வளவன் கனவு (26)
சு. கோதண்டராமன்
வாத சபை
சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே
-சம்பந்தர்
ஊர் மக்கள் பெரும் திரளாகக் கூடி இருந்தனர். சம்பந்தரின் புகழ் ஏற்கெனவே பரவி இருந்ததால் அவரைக் காண விரும்பினர். அவரைக் கொல்லச் சமணர்கள் முயன்றார்கள் என்ற செய்தி அவர் பால் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது.
அரசரும் அரசியும் வந்து உட்கார்ந்தனர். சம்பந்தர் சமண குருவைப் பார்த்துக் கேட்டார். “உங்கள் சமயம் பற்றிச் சொல்லுங்கள்.”
“எங்கள் சமயம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இருக்கிறது. ரிஷப தேவரால் ஏற்படுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து மகாவீரர் வரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களால் போஷித்து வளர்க்கப்பட்டது. உங்கள் சமயம் நேற்று மழையில் முளைத்த காளான்.”
சம்பந்தர் பேசினார், “இந்த வைகை நதி என்று தோன்றியது என்பதை யார் கூற முடியும்? அது போல என்று பிறந்தது என்று அறியாத தொன்மை உடையது வேதநெறி. அதை எதிர்த்துத்தான் உங்கள் சமயம் தோன்றியது. வைகையில் மக்கள் இறங்கிக் குளிக்கப் பல துறைகள் இருப்பது போல வேதநெறியிலும் பல துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சைவம். துறை புதிது என்பதால் ஆற்றின் தொன்மை குறையாது.”
அரசர், அரசி, அமைச்சர் மூவரும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தனர்.
சம்பந்தர் தொடர்ந்தார், “தெய்வம் பற்றிய உங்கள் கோட்பாடு என்ன?”
“அத்தி நாத்தி, அதாவது, உண்டு இல்லை.”
“இது என்னய்யா வழுக்கல் விடை? உண்டா, இல்லையா?”
“நீங்கள் கூறுவது போல உலகத்தைப் படைத்துக் காக்கும் கடவுள் ஒருவர் இல்லை. ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த சமணத் துறவிகள் தெய்வமாகப் போற்றப்படுவார்கள். அவர்களுக்கு விசேஷ சக்திகள் உண்டு.”
“உலகத்தைப் படைத்தவர் ஒருவர் இல்லை என்றால் உலகம் எப்படி வந்தது?”
“உலகம் வினைகளின் தொகுதி. ஒவ்வொரு வினைக்கும் ஒரு விளைவு உண்டு. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. இவ்வாறு காரண காரியத் தொடர்பால் உலகமும் அதனுள் நடைபெறும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.”
“மனிதன் துன்பத்துக்குக் காரணம் என்ன? அதைத் தீர்க்கும் வழி யாது?”
“துன்பத்துக்குக் காரணம் அவரவர் செய்த தீவினைதான். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்”
“நேற்று அரசர் உடலில் நோய் கண்டதற்கு அவரது தீவினைதான் காரணமோ?”
“ஆம். முற்பிறவியில் செய்திருப்பார்.”
“முதலில் அவரது உடலின் வலப்பக்கம் மட்டும் நோய் நீங்கியதே, வலப்பக்கம் நல்வினையும், இடப்பக்கம் தீவினையும் செய்ததா?”
மக்கள் ஆரவாரித்தனர். சமணர்கள் தலை குனிந்தனர்.
காலில் மிதிபட்டு எறும்பு முதலான சிற்றுயிர்கள் இறக்கக் கூடாது என்பதற்காக மயிற்பீலியால் தரையைத் துடைத்துக் கொண்டு நடக்கிறவர்கள் இந்தப் பால் மணம் மாறாப் பாலகனைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். அவர்கள் இறைக் கொள்கை போலவே அகிம்சைக் கொள்கையும் இரட்டை வேடம் போடுகிறது என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சம்பந்தர் வாழ்க, சிவக்கன்று வெல்க என்ற கோஷம் வலுத்தது. மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் அரசர், வாதத்தில் சமணர்கள் தோற்றதாக அறிவித்தார்.
அவர்கள் விதண்டாவாதம் செய்யத் தலைப்பட்டனர். ‘அனல் வாதம் செய்து உன் சமயத்தின் மேன்மையை நிரூபி’ என்றனர். “அனல் வாதமா? அப்படி என்றால் என்ன?” என்றார் இவர். “நீ உனது பாடல்களை எழுதிய ஏட்டை நெருப்பில் இட வேண்டும். அது அழியாமல் இருந்தால் சைவம் மேன்மையானது என ஒப்புக் கொள்வோம்” என்றனர். சம்பந்தர் ‘போகமார்த்த’ என்று தொடங்கும் பதிகம் ஒன்று பாடினார். ஒவ்வொரு சொல்லாகப் பொருள் புரியும்படி நிறுத்தி நிதானமாக இசையுடன் பாடிக் கொண்டே அதைத் தன் கையாலேயே ஒரு ஏட்டில் எழுதினார். பதிகம் முடிந்தது. ஏடு நெருப்பில் இடப்பட்டது, எரிந்து விட்டது. கைதட்டிக் குதூகலித்தனர் சமணர்கள்.
“அவசரப்படவேண்டாம். என் பாடல் அழியவில்லை. இங்கு கூடியிருக்கும் மக்களில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்” என்றார் சம்பந்தர். ஆம், கூடியிருந்த மக்கள் மனதில் அந்தப் பாடல் பதிந்திருந்தது. அத்தனை பேரும் அதைத் திரும்பக் கூறினர். ஏடுதான் அழிந்தது, பதிகம் அழியவில்லை.
‘புனல் வாதம் செய்தால்தான் நம்புவோம்’ என்றனர் சமணர். ‘உன் பாடல் எழுதிய ஏட்டை வைகையில் இட வேண்டும். அது அடித்துச் செல்லப்படாமல் இருந்தால் ஏற்போம்’ என்றனர்.
சம்பந்தர் உடன்பட்டார். ‘வாழ்க அந்தணர்’ என்று தொடங்கி மற்றொரு பதிகம் பாடினார். முன்பு போலவே அது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒருவர் மற்றொருவர்க்குச் சொல்லிக் கொடுத்தனர். அது விரைவில் பரவியது. ஏடு நீரில் அடித்துச் செல்லப்பட்டாலும் பாடல் மக்கள் செவி வழியாக மேற்கே ஒரு காதம் தொலைவில் உள்ள திருவேடகம் வரை பரவியது. மக்கள் மனதைச் சம்பந்தர் பாடல் பிணித்திருந்தது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? மக்கள் ஆதரவு சைவத்தின் பக்கம் இருப்பதை அறிந்த சமணர்கள் சைவத்தை ஏற்றனர். சமணம் கழுவேறியது.
தொடரும்