நாஞ்சில் நாடன் பயணம் – 6 – III

0

தி. சுபாஷிணி

மொசுறு

மொசுறு என்னும் கட்டுரை, ‘மொசுறு’ என்றும் எறும்பில் வதைப்பற்றி ஆராய்வதாக அமைந்திருக்கின்றன.

கன்றும் உண்ணாது கலத்திலும் விழாது:

“வெள்ளிக்கிழமையென்றால் ஊரில் உள்ள அனைத்து கடைகளின் முன்னும் தேங்காய்கள் உடைத்து சிதறுபடும். அதை சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் சக்கர டயர்கள் அரைத்துக் கூழாக்கிச் செல்லும். வீடுகளில் மீந்துபோன உணவு சாக்கடையில் கொட்டுவதைச் சாடுகிறார். கிராமம் என்றால் வாழைப்பழத்தை உண்டுவிட்டு தொலி ஆடு மாடுக்குக் கொடுப்போம். ஒவ்வொரு வீட்டிலும் கழுநீர்த்தொட்டி இருக்கும். அரிசி கழுவும் தண்ணீர், காய்கறித் தோல் எல்லாம் அதில் போடும் வழக்கம் உண்டு. பால் கொடுப்பவர் அதை எடுத்துச் சென்று பதிலுக்கு சாணி கொண்டு வந்து தந்துவிட்டுப்போவார்கள். (என் பாட்டி வீட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பார்த்த நினைவு இருக்கின்றது) நமக்குத் தேவையில்லாததை வீண் என்று நகரத்தில் உள்ள நாம் நினைக்கிறோம் என்று ஆசிரியர் வருந்துகிறார். அரிசி நமக்கு, தவிடு மாட்டுக்கு, எண்ணெய் நமக்கு, புண்ணாக்கு மாட்டுக்கு என்று அடுத்தக்கட்டப் பயன்பாடு இருக்கிற உணர்வு, தெளிவு உண்டா? என வினவுகிறார். ஒன்றில் கலத்தில் விழ வேண்டும் அல்லது கன்றுக்கு ஆக வேண்டும். மண்ணில் விழுந்து பாழாகும் பசும்பாலால் யாருக்கு என்ன பயன்?

 

காவலன் காவான் எனின்

அன்று கற்றறிந்தோர் அவையில், நீதி வழுவினோம் என்றுணர்ந்த மறுகணம் “யானோ அரசன் யானே கள்வன்” என்று கூறியது மாத்திரமல்லாது, “மன்பதை காக்கும் தென்புலங் காவல், என்முதல் பிழைத்தது, கெடுக என் ஆயுள்” என்று நேர்மையை முதலாகக் கொண்ட காவலன்…, மனுநீதிச் சோழன், சொந்த மகனை ஆவின் கன்றுக்கு மாற்றாக தேர்க்காலில் இட்டுக் கொன்றானே! அந்த மனுநீதிச் சோழன், புறாவுக்குத் தந்து சொந்தத் தசையை அறுத்து எடைக்கு எடை துலாபாரம் நடத்திய சிபிச்சக்கரவர்த்தியின் நேரடிக்கொள்கைக் கூறானவன்.

என்று காவலனுடைய அறவழி நிலைப்பாடு தனது குடிகளைக் காத்தல். அவ்விதம் காவாவிடில் என்னவாகும் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் பலப்பட பேசுகின்றன.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்” என்கிறது சிலம்பு. “கோல் நிலை திரிந்தபின் கோள் நிலை திரியும்” என்கிறது மணிமேகலை.

’முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒவ்வாது வானம் பெயல்’  என்கிறது வள்ளுவம்.

’மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்கிறது புறநானூறு.

“ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின்”

சிரிப்புதான் வருகுதய்யா! காவலன் ஒழுங்காகக் காத்தல் செய்யவில்லை என்றால் பசு பால் கறக்காதாம்! கறக்காவிட்டால் போகிறது! வெளிநாட்டில் இருந்து பால்பொடி இறக்குமதி செய்து, தண்ணீர் கர்நாடகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து கடனோ உடனோ வாங்கி கலக்கினால் போயிற்று. மாட்டுத் தீவனத்தில் காசு காய்க்கும் எனில் பால் பொடியில் காய்க்காதா? இதற்கு மேல் ஒரு மன்னவன் என்ன செய்யவியலும்? திருவள்ளுவருக்கு மண்டைக்கு வெளியில்லை போலும்!

கருணையுடன் ஆட்சி செய்ய வேண்டும் வள்ளலார் சொல்கிறார் “கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக” என்று.

கருணையுடன் ஆட்சி என்பது வாக்குகளைப் பொறுக்கலாம் என்ற நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ அல்ல. வள்ளுவர் மொழியில் சொன்னால் அது, “குறி எதிர்ப்பை நீர் துடைத்து”. வறியவர்க்கு ஒன்று ஈதல் வேண்டும், வாக்குகளுக்கு என ஈவதல்ல.

ஏழை வாக்காளன் சிரிப்பில் இறைவனைக் காண்பது அல்ல அது ஏற்கனவே திருமந்திரத்தில் திருமூலர் சொன்னதுடன்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈகில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயிலல் நம்பர்க்கு ஒன்று ஈகில்

படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமோ!

தெருவில் நடமாடித் திரியும் எளியவனுக்கு ஒன்று ஈந்தால் அது தன்னைப்போல, யாரும் வழி நடத்தாமல், பரமசிவத்துக்குப் போய்ச் சேர்ந்து விடும்.

அது வாக்காளனுக்குப் பணம் கொடுப்பதல்ல. வாக்காளன் கிடக்கட்டும் வறுமைப்பட்டவன். பாரதப் புனித கண்டத்தை ஆளும் மாமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தலைக்கு ஐம்பது, நூறு கோடிகள் வாங்குகிறார்கள் என்கின்றன ஊடகங்கள். ஈண்டு வறியவர்க்கு ஒன்று ஈவது என்பது ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண அல்ல. நம்மை அது புனித ஜார்ஜ் கோட்டையில் குடி இருத்தும் எனும் எதிர்பார்ப்பு.

ஔவை அருமையாகச் சொல்கிறாள்! அது எந்த நூற்றாண்டு ஔவையாக இருந்தால் என்ன?

சொல்லாமலே பெரியர், சொல்லிச் சிறியச் செய்பவர்

சொல்லியு-ஞ் செய்யார் கயவர்

சொல்லி வாக்குகளைப் பெற்று, செய்ய மறந்த மனமில்லாத மன்னர்களை என்ன பெயரிட்டு அழைப்பீர்கள்?

“செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்கிறார் குமரகுருபரர். எத்தனை ஆயிரம் கோடிகள் சேர்ந்தாலும் நிறையாத சிந்தை உடையவர்கள் அரசு கட்டிலில் அமர்ந்திருக்கும் நமது மன்னர் பெருமக்கள். நமது காவலர்கள் காவார்!

மழை எங்கே பெய்யும்?

மக்கள் எங்ஙனம் செழிப்பார்கள்?-

எங்ஙனம் ஆளும் அருள்?”கேட்பது நாஞ்சில் நாடன்.

இற்று வீழ்கின்றன வாகு வலயங்கள்

பிறந்து வளர்ந்த ஊரில் இருந்து கடல் எமக்கு பன்னிரு மைல் தூரம். எமது பயண வழி நாகர்கோயில், சுசீந்திரம் பாதை அல்ல. வீம்நகரி, நாற்கால்மடம், குலசேகரம்புதூர், ஒசரவிளை, மயிலாடி, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி. கடல் பற்றிய ஞாபகம் துவங்கும் பத்துப்பனிரண்டு வயதில் ‘பீச்’ எனும் சொல் எம் அகராதியில் சேர்ந்து கொள்ளவில்லை. கடற்கரை எனும் சொல்லும் கிடையாது. எமது சொல் கடற்புறம். அவ்வளவு சுத்தமாகவும் சொல்வதில்லை. வழக்கில் கடப்புறம்.

இந்து ஐம்பத்தெட்டு வயதுவரை எத்தனை நூறுமுறை கன்னியாகுமரி கடற்புறம் சென்றிருப்பேனோ? ஆனால் இப்போது அலைவது ஜெயமோகன், அ.கா.பெருமாள், வேதசகாயகுமாருடன். அறுபத்தாறு கிலோ மீட்டர் நீளமுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்புறம், பெரிய முட்டம், சின்ன முட்டம், மண்டைக்காடு, குளச்சல், மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, பெரியகாடு, கேசவன் புத்தன் துறை, சங்குத் துறை, சொத்தவிளை, அகஸ்தீஸ்வரம், கோவளம், கன்னியாகுமரி என்று நீண்டு, தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்துக்குள்ளே போகும். ‘ஆலமரத்துறை’ என்பது திசையன்விளை பக்கத்தில் இருக்கும் கடற்கரை. இன்று அது ‘உவரி’யாக இருக்கலாம்.

பன்னிரண்டு வயதில், பெயர் தெரியாத ஏதோ ஊர் விலக்கு வரை கரிக்கேஸ் பஸ்ஸில் பயணம் செய்து, கையில் பித்தளைத் தூக்குவாளியுடன், மாலை மயங்கிவரும் நேரத்தில் அம்மாவுடனும் அப்பாவுடனும், “இன்னாவந்திரும்…அன்னா தெரியில்லா, அந்த வௌக்கு வரைதான்” என்று போக்குக் காட்டப்பட்டு, நடந்து, நடந்து, நடந்து, கடலலை ஓங்காரமிடும் மண்டைக்காட்டு அம்மன் கோயிலை அடைந்து, கடல் மணல் புரளும் தென்னந்தோப்பில் தங்கி, அடுத்தநாள் காலை கொழுக்கட்டை அவித்துச் சாமிக்கு வைத்துக் கும்பிட்டு, அப்பா வாங்கி வந்த குதிப்பு மீன் புளிமுகம் வைத்து சோறு பொங்கிச் சாப்பிட்டு… குதிப்பு மீனுக்கு இணையான மீனுண்டா ருசியில்?

உண்டு என்கிறார் ஜோடி குரூஸ். ‘வெள்ளைக்குறி மீன்’ என்றொரு மீன் உண்டு என்றும் அதைப் பார்த்தே இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும், வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆய்வதென்ன?

எல்லாமுமாக எனக்கு கடல் ஓர் அதிசயம். மலையும் காடும் நதிகளும் பிற அதிசயங்கள். எனினும் யானை போல், படமெடுத்து நிற்கும் ராஜநாகம் போல, கடல் போன்ற அச்சம், ஆர்வம், திகில், அழகு, கவர்ச்சி நிறைந்த பிறிதொன்று என் அனுபவப் பரப்பில் இல்லை.

கால் நனைத்து நிற்கும்போது, மணல் தேரியில் நிற்கும்போது, மணலில் கை அளைய உட்கார்ந்திருக்கும்போது, காலையில், மதியத்தில், முன்மாலையில், பின்மாலையில், முன்னிரவில், பின்னிரவில் தனித்தனியாய் எத்தனை வண்ணங்கள்? மழைக்காலத்தில், ஓங்காரமாய் பிளிறும் கொந்தளிப்பில், கடல் ஏற்றத்தில், கடல் இறக்கத்தில், என்னைப்போல் சாந்தசொரூபி உண்டா என்று அமைந்து கிடக்கையில், செக்கராய்க் கலங்கும்போது, சீவனை வாங்கிக் குவிக்க குமரி பகவதியின் மண்டைக் காட்டுப் பகவதியின் ஆற்றுக்கால் பகவதியின் மொத்த ஆங்காரம் கொண்டு கொந்தளித்துக் குமுறும்போது என எத்தனை ஓசைகள் தினுசுதினுசாக?

இக்கட்டுரையில், முனைவர் என்.ஸ்டீபன் காம் எழுதிய ‘கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வியல்&ஓர் ஆய்வு’ எனும் நூலைப் பற்றிப் பேசுகிறார் ஆசிரியர். சுறா, திருக்கை, பெரு மீன்கள், சிறுதரத்து மீன்கள், பொடி மீன்கள் என்று வரிசையிட்டு, அதன் உட்பிரிவுகளையும் பட்டியலிடுகிறார். நாவலில் காணப்படாத மீன்களாகிய அயிலை, வங்கடை, வெள்ளை வாவல், கறுத்த வாவல், மாந்தேவி, கருநெத்திலி, தேடு, சிங்கானா, செந்நவரை என்று கூடுதலாகத் தகவல்கள் அளிக்கிறார். இதுதான் நாஞ்சில் நாடனின் பாணி. இந்த நாவலில் வலைகளின் வகைகள், கடலில் தட்பவெப்பம், கட்டுமரங்கள், அவற்றின் பாகங்களின் பயன்பாடுகள் என்று பற்பல பேசப்படுகின்றன என்கிறார் கட்டுரையாளர்.

“எனக்கு  மிக வியப்பாக இருந்தது இந்த நாவலைப் படிக்கப் படிக்க. இது ஒரு இந்திய நாவல் என்றும், ஒரு இந்திய நாவல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. எமது மண்ணோடும் கடல்களோடும் காடுமலைகளோடும் பின்னிப் பிணைந்த நாவல்கள், வாழ்க்கை பற்றிய, நேரடியான, நாவல்கள்.” என்று வியந்து நிற்கின்றார் கலைமாமணி.

கண்மணி குண சேகரின் ‘நடுநாட்டுச் சொல்லகராதி’.  விருத்தாசலம் அருகில் மணக்கொல்லை எனும் சிற்றூரில் 1971ல் பிறந்த கண்மணி, இளம்தலைமுறைப் படைப்பாளிகளில் முக்கியமானவர். வயது இன்று முப்பத்தேழே ஆனாலும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘தலைமுறைக் கோபம் வெளியாகிப் பதினான்கு ஆண்டுகள் ஆகின்றன.  இந்தப் பதினான்கு ஆண்டுகளில் அவரது கொடை, கவிதைத் தொகுப்புகள் என ‘காட்டின் பாடல்’, ‘கண்மணி குணசேகரன் கவிதைகள்’ என ஆக மூன்று, சமகால நாவல் இலக்கியத்தில் வெகுவாகப் பேசப்பட்ட விரும்பி வாசிக்கப்பட்ட ‘அஞ்சலை’ எனது வாசிப்புப் பரப்பில் தமிழ் சமுக அமைப்பில், பெண்களின் தனித்த துயரங்களைத் தீவிரமானதோர் நிலையில் பேசியவை நவீன நாவல்கள் யூமா வாசுகிகளின் ரத்த உறவு, அடுத்து அஞ்சலை.  பெண்ணியம்  சார்ந்த  ஆழந்த உணர்வுகள் அனுபவவெளியில் புலப்படுத்தும் நாவல்கள் இவை.

வெறும் பத்தாவது வரைக்கும் வாசித்து, ஐ.டீ.ஐ பயிற்சி பெற்ற இந்தப் படைப்பாளியின் சிறுகதைகள் தமிழுக்குப் புதிய வாசல்களைத் திறந்து காட்டுபவை.  ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை நீங்கள் வாசித்துப் பார்க்கலாம்.  தமிழினி ஆறாவது இதழில் ‘பிராது’ என்றவர் எழுதிய கதையும், உயிர் எழுத்து ஜூலை 2008 இதழில் எழுதிய சவாரி எனும் சிறுகதையும் ஐசக் பாஷாவில் சிங்கர் எனும் யூத் ஈடிஷ் எழுத்தாளரை எனக்கு நினைவு படுத்துகின்றன.  இத்தனையும் செய்துவிட்டு, கடந்த எட்டாண்டு காலமாக கண்மணி நடு நாட்டுச் சொல்லகராதி எனும் அகராதித் தொகுப்பு வேலையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது வியப்பூட்டும் செய்தி நமக்கு.

தொல்காப்பியத்தை ஒருவகையில் எழுத்து சொல் பொருள் சார்ந்த முதல் இலக்கண நூல் என்பதுபோல் ஒரு அகராதியாகவும் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து நிகண்டுகள் வந்தன. நிகண்டு என்பது பன்னிரு பகுதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

26 நிகண்டுகள் பற்றிய விவரங்களை ஆசிரியர் கொடுக்கிறார் ஈண்டு.

“அகராதி எனும் பெயரில் 1936 ல் வையாபுரிப் பிள்ளை குழுத்தலைவராக இருந்து பதிப்பித்த தமிழ் லெக்சிகன் வரையிலும் பதினைந்து குறிப்பிடப்பட்டுள்ளன.

கண்மணியின் நடுநாட்டுச் சொல்லகராதியில் இருந்து மாதிரிக்குச் சில காண்போம்: ‘அகவான்’ என்றொரு சொல். இது ஒருவகை எலி. நாஞ்சில் நாட்டில் இதனை ‘அவயான்’ என்று குறிக்கிறார்கள். என்னுடைய வியப்பு, இரு சொற்களுமே தமிழ் லெக்சிகனில் இல்லை.

சொற்களுக்கான விளக்கங்களை மிகச் சுவைபட எழுதுகிறார். அவற்றைச் சிறப்பாக உரையாடல்களில், பழமொழிகளில் அமைத்துத் தருகிறார்.

இன்னுமோர் சொல், சமுக்காள விரியன். பொருள், உடம்பெல்லாம் சமுக்காளத்தின் மீதுள்ள வண்ண வரிவடிவங்கள் போன்று உடல் பருத்தும் நீளம் சற்றுக் குறைவாகவும் இருக்கும் விடப்பாம்பு.

‘மூஞ்சியில் குத்துதல்’ என்றொரு சொல் பதிவாகியுள்ளது. இதன் பொருள் சினிமாக் கதாநாயகன் வில்லன் மூஞ்சியில் குத்துவது என்று அல்ல. தொடர்ந்து ஒரே உணவுப் பண்டத்தை உண்பதால் உண்டாகும் சலிப்பை அப்படிச் சொல்கிறார்கள். இதை நாஞ்சில் நாட்டில், ‘மொகத்திலே அடிச்சிற்று’ என்பார்கள்.

தமிழ் லெக்சிகன் தொகுத்த சொற்கள் 1,24,000 எனில், நமது புழங்கு தமிழில், வட்டாரங்களில், இனக்குழுக்களினுள் இன்னும் ஜீவனோடு எத்தனை லட்சம் சொற்கள் இருக்கும்? கெட்ட வார்த்தைகள் என்று ஒதுக்கப்பட்ட சொற்கள் இன்றும் புழக்கத்தில் இருப்பவை.  மக்கள் நாப்பழக்கம் தவிர்த்து எந்த ஆதாரமும் இன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பவை, தொகுக்கப்பட்டால் ஓர் அகராதி ஆகும்.

‘ஒரு நாளைக்குப் பல சொற்கள் செத்துக் கொண்டிருக்கின்றன’ எனும் கண்மணியின் கவலை நமது கவலையும் ஆகிறது. ஆனால் கண்மணிக்கு நான் சொல்வது இன்று காலை, ‘மணல் வீடு’ ஹரிகிருஷ்ணனுக்கும் சொன்னது: தமிழ்ச் சமூகம், பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள் எதுவும் எதையும் நமக்குத் திருப்பிச் செய்யாது. அவற்றின் பார்வை வட்டங்களுள் வரும் இனம் வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ எனும் குறிக்கோளுடன், சகாக்களே! முன்னோட்டு, முன்னோட்டு, முன்னோட்டு!!

ஏனெனில் ஊதியத்துக்கும் வெண்டயம், பல்லக்கு, பரிவட்டம் போன்றவற்றுக்கும் செய்பவர்களை விடவும் பெரும் பொறுப்புடனும் பலத்துடனும் இம்மொழிக்கு நமது முன்னோரும் நாமும் செய்துள்ளோம், செய்ய இயலும், செய்வோம்.

ஆகவே நம்மால்தான் இந்த மொழி செம்மொழி! என்று செம்மொழியானத் தமிழ் மொழியை நாஞ்சிலார் வாழ்த்தும்போது, நண்பர்களே! நாமும் வாழ்த்துவோம்!

தாமிரபரணி பின்னும் ஒழுகும்.  “அண்ணாச்சி என நான் விளிப்பது மூவரைத்தான். தமிழின் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான திருவனந்தபுரத்து ஆ.மாதவன், கோவை விஜயா பதிப்பகத்து மு.வேலாயுதம், தமிழ்க் கடல், நாவுக்கரசு நெல்லை கண்ணன். என்றாலும் பொதுவாக எனது குடும்பத்தாரிடமும் நெருக்கமான நண்பர்களிடமும் அண்ணாச்சி என நான் குறித்தால் நெல்லை கண்ணன் என்றாயிற்று என்று அண்ணாச்சிக்கு தம்பியாய் நிற்கிறார் நாஞ்சில்.

எனதனுபவத்தில் கையில் சிறு குறிப்போ, மூலநூலோ, வழிநூலோ இன்றியே அண்ணாச்சி பேசுவார். இசைவாணர்கூட நோட்டுப் புத்தகத்தை முன்னால் விரித்து வைத்துக்கொண்டு பாடுவது பாவத்தை இழக்கச் செய்யும். மேடைப் பேச்சுக்கும் அஃதே. மறுநாள் சொற்பொழிவு இருக்கிறதெனில், சொல்ல வேண்டிய கருத்துகள், பாடல்கள் என நினைவை ஒழுங்குபடுத்திக் கொள்வதைக் கண்டதுண்டு. இலக்கிய நண்பர்களிடம், பழந்தமிழ் இலக்கிய ஆர்வம் உள்ளவர்களிடம் நான் சொல்வதுண்டு & கர்ணன், கும்பகர்ணன், வாலி, குகன், பரதன், துரியோதனன் எனும் பெரும் பாத்திரங்கள் மட்டுமன்றி அங்கதன், சடாயு, அரவான், நகுலன், மந்தரை எனும் சிறு பாத்திரங்களைக்கூட அண்ணாச்சி சொல்லக் கேட்க வேண்டும் என.

வாலி வதைப் படலமோ, கும்பகர்ண வதைப் படலமோ, குகப்படலமோ அண்ணாச்சி சொல்லக் கேட்டு எவரும் கண் கசியாமல் திரும்ப இயலாது.  பல பாடல்களை வேறு மேடைப் பேச்சாளரும் சொல்வார்தான். என்றாலும் எல்லோரும் தோடி வாசிப்பதற்கும் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை வாசிப்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?

தனிப்பாடல் கேட்டவர், காளமேகம் கேட்டவர் அதனை அறிவர். சித்தர் பாடல்கள் அவரது சிறப்பு. கம்பனோ, இளங்கோவோ, வள்ளுவனோ, பாரதியோ பேசிக்கொண்டிருந்தாலும் அரசியல் குறுக்கீட்டுத் தகவல்கள் வண்ணம் சேர்ப்பவை. மறுத்துச் சொல்ல இயலாதவை, ஆண்மை நிறைந்தவை.  மேடையில் மட்டுமல்ல வீடு தேடிப் போனாலும் அவர் பெருவிருந்து, செவிக்கு மாத்திரமல்ல, வயிற்றுக்கும். வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்பது தமிழ் வழக்கு, அண்ணாச்சி அதில் சுத்தமான, இருவழியும் தூய வந்த, சைவ வேளாளன்.

”செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல் விருந்து வானத் தவர்க்கு” என்பதும்

“விருந்தும் புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும்

வேண்டற் பாற்று அன்று”

என்பதும் திருக்குறள். அண்ணாச்சியின் விருந்து ஓம்புதல் அத்தகைத்து.

அந்தக் காலத்தில் வட்டத்தொட்டி என்றும் ரசிகமணி வீட்டுத் தோசை என்றும் பேசக் கேட்டிருக்கிறேன். அதை அண்ணாச்சி வீட்டில் அனுபவித்திருக்கிறேன்.

என்ன தவம் செய்திருந்தால் மூன்று வேளை உணவும் இடையிடையே தேநீர், சுக்குக் காப்பி, கடலை மிட்டாய், சிற்றுண்டியுடன் தமிழும் கேட்கும் பேறு கிடைக்கும்?

திடீரென அசரீரி போலச் சொல்வார், “தம்பீ, விருதுகள் அனைத்தும் அவரே வாங்கினார். மரணம் மட்டும் தானே வந்தது” என்று. இதில் வாங்கினார் என்பதற்கும் வந்தது என்பதற்கும் சிறப்புப் பொருள் உண்டு.

ஒரு தேர்ந்த தமிழறிஞனை, மேடையில் சுழலும் சொற்புயலை, சமரசம் செய்துகொள்ளாத அரசியல்வாதியை, மானுட நேயனை, அன்பை அணிகலனாகக் கொண்டவரை வாழ்க்கை ஓடியோடிக் கண்டு பிடித்துத் தோற்கடிக்க முயன்ற அவலமும் வஞ்சமும் நிறைந்த நாட்கள் அவை. எனக்கு எர்னாஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘கிழவனும் கடலும்’ எனும் நோபல் பரிசு பெற்ற நாவலின் சாண்டியாகோ கிழவன் மொழிவது ஞாபகத்துக்கு வரும் & மானுடனை அழித்து விடலாம், ஆனால் தோற்கடிக்க இயலாது.

பொன்னுக்கு வீங்கி என்றொரு நோயுண்டு நமது சமூகத்தில்.  அண்ணாச்சிக்கு பிறவியிலேயே இருப்பது அன்புக்கு வீங்கி. எப்போதும் அன்பு செலுத்தும், அன்புக்கு ஏங்கும், அன்பைப் போதிக்கும், அன்பை யாசிக்கும் நோயது. ‘அன்பெனும் பிடியில் அகப்படு மலையே’ என்று அம்மையப்பனைச் சொல்வார்கள். அண்ணாச்சியும் அப்படித்தான். அப்பனின் ருசி என்னவோ தெரியாது. ஆனால் அண்ணாச்சியின் ருசி தெரியும் எனக்கு–!

எல்லாவற்றுக்கும் ஒரு மனது வேண்டும்.

அண்ணாச்சியின் மனது அன்பு மயமானது.

எனவேதான் அவரது இலக்கியப் பார்வை அன்பைப் பிரதானமாகக் கொண்டுள்ளது.

“இசை, சுதி, தொழுகை எல்லாம் ஒன்றுதான். நாம் இறைவனை வெவ்வேறு வழிகளில் அடைகிறோம். ஒரு இசைக்கலைஞன் நாளும் கற்றுக்கொள்ளவும் அற்புதமாய் வாசிக்கவும் இயலும். ஆனால் இத்தகைய ஆன்மீகத்துடன் கலக்க இயலாது எனின், இறையனுபவத்தை சிந்திக்க இயலாதெனின் கலை மட்டுமே கலைஞனிடம் இருக்கும். அல்லால் ஆன்ம அனுபவ லயம் இருக்காது. அவன் எப்போதும் பெருங்கடல் முன் நின்று கொண்டிருப்பவனாகவும் புனித மேன்மைகளை எய்த இயலாதவனாகவும் இருப்பான்” — உஸ்தாத் பிஸ்மில்லா கான்.

இது அண்ணாச்சிக்கு தம்பி செலுத்தும் காணிக்கை என்றே கொள்வோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *