பொதிகை மலைச்சாரலில்…

4

 

தி. சுபாஷிணி

 

அன்று தென்காசியே குளிரூட்டப்பட்டது போல், சூரியனை ஒளித்துத் தாழிட்டுவிட்டு, சந்திரன் நம்மைக் காண வந்தது போல் ஓர் குளிர்ச்சியான அனுபவம். வான் கொள்ளா அளவுப் பஞ்சுப் பொதியாய் மேகங்கள், பொதிகை மலையில் ஒளிந்து விளையாடிய பொழுது உரசும் உரசலில், சாரலாய், மழையாய்ப் பொழிந்து கொண்டிருந்தது. பல நாட்களாகத் தவமிருந்த எனது தாபம் இந்த மூன்று நாட்களில் தீர்ந்தது. மூன்று நாட்களும் தென் காசியில், பொதிகையின் மடியில் வாசம். மூன்று நாட்கள் முடிந்த நாலாவது நாள், சென்னை செல்ல வேண்டும். மனதும், உணர்வும் இங்கு ஒன்றி விட்டது. என்றும் என் வாழ்க்கை சென்னையில் தானே இருக்கின்றது. சென்று தானே ஆக வேண்டும். வாசலில் ஆட்டோ ஓட்டுநர் தேவ சகாயம் (தெய்வம் அனுப்பிய சகாயர்) வந்து விட்டார். ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது. சில நிமிடங்களில் மாடிக்கு வந்து விட்டார். நான் மாடி வீட்டில் தான் விருந்தாளியாக வந்திருந்தேன். அவ்வீடும் மரங்கள் போர்த்திய வீடாகத் தான் இருந்தது. வாசலில் பார்த்த கொய்யா மரம், அதன் கனிகள், மேலே மஞ்சள் வண்ணமாக சாதாரண கொய்யாவாக இருப்பினும், உள்ளே செவ்விதழாய்ச் சிவந்த நிறமுடையதாய் இருந்தது. அதன் சுவை தேன் சுவை. அதைத் தேன் கொய்யா என்றே சொல்லலாம். செம்பருத்தி மரமும், ஒரு மஞ்சள் நிறப்பூச் செடியும் கலந்து இருப்பதாய் சிவந்த செம்பருத்தியும் மஞ்கள் நிறப்பூவும் மாறி மாறி வைத்தாற்போல் அழகாய்ப் பூத்துக் குலுங்கியது. வீட்டின் பக்கச் சுவரின் அடியில் ஒருவகைக் கீரைக் கொடி, ஃபெவிக்கால் பசைபோட்டு ஒட்டினாற்போல் ‘சிக்’கென்று ஒட்டிப் படர்ந்திருந்தது. புதுமையாய் பசுமையாய் இருந்தது. வீட்டின் இரு பக்கங்களில் தென்னை மரங்களும், பின் புறத்தில் மாமரங்களும், தென்னை மரங்களும் வளர்ந்து சோலையாக்கிக் கொண்டிருந்தன.

“சுபா! ஆட்டோ வந்து விட்டது. உன் சாமான்களை அவரிடம் கொடு” என்று, என்னை விருந்தாளியாக ஏற்றுக் கொண்டவர் கூறினார். தேவ சகாயம் என் சாமான்கள் அடங்கியப் பையை எடுத்துக் கொண்டு இறங்க, நானும் பின் தொடர்நதேன். மழையும் வேகமாகப் பெய்து விடை கொடுக்கத் தயாராகியது. நான் இருப்பது “மேலகரம்” என்னும் பகுதியில் பாரதி நகர் என்னும் இடம். நான் இப்பொழுது தென்காசி போக வேண்டும். என் பின்னால் அவரும் வந்தார். நான், ‘மழையாய் இருக்கிறதே. நீங்கள் இறங்காதீர்கள்’ என்றேன். என் வார்த்தைகளை அவர் செவியில் வாங்கிக் கொள்ளவில்லை. இருவரும் மாடிப்படி இறங்கி, ஆட்டோ வரை வந்தோம். எனக்கு உடனே சங்க இலக்கியங்களிடையே என் நினைவு ஓடியது.

அக் காலத்தில் மன்னர்கள் விருந்து பகிர்ந்து, பரிசில்கள் நல்கி, அவர்கள் விடைபெறுங்கால் அவர்களுடன் ஏழு அடிகள் நடந்து விடை கொடுத்து அனுப்புவர் என்கின்ற பழக்கம் விருந்தினை மதித்தது பற்றி எண்ணியது. விடாது மழை பெய்யும் வேளையில் கூட கவலை கொள்ளாது என் கைகளைப் பற்றுகிறார் இவர் . பொதிகையில் விழும் மழை நீரினிடையே ஒரு “தமிழ்”கவி பொழிகிறது.

“கற்றார் பிரிவும் கல்லாதார் ஈட்டமும்

கைப்பொருள் அற்றார் இளமையும் போய்க்

கொடுத்ததே அருஞ்சுரத்து”

என்று கூறுகிறார் அவர். மழைப் பொழிவு உணரவில்லை. குளிர் காற்றையும் பொருட்படுத்தவில்லை. என் பிரிவை எங்கேயோ கொண்டு நிறுத்தி விட்டார் அவர்.

ஆட்டோ கிளம்பத்தானே வேண்டும். அது கிளம்பியது. அத்தெரு திரும்பும் வரை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ‘கைப்பொருள் அற்றார் இளமையும் போல’ என என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது.

சென்னையிலிருந்து நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தொலைபேசியில் கூறியதிலிருந்தே, “எப்போது வருவாய்” என்றுக் காத்துக் கொண்டிருந்தவர். தென் காசியிலிருந்து மேலசுரம் கிளம்பி விட்டேன் என்றதும் மாடி வராந்தாவில் வந்து நின்று விட்டார். அன்று மாலை ஆட்டோவில் வந்து இறங்கியதும், ‘வா வா’ என வாய் கொள்ளா வரவேற்பு. என்னை உட்கார வைத்து, சமையல் அறை சென்று பால் காய்ச்சிக் காபி போடத் தொடங்கி விட்டார். பின் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வெளியில் அறையில் வந்து அமர்ந்தார். நான் போய் காபி போட்டு அவருக்குக் கொடுத்தேன். அவரிடம் இருக்கும் முறுக்கு, தட்டை, கொய்யாப்பழம் என தட்டில் அடுக்கி வைத்து விட்டார். நான் கொடுத்தக் காபியைக் குடித்ததும், ஆஹா! என்னமா இருக்கு! ஃபில்டர் காபிபோல். நான் போட்டால் இவ்வளவு பேஷா இருக்கிறதில்லையே! பேஷ்! பேஷ்! எனப்பாராட்டு மழை தான். பொதிகையில் சாரலுக்குப் போட்டியாய் இது இருந்தது. என் அப்பாவும் இப்படித்தான் மனசார வாயாரப் பாராட்டுவார்.

மணி 3.30 ஆயிற்று. ‘சுபா!’ என அழைத்தார். மீண்டும் தொடர்ந்தார். கல்விக்கு அதிபதி யாரு? சரஸ்வதி தானே? அவள் யாரிடம் தங்குவாள்? என வினவ, இதென்ன கேள்வி! ‘கற்றாரிடம்’ என்றேன். அப்படியா! எனக் கேட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்தார்.

எல்லா உயிர்க்கும் அன்னையானவளான கலைமகளின் தளிர் பாதங்கள் எங்கு இருக்குமாம்? அவளுடைய பாதங்கள் மென்மையானவையல்லவா? அம்மென்பாதங்களுக்கு ஊறு இல்லா இடமல்லவா வேண்டும்.

“என்னை உடையாள்

கலைமடந்தை எவ்உயிர்க்கும்

அன்னை அனையாள்

அடித்தளிர்கள்”

அத்தகைய மென்னடிகளைத் தாங்கிக் கொள்ளும் தகுதி யாருக்கு என வினவினால்,

“ இன் அருள்சேர்

மென் மனத்தே தங்கும்

என உரைப்பார் & மெய் இலா

வன்மனத்தே தங்குமோ வந்து!”

என்று பதிலிறுக்கின்றது பழம் பெரும் பாடல் ஒன்று. வெறும்‘படிப்பு’ என்று அறிவுள்ளார் இல்லாது, கருணையுடன் கூடிய மென்மையான மனதில் அல்லவா அவள் உறைவாள். கருணையின் மென்மையில் அல்லவா அவளது பாதங்கள் தங்கும்.

“மெய் இலா

வன்மனத்தே தங்குமோ வந்து!”

என வினவுகிறார். அவளது பாதங்களே மிகவும் மென்மையானவை. அவை சேருமிடம் கருணையும் உண்மையும் இருக்குமாம். இது தவிர்த்து உண்மை உறையா கொடும் மனத்தினிடம் எங்ஙனம் கலைமகள் தங்க இயலும்?

“நாஉண்டு நீஉண்டு

நாமம் தரித்தோத

பாஉண்டு நெஞ்சே

பயம் உண்டோ”

நானும் இருக்கிறேன்! நீயும் இருக்கிறாய்! அவளது பெயரைப் பற்றிப் போற்றிப் பாட ‘பா’க்கள் உண்டு. அவ்வாறு இருக்குங்கால் நெஞ்சினில்தான் பயம் வந்திடுமோ? எங்கு? பயம் இல்லை? எவன் பெயரைத் தரித்து, சொல்லும் வண்ணம் ‘பாக்கள்’ இருக்கின்றன! பூவை உண்டு உறங்கும் வண்டுகள் நிறை சோலைகளையே மதிலாகக் கொண்டு உலகையே தன்னகத்தே உண்டு, உறங்குபவளை நெஞ்சில் கொண்டவனுக்கு பயம் உண்டோ?

“பூவுண்டு

வண்டுதங்கும் சோலை

மதிலரங்கத் தேஉலகை

உண்டுறங்குவான் ஒருவன் உண்டு”

இதுவும் ஒரு பழம் பெரும் பாடல். இதைக் கூறியவுடன் மீண்டும் ‘நாவுண்டு’ என்று என்னையறியாது சொல்லத் தொடங்கி விட்டேன். பாடலின் தன்மை அத்தகையது. அதனுடைய சந்தத்திற்குள் நம்மை ஈர்த்து விடுகிறது. இதுதான் கவி.

இரசிகமணி டி.கே.சி. அவர்கள் காலை உணவு முடித்து அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவ்வீட்டின் பின்புறம் தோட்டம். தோட்டம் தாண்டி தாமிரபரணி ஆறு ஓடிக் கொண்டு இருக்கும். தோட்டக்காரன் டி.கே.சி. யிடம் ஓடி வருகின்றான். “அய்யா! அய்யா!” என அழைக்கின்றான். ‘என்னப்பா?’ என்கிறார் ரசிகமணி. “அய்யா! யார் வீட்டு வைக்கோல் படப்பு நம் வீட்டில் ஆற்றின் வழி ஒதுங்கி இருக்கின்றது. நமக்கு இன்னும் இருபது நாட்களுக்கு வைக்கோல் வாங்க வேண்டாம்” என சந்தோஷிக்கின்றான். “அப்படியா!” என்கின்றார் இரசிகமணி. தோட்டக்காரன் பின்புறம் சென்று வைக்கோலைப் பிரித்து, காயப்போட்டு மாட்டிற்குக் கொடுக்கும் அளவு பக்குவப்படுத்தி, தினந்தோறும் மாடுகளுக்கு கொடுக்கிறான். ஒரு 15 நாட்கள் இப்படியே போகிறது. திடீரென்று 16வது நாள் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது. விடாது பெய்து வாய்க்காலில் வெள்ளமாய் தண்ணீர் ஓடுகின்றது. சில மணி நேரங்கள் கழித்து தோட்டக்காரன் இரசிகமணியிடம் வருகின்றான். அப்பொழுது அவர் மதிய உணவருந்தி விட்டு, அன்று தபாலில் வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டு இருக்கின்றார்.

‘அய்யா!’ என அவரை விளிக்கின்றான் தோட்டக்காரன்.

‘என்னய்யா!’ என்கிறார் அவர்.

அய்யா! இன்று பெய்து கொண்டிருக்கும் மழையால் வாய்க்காலில் பெருகி ஓடும் தண்ணீர் நம்வீட்டு வைக்கோல் படப்பை அடித்துச் சென்று விட்டது என்று மிகவும் வருத்தத்தோடு சொன்னான்.

அதற்கு அவர் ‘அப்படியா!’ என்று ஒற்றைச் சொல்லை பதிலாய் அளித்தார்.

உடனே ஒரு திருக்குறளைச் சொன்னார் அவர். அப்போது அவரருகே அமர்ந்தவர்களுக்குப் பயன் ஆகியது.

“நன்றாங்கால் நல்லவாக்

காண்பவர் அன்றாங்கால்

அல்லல் படுவது எவன்?” (குறள்)

யாருடைய வைக்கோல் படப்பையோ நாம் ஏற்றுக் கொண்டு பயன் துய்த்த போது உள்ள மன நிலைதான், நம்முடைய வைக்கோல் படப்பு அடித்துச் செல்லும் போதும் அதே மன நிலை இருத்தல் போல, நல்லது கிடைக்கும் போது மகிழ்ந்து துய்க்கும் மனம், அல்லது நடக்கும் போதும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். இவ்வளவுதான் நம் வாழ்வியலைக் கொண்டு விளக்கம் கூறுவார் டி.கே.சி என்றார் அவர். அதற்குள் அங்கு ஒருவர் ஒருவராய் ஒரு ஐந்து பேர்கள் கூடி விட்டனர். பின்பு கேட்கவா வேண்டும். டி.கே.சி. குற்றாலத்திலும், வண்ணாரப் பேட்டையிலும் நடத்திய வட்டத் தொட்டி தென் காசியிலுள்ள மேலசரத்திலும் நிகழ்த்தப்பட்டது. இது தினந்தோறும் நடக்கின்ற செயலாம். இன்று நான் தான் விருந்தாளி, புதிய ஆள். இரவு பத்து மணி வரை ஏறக்குறைய திருக்குறள், அப்பர், திருமூலர், கம்பர் என அனைவரும் வந்து உடன் அமர்ந்து எங்களை மகிழ்வித்தனர். அனைவரும் ‘காலம்’ என்னும் கட்டுப்பாட்டிற்காகப் பிரிந்து சென்றனர்.

மறுநாள், காலையில் சீக்கிரமாக எழுப்பி. திருக்குற்றாலம் அழைத்துச் சென்றார். மணி 4.45க்கே எழுந்து பால் வாங்கி வந்துவிட்டார். பின் காபியின் உதவியால் சுறுசுறுப்பாகி, பேருந்து பிடித்து குற்றாலம் சென்றோம். தன்மகளை அழைத்துச் செல்வது போல் உடனிருந்து, ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றார். நான் “மெயின் ஃபால்ஸில்” குளித்துவிட்டு உடை மாற்றும் வரை பொறுமையாய்க் காத்திருந்தார். பின் குற்றாலநாதர் கோவிலுக்குச் சென்றோம். அங்கு குற்றால நாதரையும், அவனது நாயகி குழல்வாய் மொழியாளையும் தரிசித்தோம். அவளது நின்ற கோலம் மிகவும் ‘பெரு’மிதத்தில் திளைத்து நிற்பதுபோல் தோற்றமளித்தது. பின் கோவிலை வலம் வரத் தொடங்கினோம். அப்போது “சுபா! இங்கேவா! உனக்கொரு கதை சொல்கின்றேன்” என்று தொடங்கினார்.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் டி.கே.சி. அவர்களை விழாவிற்கு அழைத்திருந்தார்கள். அவர் அங்கு தான் பட்டப் படிப்பு பயின்றார். அவ்விழாவிற்கு வெளிநாட்டுக்காரர்கள் வந்து இருந்தார்கள். சுதந்திரத்திற்கு முன்பு இல்லையா. வெளிநாட்டுக்காரர்கள் தான் பேராசிரியர்கள் ஆகவும் இருப்பார்கள். அதில் ஒருவர் டி.கே.சி.யிடம் “எங்கள் நாட்டில் நாங்கள் மரங்கள் பால் மிகவும் அன்பு கொண்டவர்கள்” என்றார். “அப்படியா! நீங்கள் அன்பு தான் செலுத்துவீர்கள். நாங்கள் மரங்கள் பால் பக்தியே செலுத்துவோம். இறைவனாய் வணங்குகிறோம். உதாரணமாக குற்றாலத்தில் ‘குறும்பலா’ என்று பலா மரத்தை கடவுளாய் வணங்கி வருகின்றோம். ‘குறும்பலா ஈஸ்வர்” என்று பெயர். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரம் உண்டு அதற்கு “ஸ்தல விருட்சம் என்று சொல்வோம்” என்றாராம். உடனே அந்த வெளிநாட்டுக்காரர் அசந்தே போய் விட்டாராம். இதோ! அந்த ‘குறும்பலா’ மரம் இதுதான். இவர்தான் குறும்பலா ஈஸ்வரர். இம் மரத்தில் இருக்கும் பழங்களைப் பறிக்க மாட்டார்கள். குரங்குகளுக்கு என்று விட்டுவிடுவார்கள் என்று அந்த குறும்பலா மரத்தை எனக்குக் காட்டினார்.

மறுநாளும் காலையில் அருவிக்குச் சென்றோம். இந்த இரு நாட்களும் மழையும் சாரலும், கால் மாற்றி மாற்றி, வான் மேகங்கள் நடனமாடியதில் அருவி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அருவி கொட்டும் இடத்தில் ஒரே நீர்ப்புகை, வைர மணியாய் நீர்ச் சிதறல்கள். விழும் நீர் இரண்டு இடங்களில் பட்டுத் தெறித்து, விழும் போது தாளகதி மாறுகிறது. அருவி மங்கையர் நடன ஜதியை என் தோள்களில் எந்திக் கொண்டு, அந்த சுகத்தை அனுபவித்தேன். அது தன் கால்மாற்றி ஆடும்போது வரும் தாள மாற்றத்திற்கு நம் உடல் ஈடு கொடுத்து விடுகிறது நம்மையறியாது. என் தலையிலும், தோள்களிலும் மாறிமாறி நான் ஏற்றுக்கொண்ட அவளது நடன ஜதியை, அந்த “திம் திம் தும் தும்” என்ற சப்தத்தை இன்னமும் என் செவி விட்டு விடவில்லை. குற்றாலம் முழுவதும் நம்முடன் வருவதுபோல் இருந்தது.


அருவி மகளின் காலடியை ரசித்தேன். பல அடிகள் தள்ளி நின்று, அவளை மொத்த உருவமாய் ரசித்தேன். அவள் தொடங்கும் இடத்திலிருந்து, பாறைகளில் குதித்து குதித்து இறங்கி, வேகமாய் கீழே விழும் அழகையும் காணாது போவாரோ. மனமில்லைதான். இலஞ்சி குமரக் கடவுள் அழைத்தார். இரு பக்கமும் வயல்களில், மாந்தோப்பு, தென்னந் தோப்புகளுக்கிடையே அழகாய் அமைந்திருக்கின்றது. இந்தக் கோயிலைப் பார்ப்பதில் இரண்டு நோக்கங்கள் எனக்கு இருந்தன. ஒன்று இங்கு தான் டி.கே.சி. அவர்களுக்கு (மணி விழா) அறுபது வயது நிறைவு விழா நடந்ததாம். இன்னொன்று என் இனிய மகளாய் இணைந்தவளின் திருமணம் சென்ற ஆண்டு இங்கு நடந்தது. அதில் என்னால் கலந்து கொள்ள முடியாத ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பினது ஆகும். கம்பீரமாய் முருகன் நின்று கொண்டிருக்கின்றான்.

திருநெல்வேலிப் பக்கத்துக்குரிய நீளமான முகவெட்டு. திருத்தமான நாசியுடன், விழுந்து சிதறி விடுமோ என இதழ் நுனியில் ஒரு புன்னகை. அத்தனையும் மனத்தினில் ஏந்திக் கொண்டேன். ஒரு சன்னதியில் குமரனும் வள்ளியும் தெய்வானையும் ஏகாந்தமாய் உரையாடிக் கொண்டிருப்பதுபோல எதிரும்புதிருமாய் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்ன விவாதித்துக் கொண்டிருப்பார்கள்? பத்மநாப சுவாமி கோவிலில் கிடைக்கப்பெற்ற செல்வம் சுவரியைச் சேர்ந்தது எனத் தெளிவாய் பதட்டமிலாது கூறிய மன்னர் பரம்பரை இருப்பதால் உலகம் இன்னும் இயக்கத்தில் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி விவாதித்துக் கொண்டிருப்பார்களோ? குமரர் கோயில் வாசலில் அழகான குட்டி யானையொன்று ஆடிஆடி ஆனந்தமாய் இருந்தது. பாகன் அதைப் பக்குவமாய் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். இக்கோயில் டி.வி.எஸ். நிறுவனத்தாரால் பராமரிக்கப்படுகிறது என்றார்கள்.

குமரனின் அழகையும் பருகி, அருளை வேண்டி, இயற்கையின் மணத்தினை இதயத்தில் நிரப்பிக் கொண்டு, வீடு திரும்பினோம். இந்த இருநாளும் எனக்கு காலைச் சிற்றுண்டி தயாரித்து, உணவுக்கு ஏற்பாடு பண்ணி, படுக்கை வசதியாக இருக்கிறதா என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார். அதில் அவருக்கு அவ்வளவு ஆனந்தம். “இன்னும் இரேன்! “அதற்குள் போகிறாயே” உனக்கு இன்னமும் பாடல்கள் வைத்திருக்கிறேன். அதை என் வாயால் நான் சொல்ல வேண்டாமா? அதற்குள் கிளம்புகிறாயே” என்ற ஆதங்கம் தெரிந்தது. அவர் யார் தெரியுமா? நண்பர்களே! அவர்தான் ஜூன் 18ம் தேதியோடு 90 வயது நிரம்பிய வித்வான். ல. சண்முக சுந்தரம் அவர்கள். டி.கே.சி.யுடன் பெரும் காலத்தைக் கழித்தவர். டி.கே.சி. நடையில் பாடலை ஆனந்தித்துப் பகிர்ந்து கொண்டவர் இவர் ஒருவர் தாம் இருக்கிறார். அவர் மதிக்கும் அளவு எனக்குத் தமிழ்ப்புலமையும் கிடையாது. ஆனால் அவர் என்னை மதித்து, இந்த இரு நாட்களும் என்னைக் கொண்டாடினார் என்பது டி.கே.சி. யுடன் இருந்த பண்பின் வெளிப்பாடு. அன்பு தன் பகிர்தலைச் செய்து கொண்டே தானே இருக்கும்.

வித்வான் இப்படியெனில், இராஜபாளையத்தில் திரு.பலராமராஜா (டி.கே.சி.க்கு செயலாளராக இருந்தவர்.) நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்றதும், இராஜபாளையம் சப்பட்டை மாம்பழத்திற்குத் தோப்புத் தோப்பாக அலைந்து இருக்கிறார். அந்த மாம்பழக் காலம் கழிந்து விட்டது, அது அவருக்குக் கிடைக்க வில்லையென்றதும், மிகவும் வருந்தினார். அங்கு டி.கே.சி. அவர்கள் தங்கை வழிப்பேரன் திரு. தீத்தாரப்பன் (இந்தியன் வங்கி) வீட்டிற்குச் சென்றோம். அவரது மனைவி திருமதி. சாந்தி திருநெல்வேலிக்குப் பெயர் வாங்கித்தந்த ‘சொதி’ என்னும் தேங்காய்ப்பால் குழம்பு வைத்து அதற்கு இணை கொடுக்க இஞ்சித் துவையல், உருளைக் கிழங்குப் பொரியல், காரட் பாயசம் எனப் பிரமாதப்படுத்தி விட்டார். இவர் இப்படியெனில், டி.கே.சி. யைப் பற்றிக் கேள்விப்பட்டவர்தாம் திரு.இராஜராம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்

தங்க விமானப் பணிக்குப் பொறுப்பாக இருப்பவர். அவர், அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, காலைச்சிற்றுண்டி அளித்து, ஆண்டாளின் அனுக்கிரகத்தைப் பெற அழைத்துச் சென்று, (அவளைத்தான் நம்பி இருக்கின்றேன். டி.கே.சி. பற்றிய நூல் ஒன்று எழுத, தரவுகள் சேகரிக்கும் பயணம் இது) தன்னிடம் இருக்கும் டி.கே.சி. பற்றிய நூல்களை அளித்து, இராஜபாளையத்திற்கும் உடன் வந்தார். அங்கிருந்து தான் தென் காசிப் பயணம். எங்கு எப்போது கூடினாலும் டி.கே.சி. தானாக வந்து அமர்ந்து விடுவார். திரு. இராஜாஜிதான் மகாப்பெரியவர் என்று நினைத்திருந்த திரு.ஜெயபால் அவர்கள், டி.கே.சி.யைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவரது ஆனந்த அலையில் திளைத்ததும், திரு.இராஜாஜி இராண்டாம் இடத்திற்குச் சென்றுவிட்டார். அவர் மொத்தத் துணி வியாபாரம் செய்பவர். துணிக்குவியல்களுக்கிடையில் அமர்ந்து பேசினோம். “டி.கே.சி.யை கிடப்பில் போட்டுவிட்டோம். தயவு செய்து மீட்டு எடுங்கள். உங்கள் தந்தையார் டி.டி.திருமலை, டி.கே.சி. க்கு உலக இதய ஒலி என்று பத்திரிகை நடத்தி அவரைப் பெருமைப் படுத்தினார். நீங்கள் நேர்மையாகச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். பொதிகையில் தென்காசி சென்றேன். வழித் துணைக்கு எதிர்பாராது திரு.இராம கிருஷ்ணர் திருக்குறள் பேரவை சங்கச் செயலாளர் வந்திருந்தார் தம்பதியராய். வழியெல்லாம் டி.கே.சி. பற்றித் தான் பேச்சு என்று சொல்லவும் வேண்டுமோ!

டி.கே.சி. அவர்கள் பேரன் திரு. தீப. நடராசன் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். டி.கே.சி.  இருந்த வீடு, பஞ்சவடி, அதைப் புதியதாய்க் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இருப்பது ‘மிதலா’வில். வாசலில் பூத்துக் குலுங்கும் பவள மல்லி மரம் தான் அடையாளம். இரவு குலுங்கும் பவள மல்லி, காலையில் எதுவும் அறியாத பிள்ளை போல், அத்தனை மலர்களையும் தன் காலடியில் உதிர்த்து அழகு பார்க்கிறது. அவர்கள் வீட்டு ஸ்டாண்ட் இட்லியும், சொதியும், மாம்பழமும், திரு. குற்றாலிங்கம் அவர்கள் வீட்டு பூண்டுக் குழம்பும் இன்னமும் சிந்தையை, மனத்தை நிறைத்திருக்கிறது. அவர்கள் உபசரிப்பில் நான் நிச்சயமாக 3 கிலோ எடை அதிகமாகியிருப்பேன். திரு. தீப. நடராஜன் அவர்கள், தன்னிடம் இருக்கும் டி.கே.சி. பற்றிய நூல்களையும், அதற்கு நகல்கள் எடுத்துக் கொடுத்தும், அவரது தாத்தாவுடன் இருந்த அனுபவங்களையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். தென்காசி குளிர்த் தென்றலால் தண்மையானதாக இருந்தது என்றால், தீப.நடராஜன் அவர்கள் வீட்டிற்குள் அன்புத் தென்றல் அரவணைக்கும் சுகத்தை அள்ளித் தந்தது. இதோ, தென் காசியை விட்டுக் கிளம்ப வேண்டும். மேலகரத்திலிருந்து புறப்பட்ட ஆட்டோ, தென்காசி ‘மிதலா’வில் நின்றது. என் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டேன். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். பவள மல்லி மரம் கூட எனக்கு மனமிராது விடை கொடுத்தது.

சென்னைக்கு எனக்கு ஸ்ரீனிவாசன் கிடைத்தாற்போல், தென் காசியில் ஆட்டோ ஓட்டுநர் தேவ சகாயம் கிடைத்தார். எல்லாம் தீப.நடராசன் அவர்கள் ஏற்பாடு. அன்பாய்த்தானே அமையும். தேவசகாயம் தன் பேருக்கு ஏற்றாற் போல் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். அங்கிருந்து டி.கே.சி. யின் அனுபவங்களையும் நூல்களையும் சுமந்து கொண்டு தமிழூர் வந்தேன். பேரா.ச.வே.சுப்ரமணியம் அவர்கள் தமிழுக்காகவே உயிர் வாழ்பவர். நாம் தமிழ் என்ற சொல்லில் ‘த’ என்று சொன்னாலே போதும், நம்மை நோக்கி வந்து, அத்தனை உதவிகளையும் புரிபவர். உலகத்  தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 12 ஆண்டுகள் இயக்குநராய்ப் பணி புரிந்து, அந்நிறுவனத்தில் பல கருத்தரங்குகள், நூல்கள் வெளியிடக் காரணமாய் இருந்தவர். பின் அங்கிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் இடத்தில் 40 ஏக்கர் இடம் வாங்கி, ‘தமிழூர்’ என ஊர் உருவாக்கி தமிழுக்குத் தொண்டு புரிகிறார். தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மூலப்பதிப்புகளாக வெளியிடுகிறார். ஆண்டு தோறும் ஒரு ஆய்வுக் கருத்தரங்கம் நடத்துகிறார். அந்தக் கருத்தரங்கிற்குத் தான் நான் டி.கே.சி.  பற்றி எழுத இருக்கிறேன். அதற்குத் தான் இந்தப் பொதிகை மலைப் பயணம். இவர் தமிழ்ப் பணி செய்கிறார் எனில், இவரது இணை நலமும், மருமகளும், வருவோர்க்கு உண்டி கொடுத்து உபசரிப்பதில் யாரும் மிஞ்சி விட இயயாது. என்னை எழுத ஊக்குவித்தவர் பேராசிரியர். எனது முதல் ஆய்வுக் கட்டுரையை இவர்தான் வெளியிட்டு கௌரவப்படுத்தினார். அவரைப் பார்க்கப் போகிறேன் என்றதும், வித்வான். ல.ச. வீட்டில் சந்தித்த திரு.செல்லப்பா அவர்கள் பேராசிரியரைப் பார்க்க வருவதாகக் கூறி விட்டார். வழித் துணைக்கு கடவுள் யாரையாவது இப்படி அனுப்பி விடுகிறார். நான் என்ன செய்ய? திரு. செல்லப்பா அவர்களுக்கு தமிழ் பாடல்கள் ஆயிரத்திற்கு மேல் மனப் பாடம். அதுவும் அவர் தமது 55 வயதில் மனப் பாடம் செய்து இருக்கிறார். ஔவையார் பாடல்கள் முழுவதும் தெரியும். நல்ல தமிழ்ச் சான்றோர்களுடன் சத் சங்கம். எல்லாம் இறையருள் தான். ஈண்டு நான் ஒன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே!

தென் பகுதியில், பொதிகை மலைச் சாரல் போல் அமைதியாய்த் தமிழ்ச் சாரல் வீசிக் கொண்டே இருக்கின்றது. அங்குள்ள திருக்குறள் பேரவைச் சங்கம், ஆங்காங்கே “திருக்குறள் முற்றோதல்” சிறப்புற பல வருடங்களாக நடத்தி வருகின்றது. ஒருவர் திருக்குறளைச் சொல்ல பின் ஏனைய அனைவரும் சொல்வார்கள். நான் சென்ற அன்று கூட, திரு.செல்லப்பா அதற்குத்தான் சென்றிருந்தார். திரு.சிவராம கிருஷ்ணன் ஏற்பாடு செய்து, அழைத்துச் சென்றார். தேவநேயப் பாவாணர் பிறந்த ஊரை ‘பாவாணர் கோட்டம்’ என்று கூறுகிறார்கள். இது இராஜபாளையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு அனைவரும் சென்று “திருக்குறள் முற்றோதல்” நடத்தியிருக்கிறார்கள். மேலும், பல கோவில்களில் “தேவாரம் முற்றோதல்” நடைபெறுகிறது. தமிழ் அங்கு தழைத்து வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

நானும் திரு. செல்லப்பா அவர்களும் பேரா.ச.வே.சுப்ரமணியம் ஐயாவைப் பார்த்தோம். எனக்கு புத்தகம் விஷயமாக சில கருத்துகள் கூறினார். காபி அருந்தினோம். அம்மாவிடமும், மருமகள்களிடமும் நான் பேசிவிட்டு கிளம்பினேன். அவர்களுக்கு மனமில்லை. ஏன் ஒரு நாள் கூட தங்காது செல்வது வருத்தத்தை அளித்தது. அவர்களது அன்பு எனக்கு இரவு சாப்பாடைத் தந்தது. “தயிர் சாதமும், நார்த்தங்காய் ஊறுகாயும்” கட்டிக் கொடுத்தார்கள். ஐயா, எனக்கு சங்க இலக்கிய நூல்கள் நான் முன்பு கேட்டிருந்ததை  நினைவிற் கொண்டு, எனக்கு கொடுத்தார்கள். இரண்டு மணி நேரம் அங்கு இருந்தோம். நான்கு மணிக்குப் புறப்பட்டோம்.

திருநெல்வேலியிருந்து நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னைப் பயணம். வழியில் ஆலங்குளத்தில் திரு.செல்லப்பா இறங்கி விட்டார்கள். நான் திருநெல்வேலிக்குப் பயணமானேன். இரயிலுக்கு நேரம் அதிகம் இருப்பதால், நான் தாமிரவருணி ஆற்றைப் பார்க்க விரும்பினேன். தேவசகாயம் திருநெல்வேலி சென்றதும், தாமிரவருணி செல்லும் பாலத்தில் நிறுத்தி, தாமிரவருணி அன்னையின் ஓடும் அழகைக் காண்பித்தார்.

நான் தாமிரவருணி பற்றி வேறு கற்பனையில் இருந்தேன். பரவாயில்லை. உண்மை எப்போதும் வேறு மாதியாகத் தானே இருக்கும். பின், இரயில் நிலையம் வந்தோம். சகாயம் என்னை, என் பெட்டிகளை நான் ஏறும் இரயில் பெட்டிக்கருகே அமர்த்தினார். இருவரும் காபி குடித்தோம். அவரது இன்றைய உதவியையும், இணக்கமாய்ப் பழகும் பண்பையும் நினைத்துக் கொண்டு காபியை அருந்தினேன். அவர் விடைபெற்று சென்றார். நான் மட்டும் நடை மேடை இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். என் எதிரில் மிக நீண்ட நெல்லை எக்ஸ்பிரஸின் பூட்டிய இரயில் பெட்டிகள் இருந்தன. திட்டப்படி, திருநெல்வேலியில் திரு.தி.க.சி.யையும் பார்த்து விட்டு வருவதாக இருந்தது. ஆனால் சந்தர்ப்பம் சரியில்லாததால், தி.க.சி.யையும் அவரது மகன் திரு.வண்ணதாசன் அவர்களையும் பார்க்காது திரும்புவது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. மணி 6.30 ஆயிற்று. இரயிலில் பெட்டிகள் திறக்கப்பட்டன. பெட்டிகள் இரண்டையும் கஷ்..ட..ப்..ப..ட்..டு வண்டியில் ஏற்றினேன். இரயில் சரியாக மாலை 6.55க்கு சென்னையை நோக்கிப் புறப்பட்டுவிட்டது.

 

படங்களுக்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பொதிகை மலைச்சாரலில்…

  1. /என்தலையிலும், தோள்களிலும் மாறிமாறி நான் ஏற்றுக்கொண்ட அவளது நடன ஜதியை, அந்த “திம் திம் தும் தும்” என்ற சப்தத்தை இன்னமும் என் செவி விட்டு விடவில்லை./

    உங்களுக்குள் உள்ள கவிஞர் விழித்துக்கொண்டார்.

    நேர்முக வருணனை போல், உங்கள் நடை கவருகின்றது. படமாக எடுப்பதற்கு ஏற்ற திரைக் கதை போலும் இருக்கின்றது.

    வாழ்க! தொடர்ந்து எழுதுங்கள்!

  2. பொதிகை மலைச் சாரல் போல் சுபாஷிணியின் அன்பு மழை
    கொட்டியதைக் கண்டோம். “அன்பெனும் பிடியில் அகப்படும்
    மலையே” என்ற கூற்று எவ்வளவு உண்மை! ரசிகமணி
    அவர்களும் அன்புமயமாகவே எல்லோருடனும் பழகி
    அருவி போல் அன்பைக் கொட்டியுள்ளார்கள்.அன்புக்கு
    இலக்கணம் வகுத்த தெய்வப் புலவர் திருவள்ளுவர்
    ” அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறளில் அன்புடையவருக்கும்
    அன்பில்லாதவர்க்கும் உள்ள வேற்றுமையை மிக
    எளிதாகச் சொல்லிவிடுகிறார். எளிமை தான் வள்ளுவரின்
    தனித்துவம். தன் வாழ்நாளில் கவிதையிலும் சரி வாழ்க்கையில்
    ஒவ்வொரு நிகழ்விலும் சரி எளிமையைக் கண்டவர்கள் தாம்
    ரசிகமணி டி கே சி.
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

  3. Inniya tamilai valartha, en alagiya courallam, aavaraiyum kavaru alakiya , pal pondra venmaiya ,
    thuimaiyana masatta, eyarkai moligaiyum kodathu.

    En tamilargallukku engalai nanbi varum nanbargalai nantraga oobasaribathu, mahilvippathu engal panpadu. Athai polathan Engal courtallanathar arul pettru, palai pola neram marathu varum enthu aruvikku, sathi, matham, ennam verubadu ellathu , annaiyin annabai pola mahilchiyaiyum, nalla udal nallathaiyum, noiyuttavai kunabaduthum passa migu tamilarin banbadu niraitha aruvi , engal Thiru Courtalla aruvi aggum.

    By
    M. Yogeswari
    Lalakudiyiruppu

  4. அன்னை = கடவுள் = திருக்குற்றால அருவி

    இனிய தமிழை வளர்த்த, என் அழகிய குற்றாலம், எவரையும் கவரும் அழகிய , நிறம் மாறாத பாலைப்போல வெண்மையானது, தூய்மையான மாசற்ற இயற்கை மூலிகைக் கொண்டது.

    எங்களை நம்மி வரும் நண்பர்களை நன்றாக உபசரிப்பது எங்கள் தமிழர் பண்பாடு. அதைப் போல, எங்கள் குற்றாலநாதர் அருள் பெற்று வரும், குழந்தையைப் போல, எங்கள் தமிழர்களைப் போல மனம் கொண்ட இந்த அருவிக்கு ஜாதி, மதம், இனம் வேறுபாடு தெரியாது. அன்னையின் அன்பைப் போல மகிழ்ச்சியையும், நல்ல உடல் நலத்தையும் தரும் மூலிகை நிறைந்த இந்த அருவி, எங்கள் திருக்குற்றால அருவி ஆகும்.

    அன்னைக்கு தன் குழந்தைகளிடையே வேறுபாடு இல்லை.
    கடவுளுக்கும் தன் பக்தர்களிடையே வேறுபாடு இல்லை.
    இயற்கை அன்னைக்கும் நம்மிடையே வேறுபாடு இல்லை.
    பிறகு ஏன், நம்மிடம் மட்டும், இந்த ஜாதி, மதம், இனம் வேறுபாடு?

    அன்புடன்,
    மு. யோகீஸ்வரி
    செங்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *