சுரேஜமீ

நட்பு

peak1111111111 (1)

சிறுவயதில் பள்ளிப் பாடத்தில் ஒரு கதை உண்டு. ராமு சோமு என்று இரு நண்பர்கள் காட்டு வழியே பயணம் செய்வார்கள். பயணத்தின் ஊடே ஒரு கரடி எதிரில் வரக் கண்டு, அதனிடமிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசிக்கும் போது, ராமு சோமுவின் துணையோடு மரத்தில் ஏறிக் கொள்ள, சோமு தனியே விடப்படுவான். ராமு, சோமுவைக் காப்பாற்ற மறுக்க, கரடி அருகில் வர, சோமு தன் சமயோசித புத்தியால் மூச்சை உள்ளிழுத்து, இறந்து விட்டதுபோல் நடிப்பான். கரடி சோமுவை நுகர்ந்து பார்த்து, அவன் மூர்ச்சையற்று இருப்பது கண்டு விலகிச் சென்றுவிடும்.

ராமு கீழிறங்கி வந்து, சோமுவிடம் கரடி உன் காதருகே வந்து என்ன சொன்னது எனக் கேட்பான்? அதற்கு சோமு, ஆபத்தில் உதவாத நண்பர்களோடு சேரக் கூடாது என்பான்.

இதுதான் கல்வி!

ஆனால், நடைமுறை வாழ்வில், அறிவுக்கு முன்னால் உணர்ச்சிகள் முடிவெடுப்பதால்,

நம்மால் நட்பில் எது நல்லது? எது கெட்டது? என அறிய முடியாமல், பல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அனுபவம் தரும் பாடம்தான், அடுத்த தெரிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று சொன்னால், மிகையாகாது!

உன் நண்பன் யார் என்று சொல்; நீ யாரென்று சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு!

அந்த அளவிற்கு நம் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பது நட்பு! அத்தகைய நட்பை நாம் எவ்வாறு தேர்வு செய்கிறோம் என்பதில்தான், நாம் அடையும் இலக்கும் அதற்கான நகர்வும், அதனை அடைய நாம் பயணிக்க வேண்டிய தூரமும் இருக்கிறது என்பதை அறிந்தால், நிச்சயம் வெற்றி நம் கையில்!

முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு! – திருவள்ளுவர்

ஆக, நட்பு என்பது முகமன் கூறுவதில் அல்ல என்பதை திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்றால், நட்பின் வலிமையை நாம் அறிதல் வேண்டும் என்ற அவசியத்தை, அவர் வலியுறுத்துகிறார் என்பதை

சிறுவயது முதலே நாம் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அதற்கேற்ப நம்மைப் பழக்கிக் கொள்ளவேண்டும்.

நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த கோப்பெருஞ்சோழனும்; பிசிராந்தையாரும் நாம் அறிந்ததே. கோப்பெருஞ்சோழன், தான் பெற்ற பிள்ளைகள் தனக்குப் போட்டியாக, ஆட்சிக்கு வரவேண்டும் என எண்ணிப் போர் தொடுக்க முனைந்த போது, அதைக் கண்டு மனம் வெதும்பி வடக்கு நோக்கி இருத்தல் எனும் பண்டைக்கால உண்ணா நோன்பு முறையில் உயிர்விட எண்ணி, இருக்கை அமைத்த போது,

இரண்டு இருக்கைகள் அமைக்கச் சொன்னானாம்! ஒன்று அவனுக்கும்; மற்றொன்று பிசிராந்தையாருக்கும்! அந்த அளவுக்கு அவன் பிசிராந்தையார் மீது நம்பிக்கை கொண்டது,

எப்படியும் செய்தி கேட்டு, தாம் துன்பத்தில் இருப்பது தாங்காமல், தம் நண்பர் வருவார் என்ற திடமான எண்ணம்,

பிசிரந்தையாரை அவன் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தது!

ஒருவரை ஒருவர் பார்க்காமல், ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த அன்பின் ஆழத்திற்கு, இவர்கள் நட்பு ஒரு சான்று என்றால், இலக்கியங்கள் நம் வாழ்வில் எந்த அளவு உந்துதலாக இருக்கிறது என்பது புரியும்!

‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று!

என்று நல்லவர் நட்பு பற்றி மூதுரை எனும் சங்க இலக்கியம் சொல்கிறது!

இவையெல்லாம் ஏதோ நாம் பள்ளியில் படிப்பதற்காக மட்டும் படைக்கப்பட்ட நெறிகள் அல்ல; மாற்றாக, நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சிய வழிகள் என்பதை மனிதில் ஊன்றி விதைத்தலில்தான், ஒரு மகத்தான சமுதாயம் உருவாக முடியும் என்ற நம்பிக்கைதான், நம் இன்றைய தேவை!

கேட்டினும் உண்டோர் உறுதி……….என்கிறார் திருவள்ளுவர்!

இன்பத்தில் பங்கெடுப்பது மட்டுமல்ல நட்பு; துன்பம் வரும்போதுதான் நட்பின் வலிமையை நாம் உணர முடியும்! நட்பு என்பது நம்மை ஒதுக்குவதாக இருக்கக் கூடாது; நம்மைச் செதுக்குவதாக இருக்க வேண்டும்! இரத்த உறவுகளைக் காட்டிலும் சிறந்த உறவு ஒன்று உலகில் உண்டென்றால், அது நட்புதான்!

அத்தகைய தனிச் சிறப்பு பெற்ற, உயர்ந்த நட்பை எப்படித் தேர்வு செய்வது என்பதில்தான், நம் அறிவையும்; அனுபவத்தையும் ஒரு சேரப் பயன்படுத்தி, நம் வாழ்வில் சிறந்த பண்புகளை அடைய முடியும். பள்ளிப் பிராயத்திலேயே, நம்மைச் செதுக்குவதற்காகத்தான், நெறிநூல்கள் பாடமாக்கப் படுகின்றன. அதன் பயனை நாம் சரியாகப் புரிந்துகொண்டு, நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது!

புதிதாக எதையும் சொல்ல முனைவதல்ல இந்தத் தொடரின் நோக்கம்; மாறாக, நம் இலக்கியங்கள் கற்றுத் தந்தவற்றை, நாம் படித்த வெற்றியின் கோட்பாடுகளை, உங்களுக்காகத் தொகுத்து, ஓரிடத்தில் வழங்குவதும், உங்கள் சிந்தனையைத் தூண்டுவதும்தான்,

நம்மைச் சிகரத்தை நோக்கிப் பயணிக்க வைக்கிறது………..

தொடர்வோம் பயணத்தை!

அன்புடன்

சுரேஜமீ

—————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *