அமைதிச்சாரல் (சாந்தி மாரியப்பன்)

 


வணக்கங்க.. எல்லாரும் நல்லாருக்கீங்களா??.. உங்களுக்கென்ன!! நல்லாத்தான் இருப்பீங்க.  நான் இப்ப இருக்கிற நிலையில, யாரைப்பாத்தாலும் என்னைவிட சந்தோஷமா இருக்காங்கன்னே தோணுதுங்க.

இவ்வளவு நேரம் எம்பேரைச்சொல்லலைல்லே.. பேருக்கென்னங்க. உங்களுக்கு எந்தப்பேரு புடிச்சிருக்கோ அந்தப்பேருல கூப்பிட்டுக்கோங்க. ஆனா, தயவு செய்து எம்பிரச்சினைக்கு மட்டும் ஒரு முடிவு சொல்லிடுங்க..

தைப்பூசம்.. முருகனுக்கு உகந்த நாள். காவடியெடுத்தும், அலகு குத்தியும், இதெல்லாம் செய்யாம பிரார்த்தனை மட்டுமே செய்யும் பக்தர்களுக்கும், இது எதுவுமே செய்யாம சும்மா..’முருகா..’ அப்படீன்னு ஒரு தடவை மனசால் மட்டும் நினைச்சுக்கிறவங்களுக்கும், அருள் செய்யற கடவுளுக்கான திருநாள். ஆனா, அன்னிக்கு எல்லோருக்கும் அருள் பாலிச்சுட்டு, கடைசில என்னை மட்டும் மறந்துட்டாரே. அன்னிக்கி நான் கோயிலுக்கு போகாம இருந்திருக்க கூடாதா..  இதெல்லாம் நடந்திருந்தா.. இன்னிக்கி இப்படி புலம்பிட்டிருக்க மாட்டேன்.

இப்படி உக்காருங்க.. வெவரமா சொல்லுறேன். அன்னிக்கி, அம்மா.. தங்கை, அப்புறம் மத்த சொந்தக்காரங்க, பக்கத்துவீட்டுக்காரங்கன்னு ஒரு கூட்டமா கோயிலுக்கு போயிருந்தோம். தேங்காபழமெல்லாம் உடைச்சு சாமி கும்பிட்டுட்டு, வேப்பமர நெழல்ல உக்காந்து கட்டுச்சோத்தை சாப்பிட்டுட்டு, அம்மாவும், மத்தவங்களும் அக்கடான்னு அங்கியே உக்காந்துட்டாங்க. எங்கூருக்கு சாயந்திரம்தான் வண்டி.. அதுவரைக்கும் என்ன செய்யறது??.. உண்ட களைப்புலயும், வேப்பமர நெழல் தந்த சொகுசுலயும், அங்கியே ஆளாளுக்கு கட்டைய சாச்சுட்டாங்க.

எவ்வளவு நேரம்தான் அங்கியே உக்காந்து, போறவர்ற ஆளுகள பாத்துட்டு இருக்கிறது.. சும்மா.. காலாற நடந்துட்டு வரலாமேன்னு எந்திரிச்சிப்போனேன். திருவிழான்னா, சந்தையும் கூடணும்கறது வழக்கம். வளையலு, பாத்திரங்கள், முட்டாயி, அப்புறம் திடீர் புடவைக்கடைகள்ன்னு ஒவ்வொண்ணா பாத்துட்டே நடந்தவன், ஒரு பொரிகடலை பாக்கெட்டை வாங்கி கொறிச்சிக்கிட்டே.. அப்படியே தெப்பக்குளத்துப்பக்கம் வந்தேன். திருவிழா நடக்கறதால குளம் நெறய தண்ணி திமுதிமுன்னு கெடக்குது.. செலபேரு துவைச்சுக்குளிச்சிட்டு இருக்காங்க. வெயிலா இருந்தாலும், தண்ணி நெறஞ்சு கெடக்கிறதால குளுந்து கெடக்குது. அப்படியே படிக்கட்டுல உக்காந்துக்கிட்டு, பொரிகடலையை ஒருவாய் தின்னுக்கிட்டும், ஒருகை.. மீன்களுக்கு போட்டுக்கிட்டும், வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான், எனக்கு பக்கத்துல படிக்கட்டுல சுருட்டி வெச்சிருந்த துணிகளும், அதுக்கு மேல அலட்சியமா வெச்சிருந்த மணிபர்சும் கண்ணுல பட்டது. என்னது!!.. இப்படி பொறுப்பில்லாம வெச்சுட்டு போயிருக்காரேன்னு நெனச்சிக்கிட்டேன். அழகான மெரூன் கலர்ல, உப்பிப்போய் இருந்த பர்சை விட்டு கண்ணை எடுக்கமுடியலை. யாரும் பார்க்கலைன்னு நோட்டம் விட்டுட்டு, சட்ன்னு அதை எடுத்து என்னோட பாக்கெட்ல வெச்சுக்கிட்டு அங்கேருந்து வேகமா வந்துட்டேன்.

தேர்மூட்டுக்கு கிட்ட வரவும், எதிர்க்க அம்மாவும் மத்தவங்களும் வந்துக்கிட்டிருந்தாங்க.. ‘உன்னை எங்கேல்லாம் தேடுறது.. சொல்லாம கொள்ளாம எங்க போன??..’ன்னு அம்மா சத்தம்போட ஆரம்பிச்சாங்க. ‘ஷ்..சத்தம் போடாத.. இங்க பாரு’ன்னு பர்சை காமிச்சேன். ‘அடியாத்தே… எல்லாம் நூறு ரூவா தாளால்லே இருக்கு.. ஏதுடா இது?’ன்னாங்க அம்மா. ‘கீழ கெடந்துச்சு கண்டெடுத்தேன்’னு ஒரு பொய்யை சொல்லிட்டேன். எனக்கு புத்திசொல்றதவிட்டுட்டு.. கொடுக்கிற தெய்வம் பர்சோட கொடுத்திருச்சுன்னு சந்தோஷப்படறாங்க அம்மா.

பகல்ல பக்கம் பார்த்து பேசுன்னு சொல்லுவாங்க. நான் பார்த்துப்பேசியிருக்கணும்..  ஆனா, பார்க்கலை..  அதனால, பக்கத்துல நின்னுட்டு பேசிட்டிருந்த ஆட்கள்ல ஒரு ஜோடி கண்கள் எங்களை பாத்திட்டுது. அதையும் நான் கவனிக்கல. ரூவா கெடைச்ச சந்தோஷத்துல, உண்டியல்ல காணிக்கையா பத்து ரூபா போட்டுட்டு, திருவிழாக்கடைக்கு போயி, தங்கச்சி ரொம்ப நாளா ஆசைப்பட்ட செருப்பை வாங்கிக்கொடுத்தேன். பாவம்.. எத்தனை நாள்தான் வெறுங்காலோட அது பள்ளிக்கொடத்துக்கு போவும்?.. கடைக்காரருக்கு ரூவாயை கொடுக்கவும், டக்குன்னு ஒரு கை இரும்பு மாதிரி எங்கையை பிடிச்சிக்கிடுச்சு. திரும்பி பாத்தேன்.. நடுங்கிட்டேன். நாலஞ்சுபேரு, ஒரு போலீசோட நிக்கிறாங்க.

‘இந்தப்பயலத்தான் நீ சொன்னியா..’ன்னு ஒரு ஆளு கேக்கவும், ‘ஆமா..’ங்குது ஒரு சின்னப்பொண்ணு. “அட..!! இத நான் தேர்மூட்டுக்கு கிட்ட ஆளுககூட பாத்தேனே” ன்னு நெச்சிக்கிட்டேன்.

‘இது உங்க பர்சுதானான்னு பாருங்க..’

‘மெரூன் கலர்!!…என்னோடதுதான்..’ன்னு சொல்லிக்கிட்டே வெள்ளையும் சொள்ளையுமாட்டு ஒரு ஆளு முன்னால வந்தாரு. ‘ உங்க பர்சுதான்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம்??’ ன்னு போலீசு கேக்கவும், ‘உள்ளே ட்ரெயினுக்கான மந்த்லி பாஸும்,அடையாள அட்டையும் இருக்கும். அதுல என்னோட போட்டோவும் இருக்கும். பாத்துக்கிடுங்க..’ன்னு வெறைப்பா பதிலு வந்தது. சரி பாத்துட்டு, போலீசு என்னைத்திரும்பி பாத்தாரு. எனக்கா.. கண்ணீரு முட்டிக்கிட்டு விழ தயாரா இருக்குது. ‘நடலே.. ஸ்டேஷனுக்கு..’ ன்னு கையைப்பிடிச்சி இழுக்கவும், இதெல்லாம் பாத்து ஒண்ணும் புரியாம முழிச்சிட்டிருந்த அம்மா அலற ஆரம்பிச்சிட்டாங்க.

‘ஐயா.. எம்புள்ள திருடனில்லைய்யா.. கீழ கெடந்தததான் எடுத்தாந்தான்.. ஒரு சின்னப்புள்ள சொல்லைக்கேட்டு, எம்புள்ளய ஒண்ணும் செஞ்சிடாதீங்க’ ன்னு கெஞ்சுறாங்க.

‘எம்மா.. கீழ கெடந்தத கண்டெடுத்தாலும், உரியவங்ககிட்ட சேர்க்கணும்கற புத்தி இல்லையா உங்களுக்கு?.. கொளத்தங்கரையில துணிகளுக்கு மேல வெச்சிருந்துருக்காரு. குளிச்சிட்டு வந்தவரு பர்சை காணோம்ன்னு வழி நெடுக புலம்பிக்கிட்டே தேடியிருக்காரு. இவரு கூட வந்த ஆட்கள்கிட்ட சொல்லும்போதுதான், அவங்க கூட இருந்த இந்தப்பொண்ணுக்கு,  தேர்மூட்டுக்கிட்ட உங்கமகன் உங்ககிட்ட காமிச்ச பர்சு, அவங்க சொல்ற அடையாளத்துல இருந்தது ஞாபகம் வந்திருக்கு. கீழ கெடந்துச்சுன்னு உங்க மகன் சொன்னதையும் அந்த பொண்ணு கவனிச்சிருக்கு. அதான், ஒரு சந்தேகத்துல வந்து பார்த்தா.., அவனே அம்புட்டுக்கிட்டான். துணிகளுக்கு மேல வெச்சிருந்தது கால்முளைச்சா வீதிக்கு வந்திருக்கும்?.. ரெண்டு தட்டு தட்டினாத்தான் இனிமே இப்படி செய்யமாட்டான்’ னு சொல்ல, அம்மா அழுதுக்கிட்டே கெஞ்ச.. அதுக்கு மேல அம்மாவ பாக்கமுடியாம கண்ணீரோட தலைய திருப்பிக்கிட்டேன்.

பர்சை பறிகொடுத்தவர் என்ன நெனச்சாரோ..’ பரவால்ல சார்.. சின்னப்பையந்தானே!! விட்டுடுங்க. நான் கேசை வாபஸ் வாங்கிக்கிறேன்’னு பெரிய மனசோட சொல்லவும் ஒரு சின்ன வாக்குவாதத்துக்கு அப்புறம் எல்லோரும் போயிட்டாங்க. அந்தப்பொண்ணு என்ன திரும்பி பாத்துக்கிட்டே போச்சு. அம்மாவுக்குத்தான் ஆறவேயில்லை.. எம்மேல வீண்பழி போட்டதுக்கு, வழி நெடுக அந்தப்புள்ளைய கரிச்சுக்கொட்டிட்டே வந்தாங்க. கொஞ்ச நாளைக்கு எனக்கு உறுத்திக்கிட்டே இருந்திச்சு.. அப்புறம் மெல்லமெல்ல மறந்தே போச்சு.

நான் மறந்தாலும், முருகன் மறக்கலை பாருங்க. இப்ப நான் பத்தாங்கிளாஸ் போகப்போறேன். நல்லா மேல்படிப்பெல்லாம் படிச்சு பாஸாகி, நல்ல வேலைக்குபோயி அப்பா,அம்மாவை ஒக்காரவெச்சு சாப்பாடு போடணும்ன்னு மனசுல ஒரு வெறி. வயக்காட்டு வேலை, கூலிவேலைன்னு அவங்களும் எவ்வளவுதான் கஷ்டப்படுவாங்க. மொதல் நாள் பள்ளிக்கோடத்துக்கு போனவனுக்கு, நாலாவது வரிசையில ஒக்காந்திருந்த அந்தப்பொண்ணை, எங்கியோ பார்த்தமாதிரி தோணிக்கிட்டே இருந்திச்சு. மறுபடி பார்க்க பயமா இருந்திச்சி.. இது கிராமம்..பொண்ணுங்க கிட்ட பேசறதெங்கே.. பார்த்தாலே தோலை உரிச்சுடுவாங்க.

பள்ளிக்கோடம் விட்டு வெளியே வந்தப்ப, அந்தப்பொண்ணே எங்கிட்ட வந்து, ‘ உன்னை எங்கியோ பார்த்திருக்கேனே..’ன்னு ஆரம்பிச்சு என் முகத்தை கூர்ந்து பார்த்தவ,..’ அன்னிக்கி, நீதானே கோயில்ல அந்த பர்சை…’ன்னு இழுத்தா பாருங்க,  எனக்கு ‘குப்’புன்னு வேர்த்துடுச்சு. பதில் சொல்லாம விறுவிறுன்னு ஓடியாந்துட்டேன். இவ எப்படி இங்கே வந்தா??.. ராத்திரி முழுக்க ஒரே சிந்தனை. விடிஞ்சு, பள்ளிக்கோடத்துக்கு போயி, ‘திருடன்’ன்னு ஒரு முத்திரையோட அந்தப்பொண்ணோட மொகத்துல முழிக்க வெக்கமாயிருக்கு. மத்த பசங்ககிட்ட சொல்லிட்டா??.. அவ்வளவுதான். இந்த ராத்திரி விடியாமலேயே இருந்துட்டா எவ்வளவு நல்லதுன்னு தோணிச்சு.

படிக்கலைன்னா, நான் ஆசைப்பட்டமாதிரி எங்க வீட்டு வறுமையை விரட்டவும்முடியாது. கல்லோடயும், முள்ளோடயும் எங்க அப்பா கஷ்டப்படறத பார்க்கப்பார்க்க எனக்கு ரத்தக்கண்ணீரே வருது. இந்த பள்ளிக்கோடத்த விட்டு வேற ஊரு பள்ளிக்கொடம், இல்லைன்னா வேலைக்கின்னு எங்கியாச்சும் போயி சேரலாம்ன்னா, என்னைய ரொம்ப நம்பிக்கிட்டிருக்கற அப்பாட்ட என்னன்னு சாக்கு சொல்றது!!. அவரு மனசொடிஞ்சு போகமாட்டாரா??..  எனக்கு ஒண்ணுமே தோணமாட்டேங்குது.

மறுநாள் பள்ளிக்கொடத்துக்கு போக மனசில்லாம, வீட்ல சுருண்டு கெடந்தேன். யாரோ கூப்பிடுற சத்தம்… வெளியெ வந்து எட்டிப்பார்த்தா,… ‘ஆத்தீ!!.. அந்தப்பொண்ணு’. விருட்ன்னு வீட்டுக்குள்ள திரும்புன என்னை ஓடிவந்து வழிமறிச்சா..

“எதுக்கு என்னிய கண்டு பயப்படறே?.. நான் என்ன சிங்கமா?.. புலியா?..”ன்னு கேட்டா.

“அதுக்கும் மேல.. “ன்னு தலையக்குனிஞ்சுக்கிட்டு முணுமுணுத்தேன்.

“ஏதோ அறியாத வயசுல தெரியாம செஞ்ச தப்பை, இன்னும் ஞாபகம் வெச்சுக்கிட்டு ‘நீதானே அது’ன்னு என்னியப்பார்த்து கேட்டா அவமானத்துக்கு பயப்படமாட்டாங்களா?”ன்னேன்.”உன் கூட்டாளிகள் கிட்ட சொல்லிடுவேன்னு பயமா?”ன்னு கேட்டா குறும்போட. “ஆமா”ன்னு சொல்லவும் தயக்கமாருக்கு. “இல்லை”ன்னு சொல்லவும் மனசில்லை.. ரெண்டும் கலந்தமாதிரி தலையை ஆட்டிவெச்சேன்.

“பயப்படாத.. நேத்து என்னிய பார்த்ததுலேர்ந்து, இந்தப்பயம்தான் உன்னைய ஆட்டிவெச்சிருக்கும்ன்னு நல்லாவே புரியுது.. நேத்துமுழுக்க நீ பட்ட மனவேதனையையே உனக்கான தண்டனையா நெனைச்சிக்கோ. படிப்பையும் எதிர்காலத்தையும் நாசமாக்கிக்காம, எல்லாத்தையும் மறந்துட்டு இப்ப பள்ளிக்கொடம் பொறப்படு.. நான் யாருகிட்டயும் ஒருவார்த்தையும் சொல்லவே மாட்டேன்.. இது சத்தியம். போதுமா?..”

அவ சொன்ன வார்த்தை ஒண்ணொண்ணும் வெய்யக்காலத்துல குளுமையா எளநி குடிச்சமாதிரி, புதுசாப்பிறந்தமாதிரி.. மனசுல இருந்த பாரமெல்லாம் இறங்கி அப்பாடான்னு இருந்தது எனக்கு, ஒடனே வீட்டுக்குள்ள ஓடினேன்.. பள்ளிக்கோடப்பையை எடுத்துட்டு வர்றதுக்கு..

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “புதிதாய்ப்பிறந்தேன்…

  1. திருட்டைப் பற்றி எண்ணுவதே பாவம் என்பதால் தான்
    “உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்கிறார் வள்ளுவர்.
    அந்த எண்ணத்துக்கே தண்டனை உண்டு என்பது
    வள்ளுவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    ” களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமம் தரும்” என்ற குறளில், திருடுவதில்
    உள்ள ஈடுபாடு இன்பமாகத் தோன்றினாலும்
    காலப்போக்கில் முடிவில்லாத துன்பத்தைக்
    கொடுக்கும். குறுகிய கால இன்பத்திற்காக நீண்ட கால
    துன்பத்தை யாரேனும் விலை கொடுத்து வாங்குவார்களா?
    அந்தச் சிந்தனையை சிந்திக்க வைக்கிறது இந்தக் கதை.
    இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

  2. ‘…எனக்கு புத்திசொல்றதவிட்டுட்டு.. கொடுக்கிற தெய்வம் பர்சோட கொடுத்திருச்சுன்னு சந்தோஷப்படறாங்க அம்மா…’
    ~ பாயிண்ட் மேட்.
    ‘…நான் யாருகிட்டயும் ஒருவார்த்தையும் சொல்லவே மாட்டேன்.. இது சத்தியம். போதுமா?..”
    ~ இதற்குத்தான் பெரிய ம்னசு என்று பெயர்.
    ஏது? ஏது? அமைதிச்சாரல், அமைதிப்புயல் கணக்கா, அம்பறாத்தூணியிலேருந்து, அம்பு அம்பா விட்றப்பலே இருக்கு. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.