படக்கவிதைப் போட்டி (37)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
அமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
வண்டி
பாதியில நின்னு போச்சு…
பெட்ரோலுக்கு காசு இல்ல..
வயுறும் காயுது…
வேகாத வெயிலில்ல..
யாரை கேக்க
பாக்கற முகமெல்லாம் கடவுளாவே
தெரியுது..
மனச பய
ஒருத்தனையும் காணோம்…
சோறாக்க குழம்பு வைக்க எந்த கடவுளுக்கு
தெரியும்….
கொள்ளை அடிச்சா என்ன…
கொலை செஞ்சாதான் என்ன…
கோபமா வருது….
அழுகையா வருது….
புலம்பிக் கொண்டிருக்கும்
கடவுள் வேஷமிட்ட இருவரையும்
கடவுள்களே என்றெண்ணிய
திருட்டு முட்டாள் ஆசாமிகள்
இன்னும் சற்று நேரத்தில்
கடத்திக் கொண்டு
போவார்கள்…
இதையும் கடவுள் செயல்
என்பவர்கள்
வாயை மூடிக் கொண்டு
படிக்கவும்…..
கவிஜி
கோயிலைக் கொள்ளை அடித்து
காவலர் கண்களில் மண்தூவி
சாதுர்யமாய் தப்பித்துப் போக
கடவுள் வேஷம் பொருத்தமானதுதான்!
வேடங்கள்…
கடவுள் வேடம் போடுகின்றார்
கடவுளின் கருணை பெற்றிடவே,
கடவுளை மனிதனை ஏய்த்திடவே
காசினி மாந்தர் பல்லோரும்
நடக்கிறார் பற்பல வேடத்துடன்,
நல்லது நமக்குத் தெரிவதில்லை,
இடரதைக் களைவான் இறைவனென
இனிதாய் நம்பிடு போதுமதே…!
-செண்பக ஜெகதீசன்…
ஏன்யா எங்களைப் பாக்குறீங்க ?
என்ன பாக்குறே ?
எதையய்யா கேக்குறே ?
நாட்டில மனுசன்
நடக்கிற லட்சணத்துக்கு
நாம எதில
குறஞ்சு போனம் ?
கருநீலக் கண்ணன்
வெண்ணெய் திருடினான் !
இந்தப் பயலுக
கருநீலம் பூசிட்டு
என்னத்தை திருடிப்புட்டானுக
என்னுதானே யோசிக்கிறே !
கொட்டகை ஒண்ணில
கூத்துப் போட வான்னு
கூட்டிப் போனானுக
பெரிய மனுஷங்க
நல்லாத்தான் நாம
வேஷம் கட்டினோமுங்க
கூச்சல் போட்டுத்தான்
கூத்தை ரசிச்சானுக
பசியோட நாம
கையை நீட்டினோம்
வெளியே போங்கடா
என்னு அந்தப் பெரிய மனுசங்க
தம்ம கையை நீட்டினாங்க
முள்ளை எடுக்க
முள்ளு வேணும்னு
ஆச்சி ஊரிலே
அப்ப சொன்னது
இப்ப உறைச்சுது
காசு கொடுக்கல்லென்னா
என்னாங்க
காசாக்க அவங்க
பைக்கை தூக்கிட்டு
வந்திட்டொமுங்க
இப்ப சொல்லுங்க !
ஏன்யா எங்களைப்
பாக்குறீங்க ?
சக்தி சக்திதாசன்
பகல் வேஷம்
இருட்டானால்
திருட்டு
பகலானால்
பகல் வேஷம் என்று
நல்லாத்தானே போய்கிட்டிருக்கு
பொல்லாத வேலையா இன்று
போலீஸு பார்க்குது
நண்பா பின்னாடி பார்க்காதே
வம்பா போயிடும் கெத்தா நில்லு
சந்தேகம் வ்ராத அளவுக்கு
தீபாவளி நேரம்
தீவிர வேட்டைக்கு நிற்குது போலீஸு
நாரதனிடம் இரவல்
கேட்காதே என்றேன்
கேட்டியா இப்பப்பாரு
வண்டியிலே பெட்ரோல்
இல்லாம நிற்க வைத்து
அவன் புத்தியை காட்டிட்டான்
நேரம் தெரியாமல் ரயில் வேறு
லேட்டாயி கேட்டாலே
மாட்டப்போறோமோ?
சரஸ்வதி ராசேந்திரன்
படம் 37
வேசம் (வேடம்)
நீலவண்ணன் நவீன கோபி தெருவில்
கோலமோ இது நவீன ஆயர்பாடியில்!
பசி வெயில் பாரா வேடம்
சுசிகியில் சினிமா காட்சித் தடம்
தாமாகத் திறன் காட்டவும் திடம்
கோமாளியாய் மக்களை மகிழ்விக்கவும் இடம்
மாமாவாய் மக்களை நாசமாக்கவும் நடம்
ஏமாற்றிப் பிழைப்போரும் கபட வேடம்.
பாசம் பெறவும், காதல் நடவும்
தேசம் ஆளவும் தேசிய வேடம்.
காசும் கைநிறைக்கப் பூசுகிறார் அரிதாரம்.
வேசமே வாழ்வாகப் பிடிக்கிறார் வடம்.
சிரித்து ரசித்துச் சிந்தித்துப் பொழுதினை
எரிப்பவர் அன்னமாய் பாலைப் பிரிப்பார்
நாசமும் நயமும் கொள்ளும் விகிதம்
தோஷமோ விதியோ அவரவர் சமயோசிதம்.
வரிகள்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-11-2015.