படக்கவிதைப் போட்டி 33-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. பிரேம்நாத் திருமலைசாமி எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நனிநன்றி.
உறங்கும் மழலையின் கிறங்கவைக்கும் அழகிலே சொக்கிப் போகின்ற நம்மைப் பார்த்து நட்பாய் முறுவலிக்கின்றதோ இந்தப் பொம்மை?!
சரி…இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துவிடுவோம்… புறப்படுங்கள்!
’பொம்மையைக் காவலுக்கு வைத்துவிட்டுக் கடவுளுடன் (உறக்கத்தில்) விளையாடுகின்றதோ இந்த மழலை?’ என்று வினாயெழுப்புகின்றார் திரு(மிகு). வைரமணி. கடவுள்தான் பதில்சொல்ல வேண்டும்!
காவலுக்குப் பொம்மை யிருக்க
ஆழ்உறக்கத்தில் அழகுக் குழந்தை…
உறங்கும்பொழுது குழந்தை சிரித்தால்
கடவுள் குழந்தையுடன் விளையாடுகிறார்
முடியைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கிக்
கண்மூடித் தூங்குகையில்
கடவுள் விளையாட வந்தாரோ?
***
”கூடப் பிறந்தவர்களும் இல்லை; கொஞ்சியணைக்கப் பெற்றோரும் அருகிலில்லை; அஞ்சாமல் பழகிவிடு தனிமைக்கு இப்போதே!” எனக் குழந்தைக்கு இன்றைய வாழ்வியலை வருத்தத்தோடு போதிக்கின்றார் திருமிகு. மீனாட்சி.
தாலாட்டு பாட தாய்க்கும் நேரமில்லை
கைகோர்த்து விளையாட கூட்டாளி யாருமில்லை
அண்ணனோ அக்காவோ யாரோடும் பிறக்கவில்லை
விளையாட உன்னையன்றி என்னோடு ஒருவரில்லை
அம்மா கொஞ்சம் நவீனமாகி வேலைக்கு சென்றுவிட்டாள்
அப்பாவோ செல்வம் சேர்க்க தேசமெங்கும் சுற்றிவிட்டார்
காக்கா கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை
அபார்ட்மென்ட் வாழ்க்கையில் அக்கம் பக்கம் ஆட்களில்லை
பரப்பரப்பான வாழ்வின் பரிசு இதுதான் கண்ணா
கசப்பான உன்ன்மை இதை உணர்ந்துவிடு கண்ணா
தனிமையை இப்போதே பழகிக்கோள் கண்ணா
தாயின்றி போனாலும் காவலுக்கு நானிருக்கேன்
கலங்காதே நீ கண்ணுறங்கு கண்ணா!!
***
தனிமையில் உறங்கும் இந்தப் பிஞ்சின் அருகிருக்கும் பொம்மையுருவும் கூட நம்மை அஞ்சிடச் செய்குதே? என்று வேதனையுறுகிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.
பாதுகாப்புணர்வின்றிப் பதறும் மனம்
பக்கமிருப்பதைக் கையிலெடுத்து சூப்பியும்
பாந்தமாய் அணைத்தும் தேறுகிறது.
பரிவைத் தானாகப் பற்றுகிறது.
பொம்மைத் தெரிவுமிங்கு ஐயகோ!
பயங்கர உருவில்! இது
பெற்றவர் செயலா! பரிதாபம்!
பாசம் அன்பு தூரமாகிறது.
பச்சை மனம் பாதுகாப்புணர்வை
பற்றும் எதிலும் தேடுகிறது
பாசத்தை அணைப்பை உருத்தாய்
பக்கமிருந்து கொடுத்தால் குறையமாட்டோம்;!
தனைமறந்துறங்குது குழந்தை தனிமையில்
வினை நிறைந்த உலகில்
அனைத்தும் நவீனமயத்தால் மழலையும்
தனிமைத் தீவிலாதரவுத் தேடலில்
***
’குழந்தையைக் காப்பதற்கு உயிரற்ற இந்த பொம்மைக்கு மாத ஊதியம் வழங்கிவிட்டனரோ மானுட உணர்வற்ற இம்மழலையின் பெற்றோர்?’ என்று குமுறுகின்றார் திருமிகு. லட்சுமி.
…தாயின்றி தூங்கும் தங்கமே!
என்னைப் படைத்த தாவரம்தான்
உனைக் காண அனுப்பியது!
எனை வளர்க்க மறந்த
அடுக்கக இயந்திரங்கள்
உனைக் காக்கவும் மறந்து
பணப் புரட்டல் கண்காட்சியினை
காணுகின்ற வெறியில்
தாலோலோ மின்னல் கண்
இயந்திர பொம்மைக்கு
மாத ஊதியம் பேசி
வெகுநாளாகி விட்டதோ!
மாமன் கொடுத்த தொட்டிலிலும்
அத்தையின் அன்பு ராட்டினமும்
சித்தி செய்த கண்மையும்
சித்தப்பனின் செல்லச் சீண்டலும்
தாத்தாவின் செல்லமொழியும்
பாட்டி வைத்த சின்னமணி
திருஷ்டி கரும்பொட்டும்
சின்ன பாப்பாவின் மழலைக் கை
உனைத் தட்டி உறங்க வைக்க
இன்னொரு தலைமுறை
பின்செல்ல வேண்டுமம்மா!
[…]
பொல்லா மாய உலகில்
கணினி யுகத்தில்
அவதரித்த பொற் சித்திரமே!
காற்று வீசும் இயந்திரம்
இன்று மின்சாரத் தடையினால்
மௌனம் காக்கிறதே!
இளங்காற்று வீசுகின்ற
தென்னை நண்பன்
வீசிய காற்றில்
கண்ணுறங்குவாயோ!…
***
குழந்தையின் தனிமை உறக்கம் நம் கவிஞர்களிடையே உணர்ச்சிப் புயலையே உண்டாக்கிவிட்டிருப்பது அவர்தம் கவிதைகளில் காணக் கிடைக்கின்றது. உண்மைதான்! இன்றைய நவீன வாழ்வியலின் சாபம் இந்தத் தனிமை; அதிலும் குழந்தைகளின் ஆதரவற்ற தனிமைநிலை வேதனையையே மிகுவிக்கின்றது.
இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம்!
மழலைப் பருவத்தில் கிடைக்கும் நிம்மதியான இந்த உறக்கம் பிறகு வாய்ப்பதரிது. அதனால்தான் கவியரசரும், ”காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே!” என்று குழந்தையை நோக்கித் தாலாட்டுப் பாடினார் போலும். வீட்டுப்பாடச் சுமையும், பெற்றோரின் பேராசைச் சுமையும், சமூகம் தருகின்ற நெருக்கடிச் சுமையும் பிள்ளைகளின் உறக்கத்தைக் களவாடிச் சென்றுவிடும் காலமிது. எனவே துஞ்சும் இந்த அஞ்சுகத்தை நோக்கி, ”புத்தகச் சுமைகளின்றி, தனிவகுப்பின் தொல்லையின்றி, வேலை தேடும் விரக்தியின்றி அவன் அப்படியே தூங்கட்டும்!!” என்று ஆறுதல் மொழிபகரும் அழகிய கவிதையொன்று மகிழ்ச்சி மத்தாப்பை மனத்துள் பூக்கவைத்தது.
அக்கவிதை…
ஆசைகளற்ற மாயவெளியில்
அவன் தூங்குகின்றான்,
அப்படியே தூங்கட்டும்…..
அருகிலிருக்கும் கரடிபொம்மை
வெறும் சாட்சிபூதமாய்…
புத்தகச் சுமைகளின்றி,
வீட்டுப் பாடங்களின்
அழுத்தங்களின்றி,
முதல்நிலையெடுக்க
முந்தும்குதிரையென்றின்றி,
தனிப்பயிற்சி வகுப்புகளெனும்
தாளாச் சுமைகளின்றி,
இனிய பெற்றோரின்
வார்த்தை இறுக்கமின்றி
விளையாடும் களமுமின்றி
வெறுந்தனிமை துணையாகும்
நிலையுணரும் வரை
அவன் தூங்குகிறான்
அப்படியே தூங்கட்டும்….
பாலபருவம் முடியும்
பகட்டு இளமை தரும்
காதல் மாயக்
கனவுகளின்றி,
வேலைதேடி அலையும்
விரக்தியின்றி…..
அவன் தூங்குகிறான்
அப்படியே தூங்கட்டும்…….
[…]
முதியோர் இல்லத்தின்
முரட்டுத் தனிமையுமின்றி…..
அவன் தூங்குகின்றான்,
அப்படியே தூங்கட்டும்..,,,,,….
இப்போதேனும் தூங்கட்டும்
இருக்கும் நிம்மதியுடன்
தப்பாத துணையாக
தரும் கரடிபொம்மையுடன்
அவன் தூங்குகிறான்
அப்படியே தூங்கட்டும்…
குழந்தையின் உறக்கத்துக்கு ஆதரவாய் உரக்கக் குரல் கொடுத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!
***
அடுத்தொரு கவிதை, இன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் பரிசளிக்கின்ற தனிமையன்றோ பின்னாளில் அவர்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைச்சிறையில் வா(ட)ழ வழிகோலுகின்றது எனும் சுடும் உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றது.
அக்கவிதை…
அம்மா அப்பா அரவணைக்க
அருகில் இல்லை யென்றாலும்,
பொம்மைக் காவல் போதுமென்றால்
பாப்பா தூங்கிடும் பயமின்றி,
செம்மை யான வாழ்விதுவா
சிந்தித் துரைப்பீர் பெற்றோரே,
நம்மை நாளைத் தெருவில்விட
நாமே வளர்க்கும் பழக்கமன்றோ…!
திரு. செண்பக ஜெகதீசனின் இக்கவிதையைப் பாரட்டுக்குரியதாய்க் குறிப்பிட விழைகின்றேன்.
பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்கட்கும் என் பாராட்டும் நன்றியும். அதிக எண்ணிக்கையில் கவிஞர்களின் பங்களிப்பை வரும் வாரங்களில் எதிர்பார்க்கிறேன். நன்றி!