வள நிலவள திட்டம் (IAMWARM) பற்றி சட்டசபையில் கேள்வி – செய்திகள்
வள நிலவள திட்டம் (IAMWARM) : விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. பாண்டியராஜன் எழுப்பிய கேள்வி.
இந்தக் கேள்வி நீர்வள நிலவள திட்டம் (IAMWARM) பற்றியது. உலக வங்கியின் உதவியோடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மதிப்பு தோராயமாக 2547 கோடி. 2004 -ல் அ. தி. மு. க., ஆட்சியால் தொடங்கப்பட்ட சமமான வளர்ச்சிக்கான முனைப்பின் மூலம் இந்தத் திட்டம் தீட்டப்பட்டது. தமிழகம் எங்கிலும் உள்ள 63 ஆற்றுப் படுகைப் பகுதிகளில் அமைந்துள்ள லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பாசன நிலஙகளுக்குப் புத்துயிரூட்டும் திட்டம் இது. தமிழகத்திலுள்ள ஆற்றுப் படுகைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இத்திட்டத்தின் கீழ் வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான பணி நடைபெற்றுவந்தாலும் பணி மிகவும் மெதுவாகவே முன்னேறுகிறது. இந்தத் திட்டத்தில் தொடர்பு கொண்டுள்ள எட்டு அரசுத் துறைகள், ஐந்து அம்சங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சவாலைக் கடந்த அரசு சரிவரக் கையாளவில்லை. திட்டமிட்ட அறுபத்து மூன்று படுகைகளில் மூன்று படுகைகளில் கூட இன்னமும் வேலை முடியவில்லை என்பதே உண்மை.
வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கி, ஐம்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பஙளை வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்த்தக் கூடிய இந்தத் திட்டத்தைச் சிறந்த முறையில் செயல்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம் காட்டுமா?
கௌசிகா மகானதி ஆற்றின் படுகைப் பகுதியையும் (விருதுநகர் தொகுதியில் வடமலை குறிச்சியிலிருந்து குள்ளூர் சந்தை வரை விரிந்திருக்கும் எட்டு கிலோ மீட்டர் தூரம் கொண்ட படுகை) இந்தத் திட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் சேர்த்து கொள்வாரா என்றும் அறிய விரும்புகிறேன்.