விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

1

`இன்னம்பூரான்
15 12 15

innam-edited

ஆராய்ச்சிமணி அடித்தக் கறவைப்பசுவுக்கும், வண்ணாத்தியிடம் ஜஹாங்கீர் துப்பாக்கி நீட்டியதும் வகுக்கப்பட்ட விதியல்ல; நீதிபோதனை.

மின்னிதழ்களிலும், மின்குழுமங்களிலும் தற்காப்புக் கருதி நான் நீண்டகாலம் எழுதுவதில்லை.‘நாவினால் சுட்டவடு..’ என்று தெரியாமலா சொன்னார், வள்ளுவர் பெருந்தகை? மதிக்கப்படாவிடினும், மிதிபட வேண்டாம் அல்லவா! இது நிற்க.

சிந்தனையும் சொல்லும் இணைந்து செயல்படுபவை. ஆங்கிலத்தில் algorithm என்ற சொல் கொடி கட்டிப்பறக்கிறது; சாதனை படைக்கிறது; அதற்கு’ வழிமுறை’ என்று தமிழ்ப் பொருள் கூறப்படுகிறது. என்னுடைய கணிப்பில் அது மேலான,புடம் போட்ட வழிமுறை. நான் மதிக்கும் algorithm: ‘விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன்.’ என்பதே. இன்று ‘மருத்துவத்தின் மூன்று வி (நீ)திகள்’ என்ற தலைப்பில் சித்தார்த் முக்கர்ஜீ என்ற மருத்துவர் எழுதிய கட்டுரை ஒன்றை படித்ததின் விளைவாக எழுகிறது, இந்தத் தொடர். நான் விதித்துக்கொண்ட விதியை மீறி, நீதி பேசுகிறது. குறைப்பிரசவம் ஆனாலும் ஆகலாம். அப்போது விட்டு விட வேண்டியது தான். விதி யாரை விட்டது? இதுவும் நிற்க.

சென்னை வெள்ளத்தில் நகரே சிதிலம் அடைந்தது. தமிழ்நாடு முழுதும் சேதம் அடைந்தது. மனம் பதைத்து, பல தடங்கல்களை கடந்து, மூட்டைகளை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு டிசம்பர் 7 அன்று எடுத்து சென்றால், அத்தியாவசிய பொருள்கள் மிகுதியாக வந்தன; மிகுதியாகப் போயின. செல்வந்தர்கள் பால் பாக்கெட்டுக்குக் கையேந்தினர். ஏழை பாழை தாராளமாக் வழங்கினர். பேதமில்லாத உலகம். எண்பதைத் தாண்டிய முதியோர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து செயலாற்றினர்; நம் வீட்டு சிறுவர்/சிறுமிகளோ, உலகின் பலபகுதிகளிலிருந்து whatsapp மாயா மச்சீந்திரா உபாயங்கள் மூலம் உடனக்கடி அபயம் அளித்து வந்தனர். Blue Cross நிறுவனத்தின் Dawn அவர்கள் அசகாய வேலை செய்து உயிர் மீட்டனர். மற்றும் பல மனிதநேய நிகழ்வுகள், உருக்கமான செய்திகள், எண்மெய்ப்பாடுகளும், வளைய வந்த மனித அபிமானங்களும், சுவபாவங்களும், பல பாடங்களைக் கற்பித்தன. மேற்படி செயல்பாடுகளில் ஒன்று கூட விதிக்கு உட்பட்டவை அன்று. அன்றாட இயல்பு வாழ்க்கையில் இவை இடம் பெற்றிருக்கப்போவதில்லை. அவை நீதிதேவதையின் வழிமுறை.

மேல்தளத்து (அதாவது பாதுகாப்பாக இருந்த) மக்கள் ரூல் பேசினார்கள். அரசை கண்டித்தார்கள். ஆக்கிரமிப்புகளை பற்றியும், நீராதாரம் பற்றியும், ‘அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்’ என்று முடியா வழக்குகளை சகதியிலும், ஊடகங்களிலும், மின்/மின்னா குழுக்களிலும் பேசி வந்தனர். பிராவகத்து போராளிகளுக்கு இதெல்லாம் இரண்டாம் பக்ஷம். அவர்கள் விதியை மறந்தனர். நீதியை நாடினர்.

வாழ்வியலில் நாம் சிரத்தையுடன் (பஹுகார்யமாக), அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு, பக்குவமான தீர்வுகளை நாடுகிறோம். வாகை சூட முடியவில்லை; பகை தான் புகைக்கிறது. சில உதாரணங்களுடன், இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.

Lord Keynes said, ‘In the long run, we are all dead’. ஆம். நிரந்தரவாழ்க்கை யாருக்கும் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். நமது ஊர்களில் 99.99 % வீடுகளில் வாசற்படி தெருவை ஆக்கிரமித்து இருக்கும். நடைபாதைகள், சின்னச்சின்ன குருவிகளுடன் செத்துப்போயின. அரசு கட்டிடம் வாசலில் நடை பாதைக்கு முள்வேலி பாருங்கள்! இது குடிமகனின் செயலா! அரசின் கொடுமையா? ‘இன்று வீட்டுமனை விலை ஆகாயத்தைத் தொடுகிறது. ஏரிக்கரையில் ஒரு குட்டிப்பகுதியை கைப்பற்றி, குடிசை போட்டு, காரை வீடு; மாடி வீடு; பல தளங்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று, கேட்ட லஞ்சத்தைக்கொடுப்பது விதிக்கும் முரண்; நீதிக்கும் முரணாக விதியை உலுக்கிவிட்டேன்.’ என்பவர்களின் முதலையீடுகளை, ஏன் உயர் அதிகாரி செல்வி அமுதா இடிக்கமாட்டார்? நீரை வெளியேற்ற வேண்டி,அவசர கட்டத்தில் சில சில உப விதிகள் அடிபட்டுப்போயிருக்கலாம். ஆனால் நீதி நிலைத்து நின்றதே.

லஞ்ச லாவண்யத்தின் தீமைகளை பற்றி எமது சிறிய சிந்தனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. வாய்ச்சொல் வீரர்களை பற்றியும் பேச்சு எழுந்தது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநீதி; விதிக்கு முரண். இந்தியாவின் முதல் லஞ்சஒழிப்புச் சட்டத்தில் லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை உண்டு. ஆனால், வழிமுறை அவ்வாறு இல்லையே. இந்தியா முழுதும் நாம் நாட்தோறும் கண்ணாரக்காண்பது கோடிக்கணக்கான லஞ்சம், ஊழல், சால்ஜாப்பு, அரசியல் வாதிகளில் பலரின் தீவினைகள். இந்தப்பின்னணியில் ஏரி ஏன் உடையாது? நதி ஏன் பெருக்கெடுக்காது? கடல் ஏன் கொந்தளிக்காது? வீடு ஏன் முழுகாது? உயிர் ஏன் பிரியாது? ஒவ்வொரு கட்டுமானத்திலும் – ஏரிக்கரை, தூர் வாருதல், ரோடு, கட்டிடங்கள், பாலங்கள், அன்றாட பராமரிப்பு – இவைகளில் உள்ள குறைகள், ‘ஈயத்தைப் பார்த்து இளைத்ததாம் பித்தளை’ என்ற வகையில் இன்று சந்தி சிரிக்கின்றன. இவைகளெல்லாம் விதிகளின் கீழ்படிதலாக, நீதியை கற்பழித்துக் கட்டப்பட்டனவையே. சாணக்ய நீதிப்படி உரியகாலத்தில் விதி மீது சதி செய்தவர்களை கடுமையாக தண்டிக்காதவர்களையும் தண்டிக்க வேண்டும்.

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை உரத்த குரல் எழுப்பி கண்டிப்பவர்களும், அரசு உயர் அதிகாரியின் விளக்கங்களும் விதியை பற்றி விளாசலாம். நீதி எங்கே போயிற்று? முதற்கண்ணாக, தமிழ்நாடு சென்னையை விட பெரியது. தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது என்ன? கடலூர் மூழ்க, செம்பரம்பாக்கம் என் செய்தது?

இரண்டாவதாக, நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். விசாலமான நோக்கு வேண்டும். இரக்க சுபாவம் வேண்டும். மருத்துவத்தில் முதலுதவி கொடுப்பது வரிசை விதியை விலக்கும் நீதி. அது போல ஏழைபாழைகளுக்கு முதலில் வாழ்வாதாரம் கொடுத்து எல்லாருக்கும் உடனடி உதவி கொடுக்க வேண்டும். நம்மால் ஏன் ராணுவம் போல் இயங்கவில்லை என்பதை பரிசீலனை செய்யவேண்டும். வெட்கக்கேடு! பரிதவிக்கும் மக்களை விட்டு, மேட்டுக்குடி வீஐபிகளை காப்பாற்ற சொன்னார்கள், அதிகார மையங்கள் என்று ராணுவம் கூறும் போது, நாக்கிப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது.

எந்த எந்த அளவில் எந்த எந்த அன்றாட அரசு ஆணைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது ஒரு பூடகமான விஷயம். இலைமறைவு; காய் மறைவு. விதியை மீறும் நீதி அழிப்பு. காங்கிரஸ் ஆட்சியிலேயே சென்னையில் வீடுகளை வாடகைக்கு விடும் தீர்மானங்களை அமைச்சர்கள் கையில். பிற்காலம் அது புழக்கடைக்கு வந்தது. எல்லாத்துறைகளிலும் அன்றாட தலையீடுகள் தான் பேயாட்டம் ஆடின. காவலராயினும், ஆசிரியராயினும், குமாஸ்தாவாயினும், பொறியாளராயினும், அந்தந்தத்துறைத்தலைவர்கள் கையாலாகதவர்களாயினர். உயர் அதிகாரிகள் கொள்கை வகுப்பதும், அதற்கு நேரமும், அடிப்படை ஞானமும் இல்லாத நிழல் மனிதர்களும், அவர்களின் கூடாநட்பு கொண்ட அமைச்சர்களும், அன்றாட வரத்துப்போக்குக்களில் விதி மீறி, நீதி தவிர்த்து நடமாடும் காலம் பழுத்தது. அணைகள் பாதுகாப்பையும், அரவணைப்பையும் காலங்காலமாக அந்தந்தத்தலத்தில் பொறுப்பும், பதவியும் வகிக்கும் உதவி பொறியாளர் தான் செய்கிறார் என்பதை தலைமை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.

இனி ஒரு விதியும் அதை வழிமுறை நடாத்தும் நீதியையும் கொணருவோம். மாநிலம் முழுதும் எல்லா பிராந்தியங்களும், நீர்நிலைகளும் பற்றிய முழு உண்மை நிலை, எந்த விதமான கலப்பில்லாமல், அசல் புள்ளி விவரங்களுடன், மெத்த விசாரணையின் அறிக்கையுடன் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். அதற்கு முன்னால், பல விதங்களில் தண்டோரோ போட்டு மக்களின், அதிகாரிகளின், ஆர்வலர்களின் சாக்ஷியம் பெறப்படவேண்டும். அது நேர்காணலில் நடக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணத்தின் வரலாறு வேண்டும். Logging என்ற உடனடி தகவல் பதிவு செய்யப்பட்டதா என்ற விஷயத்துக்கு சத்தியபிரமாணமும் வேண்டும். மற்றபடி சான்றும் வேண்டும்.
என்ன நிவாரணம் கிடைக்கிறதோ அதை விட, விதி வகுக்கும் திறனும், நீதி வழங்கும் மூதறிஞர்களும் கிடைப்பது தான் தேசத்தின் விதியை நிர்னயிக்கும்.

நீதியில்லையேல் பீதி: நீதியில்லையேல் வீதி; நீதியில்லையேல் மீதியில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://arthamullainiyamanam.files.wordpress.com/2013/05/074sattam.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

  1. ஒரே கட்டுரையில் சிக்கல்களை அலசி, தீர்வுகளை முன்வைத்துள்ளார். இவற்றை நடைமுறைப்படுத்த, திடமான தலைமையுடன் மின்னாளுகை நுட்பங்களைச் சிறப்புறப் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *