நட்பு! சந்திப்பு! நல்வாய்ப்பு!
அண்ணாகண்ணன்
2011 ஆகஸ்டு 13 அன்று முற்பகலில் வீட்டிலிருந்து ஒரு நிகழ்ச்சி நிரலுடன் புறப்பட்டேன். ஆனால், திட்டமிட்டபடி முதலிரண்டு பணிகள் நிறைவேறவில்லை. எனினும் நான் எதிர்பாராத சந்திப்புகள் பலவும் இன்று நிகழ்ந்தன.
சென்னை அண்ணா நகரில் வசிக்கும் இராஜேஸ்வரியின் இல்லத்திற்கு மதியம் சென்றேன். அவரின் மகனுக்கு அண்மையில் திருமணம் ஆகியிருந்தது. அதற்கு அப்போது செல்ல இயலாததால், இப்போது மணமக்களை நேரில் வாழ்த்தினேன். இராஜேஸ்வரி, கவிதைகள் இயற்றி வருகிறார். இசையுடன் பாட வல்லவர். பக்தியில் தோய்ந்தவர். தம் இல்லத்தையே கலைக் கூடமாகப் பராமரித்து வருகிறார். ஏ.சி.காமராஜ் அவர்களின் தேசிய நீர்வழிப் பாதைத் திட்டத்தில் இணைந்து செயலாற்றி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் குடிநீர்த் தட்டுப்பாடு மறையும்; புதிய நீர்வழிப் பாதைகள் கிட்டும் என்பது இவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இந்தத் திட்டத்தின் முழுமையான விவரங்களை இங்கே காணலாம்: http://www.nationalwaterways.com
அங்கிருந்து விடைபெற்று, அதே அண்ணா நகரில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகருமான தமிழ்த்தேனீயின் வீட்டிற்குச் சென்றேன். அண்மையில் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த தமிழ்த்தேனீ, வல்லமை மி்ன்னிதழின் துடிப்பான பங்களிப்பாளர். சியாட்டில் நகரில் தாம் எடுத்த நிழற்படங்களையும் ஒளிப் படங்களையும் எனக்குத் திரையிட்டுக் காண்பித்தார். அவர் மகன் வெங்கட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள், ஆண்டுதோறும் மேடை நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த நாடகத்தில் தமிழ்த்தேனீயும் நடித்துள்ளார். அந்த நாடகம் நேர்த்தியாக நடந்த விதம், DUKW (duck tour) என்ற நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனத்தில் சென்ற அனுபவம், சியாட்டில் வீட்டில் தாங்கள் அமைத்த தோட்டம்… எனப் பலவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து, தியாகராய நகரில் அறிஞர் பத்மஸ்ரீ ஔவை நடராசனார் அலுவலகத்திற்குச் சென்றேன். சென்னைக் கம்பன் கழகம், 2011 ஆகஸ்டு 12 அன்று, ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதினை ஔவைக்கு வழங்கி மகிழ்ந்தது. அதற்கென அவரை வாழ்த்தியதோடு, பொதுவாக உரையாடினோம்.
நண்பர் இல.சுந்தரம் அங்கிருந்தார். இவர், M.A., M.Sc.(I.T)., MCA., MBA., M.Phil., PGDCA. பட்டங்களைப் பெற்றவர்; மேலும் முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டுள்ளார். எஸ்.ஆர்.எம். பல்கலையின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியுள்ளார்.
முனைவர் சுந்தர பாண்டியன் என்பாரை அங்கே சந்தித்தேன். தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்ற தலைப்பில் ஆய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். இவரும் எஸ்.ஆர்.எம். பல்கலையின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு, மைசூரின் மத்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியவர். இலக்கண ஆய்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அச்சமயம், அங்கு நண்பரும் கவிஞருமான ஹரிகிருஷ்ணன், பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்தார். பேரா.நாகநந்திக்கு இணையத்தில் மணி மண்டபம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்கென நாகநந்தியைப் பற்றிய ஔவையின் உரையை, ஒளிப்பதிந்தார். மேலும் தமது நூல்களை ஔவையின் வாசிப்புக்கு அளித்தார். ஓடிப் போனானா? என்ற நூலும் அவற்றுள் ஒன்று. பாரதி, ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அஞ்சி, புதுச்சேரிக்கு ஓடிப் போனானா? என்ற கேள்விக்கு அந்நூலில் விளக்கமான, சான்றுகளுடன் கூடிய பதிலை அளித்துள்ளார். அதைப் பற்றிய உரையாடல், மிகச் சுவையாக இருந்தது.
பின்னர், அனைவரும் அங்கிருந்து புறப்பட்டோம். ஔவை, மயிலாப்பூரில் நிகழும் கம்பன் கழகக் கூட்டத்திற்குப் புறப்பட்டார். என்னையும் அழைத்தார். நானும் அங்கே செல்லும் திட்டத்துடன் இருந்தேன். பழம் நழுவிப் பாலில் விழுந்தது என, அவர் முன்செல்ல, நான் என் வாகனத்தில் பின்சென்றேன். இராஜாஜி என்ற நண்பருடன் ஔவை வந்து சேர்ந்தார். சற்றே பசியாற எண்ணி, சரவண பவன் உணவகத்தினுள் புகுந்தோம். சிற்றுண்டியும் காப்பியும் உட்கொண்டோம்.
கம்பன் கழகத்தின் இன்றைய கூட்டத்தில் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகத்தின் வளைந்த வில்லும் வளையாத சொல்லும் என்ற தலைப்பிலான வில்லுப் பாட்டுக் கச்சேரி நிகழ்ந்தது. வழக்கம் போல், சிறப்புற இருந்தது. அவர் பெயரன் கணீரெனப் பாடி, அனைவரையும் கவர்ந்தான். அடுத்து, செல்வி பிரியதர்ஷினி குழுவினரின் ‘கம்பனும் மெய்ப்பாடுகளும்’ என்ற நடன நிகழ்ச்சி. விசுவாமித்திரர், தம் தவத்திற்குத் துணையாக இராமனைக் கோருவதிலிருந்து, சிவதனுசை முறித்து, சீதையை இராமன் மணமுடிப்பது வரையான காட்சிகளை அழகுற நடனத்தில் வெளி்ப்படுத்தினர்.
இவ்விடத்திலே இலங்கை ஜெயராஜ், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், பாரதி காவலர் இராமமூர்த்தி, என்.சி.ஞானப்பிரகாசம், பர்வீன் சுல்தானா, பால.சீனிவாசன், புதுகை மு.தருமராசன்… உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்தித்து மகிழ்ந்தேன். இலங்கை ஜெயராஜை இலங்கைத் தலைநகர் கொழும்பில் அவர் இல்லத்தில் முன்பு சந்தித்ததை நினைவுகூர்ந்தோம்.
வெளியே வந்தபோது, எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் மகன் அ.இராமச்சந்திரன், எதிரே வந்தார். அருகில் உள்ள ஆழ்வார்பேட்டையின் நாரத கான சபாவில் இன்னொரு நல்ல நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார். தமிழின் முக்கியமான சிறுகதைகளை வாசித்து, அதனுடன் ஒப்பிடக்கூடிய இன்னொரு காவியத்திலிருந்து ஒரு காட்சியை நாடகமாக நடிப்பதே இந்த நிகழ்வின் திட்டம் என அறிந்தேன். இன்று அசோகமித்திரனின் சுந்தர் என்ற சிறுகதையை வாசிப்பதாக அறிந்தேன். உடனே அங்கே சென்றோம். வாயிலில் அசோகமித்திரனைக் கண்டு வணங்கினேன். அவர் மகனுக்கு என்னை அ.இராமச்சந்திரன் அறிமுகம் செய்வித்தார்.
நாங்கள் சென்ற 15 நிமிடங்களில் நிகழ்ச்சி நிறைவுற்றது. எனினும் இங்கும் சாருகேசி, பரோடா வங்கி கண்ணன் உள்ளிட்ட நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. வெளியே வந்தால் மேலும் ஒரு வியப்பு காத்திருந்தது. தமிழின் முக்கிய எழுத்தாளரான லா.ச.ராமாமிருதத்தின் மனைவியும் மகனும் குடும்பத்தினரும் அங்கிருந்தனர். எழுத்தாளர் பத்மா நாராயணனும் அவர் கணவரும் அங்கிருந்தனர். அவர்களுக்கும் என்னை அ.இராமச்சந்திரன் அறிமுகம் செய்வித்தார். லா.ச.ரா. அவர்களுடன் முன்பு தொலைபேசியில் பேசியதையும் அவரின் சிறுகதையைப் பெற்று, அமுதசுரபியில் வெளியிட்டதையும் பகிர்ந்தேன். அவர்களும் என் பெயரை நினைவுகூர்ந்தனர்.
பத்மா நாராயணனும் என்னை நன்கு நினைவுகூர்ந்தார். அவரின் படைப்பை நான் அமுதசுரபியில் வெளியிட்டதையும் அக்காலத்தில் என்னுடன் அவர் தொலைபேசியில் பேசியதையும் எடுத்துரைத்தார். அவர் மகன் விவேக் நாராயணன், தில்லியில் வசிப்பதையும் அவர் http://almostisland.com என்ற இணைய இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றுவதையும் பகிர்ந்தார். விவேக் நாராயணனைப் பற்றி இங்கே (http://almostisland.com/vivek_narayanan.php) மேலும் அறியலாம். அவர், சங்க இலக்கியங்களை குறைவான சொற்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
ஒரே நாளில் அறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், நண்பர்கள்… எனப் பலரையும் அடுத்தடுத்துச் சந்தித்து உரையாடும் வாய்ப்பினைப் பெற்றதில் மகிழ்கிறேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்குடன் இவற்றை இந்நள்ளிரவில் உடனுக்குடன் பதிந்தேன்.