ஆன்மீகமும் நானும் (16)
நடராஜன் கல்பட்டு
ஐயப்பன் வழிபாடு – 4
1974 டிசம்பர் மாதம் முதல் 1978 ஆகஸ்ட் மாதம் வரை நான் திருச்சியில் பணி புரிந்து வந்தேன். இந்த சமயம் எனெக்கொரு உடல் உபாதை வந்தது. வேலை செய்து கோண்டே இருப்பேன். திடீரென வயிற்றைக் கலக்கும். அடுத்த வினாடி நான் கழிப்பறை நாடி ஓட வேண்டும். சில மருத்துவர்களிடம் சென்றேன். ஒவ்வொருவரும் ஒரு வியாதியின் பெயர் சொல்லி மருந்தும் கொடுத்தனர். ஆனால் குணம் ஒன்றும் தெரியவில்லை. கடைசியாக ஒரு ரண சிகிச்சை நிபுணரை அணுகினேன்.
அவர் சொன்னார், சில பரிசோதனைகளுக்குப் பின், ‘உங்கள் உடலில் பெருங்குடலில் புற்று நோய் இருக்கலாம். குடலில் இருந்து ஒரு சிறு துண்டு சதையினை எடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பலாம். அவர்கள் அதை பரிசோதித்து புற்று நோய் உள்ளதா இல்லையா என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள்’ என்று. பின் அவர் சொன்ன படி ஒரு சிறு துண்டு சதையினை குடலில் இருந்து வெட்டி எடுத்து தஞ்சைக்கு அனுப்பினார்.
தஞ்சையில் இருந்து பத்து நாட்களுக்குப் பின் செய்தி வந்தது ‘புற்று நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை’ என்று. உடனே என் மனைவி சொன்னாள், ‘நான் நம் கம்பெனியின் ஒரு விநியோகஸ்தரின் அறிவுரைப்படி அய்யப்பனுக்கு வேண்டிக் கொண்டிருக்கிறேன் தஞ்சையில் இருந்து நல்ல செய்தியாக வந்தால் உங்களை அய்யப்பனைத் தரிசிக்க அனுப்புகிறேன் என்று. நீங்கள் இந்த வருடம் சபரி மலை சென்று வரவேண்டும்’ என்று. நானும் ஒப்புக் கொண்டேன்.
திரப் பட நடிகர் காலஞ்சென்ற எம்.என்.நம்பியார் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் ஒரு தீவிர அய்யப்ப பக்தர். சுமார் 50 – 60 முறைகளுக்கும் மேல் சபரி மலை சென்று வந்தவர் அவர் என்று. அவருக்கு அய்யப்பன் மீதுபக்தி ஏற்படக் காரணம் அவர் ஆரம்ப நாட்களில் பணி துவங்கிய நாடகக் குழுவின் தலைவர், புகழ் பெற்ற காலஞ்சென்ற் திரு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் தான்.
நவாப் அவர்கள் அளித்து வந்த கிருஷ்ண லீலா என்னும் நாடகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. ஒரு சமயம் அவர் கேரளாவில் நாடகம் நடத்திய போது பர்மா ஷெல் மண்ணென்னை வியாபாரி ஒருவர் வீட்டில் தங்கினாராம். அந்த வியாபாரி கேட்டாராம், ‘நவாப் நீங்கள் கிருஷ்ணனைப் பற்றி இவ்வளவு அழகாக நாடகம் நடத்துகின்றிர்களே அய்யப்பனைப் பற்றியும் ஏன் ஒரு நாடகம் நடத்தக் கூடாது?’ என்று.
ராஜமாணிக்கம் அவர்கள் சொன்னாராம், ‘போடலாம்தான். ஆனால் அவர் பற்றி சரியான, நம்பிக்கையான தகவல்கள் வேண்டுமே?’ என்று.
‘ஒரு முறை சென்று வாருங்கள் சபரி மலைக்கு. அய்யப்பன் சரித்திரம் தானே புரிந்து விடும் உங்களுக்கு’ என்றாராம் அந்த வியாபாரி..
ராஜமாணிக்கம் பிள்ளையும் சென்று வந்தார் சபரி மலைக்கு. அன்று சென்றவர் தன் ஆயுள் முடியும் வரை சென்று வந்தார். கூடவே தோன்றியது சுவாமி அய்யப்பன் என்ற அழகியதொரு நாடகமும். அக்குழுவில் இருந்த நம்பியார் அவர்களுக்கும் தொற்றிக் கொண்டது அய்யப்பன் மீது அபாரபக்தி. சுவாமி அய்யப்பன் நாடம் தமிழ் நாட்டில் பெருமளவு அய்யப்ப பக்தியைத் தோற்று வித்தது.
என் அதிருஷ்டம் நவாப அவர்களின் மகன் எனக்குக் குருவாக அமைந்தார்.
வழக்கமாக வெய்யில் நாட்களிலும் மித வென்னீரில் குளிப்பவன் நான். பச்சைத் தண்ணீரில் குளித்தால் முதுகுப் பிடிப்பு வந்து விடும். நவம்பர் டிசம்பர் மாதங்களில் பச்சைத் தண்ணீரில் குளித்தேன் முதல் முறையாக ஒரு வித பாதிப்புமின்றி. அது மட்டுமல்ல. காலணியின்றி நடந்திடாத எனக்கு இரண்டே நாட்களில் பழகிப் போயிற்று. முதல் இரு நாட்கள் காலில் கற்கள் உறுத்தினாலும் மூன்றாவது நாளில் இருந்து அதுவும் பழகிப் போய் விட்டது. அதனால் மலை ஏறும் போது கூறிய கற்களும் என் கால்களை ஒன்றும் செய்ய வில்லை.
அந்த யாத்திரையில் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் அந்த இன்பத்தினை. பல சிறு சிறு கஷ்டங்களைப் பொருட் படுத்தாது உறுதயோடு பதினெட்டு படிகள் ஏறி அய்யப்பன் சன்னதியை நாம் அடையும் போது நம் மனம் லேசாகிறது. சொல்ல முடியாத இன்பத்தினை அனுபவிக்கிறோம்.
எல்லாமே இன்ப மயம் என்றும் சொல்லி விட முடியாது. சிறு சிறு கஷ்டங்களும் அனுபவிக்கத்தான் வேண்டி இருந்தது.
லடசக் கணக்கில் அங்கு வந்தடையும் பக்தர்களைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் அதே சமயம் யாத்ரீகர்கள் திறந்த வெளியிலே மல ஜலம் கழிப்பதும் பின் பம்பை நதியில் உடல் கழுவுதலும் அதே நதியில் மக்கள் குளிப்பதும், நீரைக் குடிப்பதும் பார்க்க அருவருப்பாக இருந்தது.
சன்னதியை அடையப் பதினெட்டு படிகள் வழியாக ஏறும் போது அங்கு உடைக்கப் பட்டுள்ள தேங்காய் சில்லுகள் கால்களில் குத்துவதும், தேய்ந்து சரிவாக இருந்த கற்படிகளில் வழிந்தோடும் இளநீரில் வழுக்குவதும் நமக்கு சிரமம தரும் ஒன்று.
மலை ஏறி அய்யப்பனைத் தரிசித்து விட்டு பம்பைக்குத் திரும்பியதும் நீங்கள் வந்த வண்டி எங்கு நிற்கிறது என்று கண்டு பிடிப்பது ஒரு பெருங்கஷ்டம்.
நான்காவது கஷ்டம் பிய்ந்த கீற்றுக் கூரையின் கீழே மண் தரையில் துண்டினை விரித்துப் போட்டுப் படுக்க வேண்டி இருப்பது.
இந்த நான்கு கஷ்டங்களுமே அடுத்த முறை நான் சென்ற போது நிவர்த்தி செய்யப் பட்டிருந்தன.
ஆங்காங்கே சுத்தமான கழிப்பறைகள், பக்தர்கள் தங்குவதற்கு பல விடுதிகள், அழகான உறுதியான கண்கள் கொண்ட இரும்புப் படிகள், உங்கள் வண்டியை அழைத்திட ஒலிபெருக்கி வசதி, இப்படி எல்லாமே பக்தர்களுக்கு சாதகமான மாற்றங்கள்.
அடுத்த ஆண்டு பிள்ளைப் பேறு இன்றி இருந்த ஒரு வினியோகஸ்தரிடம் நான் கேட்டேன், ‘நீங்கள் ஏன் சுவாமி அய்யப்னுக்கு வேண்டிக் கொண்டு சபரி மலை ஒரு முறை சென்று வரக் கூடாது?’ என்று.
அவரது மனைவி சொன்னாள், ‘உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால் அவர் சார்பாக வேண்டிக் கொண்டு நீங்கள் ஏன் செல்லக் கூடாது?’ என்று. நான் இரண்டாவது முறை சென்று வந்தேன். ஆனால் அவர்களுக்கு மகப்பேறு கிடைக்க வில்லை. நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டுமோ?
மூன்றாம் முறை சென்று வந்த கதையினைப் பின்பொரு நாள் பார்ப்போம்.
தொடரும்….