ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்

மீ.விசுவநாதன்
( பகுதி: ஐந்து )

12079322_982711995104984_1750768255600862897_n
“பறையகடவு”

காயல் நிறைத்த இடம் !
நீலக் கண்ணனின்
சாயல் உறைந்த இடம்!
நீலக் கடலலை
ஒயல் இலாத இடம் !
மீனவ மக்களின்
மான மிகுந்த இடம் !
வானவ தேவதையாய்
ஒரு குழந்தை
வந்து வளர்ந்த இடம்
இந்தப்
“பறையகடவு” !

கரையைக் கடக்கும்
புயலும் கூடக்
காதல் கொள்ளப்
பறையும் கடவு !

வளமும் ஏழ்மையும்
பாசமாய்
தினமும் வாழ்கிற
கரையிலா அன்பில்
கரைகிற உறவு
கடலின் மீன்களை
படகில் சென்று
பிடித்து வந்து
குவிக்கிற துறையிது !
படித்து வாழாமல்
குடித்து மாள்வோரின்
கறையினைக் கிள்ளவும்
தவிக்கிற மனமெலாம்
தாம்பூலம் கொள்ளவும்
தாயே பராசக்தி
தான்கோலம் மாற்றி
தவம் செய்த துறையிது !
பக்தி வானத்தின்
மூன்றாம் பிறையிது !
“வியாச” வம்சத்து
வித்தின் முறையிது !
பிரபஞ்சம் முழுதிற்கும்
பொதுவான மறையிது!
என்னும்
பறையகடவு
என்றும்
அமிர்தபுரியாய்
இருக்கக்கடவென
இறைவன் கட்டளை
இட்ட பொழுதே
சுதாமணி பூமியைத்
தொட்ட பொழுதானது !
ஏழ்மையும் துன்பமும்
விட்ட பொழுதானது !

துன்பத்திலும் இன்பம்

குப்பையைக் கூட்டுவாள்
மனத்தின்
குப்பையைச் சேர்த்துக் கொட்டுவாள் !
வீடும், கொல்லையும்,
மாட்டுத் தொழுவமும்
துப்புரவாகத்
தன்னுடல் வேர்க்கத் துடைப்பாள்!
எப்போதும் வேலையை
அப்புறம் செய்யலாம் என்று
தள்ளிப் போடாமல்
பள்ளிப் பாடம்போல்
ஆனந்தமாகப் பாடிக்கொண்டே
அப்பொழுதே செய்து முடிப்பாள் !
ஆனாலும் தன் அம்மா
தமயந்தியின்
கடும் செல்லுக்குத் துடிப்பாள் !
மறுநொடியே தான்
படும் அவதி மறந்து
அம்மாவின் செயலை மதிப்பாள்!
அவளையே தன் தவறைத் திருத்தும்
குருவாகத் துதிப்பாள்
சிறுமி சுதாமணி தன்
தாய்மீது கொண்ட மதிப்பால் !

அச்சம் இல்லாத அகம்

மகளை பயமுறுத்த
அம்மா
அந்த ஊரில்
ஆபீசரம்மாவை அழைத்தாள்!
ஆபீசரம்மாவும் முகமூடி
போட்டுக் கொண்டு
சுதாமணியை முறைத்தாள் !
சதாபணி செய்யும்
சுதாவோ
அச்சம் துளியும் இன்றி
உச்சத்தில் ஓங்கிச் சிரித்தாள் !
ஆபீசரம்மதான்
அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் !
இப்படிதான்
அச்சமின்றி சுதாவும்
ஆண்டவன்
ஆடவன் கண்ணனின் நினைவையே
தீய ஆசைகளின்றி
உள்ளத்தில் படமாய்ப் பிடித்தாள் !
அவனின் படத்தைத்தன்
மார்பிலே இடமாக வைத்தாள் !
ஏழை மக்களின்
சார்பிலே மலராகத் தைத்தாள்
மாதவன் நெஞ்சிலே !
அதனால்
பறையகடவு தந்த
ஆதவன் ஆனாள் பிஞ்சிலே !

…….(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *