குறளின் கதிர்களாய்…(96)
–செண்பக ஜெகதீசன்
ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து. (திருக்குறள்-126: அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
ஆபத்துக் காலத்தில்,
தலையொடு கால்நான்கு
ஐந்துறுப்பையும்
அடக்கி வாழும் ஆமைபோல்
மனிதனும்,
ஐம்பொறிகளையும் அடக்கியாளும் தன்மை
ஒரு பிறப்பில் பெற்றாலது,
ஏழு பிறப்பிலும் ஏற்றம் தருமே!
குறும்பாவில்…
ஆபத்தில் ஐந்துறுப்பையும் அடக்கிடும்
ஆமையாய் மனிதனும் ஐம்பொறியடக்கில்,
ஒருபிறப்பொடு எழுபிறப்பும் ஏற்றமே!
மரபுக் கவிதையில்…
நீரில் நிலத்தில் வாழுமாமை
-நெருங்கிடும் இடரது வருமுன்னே
நேரில் மோதி அழியாமல்
-நன்றாய் அடக்கிடும் ஐந்துறுப்பை,
பாரில் மாந்தரும் ஒருபிறப்பில்
–பிணங்கும் ஐம்பொறி அடக்கினாலே,
சேரும் துணையதாய் எழுபிறப்பும்
–செல்வம் இதுபோல் வேறிலையே!
லிமரைக்கூ…
ஆபத்தில் ஆமையடக்கிடும் அதனைந்து உறுப்பை,
எழுபிறப்பும் வந்துதவும் மனிதருக்கு
ஏற்றாலவர் ஒருபிறப்பில் ஐம்பொறியடக்கும் பொறுப்பை!
கிராமிய பாணியில்…
அடக்கிப்புடு அடக்கிப்புடு
ஆமபோல அடக்கிப்புடு,
ஆபத்துக் காலத்தில
தலகால உள்ள அடக்கிப்புடும்
ஆமபோல அடக்கிப்புடு…
அதுபோல,
அடக்கிப்புடு அடக்கிப்புடு
ஐம்பொறிய அடக்கிப்புடு,
ஒருபொறப்புல அடக்கிப்புட்டா
ஒனக்கது தொணவருமே
ஏழுபொறப்பும் தொணவருமே…
அதால,
அடக்கிப்புடு அடக்கிப்புடு
ஆமபோல அடக்கிப்புடு
ஐம்பொறிய அடக்கிப்புடு!