Featuredஇலக்கியம்பத்திகள்

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 48 (1)

அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (1)

சுபாஷிணி

தமிழர்களாகிய நமக்கு அரிசு உணவு என்பது அன்னியம் அல்ல. நாம் தினமும் உண்ணும் அரிசிக்கு ஒரு அருங்காட்சியகமா எனக் கேட்கத் தோன்றலாம்.

ஆச்சரியமாக இருக்கிறதா?

வாருங்கள். மலேசிய நாட்டின் வட பகுதி மாநிலங்களில் ஒன்றான கெடாவிற்கு இப்பதிவின் வழி உங்களை அழைத்துச் செல்கிறேன். மலேசியாவின் நெற்களஞ்சியம் எனப் பிரத்தியேகமாக அழைக்கப்படும் மலேசிய மாநிலம் தான் கெடா.

asu
​கெடா மானிலத்தின் இயற்கை காட்சி (2011)

கண்களை மூடிக் கொண்டு கெடாவை நினைத்துப் பார்த்தால் என் மனக்கண்ணில் ஓடுவது கம்பளம் விரித்தார்போல் பரந்து விரிந்திருக்கும் கெடா மாநிலத்தின் பசுமை கொஞ்சும் நெல்வயல்கள்தாம். கரும்பச்சை மலைகள் சூழவும் இளம்பச்சை வயல்வெளிகள் சூழவும் எங்கும் பசுமை என நம்மை மயக்கும் ஒரு மலேசிய மாநிலம் கெடா.

asu1
​​கெடா மாநிலத்தின் நெல் வயல் (2011)

இம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் மலாய் இனத்தவர்கள். கெடா மாநிலத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பல்லாண்டுகள் தொடர்புண்டு என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வர். கடாரம் என்றும் இதற்குப் பெயருண்டு எனச் சொன்னால் ராஜேந்திரச் சோழனின் நினைவு பலருக்கு வரலாம். ஆம் 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரன் படையெடுத்து வந்து கைப்பற்றி ஏறக்குறைய 99 ஆண்டுகள் ஆட்சி செய்த பகுதிதான் கெடா. அன்று இன்றைய கெடா மாநிலம் மட்டுமன்றி இந்த மாநிலத்தின் வடக்கு தெற்கு கிழக்கு பகுதி மாநிலங்களும் கூட கடாரத்தின் ஒரு பகுதியாக சோழ ஆட்சியில் இருந்தன. அது தமிழர்களுக்கு ஒரு பொற்காலம். ஆனால் இன்றோ நிலைமை வேறு. சரி. அந்த பழம்கதை ஏன் இப்போது? நாம் அருங்காட்சியகத்திற்குச் செல்வோமே..!

asu2

​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப் பகுதி (2011)

உலகின் அதி முக்கிய தானிய வகை அரிசி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிய நாடுகளில் மட்டுமல்ல. ஆப்பிரிக்க கண்டத்திலும் சரி, வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களிலும், ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும்.. எங்கு சென்றாலும் அரிசி உணவு இல்லாமல் இல்லை என்பது இக்கால நிலை. கோதுமையையும் சோளத்தையும் தங்கள் முக்கிய உணவாகக் கொண்டிருந்த ஐரோப்பிய மக்கள் கூட கடந்த முப்பது ஆண்டுகளில் பெருவாரியாக அரிசியை தங்கள் உணவில் இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அரிசி வகைகள் இல்லாத பல்பொருள் அங்காடிகள் இல்லை என தைரியமாகக் கூறலாம். அந்த அளவிற்கு அரிசி பயன்பாடு உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது.

asu3

​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப்பகுதி (2011)

தற்சமயம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2015ன் ஒரு பகுதியில் ஆசிய நாடுகளின் முக்கிய உணவாகச் சித்தரித்து பாசுமதி அரிசிக்கான விரிவான தகவல் மையத்தை வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெர்லிஸ் மாநிலத்திலிருந்து கெடா மாநிலத்தை அடையும் நெடுஞ்சாலையில் பயணித்து வந்தால் ஏறக்குறைய 10 கி.மீ தூரத்திலேயே பசுமையான வயல் வெளிகளுக்கு மத்தியிலே இருக்கும் இந்த பிரமாண்டமான அரிசி அருங்காட்சியகத்தை அடையலாம்.

asu4

​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – நுழைவாயிலில் (2011)

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் Kedah Paddy Museum. Padi என்னும் சொல்லிற்கு மலாய் மொழியில் அரிசி எனப் பொருள். ஆங்கிலச் சொல்லான Paddy என்பது இந்த மலாய் மொழிச் சொல்லிலிருந்து உருவாகி இருக்க வேண்டும். உலகில் அரிசிக்காக இருக்கும் அருங்காட்சியகங்களென கணக்கிட்டால் மலேசியாவைத் தவிர்த்து ஜப்பான், பிலிப்பைன்சு ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம்.

தொடரும்..

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க