நடராஜன் கல்பட்டு    

 

1964 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ……. மடத்தில் இருந்து ஒரு ….. ஆச்சாரியார் வந்திருந்தார்.  வீட்டுக்காரரின் சிற்றன்னை எங்களை வந்து …. ஆச்சாரியாவை நமஸ்கரித்து ஆசி வாங்கிக் கொள்ள அழைத்தாள்.  எனக்கு அங்கு போவதில் ஈடுபாடு இல்லை.  ஆனால் என் மனைவி விடுவதாக இல்லை.

 

அணிந்திருந்த சட்டை, கால் சட்டையுடன் கிளம்பினேன்.  மனைவி நான் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் அணிந்து வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.  வேறு வழி இன்றி பெட்டியில் இருந்து என் திருமணத்தின் போது எனக்களிக்கப் பட்ட பட்டு வேஷ்டி அங்க வஸ்திரத்தினை அணிந்து கொண்டேன்.  சுமார் இரண்டு அங்குல ஜரிகை கொண்டவை அவை.

 

அங்கு நல்ல கும்பல்.  நான் உள்ளே நுழைவதைக் கண்ட …. ஆச்சார்யா, வாங்கோ… வாங்கோ… இப்பிடி முன்னாடி வந்து உக்காருங்கோ.என்று என்னை அழைத்தார்.  என்னுள் எழுந்த முதல் சந்தேகம் மரியாதை எனக்கா அல்லது 2 அங்குல ஜரிகை வேஷ்டிக்கா?

 

எங்கெ வேலெ பாக்கறேள்?”

 

பர்மாஷெல் கம்பெனிலெ.

 

கொழெந்தேள் இருக்கா?”

 

இருக்கு.

 

எத்தெனெ?”

 

மூணு.

 

எத்தெனெ ஆண் கொழெந்தெ?  எத்தெனெ பெண் கொழெந்தெ?”

 

மூணும் பொண்ணுகள்.

 

ஏன் ஆண் கொழெந்தே வாணாமா?  அபேக்ஷை இல்லியா?  எங்க மடத்துக்கு வாரும்.  ஆண் கொழெந்தெ கெடெய்க்கும்.

 

அவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் இந்த வார்த்தை களோடு பறந்து விட்டது.  ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வித்தியாசம் காணும் இவரெல்லாம் ஆன்மீகவாதியா?’ என்ற கேள்வியே எழுந்தது என்னுள்ளே.

 

சில சமயம் கண் சிமிட்டிக் கொண்டே என் மனைவியைக் கேட்பேன்,  பையன் வேணுமா  …. மடத்துக்குப் போயிட்டு வரெயா?” என்று.

 

இம்மாதிரியான ஆன்மீகவாதிகள் நம் நாட்டில் ஆயிரக் கணக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  அவ்வப்போது எங்காவது ஒருவரின் முகத்திரை கிழிக்கப் படுகிறது.  இருந்தாலும் அவர்களுக்குச் சேரும் கும்பல் குறைவதில்லை.

உங்களுக்கு இறைவனைத் துதிக்க வேண்டுமா?  துதியுங்கள்.  ஆனால் இடைத் தரகர்கள் வழியாக அல்ல.  நேரடியாக.  இறைவனோடு நீங்கள் பேசலாம்.  உங்கள் பேச்சு அவர் காதுகளில் விழும்.  காரணம் அவர் எங்கும் இருப்பவர்.  எல்லாம் அறிந்தவர்.  எல்லா சக்தியும் கொண்டவர்.

 

 

(தொடரும் ….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *