நாஞ்சில் நாடன் பயணம் – 6 – II

தி. சுபாஷிணி

கூன்

கூன் என்பது மனிதருக்குப் பிறவிக்குறைபாடு. கூனன் ஆண்பால் எனின் கூனி பெண்பால். கைகேயியின் தோழி மந்தரை என்பவள் கூனுடையவள் என்று ‘கூன்’ பற்றிப் பேசத் தொடங்குகிறார் நாஞ்சில் நாடன்.  கம்பராமாயணத்தில் அனுமனை இராவணன் ‘கூனுடைக் குரங்கு’ என்கிறான். குறுந்தொகையில் ’கூன் மலர்’ என்றும், வளைந்த முள்ளையுடைய முள்ளிச் செடியை, ‘கூன் முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்’ என்றும் கூறுகிறது.  ஞானசம்பந்தர் பாடிய பாடல்களில் ‘கூன்’ என்ற சொல்லில் கொட்டுகிறது.  ‘கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்’, ‘கூன் இளம்பிறை சூடிக்கொடுவரித் தோல் உடை ஆன்’ கூனற் பிறை உடைமேல் மிக உடையான்’,

‘கூனற் திங்கள் குறுங்கண்ணி கான்ற நெடுவெண் நிலா’.

கூனல் எனில் சங்கு என்றும் நத்தை என்றும் பொருள் உண்டு. காரணம் இரண்டுமே முதுகில் பாரம் சுமக்கும் உயிரினங்கள்.  சோழ மன்னன் நாட்டு வளம் காண நடந்தபோது வெண் மணலை நீர் அறித்தோடும் ஆற்று ஓரத்தில் சங்கு ஒன்று வாய் பிளந்து, அண்ணாந்து கிடந்ததாம்!  மேல் நோக்கி அண்ணாந்த அதன் வாயில் காட்டு மரத்தின் பூவிலிருந்து ஒரு துளி தேன் கொட்டியதாம்!  கண்டு சோழன் மகிழ்ந்தானாம்!

இதை அறியாமல் மறுநாள் சோழன் அவைக்கு வந்த ஔவைக் கிழவியைச் சோழன் அமரச் சொல்ல, கம்பர், புகழேந்தி, ஜெயங்கொண்டான் ஆகிய பெரும்புலவர் பலர் வீற்றிருந்த அவையில் அமர நாற்காலி ஏதும் இன்றிக் கிழவி நின்றவாறு நோக்கினாளாம். சோழன் ஏனென்று கேட்க, ஔவை சொன்ன பாடல்:

’கால் நொந்தேன் கடுகிவழி நடந்தேன்

யான் வந்த தூரம் எளிதன்று, கூனன்

கருந்தேனுக்கு அங்காந்த காவிரி சூழ் நாடா

இருந்தேனுக்கு எங்கே இடம்?’

 

அணிந்துரை&மருதம்:

“ ‘மருதம்’ எனும் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரை தான் பார்த்ததில்லை. குமார் எனும் அவர் பெயர் எனக்கு எதையும் அர்த்தப்படுத்தவில்லை. அவர் வயதென்ன, பிறந்து வளர்ந்த ஊரென்ன, பணியிடம் என்ன, எந்தத் தகவலும் தெரியாது. இதற்கு முன் அவருடைய கதைகளை நான் வாசிக்கும் சிற்றிதழ் பேரிதழ்களில் கண்ட கவனமும் இல்லை. எழுதப்பட்ட காலகட்டம் பற்றியும் எனக்கு எந்தத் தகவலும் இல்லை. முன்னுரை எழுதுவதற்கு இந்தத் தகவல்கள் எதுவும் அவசியம் இல்லை என்று உங்களுக்கும் எனக்கும் தெரியும். இந்தக் கதைகளை வாசித்து வரும்போதே கதை சொல்லியின் முகம் மெல்ல மெல்ல தெளிந்து வருவது வாசகனாகிய எனக்கு மகிழ்வூட்டும் அனுபவமாக இருந்தது. பதினைந்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பின் கதைகள் எல்லாம் புத்தம் புதியனவாக இருக்கின்றன.” என்று உண்மையை திறக்கிறார் நம் முன் நாடன்.

பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை தானே நாஞ்சில் அவர்களே!  “எனது முன்னுரையின் நோக்கம், இந்தத் தொகுப்பின் மொத்தக் கதைகளைப் பற்றியும் சிறு குறிப்புகள் வரைவதல்ல. எதிர்காலத்தில் தமிழுக்கு நல்ல சிறுகதை ஆசிரியர் ஒருவர் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று தேடிப்பார்ப்பதுதான்! எனக்கு நல்ல நம்பிக்கை ஏற்படுகிறது. சிறுகதை வடிவம் கூடி வருகிறது, செய்நேர்தி தெரிகிறது! சமூக அக்கறை புலப்படுகிறது. மொழி கைவசம் இருக்கிறது. முனைப்பும் ஊக்கமும் தேடல்களும் இவரை மேற்கொண்டு நல்ல உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் எனும் நம்பிக்கை பிறக்கிறது.” என்று நாஞ்சிலால் நவின்றவை.

 

எம் முன் உளன் ஒரு பொருநன்

நாவல் வடிவம் என்பது உரைநடையின் பெருங் கொடை என்றுதான் தொடங்குகிறார் இக்கட்டுரையை. சுதேசமித்திரன் அவர்களின் ‘காக்டெய்ல்’ என்னும் முதல் நாவல் குடிச்சாயை அனுபவங்களின் ஊடே சமூக விமர்சனங்களைச் செய்கிறது. ‘நான் & லீனியர்’ என அழைக்கப் பெறும் எழுத்துவகை இது. சாரு நிவேதிதாவின் பாதிப்பு பெரிதும் கொண்டிருக்கின்றது. நாவல் வடிவம் அளித்த சுதந்திரதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எழுதப் பெற்ற நாவல் ‘ஆல்பர்ட்’ மருத்துமனையில் அனுமதித்ததே அவரைக் கொலை செய்வதற்கான முகாந்திரம் தானோ எனும் ஐயத்துடன் தொடங்கும் நாவல், அவரை மயானத்தில் எரியூட்டி முடிந்தபின்பும் அந்தக் கேள்வியுடன் தான் முடிக்கிறது. இந்த நாவலில் கொலை நடந்ததாக இல்லையா என்று. இத்தனை வெளிப்படையான எடுத்து தமிழில் அபூர்வமானது! தனித்தன்மை உடைத்து!

மேலும் புறநானூற்றில் அதியமான் நெடுமாறன் அஞ்சியை, ஔவை பாடியதாகத் தும்பைத் திணையில், தானை மறம் துறையில் அமைந்த பாடல் ஒன்றுண்டு. ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன், திங்கள் வலித்த கால் அன்னோன், எம்முளும் உளன் ஒரு பொருநன்’ என்று. அத்தகு ஒருவனே இன்றைய தமிழ் நாவல் சூழலில் நாவல் எழுதித் தனது பெயரை நாட்ட இயலும் கொடி மரம் போல.” என்று ஆஸ்பத்திரி என்றும் நாவலுக்கு அணிந்துரையாய் நிற்கின்றார் நாடன்.

 

ஈஷாவும் நானும்

நாடனின் நண்பரும் கவிஞரும் இலக்கியச் சொற்பொழிவாளருமான மரபின் மைந்தன் முத்தையாவுடன் கோவை நகர எல்லையைத் தாண்டி இருமருங்கேயுள்ள மரச்செறிவுகளுடைய நிழல்களின் அருமையில் இளங்காற்றின் இதத்தில் மன நிறைவாய் பயணித்து, இருவரும் ஈஷா மையத்தை அடைந்த அன்றொருநாள் பற்றிய கட்டுரை இது.

திரு சாம்சனின் ‘வேரின்றித் தொடங்கும் போதிமரம்’ என்றும்  கவிதைத் தொகுப்பிற்கு, சங்க இலக்கியத்தின் வெளிச்சதை அளவு கோலாக வைத்து அளவுகாட்டுகிறார். அவரது முதல் தொகுப்பைப் பெற்று, மிகவும் நேர்மையாக அணிந்துரை அளித்திருக்கிறார்! ‘ஈண்டு முயலப்படும்’ என்றும் கட்டுரை, ஆசிரியரது ‘சூடிய பூ சூடற்க’ என்றும் சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையாகும். அது 2010 ஆம் ஆண்டிற்கான ‘சாகித்ய அகடமி விருது’ வாங்கிய நூல்! இது இவ்வருட சென்னை கண்காட்சியில் கிட்டதட்ட 3000 படிகள் விற்பனை ஆகின!  வெளியிட்டது தமிழினி மதிப்பசும்.

இந்த வரிசையில் ‘உணவே மருந்து’, துருக்கித் தொப்பி, அண்மையில் புனைவுகள் & நவீன வாசிப்புகள் & ஆகிய நூல்களின் முன்னுரைகள் இடம்பெறுகின்றன.

‘அன்பெனும் பிடியில் அகப்படும் மாமலையே!’ என்னும் கட்டுரைகள் க.நா.சுவின் மருமகன் திரு. பாரதிமணியன் அன்பைத் வெளிப்படுத்துகிறார்!

 

வரப்புயர

இக்கட்டுரை மணி நீரின் பயனையும், அது இந்நாளில் மேலும் நாகர்கோவிலும் அன்று காணப்பட்ட குளங்கள் பற்றிப் பட்டியலிடுகிறார்! தன்னிலையை இடிந்து நிற்கும் நிலுவைப் பார்க்கிறது.

நறும்புனல் இல்லாமற் போனதான் காரணம், நதியின் பிழை அன்று எனப் பேசுகிறான் கம்பன். ’மணிநீர்’ என வள்ளுவனும், ’நறும்புனல்’ என்று கம்பனும் பேசுவது நீரின் தூய்மையைத்தான்! நீர் தூய்மையானதும், தூய்மைப்படுத்துவதும் ஆகும். ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்பதும் வள்ளுவம்தான். இவை எல்லாமும் அன்று என்றும், அன்று என்பது ஏதோ ஆயிரம் ஆண்டுகள் முன்பென்றும் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. எல்லாம் ஆங்கிலத் துரைகளின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இந்தியத் துரைமார்களிடம் நாம் அடிமைப்பட்ட பின்பான சந்ததிகள் தாம்!

எங்களூரில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை கிடையாது!  கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, சிந்து, பத்மா, மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, துங்கபத்ரா பாய்வதில்லை! எல்லாம் ஆறுகள் தாம்! யானையை ’ஆனை’ என்பதுபோல் ஆற்றை ’யாறு’ என்றும் சொல்லலாம். நதி எனில் ஆழம், வேகம், அகலம், நீளம் அதிகம் கொண்டது. ‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி’  என்கிறான் கம்பன். எனில் கவியின் தன்மைக்கு சிறந்ததோர் உவமை நதி என்பதாகும். இன்றோ கவியெனில் ஆறாகி, கால்வாயாகி, சிற்றாறாகி, ஓடையாகித் தண்ணீர் பாய்ந்த தடமாகிக் கிடக்கிறது.”

சின்னஞ்சிறு மாவட்டமான கன்னியாகுமரியின் சின்னஞ்சிறு நகரமான நாகர்கோயிலில் இருந்த குளங்கள் பற்றி கவிஞர் குமரித்துறைவன் கூறிய குளங்கள் 22 எண்ணத்தைக் கூறி அதன் அப்போதைய பயன்பாட்டையும் கூறுகிறார்.

இதில் பாத்திரங்கள் கழுவ என்று தனியாக திருநாய்கள் இருப்பதை பதிவு செய்கிறார். வியப்பு மேலிடுகிறது! இன்னமும் பார்வதிபுரம் தெப்பக்குளம் பாழ்பட்டுப் போகாமல் பயன்பாட்டில் இருக்கின்றது. ஜெயமோகனின் உறைவிடம் என்பதால் இருக்குமோ நண்பர்களே?- குளங்கள் மனிதனின் வாழ்வில் எங்ஙனம் விரிவான பயன்பாடாக இருக்கின்றது என்று கூறுகிறார் இக்கட்டுரையில், நாடன்.

“நதி என்பவள் நமக்குத் தாய்! தேம்ஸ் ஆனாலும் நைல் ஆனாலும் மிஸிஸிப்பி ஆனாலும் சிந்துவானாலும் கங்கையானாலும் கோதாவரி ஆனாலும் காவிரியானாலும் வைகையானாலும் பொருனையானாலும் பழையாறு ஆனாலும் எந்த உப்பாற்று ஓடையானாலும்! ஆனால் தாயை மல மூத்திர, கழிவு நீர்க்கரைசலாகக் காண இயலுமா? கொள்ளி வைத்தவன் எங்ஙனம் ஐயா சடங்குகளுக்கு முன்னும் பின்னும் சின்னாட்கள் அதில் மூழ்கி எழுவது? நீத்தார் கடன் என்பதே மூட நம்பிக்கை எனில் திருக்குறளின் ‘நீத்தார் பெருமை’ அதிகாரத்தை நீக்கிவிடலாமா?”

“விவசாயத்துக்கு தண்ணீர் தேக்கும் குளங்கள் பெரும் ஆக்ரமிப்பை அனுமதித்துக் கொண்டிருக்கின்றன. நான் உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து போன வழியில் நாச்சியார் புதுக்குளம் என்று திருவிதாங்கூர் மன்னர் வெட்டிய குளமொன்று தொண்ணூறு ஏக்கர் பரப்பில் கிடக்கிறது. சாலையில் இருந்து சற்றே குனிந்தால் வலது காலால் குளத்துத் தண்ணீர் துழவலாம். ஆம்பல் அடையடையாகப் பூத்துக் கிடக்கும். எவனாவது ஒருத்தன் சட்டை நிக்கரைக் கழற்றிக் கரையில் வீசிவிட்டு அம்மணமாகக் குளத்தில் குதித்து முக்குளி போட்டு, தண்டோடு சில ஆம்பல் மலர்களைப் பிடுங்கி வருவான். ஆம்பல் தண்டைத் தொடர்பு அறாமல் ஒடித்து ஒடித்து ஆரம்போலச் சூடிக்கொள்வோம். வெறுங்கழுத்தில் பாம்புபோல் வழுகும் ஆம்பல் தண்டின் குளிர்ச்சியில் மேனி சிலிர்க்கும். தென்னந்தோப்புகள் என மூன்றில் ஒரு பங்கு ஆக்ரமிப்புகள். குளத்தில் மழைக்காலங்களில் பெருவெள்ளம் கொண்டு சேர்த்த தண்ணீரில் குளம் பெருகி, ஆக்கிரமிப்புப் பயிர்களுக்கு இடைஞ்சல் வருமென்றால் குளக்கரையை மிகுந்த பொதுநல எண்ணத்துடன் வெட்டிவிடுவார்கள். முப்பது ஆண்டுகளாக அந்தக்குளத்தில் அரைக்குளத்துக்கு மேல் தண்ணீர் தேங்குவதில்லை. புரவுக்காரர்கள் ஏனென்று கேட்க இயலாது. சட்டம் ஒழுங்கு வருவாய்த்துறை கண்டுகொள்வதில்லை.

பார்வதிபுரத்திலிருக்கும் ஜெயமோகன் வீட்டுக்குப் போனால் சானல் ஓரமாக ஒரு நடைப்பயணம் உண்டு. வலதுபுறம் பார்வதிபுரம் சானலும் இடதுபுறம் பரந்த நெல்வயல்களும் வாழைத் தோட்டங்களும் பேசியவாறு நடந்து கணியாகுளம் ஊரெல்லை வரை போவோம். ஊருக்கு முன்பே கணியாகுளம், பிரம்மாண்டமான குளம். கன்னியாகுமரி மாவட்டத்தின் நீளமான குளம் பறக்கைக் குளம் எனில் கணியா குளம் அகலமான குளங்களில் ஒன்று.

நாஞ்சில் நாட்டின் அடைமழையை அனுபவித்து உணர வேண்டும். அடைமழையில் குளம் பெருகும். கயம் போலும் கடல் போலும் அலையடித்துக் கிடக்கும் தண்ணீரில் மூழ்கிப் போகும் தாமரைக்கொடிகள் மூச்சுப்பிடித்து குளத்து நீர்ப்பரப்புக்கு வெளியே சூரிய முகம் காணத் தலைநீட்ட முயலும்.

கர்நாடகத்திடம், ஆந்திரத்திடம், கேரளத்திடம் தண்ணீர் கேட்டுப் போராடுவது ஒருபக்கம் இருக்கட்டும்.  நம் பாத்திரங்கள் ஓட்டை இல்லாமல் இருக்கிறதா? பாத்திரங்களாவது இருக்கிறதா?”கேட்கிறார் நாஞ்சில் நாடன்! நம்மிடம் பதில் இருக்கிறதா நண்பர்களே?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *