“அவன், அது, ஆத்மா” (41)
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 41
“நாரணதுரைகண்ணன்”
அவனுக்கு மாமாவின் குடும்பத்தினர் 1974ம் வருடம் சூளைமேடு, கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டிற்கு மாறி வந்த பொழுது அவனும் வந்தான். அந்த வீட்டிற்கு அருகிலேயே “ஸ்ரீரமணர் பஜனை மண்டலி” என்ற அமைப்பு இருந்தது. அவர்கள் அங்கே பக்தி, இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தனர்.
ஒருமுறை பாரதி இளைஞர் சங்கத்தின் செயலாளர் பாரதி அடிப்பொடி வி.எஸ்.மணி அவர்களின் தலைமையில் கம்பராமாயணப் பட்டிமண்டபம் நடைபெற்றது. கூட்டம் அந்த மண்டலியின் பெரிய அறைமுழுவதும் நிறைத்திருந்தது. இரு அணித்தலைவர்களின் தொகுப்புரை முடிந்தவுடன் நடுவர் வி.எஸ்.மணி அவர்கள், “அலைகடலெனத் திரண்டிருக்கும் தமிழார்வலர்களே முதலின் உங்களுக்கு வணக்கம்” என்று தனது உரையைத் துவங்கியதும், கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, ” அமாம்…இந்த மக்கள் கூட்டத்தால் வெளியே போக்குவரத்தே தடைபட்டு நிற்கிறது” என்று நடுவரைப் பார்த்துச் சொன்னார். ” ஓ…அப்படியா” என்று அப்பாவியாக நடுவர் கேட்க, எதிர்த்துக் கேட்டவர் கோபமாக ஏதோ சொல்ல, அந்தப் பட்டிமண்டபம் தீர்ப்பை அறிவிக்காமலேயே முடிந்தது.
எதிர்த்துக் கேட்டவர் அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர். அவருக்கு அந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் என்ற ஆர்வம். கூட்டம் துவங்கிய பொழுது தனது எண்ணத்தை நடுவரிடம் கூற, நடுவர் அடுத்த முறை உங்களுக்கு சந்தர்ப்பம் தருகிறேன், இன்று ஏற்கனவே பேச்சாளர்களை இறுதி செய்து விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார். கோபமாகச் சென்று அமர்ந்து விட்ட அந்த நபர்தான் நடுவர் தீர்ப்பின் பொழுது கூச்சலிட்டு நிறுத்தி விட்டார். அப்பொழுது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த திரு. நாரணதுரைக்கண்ணன் அவர்கள்தான் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.
அதன் பின்பு பாரதி அடிப்பொடி வி.எஸ்.மணி அவர்களும், சில நண்பர்களும் நாரணதுரைக்கண்ணனின் இல்லத்திற்குச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவனும் அங்கிருந்தான். நாரணதுரைக்கண்ணன் கங்கையம்மன் கோவில் தெருவில் குடியிருந்தார். அவரது வீட்டிற்கு மிக அருகிலேயேதான் கிருஷ்ணாபுரம் தெருவில் அவனுக்கு மாமாவின் வீடும் இருந்தது. அன்று இரவில் எல்லோரும் விடைபெற்றுச் செல்லும் பொழுது நாரணதுரைக்கண்ணன் அவனிடம்,” தம்பி … நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? ” என்று கேட்டார். அவன் “இங்கே பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணாபுரத்தில் இருக்கிறேன்” என்றான். “அப்படியா..உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு வாருங்கள்…உங்கள் கவிதைகளையும் கொண்டு வாருங்கள்” என்றார்.
இரண்டு தினங்கள் சென்று ஒரு மாலை நேரத்தில் தான் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவன் நாரணதுரைக்கண்ணன் வீட்டிற்குச் சென்றான். அவர் அவனை அவருடைய அறையில் அமரச் சொல்லி விட்டு, சிறிது நேரத்தில் வந்தார். அவன் மிகுந்த மரியாதையுடன் தான் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகத்தை அவரிடம் நீட்டினான். அதை அவர் வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு கவிதையாகப் படித்து, திருத்தங்கள் செய்து விட்டு ,” உங்கள் பெயர் கண்ணனா?” என்றார். “மீ.விஸ்வநாதன் என்னுடைய பெயர். வீட்டில் என்னைக் கண்ணன் என்று கூப்பிடுவார்கள். அதனால் கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறேன்” என்றான். “நீங்கள் மீ.விசுவநாதன் என்ற பெயரிலேயே எழுதலாமே. “பாரதி கலைக்கழகம்” என்ற அமைப்பைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? என்றார். “இல்லை..பாரதி இளைஞர் சங்கம்” பற்றிதான் தெரிந்து கொண்டேன். அதனால் அவர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று வருகிறேன்” என்றான். உடனே,” பாரதி கலைக்கழகம்” சைதாப்பேட்டையில் இருக்கிறது. அவர்கள் மாதாமாதம் கவியரங்கம் நடத்துகிறார்கள். உங்கள் கவிதைகளை நீங்கள் அங்கே படிக்கலாம். அடுத்தமுறை நான் அங்கு செல்லும் பொழுது சொல்லுகிறேன், என்னுடன் வாருங்கள் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் மறக்காமல் ஒரு ஞாயிறு அன்று காலையில் அவனையும் அழைத்துச் சென்றார்.
அன்று அவன் கவிதை வாசிக்கவில்லை. மற்றவர்களின் கவிதைகளையும், அவர்கள் சொல்லும் முறையையும் நன்கு கவனித்துக் கொண்டிருந்தான். அன்று அந்தக் கவியரங்கத் தலைவர் கவிஞர்களை அவர்களின் திறமையைச் சொல்லி அழைப்பதும், வாசித்த கவிஞரின் கவிதையைப் பற்றி கவிதையிலேயே பாராட்டுவதும் அவனுக்கு மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. அன்றைய கவியரங்கத் தலைவர் கவிமாமணி நா.சீ.வரதராஜன் என்ற “நா.சீ.வ.” அரங்கம் முடிந்ததும் அவன் நா.சீ.வ. அவர்களை வணங்கினான். அவரிடம் நாரணதுரைக்கண்ணன் அவனை அறிமுகம் செய்து வைத்தார். நா.சீ.வ. அவனை நோக்கி,”.ஒனக்கு எந்த ஊர்?” என்றார். “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி” என்றான். “அட..நம்ம நெல்லைச் சீமையா….பலே..பலே…” என்று அவனைத் தட்டிக் கொடுத்தார். “உன் விலாசத்தை இங்க கொடுத்திவிட்டுப் போ…அழைப்பு வரும்..மாதாமாதம் கவியரங்கில் கலந்து கொள்ளலாம்” என்றார்.
அவன் மாதாமாதம் எண். 50, மசூதித் தெரு, சைதாப்பேட்டையில் நடக்கும் கவியரங்கங்களுக்குச் செல்லத் துவங்கினான். அது “பாரதி கலைக்கழகம்” அல்ல “பாரதி பல்கலைக்கழகம்” என்றுதான் அழைக்க வேண்டும். அத்தனை அறிஞர்கள், கவிஞர்கள் பெருமக்களைக் கொண்ட அருமையான அமைப்பு. அதன் தலைவர் திரு. இரா. சுராஜ். பாரதியாரின் மீதுள்ள பக்தியினால் “பாரதி. இரா. சுராஜ்” என்று அழைக்கப் படுகிறார். ஒவ்வொரு கவியரங்கத்திற்கும் அவர் கைப்பட எழுதிய தபால் அட்டை அழிப்பிதழ் வரும். அவர் கடிதம் மூலம் அழைக்கும் அழகே கவித்துவமாக இருக்கும். நேர்மையான மனிதர். அவரது தொடர்பும் அவனுக்கொரு பொக்கிஷமானது. அவர்களைப் பற்றியெல்லாம் அவன் வரும் பகுதிகளில் பதிவு செய்வான்.
அவனுக்கு “பாரதி கலைக்கழகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த நாரணதுரைகண்ணன் சிறந்த அறிஞர், எழுத்தாளர், “பிரசண்ட விகடன்” இதழுக்கு முப்பத்திரண்டு வருடங்கள் ஆசிரியராக இருந்தவர். மகாகவி பாரதியாரின் படைப்புகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற குழுவின் தலைவராக இருந்தவர். காந்தியவாதி. இறை நம்பிக்கை உள்ளவர். மிகவும் எளிமையானவர். நிறைய இலக்கியக் கூட்டங்களுக்கு அவருடன் சென்றிருக்கிறான். அவனுக்குத் திருமண வரவேற்பு சென்னையில் இராயப்பேட்டை”சுவாகத் ஹோட்டலில்” நடைபெற்றது. அன்று நடந்த “திருமணவாழ்த்துக் கவியரங்கத்திற்கு” நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகை.
அவரை இப்பொழுதும் நன்றியோடு அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
24.12.2015
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..
அடுத்த வாரத்தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
வாசகன்
முரளி
யார் “அந்த” மீ(னாட்சிசுந்தரம்).விஸ்வநாதன்???