சுரேஜமீ

குடும்பம்

 

peak111111111

வாழ்வில் வெற்றியடைய வேண்டும் எனக் கனவு காணும் ஒவ்வொரு மனிதனுக்கும் அதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒப்பற்ற களம்தான் குடும்பம் என்னும் அன்புச் சோலை! ஒரு இருபது முப்பது ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தால்,

ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கத்தினர்களாக, அனுபவத்தின் சாரமான வயோதிகர்களும், அன்பின் அடையாளமான அன்னை, தந்தையும், இனிமையின் இருப்பிடமான குழந்தைகளும்

இன்னும் பிற உறவினர்கள் என்று குறைந்தபட்சம் ஒரு ஐந்து அல்லது ஆறு நபர்களாவது இருப்பார்கள். ஆங்கே வாழ்வியல் பிரச்சினைகள் பல இருப்பினும், மனதிற்கு உரம் ஏற்றும் உணர்விற்குப் பஞ்சம் இருக்காது.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையில் பொதிந்து கிடக்கும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை அனுபவிப்பவர்கள் அறிவர்!

இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால், தொன்றுதொட்டு வரும் நம் கலாச்சாரத்தின் ஆணி வேராக இருப்பது நம் ஒப்பற்ற குடும்ப வாழ்க்கைதான்! நம் ஒவ்வொருவரது வாழ்வு நெறிகளின் முதல் பள்ளிக்கூடமே அதுதான்! அது மட்டுமின்றி, நம் எதிர்காலத்தைச் செவ்வனே செதுக்கக் கூடிய சீரிய பயிலரங்கமாகவும், அனுபவப் பாடசாலையாகவும் விளங்குகின்ற இந்தக் குடும்ப வாழ்வுதான் நம்மை தலைமுறை தாண்டி நிற்கச் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை!

ஆனால், இன்று தெரிந்தோ தெரியாமாலோ அதில் சில ஓட்டைகள் தென்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்து இருக்கிறது. அதற்கான காரணத்தையும், அதனை எவ்வாறு செப்பனிட்டு, நம் வாழ்வின் வெற்றிக்கு ஏதுவாக அமைத்துக் கொள்வது என்ற சிந்தனையை விதைப்பதுதான், இன்றைய பதிவின் நோக்கம்!

மனித உறவுகளைப் புரிந்துகொள்ள, வாழ்வின் எல்லைகளையும், அதன் தன்மையையும் அறிந்துகொள்ள, அன்பின் வலிமையை உணர்ந்து கொள்ள, ஆற்றலின் உந்துதலைப் பெருக்கிக்கொள்ள நமக்கு இருக்கும் ஒற்றை வாய்ப்பும், வெற்றியின் வாசலுக்கு நம்மை அழைத்துச் செல்லும் துணையும்,

நம் குடும்ப அமைப்புதான் என்பதை நாம் எளிதில் மறந்துவிட முடியாது!

அத்தகைய குடும்ப உறவுகள் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வியல் சுழலில் சிக்கித் தன்னைச் சிறிது சிறிதாக இழந்து வருகிற நிலையை, ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களும், ஊடகங்களும் நம் கண்முன்னால் நிறுத்துகின்றன என்பதை நம்மால் மறைக்க இயலாது!

அதற்கு சாட்சியாக……..

· முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்கள்

· குவிந்து கிடக்கும் மணமுறிவு வழக்குகள்

· சொத்துக்காக நடக்கும் வன்முறைச் சம்பவங்கள்

· பாலியல் வன்முறைகள்

· சிறார்களின் வரம்பு மீறிய குற்றங்கள்

என பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்!

இதைப் படித்தவுடனே, உங்கள் எண்ணத்திரையில், இவையெல்லாம் எல்லாக் காலங்களிலும் இருந்ததுதானே….இப்பொழுது என்ன புதிதா? என்ற வினா எழலாம்! தவறில்லை. ஆனால், குடும்பம் என்ற அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்தில், இம்மாதிரியான குற்றங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்ததேயொழிய, இன்றைக்கு இருக்கக்கூடிய அளவிற்கு வரம்பு மீறிப்போனதில்லை என்பதை நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்!

இன்றைக்கு குடும்பம் என்பது ஒரு தந்தை; தாய் மற்றும் ஒன்றிரண்டு குழந்தை எனச் சுருங்கியதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரச் சிக்கல் காரணமாக, கணவன் – மனைவி இருவருமே வேலைக்குச் செல்லக்கூடிய நிலையும் இருப்பதும்,

குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது பணியாளரிடத்திலோ விட்டுச் செல்வது என்ற நிலைதான்

குடும்ப அமைப்பில் விழுந்த முதல் ஓட்டை!

அதற்கு அடுத்தபடியாக நம்முடைய வயதான பெற்றோர்களை நம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதில் உள்ள உளரீதியான சிக்கல்கள் இரண்டாவது ஓட்டை!

மூன்றாவதாக, உறவுமுறைகள் சுருங்கியதும்; உறவுகளை வளர்த்துக் கொள்ள இயலாத சமூகச் சூழலும்!

நான்காவது, வாழ்வியல் விழுமங்களின் சிதைவு!

ஆக, மேற்கூறியவற்றின் தாக்கம், ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவனது சமூக அமைப்பையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதன் விளைவுதான், இன்றைக்கு குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது.

நண்பர்களே, உலகிலேயே ஓரறிவுள்ள ஒரு முல்லைக் கொடி காற்றில் தள்ளாடுவதைக் கண்டு பொறுக்காமல், வீதி வழியே தேரினில் வந்த மன்னன் பாரி, அந்தத் தேரை, செடிக்கு அருகினில் நிறுத்தி, அதன் கொடியைத் தன் தேரின் மீது படரச் செய்து, தான் நடந்தே அரண்மனைக்குச் சென்றான் என நாம் படித்திருக்கிறோம் என்றால்,

நம்முடைய கலாச்சாரம், வாழ்வியல் தொன்மைகள், குணநலன்கள் எத்தகையதாக இருந்தது என்பதை நாம் சற்று யோசித்துப் பார்த்தோமானால், நிச்சயமாக, எந்த ஒரு தாயும்; தந்தையும் முதியோர் இல்லங்களில் இருக்கமாட்டார்கள்!

பெற்றவர்கள் கூட இருப்பதால், நம் சந்ததிகளுக்குக் கிடைக்கும் நன்மையும்; நமக்குக் கிடைக்கும் ஆறுதலும் நம்மை மேலும் மெருகூட்டி, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி குவிக்கச் செய்யும்!

சிறிது சிறிதாக நம்மைச் சுற்றியுள்ள உறவுகள் அனைத்தும் வலிமை பெறும்!

குழந்தைகளுக்கு நன்னெறியும்; நமக்குத் தகுந்த ஆலோசனையும் கிடைக்கும்!

மணமுறிவு தேடும் அளவிற்கு இருக்கக்கூடிய மன உளைச்சலுக்குத் தகுந்த நிவாரணமாக முதியவர்களின் அன்பும், அரவணைப்பும் இருக்கும்!

வாழ்வியல் விழுமங்கள் மீட்டு எடுப்பதன் மூலம் நம்மால் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள மனிதனாக இருக்க முடியும்! சமூகக் குற்றங்கள் நிச்சயம் குறைவதற்கான முதல் நிலையாகவும் இருக்கும்!

ஆகவே, நல்ல குடும்பத்தைக் கட்டிக்காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக இருப்பதன் மூலம், ஒரு அப்பழுக்கற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்!

அதற்கு அடிப்படையாக அனைவரிடத்திலும் இனிமையாகப் பேசுவோம்…..உறவுகளை வளர்ப்போம்….

உறுதியாக சிகரத்தை நோக்கிப் பயணிப்பதற்கு ஒரு பலமாக, பாலமாகக் குடும்பம் எனும் கட்டமைப்பு நமக்குத் துணை புரியும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்காது!

வாழ்க்கை ஒரு இனிய பயணமாக இருக்கும்!

தொடர்ந்து சிந்திப்போம்………..

அன்புடன்

சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *