அமெரிக்க அரசியல் கட்சிகளும் இந்திய அரசியல் கட்சிகளும்
நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியாவும் அமெரிக்காவும் குடியரசுகள்தான் என்றாலும் இரண்டும் வெவ்வேறு வகையான அரசியல் அமைப்புகள் கொண்டவை. அமெரிக்கக் குடியரசில் ஜனாதிபதிக்கு நிறைய அதிகாரம் உண்டு. செனட் என்ற மேலவை அங்கத்தினர்களும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசெண்டடிவ் என்ற கீழவை அங்கத்தினர்களும் கொண்டு வரும் மசோதாக்களை அங்கீகரித்துச் சட்டமாக்குவது அல்லது அதை நிராகரிப்பது இவருடைய உரிமைகளில் ஒன்று. மற்ற நாடுகளின் மீது படையெடுக்க விரும்பினால் இந்த இரண்டு அவைகளின் அங்கத்தினர்களின் சம்மதம் இல்லாமல் ஜனாதிபதியால் முடியாது. அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் இருந்தாலும் அவர் இந்த இரண்டு அவைகளுக்கும் கட்டுப்பட்டவர்.
அமெரிக்க மாநிலங்கள் ஐம்பதும் இரண்டு அங்கத்தினர்களைத் தங்கள் பிரதிநிதிகளாக மேலவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. ஆக மேலவை அங்கத்தினர்கள் மொத்தம் நூறு பேர். கீழவைக்கு எத்தனை பேர் தேர்ந்தெடுக்கபடுவார்கள் என்பது அந்தந்த மாநிலத்தின் ஜனத்தொகையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்கா தோன்றிய புதிதில் இரண்டு கட்சிகளுக்கும் மேல் இருந்தாலும் இப்போது இரண்டே கட்சிகள்தான். அவை பழமைவாதிகள் அடங்கிய குடியரசுக் கட்சியும் முற்போக்குவாதிகள் அடங்கிய ஜனநாயகக் கட்சியும். தேர்தல் சமயத்தில் சில சிறிய கட்சிகள் தேர்தலில் கலந்து கொண்டாலும் அவை பெயரளவில்தான் அரசியல் கட்சிகள். தேர்தல்முடிந்த பிறகு இவை இருக்கும் இடம் தெரியாது. இரண்டு அவைகளுக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் இரண்டு கட்சிகளும் பங்கேற்கின்றன.
இரண்டு அவைகளுக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தலில் பங்கேற்பதற்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஒவ்வொரு கட்சியிலும் பலர் போட்டியிடுவார்கள். இந்தப் போட்டியில் அந்தந்தக் கட்சியில் பதிவு செய்து கொண்ட உறுப்பினர்கள் (திடீரென்று ஒருவர் ஒரு கட்சியில் பதிவு செய்து கொள்ள முடிவு செய்தாலும் அப்படிப் பதிவு செய்து கொண்டு அதன்பிறகு தங்களுக்குப் பிடித்தவருக்கு ஓட்டளிக்கலாம்) இவர்களில் யாருக்கு அதிக ஓட்டளிக்கிறாகளோ அவர் அந்தக் கட்சியின் வேட்பாளராகத் தேர்தெடுக்கப்பட்டு இன்னொரு கட்சியின் வேட்பாளரோடு போட்டியிடுவார்.
இப்படித் தேர்தெடுக்கபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனக்கென்று சில கொள்கைகளை வைத்திருப்பார். குடியரசுக் கட்சி பழமைவாதிகள் கட்சி என்று கருதப்பட்டாலும் சில விஷயங்களிலாவது முற்போக்குக் கொள்கைகள் உடையவர்கள் இக்கட்சியில் இருப்பார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தலைவர் இருந்தாலும் அவர் பெயரளவில்தான் தலைவர். காங்கிரஸில் (நம் பாராளுமன்றதிற்குச் சமமான) எந்த மசோதா அங்கத்தினர்களின் வாக்கெடுப்பிற்கு வந்தாலும் இவர்கள் தலைவரைக் கேட்க வேண்டியதில்லை. இன்ன மசோதாவில் இப்படி ஓட்டுப் போடுங்கள் என்று தலைவர் கட்டாயப்படுத்த முடியாது. இவர்கள் தலைவர் சொன்னபடி கேட்காவிட்டால் கட்சியிலிருந்து விலக்கப்பட மாட்டார். அதனால் ஒரே மசோதாவை குடியரசுக் கட்சியிலேயே சிலர் எதிர்த்தும் சிலர் ஆதரித்தும் ஓட்டுப் போடலாம். அதே மாதிரி ஜனநாயகக் கட்சியிலும் நிறையப் பேர் முற்போக்குக் கொள்கையுடையவர்கள் என்றாலும் அக்கட்சி உறுப்பினர்களே எந்த ஒரு மசோதாவிற்கும் இரண்டு வகையாக் ஓட்டளிக்கலாம்.
இந்திய அரசியல் அமைப்பில் ஜனாதிபதி பெயரளவில்தான் தலைவர். அவர் பிரதம மந்திரியின் யோசனையின்படி தான் செயல்பட வேண்டும். பிரதம மந்திரியும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் குழுவும் ஜனாதிபதிக்கு யோசனை கூறுவார்கள். பிரதம மந்திரிக்கு மற்ற மந்திரிகளை விட அதிக உரிமைகள் உண்டு.
அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான் என்றால் இந்தியாவில் ஏகப்பட்ட அரசியல் கட்சிகள். ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தந்தக் கட்சியின் தலைவர் சொல்படிதான் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியிலிருந்து விலக்கப்படுவார். அப்படி விலக்கப்பட்டவர் உடனேயே இன்னொரு கட்சி ஆரம்பிப்பார்.
சுதந்திரம் வந்ததும் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காங்கிரஸைக் கலைத்துவிட வேண்டும் என்று தேசத்தந்தை காந்திஜி சொன்னதை யாரும் பின்பற்றவில்லை. காங்கிரஸ் தொடர்ந்து மக்களின் செல்வாக்கைப் பெற்ற கட்சியாக இருந்தது. காங்கிரஸ் பிளவுபடாமல் இருந்தது. ராஜாஜி காங்கிரஸை எதிர்த்து சுதந்திராக் கட்சியை ஆரம்பித்தார். நேருஜியின் மறைவிற்குப் பிறகு இந்திராகாந்தி காலத்தில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. அதன் பிறகு இன்னும் எத்தனையோ கட்சிகள் காஙிரஸிலிருந்து பிரிந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி கூட ஒரே கட்சியாக நிலைக்கவில்லை. பெரியார் ஆரம்பித்த திராவிடக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கட்சியை ஆரம்பித்தார்கள். அதோடு அந்தக் கட்சியின் முன்னேற்றம் முடிந்ததா? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. இப்போது தமிழ் மக்களின் தலைவிதி இந்த இரண்டு கட்சிகளையும் மாறி மாறித் தேர்ந்தெடுப்பது என்றாகி விட்டிருக்கிறது. இந்தக் கட்சிகளைப் பொறுத்த வரையில் கொள்கைகளில் என்ன வித்தியாசம்? எதுவுமில்லை. அம்மையாருக்கும் கலைஞருக்கும் தமிழ் மக்கள் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது என்ன ஜனநாயகம் என்று புரியவில்லை. தி.மு.க.விலிருந்து பிரிந்தது அ.தி.மு.க. மட்டும் இல்லை. இன்னும் எத்தனையோ கட்சிகள். தமிழ்நாட்டின்முக்கிய கட்சிகள் இரண்டிற்கும் அகில இந்திய அளவில் கிளைகள் இல்லை. இந்த இரண்டு கட்சிகளிலும் தலைவர்கள் சொன்னதுதான் அந்தக் கட்சியின் கொள்கை.அகில இந்திய கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியில் என்ன நடக்கிறது? ஊழல் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எடியூரப்பாவை மேலிடம் பதவி இறங்கச் சொல்கிறது. அவர் மேலிடத்தை எதிர்த்துத் தனிக்கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்.காங்கிரஸ் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி வரை கட்சி அங்கத்தினர்கள் யாருக்கும் எந்தக் கொள்கை பற்றியும் தெளிவான கொள்கைகள் கிடையாது. தலைவர் சொல்படி தலையாட்டுவார்கள். தங்கள் நலனுக்கு ஆபத்து என்றால் உடனே தனிக் கட்சி ஒன்றை ஆரம்பித்துவிடுவார்கள்.
பெரும்பான்மையோர் வாக்களிக்கும் இந்திய ஜனநாயகம் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் படும் பாட்டைப் பார்த்தால் இதுவா ஜனநாயகம் என்று கேட்கத் தோன்றுகிறது.


அமெரிக்காவில் ஜான் டவர் என்பவரை பாதுகாப்புத்துறை
அமைச்சராக ஜனாதிபதி நியமனம் செய்த போது அதை
அந்நாட்டு இரு அவைகளும் நிராகரித்தன. அதற்கு ஒரே
காரணம் அவர் ஒரு குடிகாரர் என்பது தான். அந்நாட்டு
மக்கள் எல்லோரும் குடித்தாலும் மொடாக் குடியர்கள்
பதவியில் இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் நம் நாட்டிலோ குடிகாரன் என்பது தான்
ஆட்சியாளருக்குச் சிறப்பு என்று எண்ணுகிறார்கள்.
அதனால் தான் குடிகாரர்களும் கொள்ளைக்காரர்களும்
போட்டி போட்டுகொண்டு ஆட்சி செலுத்துகின்றனர்.
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம் .
migavoom sariyana karuthu
rangan