ஸ் பறவையாய் எழ வைத்தது நான் எழுதிய கவிதைகள் தான். அந்த கொடூர நாட்களில் நான் என்னை தேற்றிக்கொள்ள தஞ்சமடைந்த இடம் கவிதை. எழுதுவேன், வடிவமோ… உருவமோ … சந்தமோ… இலக்கணமோ… எதுவும் தெரியாது. ஆனாலும் எழுதுவேன். தீர தீர எழுதுவேன். தாகமெடுக்க … தாபமெடுக்க … ரசித்து ரசித்து எழுதுவேன். ஆழிப்பேரலையை விரல்நுனியில் நிறுத்திவிடுமளவிற்கு கற்பனையோடு எழுதுவேன். வைரமுத்து என்ன பெரிய வைரமுத்து. நான்தான்டா கவிஞன்… செறுக்கு மீசையை தடவியவாறு எழுதுவேன். கிட்டத்தட்ட கற்பனை தேசத்தில் என்னை நானே கடத்திக்கொண்டேன்.

மனம் லேசானது. தொழில் மீண்டும் சிறியதாகத் தொடங்கினேன். வருமானம் போதவில்லை. கடனாளியாக்கப்பட்டேன். முந்தைய இழப்புக்களுக்கு வாங்கிய கடன். அந்த கடனுக்கு வட்டி. வட்டிக்கு வட்டி, குட்டி எல்லாம் சம்பாதித்து சம்பாதித்து வியர்வையால் அடைத்தேன்.

கவிதையின் வளர்ச்சியில் கதை எழுதத் தூண்டப்பட்டேன். கதையின் பரிணாமத்தில் குறும்படம் எடுக்க ஆரம்பித்தேன். எடுத்தேன். என் கவிதையானவன். இனிய நண்பன் மாறனின் இயக்கத்தில் ஓர் அசாத்தியமான குறும்படம், உலக அரங்கில் மிக பிரமாண்டமாக வியந்து பேசப்பட்ட படம். வாழ்வை மாற்றிய படம். மாற்றியது. நண்பனின் முயற்சியில் எனது ஒரு சிறு பங்களிப்பு. அதில் கிடைத்த பெரும் வாய்ப்பு. திரைப்படக் கதாசிரியராக வளர்ந்தேன். நண்பன் விஜி பிரபல இயக்குநராக மாறினார். எனது ஒரு கதை சமூகத்தின் விதையானது. அந்த விதைக்கு கிடைத்த சன்மானத்தில் வாங்கியதுதான் இந்த இன்னோவா கார்.

சேலத்தைக் கடந்துவிட்டேன்.

என் ஐ போன் ஒலித்தது. அழைத்தது என் அம்மா “ எங்கடா இருக்க ? சாப்பிட்டியா ? எப்போ வருவ ? நாளைக்கு பொண்ணு பார்க்க போகணும். சீக்கிரமா வா டா ”

“ அம்மா .. நான் எத்தன தடவ சொல்றது…? பொண்ணுலாம் பார்க்காதீங்கன்னு ? “

“ எப்போது பார்த்தாலும் இப்படியே சொல்லு. சின்ன மருமகளை, மகளா பார்க்க ஆசையா இருக்கேன் டா……. வேறு எந்தப் பொண்ணாவது உன் மனசுல இருக்காளா ? சொல்லுடா உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு… பேசலாம். “

“ அய்யோ அம்மா. இப்போ தலைவலிக்குது… என்னை விடும்மா. உனக்கொரு ஒரு சர்ப்ரைஸ் அதிர்ச்சி நியூஸ் காத்திட்டு இருக்குமா… ஒரு மணி நேரம் வெயிட் பண்ணு. சரியா. நான் போன் வைக்கிறேன். “

“ என்னடா தலைவலிக்குதா… ஏன் என்னாச்சு? “

“ அய்யயோ அம்மா… ஒன்னுமில்ல… விடும்மா என்னை… “

கருப்பு நிறச் சாலையில்… இன்னோவை இயக்கிக்கொண்டிருந்த எனக்கு தீடிரென இப்போது தலையில் இடியொலி.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம், தூக்கம் இல்லாமை, மனச்சிதைவு , ஏமாற்றம், ரணம், ஆதங்கம், கோபம், ஆவேசம், ஆர்பாட்டம், ஆட்டம் எல்லாம் சேர்ந்து தலையில் குடிக்கொண்டு மரணச்சிலுவையில் என்னை விதிகளின் ஆணிகளில் அடிக்க காத்திருந்தது காலம். அவ்வப்போது வரும் தலைவலி. இம்முறை அதிகமாக.

என் முன்னிருக்கும் காட்சிகள் இருள ஆரம்பிக்கிறது. வானிலை மாறுகிறது. என் சூழ்நிலையும்!

வானத்தில் இடிக்காரன் மரண தாளம் அடிக்க… அடிக்க … பூமியில் மழை தேவதைகள் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள், மின்னல்காரி பளிச் பளிச் என எனை பார்த்து கண்ணடிக்கிறாள். இவளை என்றேனும் பிடித்துவிட வேண்டும் என எனக்கு வெகு நாட்களாக ஓர் ஆசையுண்டு… பிடித்துவிட துடித்தேன் இம்முறை……..!

என் சொந்த உழைப்பில் வாங்கிய கார் இன்னோவா தேவதைக்கு முன் பலத்த ஹாரன் ஒலி………………… சங்கொலியாய் கடைசியாய்க் கேட்டேன்.

டப்………………..!!

ஒரு மணி நேரத்திற்கு பிறகு :

நாளைய விடியல் தொலைக்காட்சியில்…

“ அரசியல் மந்திரம்” திரைப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது. இந்த படத்தின் இயக்கம் , கதை வசனம் ஆகிவை தேசிய விருது பெறுகிறது. அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியமைக்காக முதன் முறையாக பொது மக்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம் தேசிய விருது பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான கதை வசனம் எழுதியவருக்கு படத்தின் தயாரிப்பாளர் புது உயர்ரக காரை பரிசாக கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். ”

மற்றொரு டிவி சேனலில் ஒரு செய்தியாக:

”பவானி அருகே… தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கருப்பு நிற கார் எதிரே வந்த லாரியுடன் மோதிய கோர விபத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் அகால மரணமடைந்தார்.”

***

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *