ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 7
அண்ணாமலை சுகுமாரன்
8 ) தொக்குதிரத் தொடுன் மூளைநிணமென்பு
சுக்கிலந் தாதுகளெழு
தொக்கு = தோலால் போர்த்த
தேகம் உதிரம் = குருதி, ரத்தம்
ஊண் = தசை
மூளை = மூளை
நிணம் = கொழுப்பு
என்பு = எலும்பு
சுக்கிலம் = உயிர்சத்தி ,சுக்கிலம் அல்லது சுரோணிதம்
தாதுக்கள் ஏழு = ஆகியவை ஏழு தாதுககளாகும்
இந்த தேகமானது தோலும் ,இரத்தமும் ,ஊனும் ,மூளையும் கொழுப்பும் ,எழும்பும் ,சுக்கிலமும் ஆகிய ஏழு தாதுக்களால் ஆகியது .
9) மண்ணோடு நீரங்கி மதியோடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோடெட்டு
மண் = நிலம் எனும் பிருத்வி
நீர் = தண்ணீர் எனும் அப்பு
அங்கி = தீ எனும் தேயு
மதி = சந்திரன்
காற்று = வளி எனும் வாயு
இரவி = ஞாயிறு எனும் சூரியன்
விண் = வானம் எனும் ஆகாயம்
எச்சமூர்த்தி = உடலில் வேள்வி தீயாக விளங்கும் ஆன்மா
எட்டு = ஆகிய எட்டு மூர்த்திகள் உடலில் இடம் பெற்றுள்ளன
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன் சந்திரன் ஆகியுடன் உடல் செய்கின்ற வேள்வியில் உயிர்ப்பு வடிவாக இருக்கும் ஆன்மாவை சேர்த்து உடலில் எட்டு ஈசத்துவம் உண்டு என்கிறது இந்தக்குறள்.
“வெய்யாய் தனியாய் இயமானாம் விமலா”என்கிறது சிவ புராணம்.
10) இவை யெல்லாங்கூடி யுடம்பாய வொன்றி னவை
யெல்லா மானது விந்து
இவை எல்லாம் = இதுவரை சொன்ன இவை எல்லாம்
கூடி = சேர்ந்து
உடம்பு ஆய = இந்த சரீரமான
ஒன்றின் = ஒரு பொருளின்
எல்லாம் = யாவையும்
ஆனது = உண்டானது
விந்து = இந்த உடலின் கரு ஆனது .
பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், நான்கு புருஷார்த்தங்கள், பஞ்ச மூர்த்திகள், ஆறு சக்திகள், ஏழு தாதுகள், எட்டு ஈசத்துவங்கள் ஆகிய இவை எல்லாம் கூடிய விந்து வின் காரணமாக இந்த உடல் உண்டானது என்கிறது இந்த குறள்.
விந்து எனும் சொல் புள்ளி வட்டம், தாது என்கிற பொருளை உணர்த்தும்.
ஒரு மையப்புள்ளியில் இருந்து பல வட்டங்கள் தோன்றுகின்றன. முதல் வட்டத்திற்கு ஒரு மையப்புள்ளி இருந்தே தீரும். பல வட்டங்கள் தோன்றினாலும் மையப்புள்ளி ஒன்றாகவே இருக்கிறது. ஒரு சுக்ஷுமமான ஆன்மாவில் இருந்து இந்த தேகம் தோன்றுகிறது.மேலே சொன்ன அத்தனையும் (பஞ்ச பூதம், தன்மாத்திரை முதலியவை)பலவட்டங்கள் ஆனாலும் மையப்புள்ளியாக ஆன்மா இருக்கிறது. இத்தகைய சூக்ஷும ஆன்மா பூமியில் இடம்பெற ஒரு சிறிய மூலத் தாது அவசியம். இவை இரண்டும் சேராவிட்டால் இந்த தேகம் அமைய வாய்ப்பில்லை.
இத்துடன் ஔவையின் ஞானக் குறளின் முதல் பாலான வீட்டு நெறிப் பாலின் முதல் அதிகாரம் முடிவடைகிறது.
அடுத்து உடம்பின் பயன் எனும் பொருள் பற்றி அடுத்து அதிகாரம் பத்துக் குறளில், உடல் பெற்றதன் பயனை விவரிக்கிறது. அதை அடுத்து வரும் பகுதியில் பார்க்கலாம்.
– தொடரும்