லெனின் விருது வழங்கும் விழா – செய்திகள்
தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் “லெனின் விருதை” வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட மற்றும் ஆவணப்படத் துறையில், இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன், ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர்.
இந்த லெனின் விருது வழங்கும் விழா 15 ஆகஸ்ட் 2011 தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள்: இயக்குனர் பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, கவிஞர் தேவதேவன், மருத்துவர் புகழேந்தி.
நிகழ்ச்சியில் செல்வி ஹம்சவேனியின் வீணைக் கச்சேரி நடைபெறும். இவர் வீணை வாசிக்கும்போது இடையில் ராகங்கள் பற்றியும், திருக்குறளின் அதிகாரங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டால் மிக துல்லியமாக பதிலளிப்பார்.
வாய்ப்புள்ள அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்!