நடராஜன் கல்பட்டு

ஐயப்பன் வழிபாடு – 3

அய்யப்பன் வழிபாட்டிற் கென விதிக்கப் பட்டிருக்கும் கட்டுப்பாடு களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஒவ்வொன்றுமே ஒரு காரணத்தோடு வைக்கப் பட்டவை என்பது புரியும்.

பல வருடங்களுக்கு முன்பு நாற்பது கிலோ மீடர் தூரம் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான காட்டுப் பாதை வழியாக நடந்து சென்றுதான் அய்யப்பன் சன்னதியை அடைந்திட முடியும். இதை பெரிய பாதை என்பார்கள். பின்னர் பம்பா நதி வரை கார், பேருந்து இவற்றில் சென்று ஒரு சிறிய பாலத்தின் வழியாக நதியை கடந்து சுமார் ஏழு கிலோ மீடர் தூரம் சரிவான மலைப் பாதை வழிச் சென்றால் போதும். இதை சிறிய பாதை என்பார்கள்.

இப்போது இந்த சிறிய பாதைக்கும் சுமார் ஐந்து கிலோ மீடர் தூரத்திற்கு சரிவான சிமிண்டு பாதையும் கடைசீ இரண்டு கிலோ மீடர் தூரத்திற்கு சரிவான பாதையும் கூடவே படிக் கட்டுகளும் வந்து விட்டன. இந்த இரண்டு கிலோ மிடர் தூரத்திற்கு நிழல் தந்திடும் கான்கிரீட் கூரையும் உண்டு.

இனி கட்டுப் பாடுகளும் காரணங்களும்.

கருப்பு அல்லது கரு நீல உடை ஏன்?

வெள்ளை உடையோ, பிரகாசமான நிற உடையோ அணிந்தால் காட்டு மிருகங்களின் கண்களில் நீங்கள் நீண்ட் தூரத்தில் இருந்தே பட்டு விடுவீர்கள்.

காலணிகளுக்ககு ஏன் தடை?

நம் நாட்டில் பலரும் அணிந்திடும் காலணி செருப்பு. செருப்பை அணிந்து கொண்டு சாய்வான, சிறு சிறு கற்கள் கொண்ட பாதையில் நடந்தால் நம் கால்களில் இருந்த செருப்பு தனியே கழன்று நீங்கள் கீழே சறுக்கி விழுவீர்கள். மலையேரும் காலணிகள் என்பது சமீபத்தில் வந்த ஒன்று அதுவும் சாதாரண மக்கள் கைக்கெட்டாத ஒன்று. அப்படியே அவற்றை வாங்கி அணிந்து சென்றாலும் அதை பத்திரப் படுத்துவதில் தான் உங்கள் கவனம் செல்லும். ஆண்டவனை வழிபடுதலில் அல்ல.

திடீரென அங்கு போகும் போது மட்டும் செருப்பின்றிச் சென்றால் உங்கள் பாதங்களால் அவற்றில் குத்தும் கற்களையும் முடகளையும் தாங்க முடியாது. நாற்பத்தி எட்டு நாட்கள் முன்பிருந்தே பழகி விட்டால் வெற்றுக் காலோடு எங்கும் நடக்கலாம்.

மிகவும் எளிமையான் மரக் கறி உணவே, அதுவும் முடிந்தால் ஒரே ஒரு வேளை மட்டுமே, உண்ண வேண்டும். இது ஏன்?

எளிதான மரக்கறி உணவை அதுவும் ஒரே வேளை உண்டால் உங்கள் உடல் எடை குறையும். மலைப் பாதையில் நடப்பதும் எளிதாக இருக்கும். நாவின் ருசி அடக்க வில்லை என்றால் போகும் வழியெல்லாம் உங்களுக்குப் பிரியமான உணவு கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?

குளிப்பது பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.

‘வென்னீரில் குளித்துப் பழகியவர்கள் வென்னீரில் குளித்தால் என்ன தவறு?’ என்று கேட்கிறீர்களா?

போகும் வழியெல்லாம் உங்களுக்கென வென்னீர் வைத்து தர ஆடகள் உட்கார்ந்திருப்பார்களா?

தினமும் இரு வேளையும் குளிதுவிட்டு அயப்பனின் படத்தையோ, பதுமையையோ வைத்துப் பூசை செய்ய வேண்டும். அவ்வாறு பூசை செய்யும்போது, ‘சுவாமியே சரணம்’, ‘அய்யப்ப சரணம்’, என்று பல முறை(குறைந்தது 108 முறைகள்) உரக்க ‘சரணம் விளிக்க’ (கூப்பிட) வேண்டும்.

இந்தக் கட்டுப் பாடு உங்கள் மனம் அலை பாயாமல் கட்டுப் ப்டுத்திடும் பயிற்சி. கூடவே தினமும் பல முறை‘சுவாமி சரணம் அய்யப்பா சரணம்’ என்று கோஷம் எழுப்பப் பயின்று விட்டால் பின் மலை வழிப் பாதையில் கோஷமெழுப்பிக் கொண்டு நடந்து செல்லும் போது நடையின் களைப்பும் தெரியாது. பலர் சேர்ந்து எழுப்பும் குரலால் காட்டு மிருகங்களும் தூர விலகி விடும்.

யாத்திரை புறப்படு முன்னர் குழுவின் குரு சாமியின் மேற் பார்வையில் ‘பள்ளிக் கட்டு’ அல்லது ‘இருமுடி’என்று சொல்லப் படுவதைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பள்ளிக் கட்டு அல்லது இருமுடி என்பதை தயார் செய்வதே ஒரு தனிக் கலை.

இரு முடி என்பது இரு அறைகள் கொண்ட ஒரு பருத்தித் துணியினால் செய்யப் பட்ட பை. இதன் ஒரு அறைக்குள் அய்யப்பனுக்கு சேர்ப்பிக்க வேண்டிய நெய், தேங்காய் வெற்றிலை, பாக்கு இவையும் மற்றொரு அறையில் அரிசி பருப்பும் இவையும் இருக்கும்.

இரு முடி ஏன்? ஒரே முடியாக இருந்தால் அதைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். இரு பகுதிகளாக கட்டப் படும் இரு முடி சுலபமாக உங்கள் தலை மீது அமர்ந்து விடும். பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதால் உங்கள் கைகள் இரண்டும் தேவைப் படும் போது உபயோகிக்கக் கிடைக்கும். ஒரு கையில் தடி ஒன்றினைப் பிடித்து நடக்கவோ அல்லது பாதையில் கால்கள் சறுக்கும் போது அருகில் உள்ள செடியினைப் பிடித்துக் கொள்ளவோ முடியும்.

அய்யப்பனின் அபிஷேகத்திற்கென எடுத்துச் செல்லப்படும் நெய் கண்ணாடி சீசாக்களிலோ, தகர டப்பாக்களிலோ எடுத்துச் செல்லப் படுவதில்லை. சீசாக்களில் எடுத்துச் சென்றால் தப்பித் தவறி இரு முடி கீழே விழுந்தால் உடைந்து போகலாம். தகர டப்பாக்களில் எடுத்துச் சென்றால் வழியில் ஒழுகிடாமல் இருந்திட மூடியினை ஈயப் பற்று வைத்திடல் வேண்டும். பின் அந்த டப்பாவைத் திறந்திட ஆயுதம் வேண்டும். அதனால் தான் அபிஷேக நெய்யினை தேங்காயின் ஒரு கண்ணினைத் துளைத்து இளநீரை வெளியே கொட்டி விட்டு இளகிய நெய்ய்யை அதனுள் நிரப்பி, அடைப்பன் ஒன்றினால் அழுத்தி மூடி தேன் மெழுகினால் பூசி மூடிடுவார்கள். இதையெல்லாம் நல்ல முறையில் தயார் செய்திட பல முறை சென்று வந்த, அனுபவம் வாய்ந்த ஒருவரின் உதவி தேவை. அவரே குருசாமி.

விரதம் ஆரம்பிப்பதின் அறி குறியாக மாலை (உத்திராட்சம், துளைசிக் கட்டை, வெள்ளெருக்குக் கட்டை அல்லது கண்ணடி இவற்றால் ஆன 108 மணிகள் கொண்ட ஜப மாலை) அணிந்த பின் ஒருவரை ஒருவர் ‘சாமி’என்றோ ‘அய்யப்பா’ என்றோ தான் அழைத்துக் கொள்ள வேண்டும்.

மாலை, நாம் மேற்கொண்டுள்ள விரதத்தினை நமக்கு எப்போதும் நினைவில் வைத்திட உதவும் ஒன்று. ஜபம் செய்திடவும், சரணம் சொல்லவும் உபயோகப் படும் ஒன்று. ஒருவரை ஒருவர் அய்யப்பா என்றழைத்துக் கொள்வது ‘நான், எனது’ என்பதனை மறந்திடச் செய்யவும், எல்லோரும் சமம் என்னும் எண்ணத்தினை ஆழமாகப் பதிந்திடச் செய்யவும் உதவும்.

நாற்பத்தி எட்டு நாட்களும் புலால் உண்ணல், பீடி, சிகெரெட், சுருட்டு, இவை பிடித்தல், மது அருந்துதல்,பாலியல் சுகம் காணல் இவை முற்றிலுமாகத் தவிர்க்கப் பட வேண்டும்.

எல்லா உயிரகளிடத்தும் அன்பு காட்ட வேண்டும், மனத்தினை ஒரு முகப் படுத்தல் வேண்டும் என்பவற்றுக்கு உதவும் கட்டுப்பாடு இது.

இந்த நாற்பத்தோரு நாட்களில் ஒரு நாள் ஏழைகளுக்கும், சக பக்தர்களுக்கும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

தன்னிடம் உள்ளதைப் பிறரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி இது.

விரத நாட்களில் வெளியில் உணவு உண்ணுதலை முற்றிலு மாகத் தவிர்க்க வேண்டும்.

‘யாத்திரை கிளம்பியபின் வெளியில் தானே உணவு உட்கொள்ள வேண்டும்? இப்போது மட்டும் என்ன இந்தக் கட்டுப் பாடு?’ என்கிறீர்களா உண்மைதான். நாம் வெளியில் உணவருந்தும் போது கூடவே நம் உடலுள் நோய்க் கிருமிகளும் செல்லலாம்.. அவற்றின் பாதிப்பு உடனே இல்லாவிட்டாலும் யாத்திரை கிளம்பியபின்உண்டாகலாம். உடல் நலம் கெட்டால் நமக்கு வைத்தியம் செய்ய மருத்துவ மனையோ, மருத்துவரோ உடனே கிடைக்காமல் போகலாம். அதனால் நம் உடல் மிகவும் பாதிக்கப் படலாம். ஏன் மரணமே கூட சம்பவிக்கலாம். இக் காரணத்திற்ககத்தான் இந்தக் கட்டுப்பாடு.

வெளியே சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் குளிக்க வேண்டும்.

இந்தக் கட்டுப் பாடும் நம் உடல் மீதோ, உடைகள் மீதோ ஒட்டிக் கொண்டு வரும் கிருமிகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்.

பத்து வயதுக்கு மேல் ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களை உடன் அழைத்துச் செல்லக் கூடாது.

மாத விடாய் உடையவர்கள் சென்றால் அவர்களுக்கு மாத விடாய் நாட்களின் போது தேவைப்படும் தனிமை கிடைத்திடாது. அதனால் மற்றவர்களின் பயண வேகமும் தடைப் படும் என்பது ஒருமுக்கிய காரணம்.

ஒரு சொல்ல மறந்த கட்டுப்பாடு சபரி யாத்திரை செய்வோர் முடித் திருத்தமோ முகச்சவரமோ செய்திடல் கூடாது என்பது.

முடி திருத்தமோ, முகச் சவரமோ செய்து கொள்ள நேரம் தேவை. முடி திருத்தம் செய்திட முடி திருத்துனர் தேவை. இவை இரண்டும் யாத்திரைப் பாதையில் கிடைக்காமல் இருக்கலாம். இரண்டாவதாக நம் மீது வளரும் முடி நமக்கு ஓரளவுக்கு குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். சமவெளிப் பிரதேசத்தை விட மலை மீது குளிர் அதிகமாகவே இருக்கும். இக்குளிரில் இருந்து ஓரளவு தப்பலாம் அல்லவா முகத்திலே முடி வளர்ந்திருந்தால்?

சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரியும் அய்யப்பன் வழிபாட்டிற்கென பிரத்தியோகமாக விதிக்கப் பட்டிருக்கும் கட்டுப் பாடுகள் எல்லாமே ஒரு நல்ல காரணத்திற்காகத் தான் என்பது.

இனி நாளை எனது சிறிய அனுபவம் பற்றிச் சொல்ல நினைக்கிறேன்.

(தொடரும்….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *