வள்ளுவ மாலை
–சுரேஜமீ
மழலைமுன் ஆற்றாமை காட்டல் அறிவன்று
வாழ்வின் ஒளியாய் வந்தது – வள்ளுவம்
சொல்தினம் பாடம் இயல்பு மாறிப்
பழக்கிடும் உள்ளம் கனி!
இலக்கு நோக்கும் நிறைமனம்; மாற்றாய்
இருப்பு காக்கும் வழிச்செல் உண்டு!
இராது புறம்பேசத் தங்கும் சிறுமையும்
வள்ளுவம் தள்ளும் புறம்!
தானேகி நிற்கின் தடுக்கும் வாழ்வொருநாள்
தன்னைப் போக்கின் தமிழேகி – வள்ளுவம்
வாக்கின் வழிநிற்கத் தன்னையும் தாங்கும்
வளம்பெருகும் மண்ணில் உணர்!
இன்முகம் சொல்நலம் பண்புடை நாளும்
இறைசெவி செல்லும் நினைத்த நடக்க
இல்லம் தழைத்து இன்பம் நிலைக்க
நித்தம் திருக்குறள் சொல்!
எண்ணத்தின் ஆழம் படைக்கும் வண்ணம்
ஒருநாள் வந்திடும் வானவர் வையவர்
வாழ்த்திட நிச்சயம் நம்பிடு – வள்ளுவம்
காத்திடும் பண்பு நலன்!