செய்திகள்

வந்தவாசி நூலகத்திற்கு கட்டிடம் கட்ட பத்து செண்ட் இடம் ஒதுக்கப்படும் – நகர் மன்றத் தலைவர் – செய்திகள்

வந்தவாசி. ஆகஸ்ட் 11, 2011.  அரசு பொது நூலகத் துறையின் வந்தவாசி கிளையின் நூலக வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நூலகர் தினவிழா மற்றும் நூலகத் தந்தை டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதனின் 110 -வது பிறந்தநாள் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வந்தவாசி நகர்மன்றத் தலைவர் அன்னை க. சீனிவாசன், வந்தவாசி கிளை நூலகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சியில் பத்து செண்ட் இடம் ஒதுக்கீடு செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு. முருகேஷ் தலைமையேற்றார்.  கிளை நூலகர் கு. இரா. பழனி அனைவரையும் வரவேற்றார்.  வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் அ. மு. உசேன் வாழ்த்துரை வழங்கினார்.

நூலகத் தந்தை டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதனின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, ’என்னைக் கவர்ந்த புத்தகங்கள்’ எனும் தலைப்பில் வந்தவாசி நகர்மன்றத் தலைவர் அன்னை க. சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.  அவர் பேசும் போது, எங்கு சென்றாலும் புத்தகங்களை வாங்கும் நல்ல பழக்கம் என்னிடமுண்டு.  தற்போது பல்வேறு பணிச்சூழலில் வாசிக்க போதிய நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்கத் தொடங்கிவிடுவேன்.

புத்தகங்களில் நாம் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை, அனுபவங்களைப் படித்தறிய முடிகிறது.  உலகை மாற்றியதில் புத்தகங்களுக்கும் பெரும் பங்குண்டு.

எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் சிறுகதைகள், இயற்கை விவசாயம் பற்றிய நூல்கள், பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி ஜீவானந்தம் போன்றோரின் நூல்கள் என்னை வாசிப்பில் கவர்ந்தவை.

புத்தகம் படிப்பது நிச்சயம் நம் வாழ்வின் வளர்ச்சிக்குப் பயன்படும்.  கடந்த ஐம்பத்தி ஆறு ஆண்டுகளாக வந்தவாசி கிளை நூலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சொந்தக் கட்டிடம் கட்ட நகராட்சியின் சார்பாக பத்து செண்ட் இடம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நிகழ்வில் ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலர்களாக நகர்மன்ற உறுப்பினர் ம. மோகன், டாக்டர். சந்திரமோகன், தலைமையாசிரியர் பொன். எழில்சந்திரன், ஆர். பொன்னம்பலம், ஆர். கோவிந்தராஜன், நகர்மன்றத் தலைவர் அன்னை க. சீனிவாசன் ஆகியோர் இணைந்தனர்.

விழாவில், துணைச் செயலாளர் பூ. சண்முகம், பொருளாளர் ம. அப்துல் மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிறைவாக, துணைச் செயலாளர் ஜா. தமீம் நன்றி கூறினார்.

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க