நிர்மலா ராகவன்

ஒழுக்கத்தைக் கற்பிப்பது

உனையறிந்தால்

கேள்வி: குழந்தைகளுக்கு எப்படி ஒழுக்கத்தைப் புகட்டுவது?

விளக்கம்: வீட்டில் பெரியவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து குழந்தைகள் தாமே ஒழுக்கத்தைக் கற்கிறார்கள். அதை விட்டுவிட்டு, ஓயாத போதனைகளாலும், வன்முறையாலும் இது முடியாத காரியம்.

கதை 1:

ஒரு நீர்வீழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு சீன மாது தன் இரண்டு வயதுப் பெண்குழந்தையிடம், `எவ்வளவு அழகா இருக்கு, பாத்தியா? மேலேயிருந்து எவ்வளவு வேகமா கொட்டுது!’ என்று காட்டிக்கொண்டிருந்தாள்.

அத்துடன் விட்டிருக்கலாம். `நீ விஷமம் பண்ணினா, அதிலே தூக்கிப் போட்டுடுவேன்!’

முதலில் மகிழ்ந்து சிரித்த குழந்தை தாயின் மிரட்டலைக் கேட்டு அச்சத்துடன் தலையைப் பின்னால் இழுத்துக்கொண்டாள்.

இது கண்டிப்பாக ஒரு குழந்தையை ஒழுக்கப்படுத்தும் வழியல்ல. பயமுறுத்தல் நாளடைவில் ஒரு குழந்தையை எதற்கும், யாரிடமும் பயப்படச் செய்யுமே தவிர, நாம் விரும்பும் நல்ல குணங்களை வளர்க்காது.

சில ஆசிரியர்கள் `என் கடமையை எவ்வளவு ஒழுங்காகச் செய்கிறேன், பார்!’ என்பதுபோல், காரணமின்றியே தண்டிப்பார்கள்.

போதிப்பது என்ன? ஒழுக்கமா, ஒழுங்கீனமா?

கதை 2: ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து, சொற்பொழிவொன்றைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓர் ஆசிரியை கையில் பிரம்புடன், ஒவ்வொரு மாணவனின் பின்புறத்திலும் ஓங்கி அடித்தபடி நகர்ந்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்த தாய் ஒருவர், `அவர்கள் மௌனமாகத்தானே இருக்கிறார்கள்! எதற்கு அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, `அடித்தால்தான் இப்போது பேசவே கூடாது என்று புரியும் அவர்களுக்கு!’ என்றாளாம்.
குழந்தைகளின் மன வளர்ச்சி, மனோதத்துவம் இதைப்பற்றி எல்லாம் எவருக்கும் சரியாகத் தெரியாத காலத்தில், ஓயாது அடித்தாலும், பழித்தாலும் ஒரு சிறுவன் ஒழுங்காகிவிடுவான் என்று நம்பினார்கள். அந்த வழியில் வளர்க்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றளவும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். `நான் அம்முறையால்தான் உருப்படியாக வளர்ந்தேன்!’ என்பார்கள். இவர்கள் மனோபலம் மிகுந்தவர்கள் என்பதில்லை. தங்கள் பலகீனத்தை அதிகாரத்தால் மறைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். இதனால், வீட்டில் அடி வாங்காது, நல்ல விதமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தங்கள் ஆற்றலிலேயே ஐயம் எழுந்துவிடாதா!

அதிகார வர்க்கத்தின்மேலேயே வெறுப்பை வளர்த்துக் கொள்பவர்களும் உண்டு.

கதை 3: என் பதினான்கு வயது மாணவன், அடுனன் (ADNAN), கேட்டான்: `செய்வது தப்பு என்று தெரியும். இருந்தாலும், அதைச் சுட்டிக்காட்டினால், ஏன் சில ஆசிரியர்கள் ஆத்திரப்படுகிறார்கள்?’

நான் மெல்லச் சிரித்தேன். `அவர்களை POWER CRAZY (அதிகார வெறி கொண்டவர்கள்) என்கிறோம்!’

தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டான் அடுனன். `அப்படிப்பட்ட ஆசிரியர்கள் நம் பள்ளியில் நிறைய பேர் இருக்கிறார்கள்!’ என்றான், வயதுக்கு மீறிய அறிவுடன். பிறகு, `நான் இப்படிப்பட்ட ஒருவருடைய பாடத்தைச் செய்யாமலிருந்தால் என்ன ஆகும்? காரணமில்லாமல் என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்!’

தனக்குப் பிடிக்காத ஆசிரியரைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரை மீறத் துணிகிறான்!

`நீ படிப்பதும், தேர்ச்சி பெறுவதும் உனக்காகத்தான்!’ என்று புத்தி சொல்லிப்பார்த்தேன். அதைக் காதில்வாங்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.

இறுதிப் பரீட்சைக்கு சேர்க்கப்படும் வீட்டுப் பாடத்தைச் செய்யாமல் விட்டுவிட்டான் அடுனன் என்று அந்த ஆசிரியர் பொது அறையில் அலறிக் கொண்டிருந்தபோதுதான் நடந்ததை அறிந்தேன்.

`ஒழுக்கம்’ என்ற பெயரால் அந்த ஆசிரியர் செய்த அனர்த்தத்தால் விளைந்த வினை! ஒரு வேளை, இந்தப் பையன் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடுவானோ என்ற பொறாமையில் விளைந்த அச்சமோ? (அந்த ஆசிரியர் பல முறை பதவிக்குறைப்பு கண்டவர்).

பெற்றோரால் மிரட்டி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் எப்போது, எதற்குத் தண்டிப்பார்கள் என்றுகூடப் புரியாது என்பதுதான் சோகம். இம்மாதிரியான வளர்ப்பு முறையால் கற்பனைத்திறன் அறவே வளராது என்பது ஒரு பக்கம் இருக்க, குழப்பத்தில், பயத்தில், சுயமுயற்சியுடன் புதிதான எது ஒன்றைச் செய்யும் துணிவையும் இழந்துவிடுகிறார்கள். இவர்கள் ஆட்டுமந்தையைப்போல், தம்மைவிடத் துணிச்சலானவர்களைப் பின்பற்றுவார்கள். மேலதிகாரிகள் சொல்வதை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பார்கள். அதனால், தம்மீதே கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வார்கள்.

ஒரு பையன்(16) என்னிடம் கூறினான், `எங்கப்பா தினமும் திட்டுவார், அடிப்பார். எதுக்கு அடிக்கிறாருன்னே புரியாது!’

இந்தமாதிரி சந்தர்ப்பங்களில், கணவரை எதிர்த்தால், மகனுக்கு அப்பாமேல் மரியாதை போய்விடும் என்று சாக்குச்சொல்லி, தாய் கண்டும் காணாததுபோல் நடக்கலாமா? மகனைத் தனியாக அழைத்துப்போய், `ஒன்மேல ஒரு தப்பும் இல்லே. அப்பாவுக்கு இன்னிக்கு ஆபீசில ரொம்ப வேலை! இல்லை, மேலதிகாரி நாலுபேர் முன்னால் அப்பாவைக் கண்டபடி திட்டியிருப்பார். அந்த கோபத்தை ஒன்மேல காட்டுகிறார்!’ என்று விளக்கினால், பையன் தெளிவடைவான்.

இம்மாதிரியான பெற்றோர் இருந்தால், சிறுவர்கள் பள்ளி நண்பர்களிடம் தம் இயலாமையைக்கூறி ஆறுதல் தேடப் பார்ப்பார்கள். ஆனால், பிரச்னை என்னவோ தீராது.

`இந்த அப்பாக்களே இப்படித்தான்!’ என்று நண்பர்கள் கசப்புடன் முடிவு செய்து, தங்களின் எண்ணிக்கையால் பலம் பெறுவதாக எண்ணுகிறார்கள். `வேடிக்கை’என்று நினைத்து, வயதில் மூத்தவர்களை எதிர்க்கிறார்கள். தண்டனை பெற்றால், நடத்தை இன்னும் மோசமாகிறது. படிப்பில் அக்கறை அறவே போய்விடுகிறது. ஒன்றாகச் சேர்ந்து தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் இப்படித்தான்.

கதை 4: மன் லீ என்ற என் சீன மாணவி(17) வகுப்பில் கீழ்ப்படியாதவளாக இருந்தாள். காரணத்தை அறிய நான் அவளைத் தனியே அழைத்துப் பேசினேன்.

`நான் கொஞ்ச நாள் போதைப்பழக்கம் உள்ளவளாக இருந்தேன். இப்போது விட்டுவிட்டேன். ஆனால், அதையே சொல்லிச் சொல்லி, என் பெற்றோர் என்னைத் துன்புறுத்துகிறார்கள்!’ என்று ஒத்துக்கொண்டாள்.

உளவியல்படி, ஏழ்மை, பெற்றோருக்கிடையே ஓயாத சண்டை, ஒற்றுமையற்ற பெரிய குடும்பம், வன்முறையில் பிள்ளைகளைத் தண்டித்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட மனதின் ஆரோக்கியம் குறைய வாய்ப்பிருக்கிறது. வீட்டில் பெரியவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருந்துவிட்டு, பிள்ளைகள் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நடக்கிற காரியமா?

பெற்றோரின் சரியான கவனிப்போ, பாராட்டோ இல்லாததால்தான் மன் லீ தீய பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாள்! அது புரிந்து, மதிப்பெண்களுடன் அவள் பெற்றோருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினேன்: ` மன் லீ நல்ல பெண். இப்போது இருக்கிறபடியே ஏற்றுக்கொள்ளுங்கள்’.

வீட்டில் நிலவரம் சுமுகமாக ஆகியிருக்க வேண்டும். அதன்பின், அவள் ஒரேயடியாகச் சிரித்தபடி, எனக்கு உதவ எப்போதும் ஓடி வந்தாள்!

மரியாதை குறையாது, பெற்றோர் அல்லது ஆசிரியரின் கருத்தை வெட்டி பேச அனுமதித்தால்தானே, இளம் வயதினர் மகிழ்ச்சியுடன் தம் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள்?

மாறாக, அதிகாரம் செலுத்தி, பயத்தால் பணியவைக்க நினைத்துவிட்டு, `இந்தக் காலத்தில் எல்லா இளைஞர்களும் மோசம்!’ என்று சலித்துக்கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *