க. பாலசுப்பிரமணியன்

கற்றல்சில பார்வைகள்

education

“கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு” ..-

இது அவ்வையின் அறிவுரை. “அவங்களுக்கென்ன சொல்லிட்டுப்  போயிட்டாங்க.. இது என்ன முடியற காரியமா?” அலுத்துக்கொள்ளும் பல நெஞ்சங்கள்.

“ உனக்கு படிக்க டியூஷன் செலவு பண்ணியே நான் போண்டியாயிட்டேன். நீ பேசாமே படிக்கிறதை விட்டுவிட்டு மாடு மேய்க்க போகலாம்” என அலுத்துகொள்ளும் தந்தை..

“அப்போ மாடு மேய்க்கிறதுக்கு மூளை வேண்டாமா?” என இடக்காகக்   கேட்கும் மகன்.

“என் பையன் உங்களை மாதிரித்தானே இருப்பான்.  சட்டியிலே இருப்பது தானே அகப்பையில் வரும் ” எனக்  கேலி செய்யும் தாய்..

“உனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட இந்த மரத்திலே போய் முட்டிக்கலாம்” என செய்யப்போகாத ஒரு செயலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு ஆசிரியர்.

இவர்களுக்கு நடுவே ஒரு விந்தைப் பொருளாக மாணவன். ,,

“நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். மண்டையிலே ஏற மாட்டேங்கறது சார் …  இதையெல்லாம் எவன்தான் கண்டுபிடித்தானோ, அவனுக்கு மட்டும் இந்த மூளை எப்படி வேலை பார்த்தது?.” சோர்வுடன் கேட்கும் மாணவர்கள்.

இந்த மூளை தான் என்ன?. இறைவன் கொடுத்த வரமா? அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? அதற்க்கும் சாதி மத பேத பாவங்கள் உண்டா? பணக்காரனின் மூளையும் ஏழையின் மூளையும் வித்தியாசப்பட்டதா? ஆண்களின் மூளையும் பெண்களின் மூளையும் ஒரே மாதிரித்தான் உள்ளதா? அவர்களின் சிந்தனையின் வடிவங்களில் மாற்றங்கள் இருக்கின்றதா?

நன்றாகப் படித்து விட்டு தேர்வில் உட்காரும் மாணவனுக்கு அங்கு சென்ற உடனேயே எல்லாம் ஏன் மறந்து போகின்றது? நம்முடைய கற்றல் என்ற செயல் எப்போது ஆரம்பிக்கின்றது?

கேள்விகள் ஆயிரம்…!!

இவைகளுக்கெல்லாம் பதில் எங்கே இருக்கின்றது? இவைகளைப் பற்றி என்ன ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன? இந்தத் தொடரின் நோக்கம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி அறிந்து கொள்வதுதான்?

கற்றல் ஒரு ஆற்றல்….. இது எப்போது தொடங்குதின்றது?

ஒரு முறை ஒரு தாய் ஓர் ஜென் துறவியைக் காணச் செல்கின்றார். ” குருவே.. என் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் எப்போது தொடங்கலாம்? ” என்று வினவுகின்றார்.

அந்த குரு அவளிடம் கேட்கிறார் ” உன் குழந்தைக்கு என்ன வயதாகின்றது?” என்று.

:” குருவே. என் குழந்தை பிறந்து ஐந்து மாதங்களே ஆகின்றன.”

“அப்படியா? ஏற்கனவே நீ பதினான்கு மாதங்கள் கால தாமதம் செய்து விட்டாயே.”  என  பதிலளிக்கிறார்.

அப்படியென்றால் ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறதா? இதைப் பற்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன?

நம்முடைய புராணங்களில் அபிமன்யுவைப் பற்றியும் பிரகலாதனைப் பற்றியும் சொல்லப்பட்டது கட்டுக் கதையா? அதில் சிறிதளவேனும் உண்மை இருக்குமா,  என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் தன் இளம் பிராயத்திலே சொன்னாராம் ” நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் . ஆனால் கற்பிக்கப் படுவதை வெறுக்கிறேன்” என்று.

நம்முடைய மாணவர்களில் எத்தனை பேர் சர்ச்சில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள்? அவர்களால் சர்ச்சில் போல வாழ்க்கையில் முன்னேற முடியுமா?  அவர்கள் எப்படி கற்றிக்கொள்கின்றனர்?

கல்வி என்பது ஒரு மாணவனை ஏதாவது ஒரு தெருவினில் வெற்றிபெறச் செய்வதா? அறிவு என்பது வெறும் புத்தக அறிவா? ஒரு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்க்கு நிகரான அறிவு நிச்சயம் இருக்கின்றதா? பள்ளிக்குச்செல்லாத நம் முன்னோர்கள் எவ்வாறு  அறிவிலும் திறனிலும் மேம்பட்டு இருந்தனர்?

இப்படி பல கேள்விகள் நம் மனிதினில் அடிக்கடி தோன்றுகின்றன. இவற்றிக்கு அறிவு பூர்வமாகவும் அறிவியல் மூலமாகவும் என்ன பதில்கள் கிடைக்கின்றன ?

தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *