நாஞ்சில் நாடன் பயணம் – 6 – I
தி. சுபாஷிணி
காவலன் காவான் எனின்
தமிழினியின் வெளியீடு. 2008,2010 என இரு பதிப்புகளைக் கண்டிருக்கிறது. 168 பக்கங்கள் அழகான முகப்பு அட்டை. “எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் சுவாசிக்கவும் பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. எனது கவலையும் அத்துடன் முடிந்ததாகக் கொள்ள வேண்டும். சமூகத்துக்கான தேர்ந்த கருத்துக்களை தீர்த்துச் சொல்கிறவர்களைத்தான் நாம் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் அழைக்கிறோம். ஆனால், அவர்களுடைய முதல் தகுதி, விருப்பு வெறுப்பு அற்றவராக இருக்க வேண்டும் என்பது” என்று கூறுகிறார் தன் அட்டையில், தன் அழகான புகைப்படத்துடன் அழகும் தெளிவும் தன்னிடத்தே கொண்ட 22 கட்டுரைகளைத் தாங்கி மிளிர்கின்றது. இந்நூல் ‘காவலன் காவான் எனின்’.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
இறைவணக்கத்துடன் ‘எழுத்தறிவித்தவர்’ என்னும் கட்டுரையுடன் இந்நூல் துவங்குகிறது. இக்கட்டுரையின் கதாநாயகன் நாடனின் ஆரம்பப்பள்ளியின் வாத்தியார் & “பெரிய வாத்தியார் & ஐயர் வாத்தியார்” என்று அழைக்கப்படுவர். இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லையென்றால், மூன்றாம் நாள் அப்பையனின் வீட்டின் முன் அஜராகும் வாத்தியார். அது பறச்சேரி, வைராக்குடி, வெள்ளாக்குடி என்ற பேதம் கிடையாது. காய்ச்சலாகப் படுத்துக் கிடந்தால் நெற்றியல் கை வைத்துப் பார்ப்பார். எந்த பானைக்கிடையில், பந்தாயத்துக்குள் ஒளிந்திருந்தாலும் காதை முறுக்கி இழுத்துக் கொண்டு போவார். சிறய தவறு ஆனாலும் விழுவது பெரிய அடி, அத்தனையும் அன்பால் என்கிறார் க. சுப்ரமணியம்.
“அவர் வரத்துப்போக்கு வடபத்து வரப்புத்தடம் வழியாக குறுக்குப் பாதையில், நடந்து வருகையில் வல்லாரை, கொடுப்பை, துளசி, நீர்முள்ளி, சிறுதும்பை, யானை நெருஞ்சி, நாயுருவி, கொழுஞ்சி, கருநொச்சி, ஆவாரை, சிறு பயிறு, பெரும் பயிறு என்றெல்லாம் வேருடன் பிடுங்கி, ஆற்றுத் தண்ணீரில் அலசி கொணர்ந்து வகுப்பில் காட்டுவார். வாசனையை முகரச் செய்வார்.”
இறச்சக்குளத்தில் உள்ள நடுத் தரப்பள்ளியில் ஆறு முதல் எட்டு வரை படித்தார் சுப்ரமணியம். செட்டியாரிடத்தில் படித்த இலக்கியமும் கணக்கும் பின்னாளில் பயனுள்ளதாக இருந்தது. இலக்கணம் கருதி எந்த மொழியைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பதைக் கற்பித்தவர் செட்டின் வாத்தியார் அன்னாளில் 32ஆம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் என்கிறார் க.சுப்ரமணியம்.
“அன்று என் கையால் நட்ட இரண்டு செடிகள், நாற்பத்தேழு ஆண்டுகள் பின்பு பார்க்கும் போது, இரண்டுப் பேர் ஆவிச் சேர்த்துப்பிடிக்க முடியாதபடி, அடித்தண்டு பெருத்து, கிளைத்து, வளர்ந்து, வானைத் துழாவிக்கொண்டு அரசமரமும் மருத மரமுமாக இன்று பள்ளி வளாகத்தில் நிற்கின்றன.” என்று க. சுப்பிரமணியம் நாஞ்சில் நாடனாய் நாடனாய் நினைவு கூறுகிறார்.
ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தாழக்குடியில் பயின்றார் அவர். அன்று தலைமையாசிரியராய் இருந்தவர் சமுகவியல் ஆசிரியர் ஞான சிரோன்மணி. பதினொராம் வகுப்புத் தேர்விற்கு தாலுக்காத் தலைநகர் பூதப்பாண்டிக்கு போக வேண்டும். இவருடன் நான்கு பேர் தேர்வு எழுதப் போயாக வேண்டும். இவரது ஊரிலிருந்து இரண்டு மைல் தூரம். எனவே தினந்தோறும் இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டும். சித்தப்பாவோ, அப்பாவோ, மாமனோ சைக்கிளில் கூட்டிச் சென்று விடுவர். இவரது வீட்டிலும் சைக்கிள் இல்லை. அழைத்துச் செல்லவும் யாரும் இல்லை. “வீட்டிற்குத் தலைப்பிள்ளை, இரண்டரை மைல் நடப்பது ஒன்றும் மலைமறிக்கும் காரியம் இல்லை. மலைஆடுகள் போல் கால்களில் வைரம் இருந்தது” என்கிறார். (இக்கால எந்தத்தாய்க்கும் கண்களில் நீர்மல்கும்) தலைமை ஆசிரியரிடம் ஹால் டிக்கெட்டை வாங்குவதற்கு செல்கிறார். ஹால்டிக்கெட்டிடை வாங்கி, கையெழுத்துப்போடும் போது விரல்களில் மைத்தடம் பேனாவில் நூல்சுற்றியிருக்கிறது. இதைக் கண்டறிந்த தலைமை ஆசிரியர், “வேறு பேனா இல்லையா! இப்பேனாவை வைத்து கொண்டு எப்படி தேர்வு எழுதப்போகிறாய்? இதற்கு நீ ஒரு சொம்பு மையில்ல கொண்டு செல்ல வேண்டும்!” என்றுகூறிவிட்டு, ”இந்தா! என் பேனா!” என்று கொடுத்து விட்டு, இவர் எப்படி தேர்வு எழுதப் போகிறார் என்று கேட்டு அறிந்தார்.
டிராயிங் மாஸ்டருக்கு லீவு கொடுத்து இவரை சைக்கிளில் தேர்விற்கு கொண்டு விட்டுக் கூட்டி வரச் சொன்னார். தேர்வு நாட்களில் பூதப்பாண்டிக்கு சைக்கிளில் மிதித்துக் கூட்டிச் சென்று, எதிரில் உள்ள ஓலைப் புரை காப்பி ஹோட்டலில் மதியம் தோசையும் ரசவடையும் வாங்கித் தந்திருக்கிறார் டிராயிங் மாஸ்டர். அந்த ஆண்டில் ஜில்லாவிலேயே முதலாவதாக வந்திருக்கிறார்.
“ஆரம்ப பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளி வரை, பாக்கியமுத்து டீச்சர், எங்கோடி வாத்தியார், அருணாசலம் பிள்ளை சார், சந்தோசம் நாடார் வாத்தியார், சாமி சார், ஜோதி கிரேஸ் டீச்சர், ஜெயச்சந்திரன் சார் என எத்தனையோ முகங்கள் நெஞ்சில் நீங்காதிருக்கின்றன. இஃதெல்லாம் எனக்கு மட்டும் நடந்ததென்று சொல்ல வர வில்லை. பள்ளிகள் தோறும் பலர் இப்படித்தான் இருந்தனர். வாத்தியார்களாக கைப்பணத்தில் பீஸ் கட்டியவர், புத்தகங்கள் வாங்கிக் கொடுத்ததவர், சட்டை வாங்கித் தந்தவர், சைக்கிளில் வைத்து மிதித்தவர்…. கருமமே கண்ணாக, தொழிலே தொண்டாக. மாணவரே உயிராக, அவர்களின் திசை நோக்கி தொழுகின்றேன்.” என்று நெடுஞ்சாண் துணையாக பூமி தொட்டு வணங்குகிறார் நாஞ்சிலார்.
குடியும் குடி சார்ந்த விசாயமும்
குடியும் குடிசார்ந்த எண்ணமும் விழுமியங்களும்
நண்பர்களே! தலைப்பே தனித்துவமாக திகழ்கிறதுது. ‘குடி’ க்கு ஒரு விழுமியமா?. ‘குடி’ என்பதையே காற்றில் மட்டும் வெளிவரும் சொல்லாய் இருந்த காலம் தாண்டி, அதற்கு ஒரு விழுமியம் என்னில் காலத்தின் மாற்றமா? மாற்றத்தின் மன மாற்றமா? குடியேற்றமா? நாஞ்சிலுடன் நாமும் பயணிப்போமே! நண்பர்களே! காய்தல் உவத்தலன்றி இக்கட்டுரையை சற்று நோக்குவோம். ஏனெனில் ஒவ்வொரு எழுத்திற்கும் சமூகப் பொறுப்பு உண்டு தோழர்களே!
எனது வசதிக்கும் வாய்ப்புக்கும் நட்பு வட்டத்துக்கும் இணங்க (மக்களே! இதை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் இந்த அறிவு இருந்தால் ஏன் நண்பர்களே நாம் குடி ‘குடியைக்கெடுக்கும்’ என்று புலம்புகிறோம்). மதுவினங்களைத் தேடித்தேடி நுகர்ந்து, அருந்தி, போதையை, அனுபவித்தவர் என்ற அடிப்படைத் தகுதியில் தான் நாடன் இக்கட்டுரையை வரைந்தார். பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றிற்லிருந்து கோவாவில் கிடைக்கும் ஃபென்னி வகை, பிராந்தி, விஸ்கி, ஸ்மர்னாஃப் வோட்காவும், பகார்டி ஒயிட் ரம், உலகில் தயாராகும் அறுபதுக்கும் மேற்பட்ட பீர் வகைகள், இந்தியாவில் கிடைக்கும் பில்ஸ்னர், லெகர், ஸ்டவ்ட் வகை, பீர்கள், வைன், ஜின் (வைன்,ஜின் இவ்விரண்டும் இவர் குடியாகக் கருதுவது இல்லையாம்!) வரை சுவைத்திருப்பதாகப் பட்டியலிடுகிறார்.
“குடி என்பது அறம் சார்ந்த பிரச்சனையாகப் பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படுகிறது. அதன் அபத்தத்தை உணர்ந்து பேசுகிறேன். குடி என்பது, எனது பார்வையில் அறம் சார்ந்த பிரச்சினை அல்ல. அறம் என்பது அனைத்து மாந்தர்க்கும் ஒரே விதமாகவே இருக்க முடியும். கொலை என்பது அறம் சார்ந்த வஞ்சனை அறம் சார்ந்த பிரச்சனை பொய், களவு, சூது என்பன அறம் சார்ந்தவை. அறம் என்பது ஐரோப்பியர்களும் அமெரிக்கருக்கும், சீனருக்கும், இந்தியருக்கும், ஒன்றாகவே இருக்க முடியும். எனவே குடி என்பதை தான் ஒழுக்கம் சார்ந்தாகக் கருதுகிறேன்.
அத்தை மகளை, மாமன் மகளை, அக்காள் மகளை மணம் செய்து கொள்வது சில சமூகங்களின ஒழுக்கம். பெரியம்மை மகளையும் சித்தி மகளையும் மணம் செய்வது வேறு சில சமூகங்களின் ஒழுக்கம். இதில் எது சரி, எது தவறு இல்லை என்று நியாயம் வழங்கும் இடத்தில் நாம் இல்லை. அது அவரவர் சமூக ஒழுக்கம். தமிழச் சமூகத்தில் குடி என்பது ஒழுக்கக்கேடு ஆனால் அறத்துக்கும் ஒழுக்கத்துக்கும் நுட்பமாகவும் தூலமாகவும் வேறுபாடு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித வாழ்வில் அறம் என்பது நிலையானது, மாறாதது, மயக்கம் தராதது. திருவள்ளுவர் சொன்னாலும் தெருப்பாடகன் சொன்னாலும் அறம் என்பது ஒன்று தான். ஒழுக்கம் என்பது இடத்திற்கு இடம், காலம், பார்வை பொறுத்து வழுகிக்கொண்டு ஓடுவது. எனவே வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு ஒழுக்கங்களைப் பேணுகின்றன. ஒரு சமூகம் புலால் மறுப்பு எனும் ஒழுக்கம் பேணுகிறது. இன்னொரு சமூகம் புலால் விருப்பு எனும் ஒழுக்கம் பேணுகிறது. ஒன்றின் ஒழுக்கத்தை இன்னொன்றுக்குப் பொருத்திப் பார்க்க இயலாது. ஓரிடத்து நேரென்பது அனைத்து இடங்களிலும் நேரல்ல. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குடிப்பது தீமை என ஐரோப்பாவில் போய்ச் சொன்னால் சிரிப்பார்கள். நேஷனல் ஜியாகிரஃபி சேனலி-லும் டிஸ்கவரி சேனலிலும் ஆதி சமூக அங்கங்கள் கூடி இருந்து குடிப்பதையும் நாம் பார்க்கிறோம்” என்று, குடி என்பது அறம் சார்ந்தது இல்லையென்றாலும் ஒழுக்கம் சார்ந்தது தான் என்று நிறுவுகிறார் நாஞ்சிலார்.
அருமை நண்பர்களே! நான் காந்தியவாதியின் (உண்மையான என்று எழுதப்போனேன். சூரியனுக்கு எதற்கு அடைமொழியான டார்ச்லைட் என்று தோன்றி விட்டது) மகளாய் வளர்த்தவர். கல்லூரி வயதில் மது விலக்கு போராட்டத்திலும், மாநாட்டிலும் கலந்து கொண்டவள். குடியின் விழுமியங்கள் என்ற தலைப்பு என்னை என்னபாடு படுத்தியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அவருடைய எழுத்தால் எனக்கு அறிமுகம் கிடைக்கப்பட்டது. பழகும் எளிமையும், ஒவ்வொன்றுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு கால் நடையாய் நடந்து பெற்றமைக்கும், தமிழ்பால் உள்ள அவரது பற்றும், மேன்மையும், அவர்பால் உள்ள பெருமதிப்பும் என்னைப் பதறடித்து விட்டது! என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபின்தான் கட்டுரையை மிகவும் நிதானமாக படிக்கத் தொடங்கினேன்.
மதம் என்பதோர் அபின் என்றும், கலவி என்பதோர் போதை என்றும், பணம், அதிகாரம், மங்கை போன்ற அரிய போதைகளைவிட, போதையைப் பாவிப்பது என்பது குடி என்கிற ஒன்றை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவதாக அமைகிறது. குடிக்கிறவன் வேறு. குடிகாரன் வேறு என்பதை அடிப்படையாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் சமூகம் எல்லோரையும் ஒரே அளவில்தான் வைத்திருக்கின்றது. ஏனெனில் குடிகாரர்களின் அலங்கோலங்களையும் வன்முறையையும் கண்டுவருகிறது.
குடித்து விட்டு வருபவன் பொண்டாட்டியை அடிக்கின்றான். பிள்ளைகளை அடிக்கிறார்கள். சோற்றுப் பானையைப் போட்டு உடைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டி மண்டை உடைந்து சாகிறான். இல்லையென்றால் சாலையோரம் படுத்திருப்பவர்களை அலுங்காமல் மேலுலகிற்கு அனுப்புகிறார்கள். குடியால் கொலை நடக்கிறது. இவை தான் குடியின் விழுமியங்களில் விளையும் பயன்கள்.
குஜராத், காந்தி பிறந்த மாநிலம். அங்கு அதிகாரபூர்வமாகக் குடிக்க அனுமதி இல்லை. காந்தி, குஜராத்துக்கு மட்டுமா பிறந்தார். இந்தியாவுக்குப் பிறக்கவில்லையா என்பது துணைக் கேள்வி. ஆனால் காசு அதிகம் கொடுத்தால் எங்கும் எதுவும் கிடைக்கும். மேலும் வெளிநாட்டுச் சேனல்கள் நம்மிடம் குடியை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. குடி, நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு எனும் விளம்பரம் யார் கண்ணைத் துடைக்க? இதுபோல் ஒரு முரண் இருக்க இயலுமா?
எனக்குத் தோன்றுகிறது. நீதி நூற்கள் பேசுவது எல்லாம் சான்றோர், அரசர், மாமனிதர் பற்றித்தானோ? என்று! உழைக்கும் மக்கள் பற்றி, கொல்லனை, தச்சனை, கம்மாளனை, கொத்தனைப் பற்றி அவர்கள் சிந்தித்தார்களா? இது நாஞ்சிலாரின் வினா!
குடியை மாற்ற, தவிர்க்க, மறக்கடிக்க இயலாது என்கின்ற பட்சத்திற்குப் சாதரண மனிதனுக்கு சரியாக குடிக்கக் கற்றுக் கொடுங்கள். எய்ட்ஸ் விளம்பரத்தில், தவறு செய்யாதே என்று வருவதில்லை. ஆணுறை பயன்படுத்துங்கள் என்று தானே சொல்கின்றது. அது போல் சரியாகக் குடி, அளவாகக்குடி நல்லதைக் குடி என்று கற்றுத் தரலாம் என்கிறார் நாடன் அவர்கள். (நூலைப்படி, நல்ல நூல்களைத் தேடிப்படி…. மன்னிக்கவும் தேவையில்லாத இடத்தில் இப்பாடல் என் நினைவிற்கு வருகிறதே நாஞ்சிலாரே நான் என்ன செய்வது?)
“அளவு என்பது அவரவர் உடல் நிலை, மன நிலை, வயது, திராணி, தட்பவெப்பம் சம்மந்தப்பட்டது. அவரவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் இவ்வாசிரியர்.
நாஞ்சிலாரே! என் இல்லப் பணிக்கு உதவி செய்ய வரும் பெண்ணின் மருமகளுக்கு தன் குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்? எப்போது திட உணவு கொடுக்க வேண்டும் என்ற அறிவுத் தெளிவு இல்லாத போழ்து, எது முக்கியம் ஐயா? ஆதார உணவிற்கே அறிவை அளிக்க இயலாத நிலையில் குடிப்பதற்கு வகுப்பு எடுக்க வேண்டுமா ஐயா? இன்னமும் ஆண்களின் வார்த்தைகளை நம்பி திருமணம் புரிந்து கொண்டு, குடித்து பொறுப்பில்லாதவனை வைத்துக் கொண்டு, வேலை செய்து அவனையும் காப்பாற்றி, மன்னிக்கவும் அவனை மேலும் குடிக்க அனுமதித்து விட்டு… நீங்களே வாக்கியத்தை முடியுங்கள்-. மனம் சரிந்து போகிறேன் ஐயா! ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்று பெண்கள் தானய்யா உடல் நொந்து உள்ளம் நொந்து… கண்ணீர் மல்கி, காதலால் அல்ல ஐயா… வலியால்…
“உழைக்கும் மனிதனுக்கு மிவிதிலி வேண்டாம், கள் போதும். கள் அவனுக்கு போதை மட்டுமல்ல, உணவும் ஆகும். கலயம் பத்து ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு குப்பி கோக் அல்லது பெப்ஸியின் விலைதான். தினக்கூலியில் பத்தில் ஒரு பங்கு. இந்தியாவிலேயே பனை அதிகம் நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. குடிப்பவனுக்கு நல்லது என்பதோடு மட்டுமல்லாமல் பனையேறும் தொழிலாளியின் வாழ்க்கைத் தரம் நிமிர்ந்து போகும்!
’ஒரு மரத்துக் கள்! ஒரு மண்டலம்!’ என்பது பல நோய்களைத் தீர்க்கும் மருந்து. கள் மருந்து மட்டுமல்ல, அலுப்புத் தீர்க்கும் அமுது. பத்து ரூபாய் செலவாகும் போதையை அவனுக்கு மறுத்துவிட்டு, எழுபது ரூபாய் போதையை பரிந்துரை செய்யும் நேர்மையாளர்கள் நாம்! ஆனால் குடிப்பவன் பற்றி நாம் வடிக்கும் கண்ணீர் ஜீவநதியாய் பெருக்கெடுத்துப் பாய்கிறது! இது என்ன மோசடி என்பதை யோசித்துப் பாருங்கள்!’
ஒரு சமூகத்தின் பொருளாதாரத்தை நிமிர்த்துகிற தொழில் ’கள்’ இறக்குவது. பனை ஏற அச்சப்படுவதால் பனங்கருப்பட்டியின் விலை கிலோ நாற்பது ரூபாய் இன்று! கள் மறுப்பு எங்கிருந்து தொடங்கியது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். கள் மறுப்புக்காக சொந்த பனை மரங்களை வெட்டச் சொன்ன தீர்க்கதரிசிகளைப் பற்றி உரத்துப் பேச அச்சமாக இருக்கிறது! இன்றும் கற்பக விருட்சம் என்று கொண்டாடத் தகுந்த பனைமரம் செங்கற்சூளைகளுக்காக வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சந்தன மரத்தை அடுப்பெரிக்கப் பயன்படுத்துவதைப்போல்.
உணவாக, மருந்தாக, போதையாகப் பயன்படும் ஏழை, எளிய மக்களின் கள்ளைப் பறித்துவிட்டு நாம் மாற்றாக ’விஸ்கி’ தந்திருக்கிறோம். பிறகு மிகுந்த கரிசனத்துடன், கள் குடித்தால் அது யார் குடியைக் கெடுக்கும்? விஸ்கி உற்பத்தியாளர்களின், ஊழல் மலிந்த அரசியல்காரர்களின் குடியைத்தான் கெடுக்கும்.
”இறுதியாக நான் சொல்ல வருவது கள் ஒரு சிறந்த மாற்று என்பதும் அதைப் பயன்படுத்த வழிவகை செய்வது குடிப்பதன் தீமைகளைக் குறைக்கும் என்பதும் உழைப்பாளிக்கும் பனைத் தொழிலாளிக்கும் பொருளாதார விடுதலையைத் தரும் என்பதுமாகும். ஒரு வாக்குமூலமாக நான் சொல்ல விழைவது சொந்தமாக எனக்கோ குடும்பத்தினருக்கோ ஒரு பனைமரம் கூடக் கிடையாது என்பதாகும்!” என்று விளக்குகிறார் விழுமியங்களை நாடன்.
ஒழுக்கம் சார்ந்தது என்பது ஓரினம் சார்ந்ததாக இருக்கின்றது என்கிறார். ”குடியை ஆதரிக்கும் அவ்வினம் சார்ந்தவர் குடிகாரர்களாக மாற வாய்ப்பில்லையா? சதமானம் குறைவா? அங்கும் பெண்கள்தானே கஷ்டப்பட வேண்டியிருக்கும்? அவர்கள் சீராக குடிக்கக் கற்றுக் கொண்டிருப்பவர்கள்தானா? அவர்கள் மூதாதையர்கள் வழி கற்றிருப்பார்களா? என் தாழ்மையான வினாக்கள்! சமூகம் அழிவு நிலைக்கு வந்தமையால்தான், சீர் பெற கள்ளுண்ணாமையைக் கையில் எடுத்திருப்பார் வள்ளுவர்!” என்பது என் பணிவான கருத்து. சீர் செய்ய இயலாமையும், சீரழிவும் சம விகிதமாக அன்றிலிருந்து வந்து கொண்டிருக்கின்றதா? வாசகர்களிடம் என் ஐயங்களை விடுகிறேன்!
உண்ணற்க கள்ளை
ஆசிரியர் கணக்குப்படி மது அருந்துதல் பற்றி மூன்றாவது கட்டுரை. ஆனால் என் கணக்குப்படி ஒரு நீண்ட கட்டுரைதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையது. முதல் கட்டுரையில் அவருடன் நமக்கு ஒரு லார்ஜ் கொடுத்தார். இரண்டாவது கட்டுரையில் எப்படிக் குடிக்கத் தரவேண்டும்? ”உடல் அளவு உள்ள அளவு கொண்டு குடிக்கக் கற்றுக் கொண்டு பின் இன்பத்தை துய்யுங்கள்! தயவு செய்து குடிகாரனாக மாறி, உங்களையும் அழித்துக் கொண்டு, உங்கள் வக்கிரங்களை நிறைவேற்ற போதையை சாக்காகப் பயன்படுத்தாதீர்கள்!” என்கிறார். சரிதானே சார்! மேலும் அரசின் ஏமாற்றுத்தனங்களையும் விவரித்தார். பனங்கள்ளின் பயனும் பேசப்பட்டது. பின் ஏன் ‘உண்ணற்க கள்ளை’ என்கிறார் ஆசிரியர்.
எப்போதுமே தலைப்பு வைப்பதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது! திரும்பத் திரும்பச் சொல்ல வருவது, மதுப்பழக்கம் என்பது ஒழுக்கம் சார்ந்தது, தனி நபர் விருப்பம் சார்ந்தது என்பதும் அஃதோர் அறச்சார்பு பற்றியதல்ல என்பதுவும், மேலும் எனது கட்டுப்பாட்டில் இருக்கும் சகல மூல பலத்தோடும் சொல்ல விழைவது, குற்ற உணர்வுடன் செய்ய வேண்டிய காரியம் அல்ல அதுவென்பது.
ஆனால் மது அருந்துபவனை வாடிக்கையாளனாகக் கொண்டு தொழில் புரிகின்றவர்கூட, அவனுக்கு உரிய மனித கௌரவத்தைத் தருவதில்லை என்பது வேதனை அளிக்கிறது!”
ஈண்டு நாஞ்சிலார் வேதனைப்படுவதே டாஸ்மாக் பார் அமைந்திருக்கும் சூழல் பற்றித்தான்!
“தேங்கும் கழிவுநீரின் நாற்றத்திலும் உற்பத்தியாகும் கொசுக்களின் போர் முழக்கத்திலும் பக்கத்து இருக்கைக்காரர்களின் ‘வெல்லு விளி’களின் இடையேதான் கீழ்த்தட்டுத் தமிழ்மகன் குடிக்க வேண்டியதிருக்கிறது. தமிழ்நாடெங்கும் அனைத்து கீழ்மட்டக் குடிச்சாலைகளின் தன்மை இதுவே. அதிர்ச்சி என்னவெனில் இவற்றை அரசாங்கமே நடத்துவது! அல்லது அரசாங்க ஆதரவுடன் நடத்துவது!
குடிநீர் நாலணா! கண்ணாடித் தம்ளர் எனில் கழுவ வேண்டும்! உடையும் தம்ளருக்கு வாடகை வாங்க இயலாது! எனவே பிளாஸ்டிக் தம்ளர்! ஆயிரம், எழுபது ரூபாய்! வெளியே மூன்று ரூபாய் பெறாத தின்பண்டம் உள்ளே வாடிக்கையாளர் வாங்கும்போது பத்து ரூபாய்! எழுபது ரூபாய் குப்பியில் அரசாங்கம் வரியாக, துணை வரியாக, உதவி வரியாக, மேல் வரியாக பறித்துக் கொள்வது நாற்பத்தைந்து சதவீதம்! மேலும் தயாரிப்பாளர் லாபம், உத்தேசமானதொரு கணக்கில் முப்பது ரூபாய் பெறாத குடிக்கு வாடிக்கையாளன் செய்யும் செலவு எண்பத்தைந்து ரூபாய்! அவனுக்கு ஊக்கத் தொகையாகக் கிடைப்பது, அனுபவிப்பது பீடிப்புகை! மூச்சு முட்டுதல்! கொசுக்கடி! சாக்கடை நாற்றம்! வாந்தி! அருவருப்பு! பகலானால் உலகத்து ஈக்கள்! காறித்துப்பிய எச்சில்! விருப்பம் போலத் திரிதரும் எலி, பெருச்சாளி, மூஞ்சூறு, தெறிபாச்சா, கண்டாங்கிப் பாச்சா, பலவகைப் பல்லிகள், காலில் உராயும் பூனைக்குட்டிகள், குரைக்காமல் வாலொதிக்கிக் கிடக்கும் சொறி பிடித்த நாய்கள்……!
இங்கு நமது கவலை, ‘இலையில் சோறு போட்டு! ஈயைத் தூர ஓட்டு!’ என்று பாப்பாப் பாட்டுகளும், ‘சுத்தம் சோறு போடும்’ என்ற சுவர் வாசகங்களும், ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் பழமொழிகளும் வழங்கும் நாட்டில் பொதுக் குடிச்சாலை என்பது அரசு அங்கீகாரம் பெற்ற அசுத்தக் கேணியாகக் கிடப்பது.
எந்த விடுதியானாலும் வாடிக்கையாளர்களை மதித்துப் பணி செய்வார்கள். ஆனால் இந்தக் குடிச்சாலைகளில் மேலாளர்களும் பொறுப்பாளர்களும் பணியாளர்களும் வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்துவதில்லை! பிழைப்பு அவனை வைத்து, ஆனால் அவனுக்கு அவமரியாதை!
இஸ்லாமிய மத ஒழுக்கத்தைச் சார்ந்தவரிடம் சிறப்பான பண்பொன்று உண்டு. தமது வருவாயில் ஒரு பங்கை அவர்கள் தானம் செய்வார்கள். மும்பையில் பைதுணி, பைகுலா, கர்னாக் பந்தர், மஸ்ஜீத் பந்தர் போன்ற இடங்களில் தவறாது யாவரும் காணும் காட்சி ஒன்றுண்டு. உணவுச் சாலையின் முன்பு எளிய, முதிய, யாசகர் உட்கார்ந்திருப்பார்கள் வரிசையாக. சிறு வியாபாரி, அல்லது குறுந்தொழில் முனைபவர் ஒருவர் வந்து பத்து ‘கானா’ சொல்லிக் காசு கொடுத்துப் போவார். வரிசையாகப் பத்துப் பேருக்கு பெரிய தையல் இலையில் இரண்டு முரட்டு ரொட்டிகள், ஒரு சப்ஜி, கெட்டியாக ’தால்’(வேகவைத்துக் கடைந்த பருப்பு நீர்), வெங்காயத் துண்டுகள் வைத்துக் கொடுப்பார் கடைக்காரர். கடையின் உள்ளே அமர்ந்த காசு கொடுத்து உண்பவருக்கான அதே உணவு, அதே பரிமாறும் பக்குவம். சற்றும் இளப்பம் இல்லை, ஏளனமில்லை, எரிச்சல் இல்லை; இலவசமாகத்தானே பெறுகிறார்கள், யாசகம் தானே எனும் அலட்சியம் இல்லை.
ஆனால் காசு கொடுத்துக் குடிக்கப்போகும் இடத்தில் பன்றி போல நடத்தப்படும் கேவலத்தை தமிழகம் அன்றி வேறெங்கும் நீங்கள் காண இயலாது. கேரளத்திலும் கள்ளுக்கடைகள் உண்டு, சாராயக் கடைகள் உண்டு, அங்கு சக மனிதன் கேவலப்படுவதில்லை!
இந்தியத் தயாரிப்பான வெளிநாட்டு மதுவகைகள் ஆறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. எனவே தரக்கட்டுப்பாடு எளிதில் சாத்தியமாகும். ஆனால் ’கள்’ எனில் ஒவ்வொரு மரமும் ஒரு தொழிற்சாலை போல. எனவே மரத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை! எந்த நிலையிலும் கலப்படம் சாத்தியமானது! ’கள்’ என்றால் இறக்குவது, தயாரிப்பது, கலக்குவது, விற்பது, குடிப்பது, இறக்க அனுமதி கொடுப்பது, வைத்திருப்பது, எடுத்துச் செல்வது, கடத்துவது என்பன தடை செய்யப்பட்டவை.
கள்ளின் வீரியத்தை அதிகரிக்க ’க்ளோரல் ஹைட்ரேட்’ எனும் ரசாயனம் கலக்கிறார்கள் என்கிறார்கள். குத்தகைதாரர்களின் கடைக்கு கள்ளுக் குடங்கள் வரும்போது அதிக அளவுக்கும் போதைக்கும் என வியாபாரிகள் இந்தக் கலப்படத்தைச் செய்வது சாத்தியம்தான். கள்ளுக்கடை குத்தகைதாரர்கள் அரசியல்காரர்களின் பினாமிகள், அதிகப் பொருட்செலவில் ஏலம் எடுப்பவர்கள், அதிகப் பணம் சம்பாதித்தே ஆக வேண்டும். அப்போதுதான் மேலும் மக்களுக்கு சேவை செய்ய இயலும். இரசாயனம் மட்டுமின்றி, வெள்ளைப் பூசணியின் குடல், புளித்த பழஞ் சோற்றுத் தண்ணீர், மொரமொரவெனப் புளித்த மோர், சதைத்துப் போட்ட ஊமத்தங்காய், பொடித்துக் கலக்கிய நவச்சரம், ஆனைமயக்கி என பலவும் கலப்பதுண்டு குத்தகைக் கடைக்காரர்கள். இதைக் கண்காணிக்க, கட்டுப்படுத்தப் போக்கற்ற அரசுகள் ’கள்’ இறக்குவதே குற்றம் என்கின்றன! ஆனால் கோழி உணவில், விரைவில் எடை பெற்று வளரப் பயன்படும் ரசாயனங்கள் கலப்பதோ, மஞ்சள் பொடியில் இருந்து காப்பிப் பொடி வரை செய்யப்படும் கலப்படங்கள் பற்றியோ நமக்கென்ன என்றிருக்கிறார்கள்!
எதுவும் முதலாளிகள் கட்டுப்பாட்டில் வரும்போது கலப்படமாகிறது! அதிகாரத்தின் சம்மதத்துடனோ, சம்மதமின்றியோ! எங்காவது ’பீ’ நாறும் அரிசி விளைவதுண்டா உலகில்? எப்படி அரசு நடத்தும் ரேஷன் கடைகளில் அது சாத்தியமாகிறது!!!!!!!!!!
தகவல் குறிப்புகள் சொல்கின்றன. சாராயத்தின் பங்கு வோட்கா, ரம், பிராந்தி, விஸ்கியில் 42.8 சதமானம், ஜின்னில் 32.7 சதமானம், பியரில் 4 முதல் 8 சதமானம், கள்ளில் 6 முதல் 10 சதமானம் என்று!
கள் போதை மட்டுமல்ல, ஒரு மரத்துக் கள் ஒரு மண்டலம் என்பது பல நோய்களுக்கு மருந்து.
ஒரு கலயம் கள் என்பது ஒரு வேளை உணவு!
ஆனால் தமிழனுக்கு கள் கண்டு முதலாகாது-.
அதனால் என்ன? பன்றிகள் மேயும் குடிச்சாலைகள் உண்டு நமக்கு!”
“ஒன்று நிச்சயம், கள் உண்டால் இந்தச் செலவு பாதியாகக் குறைந்து போகும்! செலவு குறைந்தால் அரசாங்கத்தின், மது உற்பத்தியாளர்களின் வருமானம் குறையும் என்பது வேடிக்கையான சூத்திரமாகப் படவில்லையா? எனவே யாருடைய நலனுக்காக இங்கு கள் மறுக்கப்பட்டு, விஸ்கி சிபாரிசு செய்யப்படுகிறது?
கேரளத்தில் கள் இறக்கி, பதப்படுத்தி, ஆறு மாதம் வரை கெட்டுப் போகாதபடி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறார்கள்! நாமோ, ’கள் இறக்குவதே குற்றம்!’ என்கிறோம்!
மதச்சார்பற்ற, சனநாயக, சமத்துவக் குடியரசில் எங்ஙனம் ஐயா ஒரே காரியம் ஒரு ஊரில் சரியாகவும் மறு ஊரில் தப்பாகவும் இருக்க இயலும்?!!!!!!!!!!!!!!
இஃது அறத்தின் பாற்பட்டதா அன்றேல் தரகின் பாற்பட்டதா?
கள்ளை அனுமதிக்க மாட்டார்கள் எனும்போது, பன்றி மேயும் இடமாக, சகமனிதனின் குடிச்சாலை இருக்கத்தான் போகிறது எண்ணும்போது, எதற்காக அங்கு போய் ஆரோக்கியமும் மானமும் கெட வேண்டும் நண்பர்களே!
ஒன்று, குடியை நிறுத்தப்பாருங்கள்! திருவள்ளுவர் சந்தோஷப்படுவார்! பெற்ற தாய் மகிழ்வாள்! கட்டிய மனைவி கொண்டாடுவாள்! இயலாது போனால் வாங்கிக் கொண்டு போய், வீட்டில் வைத்து, குற்ற உணர்வற்று, சுதந்திரமாய் குடிக்கப் பழகுங்கள்!
கள், ’கிட்டாது, எனவே வெட்டென மற!’ என்கிறது கட்டுரை!
தோழர்களே! இக்கட்டுரைப் பொருளின் மதிப்புக்குறித்து அவரது கருத்துக்களை அப்படியே பதிவு செய்திருக்கின்றேன். உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து என்னைத் தெளிவு படுத்துவீர்களா நண்பர்களே!
பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை
முன்னுரைகளின் நம்பகத்தன்மையைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை. ஒரு நூல் எழுதியாகிவிட்டது. அதற்கு முறைவாசல் தெளிப்பது தான் முன்னுரை! அதை திரைப்பிரமுகரிடம் வாங்கினால் பதினைந்தாயிரம்! அதுவும் அவரது அலுவலகம் எழுதும்! சில முன்னுரைகள் நூல் யாத்தவரே எழுதி, பிரமுகரிடம் அவரது பெயரிட்டுப் போடுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ளவும் செய்யப்படுகிறது! அதற்குத் தனி விலை!!!!!!!!! முன்னுரைக்கு எதிர்ச்சீராக வெள்ளித்தட்டு, கனிகள், உரோமச்சால்வை எனவும், இன்னொருவருக்கு ஒரு பவுன் மோதிரமாக அளிக்கப்பட்டது என்கிறார் ஆசிரியர்!
“எழுதி வாங்கிய முன்னுரையை ஏற்றுக்கொள்வதோ, நிராகரிப்பதோ, தணிக்கை செய்வதோ, சாதகமாகத் தாமே ஒன்றிரண்டு பத்திகளை எழுதிச் சேர்த்துக் கொள்வதோ, முன்னுரையைத் தவிர்த்துவிட்டு மூன்று வரிகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்வதோ நூலாசிரியரின் உரிமை என்பதும் எழுதப்படாத மற்றொரு சரத்து.”
“இதில் இருக்கும் சிக்கல் முதலிலேயே முன்னுரை எழுத நேரமில்லை என்று ஒதுங்கிக் கொண்டாலும் பகை. புத்தகத்தைப் பற்றி உயர்வாக எழுதாவிட்டாலும் பகை. இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் சொற்பொழிவுப் பாங்கில் சொன்னால், மேலே புலி, கீழே பாம்பு!”
“சமகால இலக்கியச் சூழலில், மிகக் கோலாகலமாக வெளியீட்டு விழாக்கள் நடத்தப்படும்போது, விழா மேடையில் முன்னுரை எழுதியவருக்கான இருக்கையொன்று முன்பதிவு செய்யப்படுவதும் உண்டு!”.
சில முன்னுரைகளின் இறுதிச் சொற்றொடராக, வழக்கமாக ஒன்றைக் கூறுவார்கள். “எதிர்காலத்தில் மிகச் சிறந்ததோர் கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர் ஆவதற்கான அறிகுறிகள் இவரிடம் தென்படுகின்றன. தமிழுக்கு ஆகச் சிறந்த படைப்புக்களை இவரிடம் எதிர்பார்க்கலாம்” என்பது! இந்தச் சொற்றொடரின் உண்மையான பொருள் கீழ்க்கண்ட எதுவுமாக இருக்கலாம்.
1.இந்தத் தொகுப்பு ஒன்றும் உருப்படி இல்லை!
2. அடுத்த நூல் எழுதும்போது பார்த்துக் கொள்ளலாம்!
3. உற்சாகப்படுத்துவதில் ஒன்றும் தப்பில்லை! (வல்லிக்கண்ணன் பல்கலைக்கழகம்)
4. எந்தக் காலத்திலும் இவன் உருப்படியான நூல் எழுதப் போவதில்லை! (இஃது ஆசிரியரின் பாயிரம் பற்றியப் பகிர்தல்!)
ஈண்டு நான் ஒரு கருத்துச் சொல்ல விழைகின்றேன்! நானும் என் தோழியர் இருவரும் இணைந்து எழுதிய “ஹைக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள்” என்னும் நூலுக்கு திரு.ஔவை நடராசன் அவர்கள் மனமுவந்து அணிந்துரை அளித்தார். அவர் வெளியிட பேரா.ச.வே.சுப்ரமணியம் அவர்கள் நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டார். நான் இருவருக்கும் விழாவிற்கு வரும் வண்டிச்சத்தம் கூட கொடுக்கவில்லை என் நற்பேறுதான்! நவீன சமகால இலக்கிய விழா என்றதும் ஒரு நிகழ்ச்சி நினைவில் வருகிறது. ஒரு நூல் வெளியீட்டு விழா மற்றும் நூலாசிரியரைப் பற்றி அனைவரும் வாழ்த்திப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் முடித்து அடுத்தவர் வரும் இடைவெளியில் பார்வையாளர்களிலிருந்து ஒருவர் மேடையேறினார்.
‘‘எங்களுக்கு இலக்கியத்தைப் பற்றி அறியக் கற்றுக் கொடுக்கிறீர்கள். உங்களைப் போல் ஒரு சேவை இலக்கியத்திற்குத் தேவை என்று 10 நிமிடங்கள் பேசி விட்டு, “இப் பொன் மோதிரத்தை அவருக்கு அணிவிக்கிறேன்” என்று மேடையில் அமர்ந்தவர்களை நோக்கிச் சென்றார். விழாக் கதாநாயகனின் உடலும் அதற்குத் தயாராக அசைந்தது. ஆனால் அவரோ, அவரையும் கடந்து அவர் அருகில் அமர்ந்திருப்பவருக்கு மோதிரத்தை அணிவித்தார் பாருங்கள்! யார் மேடையை யார் பயன்படுத்துவது! மேடை நாகரிகம் என்ன என்பது! இலக்கியம் கடந்து இலக்கியவாதிகளிடம் சென்றோமானால் நாடன் மொழியில் ‘சிரிப்பாணி’கள் பல உண்டு.
“இன்று பணமிருந்தால் எந்த முட்டாளும் எழுதி எந்தக் குப்பைக்கும் முன்னுரை பெற்றுவிடலாம். ஆனால் பண்டு அவ்விதம் அல்ல.
நாஞ்சில் நாடன் கேட்டுக் கொள்வது இதுவேதான்!
புத்தகங்களும் பொறுப்புடன் எழுதப்பட வேண்டும். முன்னுரைகள் அதைவிடப் பெரிய பொறுப்புடன் எழுதப்பட வேண்டும்!