Featuredhome-litஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி – 27

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11910819_879659515421582_37865010_n
134429018@N04_rதிரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (9)

 1. Avatar

  இருந்தலின் நீட்சி 

  எனக்குப் பின்னாலும் 
  நானே இருக்கிறேன் 
  இருக்கும் இருத்தலுக்குப் 
  பின்னும் 
  நானே என்பதாக, 
  எனக்கு முன்னாலும் 
  ஒரு பின்னால் இருப்பதாக…..- 
  ஆக 
  மொத்தத்தில் 
  இருக்கிறேன்..

  மரண நிகழ்வுக்கு
  பிந்தைய முதல் சில துளிகளில்
  செய்வதறியாமல் 
  கிடக்கும் எல்லாமும்
  இப்படித்தான்…..
  இருக்கிறது….
  இருந்தலின் நீட்சியாக…

  கவிஜி

 2. Avatar

  ஜன்னலில் துணி
  திறந்த கதவு
  வரவேற்பு  மிதியடி
  தயாராய் செய்தித்தாள்
  உதிர்ந்த காலணி
  வயோதிகம் தாங்காத நாற்காலி

  கறை படிந்த  தரை
  திறந்த கதவு 
  யாரும் வர 
  விரும்பாத அறை
  கனத்த நெஞ்சம்
  காரணம்  அந்த  
  ஒற்றைச் சொல்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 3. Avatar

  இங்கே முடிகிறது 
  பாதையும் பாதமும்விட்டு என் 
  பாதுகை பிரியும்  பயணம் 
  பயணமோ தொடங்குகிறது 
  இங்கிருந்து புதிதாக 

  காலம்வந்து இடம்பெயர்த்துவிட்டது 
  என் இருப்பை 
  காத்திருப்பின் இருக்கையிலிருந்து.
  யாருக்காகவோ காத்திருக்கவும் தொடங்கிவிட்டது 
  இந்த நுண்கணத்து வெற்றிருக்கை 

  பாதச்சுமையாகவோ 
  பாதைத்துணையாகவோ இருந்த 
  அடையாளங்கள் அனைத்தும் 
  அறுந்து வீழ்கின்றன 
  ஆண் பெண்ணென்ற பேதமும் 
  அர்த்தமற்று களையும் இந்த புள்ளியில் 

  மனதின் நுனியாலும் 
  மடமையின் வேராலும் 
  வாழ்ந்துமுடித்த காலமனைத்தும் 
  மடித்து வீசப்படுகிறது
  நேற்றைய செய்தித்தாளென 

  அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறது 
  எனக்கான அழைப்பு வாசகம் 
  திறந்தபடியே காத்திருக்கிறது – நான் 
  எப்படியும் திரும்பிவிடுவேன் என்பதற்காக 
  மரணத்தின் வீடு.

 4. Avatar

  நல்வரவு! [WELCOME!]

  யார்முதலில் வருவாரென எனக்கின்னும் தெரியாது
  கார்கால மாலையிலே கவினிருட்டுப் படரும்வேளை
  மகள்முதலில் அலட்சியமாய்க் காலணியைக் கழற்றியப்பின்
  கதவிங்கே திற‌ந்தவளும் வீட்டினுள்ளே சென்றடைந்தாள்

  முகங்கழுவி வந்தவளும் துண்டொன்றைக் கையிலேந்தி
  ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றபடி வாசலையே
  கண்கொட்டாமற் பார்த்திருக்க அப்போது ‘செல்’லோசை
  கேட்டவளும் பரபரப்பாய் துண்டிறுத்தி உட்சென்றாள்

  யாருடனோ கலகலப்பாய்ப் பேசுகின்ற குரல்மட்டும்
  எனக்கிங்கேத் தெளிவாகத் திகட்டாமற் கேட்டிருந்தேன்
  கல்லூரித் தோழனவன் கண்ணனெனப் புரிந்துகொண்டேன்
  நாடோறும் தவறாது நிகழ்கின்ற சேதியிது!

  யாரங்கே வருகின்றார் எனச்சற்று நோக்கினேன்
  பணிமுடித்து களைப்பாகத் தாயவளும் வந்துநின்றுப்
  பொறுப்பாகக் காலணியைப் பொருத்தமாகக் கழற்றியவள்
  உள்ளெழுந்தச் சிரிப்பொலியைக் கேட்டவுடன் விரைந்திட்டாள்.

  கையிருந்தப் பத்திரிகையை வாசலிலே விட்டெறிந்து
  உள்விரைந்த தாயந்தப் பெண்ணுடனே கோபமாகப்
  பேசுகின்ற சத்தத்தை நான்மட்டும் கேட்டிருந்தேன்
  இப்படித்தான் நிகழுமென நானிங்கு எதிர்பார்த்தேன்!

  அலைபேசி கையெடுத்து அவசரமாய்க் கணவரையும்
  வரச்சொன்ன சேதிகேட்டு மௌனமாகப் புன்னகைத்தேன்
  அப்பாவி அவர்வந்து ஆவதென்ன? செய்வதென்ன? ‌
  எப்போதும் பேசாத அவரென்ன செய்யவியலும்!

  வேகமாக வந்தவரும் காலணியை அவசரமாய்க்
  கழற்றியங்கே வீசிவிட்டுத் திறந்திருந்த வாசல்வழி
  நுழைந்துள்ளே சென்றுவிட்டார் கூக்குரல்கள் கேட்கின்றன!
  அழுகையொலி ஓங்கிவர அமைதியாகக் காத்திருக்கிறேன்!

  காதலிங்கு வெல்லுமா? கண்டிப்பிங்கு செல்லுமா?
  கடமையிங்கு ஓங்குமா? பொறுத்திருங்கு பார்க்கலாம்!
  கூச்சலிங்கு ஓய்ந்துவிடும் கோபமெல்லாம் தணிந்துவிடும்
  மேய்ச்சலுக்குப் போனகாளை கொட்டிலுக்கு வந்துவிடும்!

  யாரேனும் இதிலொருவர் போதுமிது எனநினைத்து
  போரிதனை முடித்தபின்பு களைத்துப்போய் வெளிவருவார்
  கண்ணெதிரே தெரிகின்ற என்மீது அவரமரும்
  நேரமிது என்றுணர்ந்து சலனமின்றி இருக்கின்றேன்!

  நல்வரவு! [WELCOME!] [ஒரு நாற்காலியின் குரல்!]

 5. Avatar

  நமக்கும்..

  ஒற்றை நாற்காலியில்
  உருக்குலைந்த மனிதன்
  நல்வரவு கூறி
  உள்ளே சென்று
  கால் நீட்டி 
  கண் மூடியபோது
  காலணிகளைக் கழற்றிவிட்டு
  போலிக் கண்ணீருடன்
  உள்ளேப் புகுந்தவர்கள்
  கடன்காரர்கள் மட்டும்தானா?

  அவன்
  உழைப்பில் விளந்தவற்றை
  உரிமையுடன் பங்கிட்டு
  வயதால் அவன் வாடியபோது
  வாசல் ஓரத்தில்
  ஒற்றை நாற்காலியில்
  உட்காரவைத்த
  உற்றமும் சுற்றமும் கூட!

  புறக்கணிக்கப்படும் முதுமை
  நாளை நமக்கும் நேரலாம்
  நினைத்துப் பார்க்க வேண்டாமா?

 6. Avatar

  உள்ளே நடக்கிறது தமிழ்மொழி மாநாடு. 
  பங்குபற்றிக் கொண்டிருக்கிறார்கள் 
  எழுத்துக்கூட்டி WELCOME ஐ 
  வாசிக்கத் தெரிந்தவர்கள்!

 7. Avatar

  பாதுகையும் சிம்மாசனமும்…

  பாதுகை தேடி ஓடுவதும்,
       பதவி என்பதாம் சிம்மாசனம்
  மீதினிலே ஆசை அதிகமாகி
       மிதவை போலே அலைவதுடன்,
  ஏதோ ஒன்றில் ஆசைவைத்தே
       எங்கும் அலையும் மானிடனே,
  மீதி யிருக்கும் உயிரதுபோய்
       மாண்டால் எல்லாம் காலிதானே…!

  -செண்பக ஜெகதீசன்…

 8. Avatar

  வரிசையை மறந்த 
  மிதியடிகள் எனது அறிவை
  விலை பேசிய 
  சுயநலச் சுனாமிகள்
  அறைக்குள் நீ ஈட்டிய
  கருவூலகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன!
  புறக்கண் இல்லா
  எந்தன் இதயம் நோக்க
  கிண்கிணிநாதப்பேச்சு
  மெல்லிசை தமிழே
  எங்கே சென்றாய்?
  வாசித்துக் காட்டிய
  மாதுளை முத்து இதழ்கள்
  சிந்திய தமிழ் கேட்க
  அகக்கண் மட்டுமே
  அருளிய ஆண்டவனுக்கு
  ஏனிந்த ஓரவஞ்சனை!
  வானவில்லாய் வளைந்து
  வான்முகிலில் வர்ணஜாலங்கள்
  உரைத்திட்ட செந்தமிழழகி
  அந்தகனை விட்டு ஏன் மறைந்தாய்?
  பாடுபட்டுப் பணத்தைப் பூட்டி
  வைத்த பேதையே!
  சொல்லாமலேயே கூற்றுவன் விருந்தினராய்
  சென்றவளே!
  இன்னொரு யுகப் புரட்சியிலே
  உனக்குமட்டும் சகோதரனாய்
  இருந்திடவே கடவுளிடம்
  யாசிக்கின்றேன்!
  கூற்றுவனிடம் இன்றுபோய்
  நாளை வருவேன் என்று
  ஓடி நீயும் வந்துவிடு!
  வாசிக்க யாருமற்ற செய்திததாள்
  உனது புரட்டலுக்காக காத்திருந்து 
  கண் சோர்ந்துவிட்டது!
  நீ அமர்ந்த நாற்காலி
  உனது வருகைக்காக காத்திருக்கிறது!

 9. Avatar

  புலரும் பொழுது

  இருளாடை மெல்ல விலக்கி
  ஒளிதனை சூட்டிக் கொண்டு
  புது நாளொன்றும் பிறக்கிறது !
  விடியலை வரவேற்க  
  வாசலும் இங்கே திறந்திருக்க
  வரவேற்பு மிதியடியும் 
  அழகாய் கண்சிமிட்ட
  அன்றைய முக்கிய நிகழ்வுகளை
  சுமந்து காத்திருக்கும் செய்தித் தாளும்
  ஆசனமும் தயாராய் தான் காத்திருக்க
  மானுடரை சுமந்து செல்லும்
  பாதுகைகளும் எப்போதுமே
  தயாரான நிலையில் இருக்க
  இனிமையும் இன்பமும் நிறைந்த
  நாளொன்றின் அடையாளமாய்
  புலரும் பொழுது !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க