இலக்கியம்பத்திகள்மறு பகிர்வு

ஆன்மீகமும் நானும் (17)

நடராஜன் கல்பட்டு

சின்மயா மிஷன் நடப்புகள்

விஜயவாடவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின் எங்கள் வீட்டில் வெள்ளிக் கிழமைகள் பெண்களுக்கான ஆன்மீக வகுப்புகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் சிறுவர்களுக்கான பால விகாரும் நடத்த வசதிகள் செய்து தந்தேன். அதே சமயம் நானும் பகவத் கீதையின் சில பகுதிகளை மனனம் செய்து வந்தேன். அவற்றை அர்த்தத்துடன் கற்றேன்.

திருச்சிக்கு மாற்றலாகி வந்த பின் சின்மயா மிஷனின் திருச்சி கிளையின் சார்பில் ப்ரும்மச்சாரி ஹரிதாஸ் அவர்களை திருச்சிக்கு அழைத்து சொற்பொழிவுகள் நடத்தச் செய்தோம். அப்போது அவர் பத்து நாட்களுக்கு எங்கள் வீட்டில் தங்கி இருந்தார்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துப் பின் சுமார் ஒரு மணி நேரம் த்யானத்தில் அமர்வார் ஹரிதாஸ் அவர்கள். அவர் எழுமுன் நாங்களும் எழுந்துத் தயார் ஆகி விடுவோம். அவர் தங்கி இருந்த நாட்களில் எங்கள் வீட்டில் ஒரு தெய்வீக ஒளி வீசுவது போல உணர்ந்தோம். அடுத்த வருடமே ப்ரும்மச்சாரி ஹரிதாஸ் சுவாமி ஹரிநாமானந்தா வாக மாறினார் முற்றிலுமாக சன்நியாசம் எடுத்துக் கொண்டு.

ஒரு முறை சுவாமி சின்மயானந்தா அவர்கள் திருச்சிக்கு விஜயம் செய்தார். பின் சுவாமி தயானந்தா அவர்கள் கும்பகோணத்தில் ஒரு வாரத்திற்கு த்யான வகுப்புகள் நடத்தினார்.

எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதற்காகவும், இறைவனின் துதிகள் கற்றுத் தருவதற்காகவும் வகுப்புகள் ஆரம்பித்தோம். ஆரம்ப நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். வகுப்பின் முடிவில் இறைவனின் படங்களுக்குக் கற்பூர ஹாரத்தி எடுத்து, வாழைப் பழம் நிவேதனம் செய்து, குழந்தைகளுக்குப் பிரசாதமாக ஆளுக்கொரு வாழைப் பழம் கொடுத்து வந்தோம். ஆனால் நாளடைவில் குழந்தைகளுக்கு ஈடுபாடுக் குறைவினாலோ என்னவோ எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து ஒரு நாள் எனது இரு மகள்களைத் தவிற வேறு யாரும் வரவில்லை. வாங்கி வைத்திருந்த பழங்கள் எல்லாம் வீணாகின.

அதற்கடுத்த வாரம் எனது இரு மகள்களைத்த் தவிற இருவர் வந்தனர். அதில் ஒருத்தி எனது கடைசீ மகளின் தோழி. பக்கத்து வீட்டுப் பெண், பெயர் சிவகாமி. வயது பத்து.

அன்று வாழைப்பழம் வாங்கி வைக்காத்தால் வீட்டில் இருந்த இரு வாழைப் பழங்களைப் பாதிப் பாதியாக வெட்டி வகுப்பு முடிவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டி வந்தது.

சிவகாமி சொன்னாள், ‘அரை மணி நேரம் கவான் கவான்னு கத்த வெச்சூட்டுக் கெளெவன் அரை வாளப் பளத்தெக் கொடுக்கறான். யாரு வருவா இதுக்கு?’ என்று. அன்றோடு பால விகார் முடிவுக்கு வந்தது.

அப்படி அவள் சொல்லக் காரணம் அரை வாழைப் பழம் அல்லவென்றும், அன்று காலை தோட்டத்தில் விளையாடும் போது என் மகளோடு ஏற்பட்ட ஒரு சிறு சண்டைதான் என்பதும் பின்னால் தெரிய வந்தது. அப்போதே அவளது தன் தீர்மானமான முடிவினைத் தெரிவித்து விட்டாளாம் சிவகாமி என் மகளிடம்!

(தொடரும்….)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க