சு. கோதண்டராமன்

 நல்லூர்ப் பெருமணம்

 vallavan-kanavu11

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
-சம்பந்தர்.

வயது பதினாறு ஆயிற்று. சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார் தந்தை. எல்லோரையும் போல இல்லறத்தில் ஈடுபட்டு இன்பம் அனுபவிக்கவா அவர் அவதரித்தார்? இறைவன் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பினான் என்பதை அவர் அறிவார். இறைவன் வழிகாட்டுவான் என்ற நம்பிக்கையில் இருந்ததால் தந்தை சொல்லை மறுக்கவும் இல்லை. நல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தில் கோயிலில் இறைவன் திருமுன்பு திருமணம் நிறைவேறியது.

“நல்லூர்ப் பெருமணத்தில் உறைகின்ற ஈசா, கல்லூர்ப் பெருமணம் (அம்மி மிதிக்கும் சடங்கு) எனக்குத் தேவையா? இத்தனைத் தலங்களில் உன்னை நான் பாடினேனே, என்றாவது எனக்குத் திருமணம் செய்து வை என்று கேட்டதுண்டா? என்னை இந்த உலகிற்கு அனுப்பிய நோக்கத்தை நான் நிறைவேற்றி விட்ட நிலையில் இல்லறத்தில் ஈடுபடுத்திச் சோதனை செய்கிறாயே” என்று பாடினார்.

பின் தான் இத்தனை காலம் ஊர் ஊராகப் போய்ப் பிரசாரம் செய்ததின் சாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பாடத் தொடங்கினார்.

“நான்கு வேதங்களின் சாரமாவது நமச்சிவாய மந்திரம்தான். அதை நாள் தோறும் ஓதுங்கள், அன்புடன் ஓதுங்கள், உள்ளம் உருகி ஓதுங்கள். கடுமையான பாவங்களும் நீங்கும், மீண்டு் பிறவா நிலையான முத்தி கிடைக்கும்” என்று பாடிப் பதிகத்தை முடித்துவிட்டுத் தன் அவதார நோக்கம் நிறைவேறியதை அறிவிக்கும் வகையில் அனைவருடனும் சிவ ஜோதியில் கலந்தார் காழியர் கோன்.

காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.
-சேக்கிழார்

28.  கனவு பலித்தது

தன் வம்சத்தவர் அனைவரும் சிவபாதசேகரர்களாக இருப்பது பற்றி விண்ணுலகில் செந்தீ வளவன் பேரானந்தம் அடைந்தார். “என் கனவு பலித்துவிட்டது. சோழ நாட்டில் மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் சமணம் முற்றிலும் அழிந்துவிட்டது. இனி, மக்கள் கலாசார வளர்ச்சிக்கான நல்ல பண்புகளைப் பெறுவார்கள். ஆடல், பாடல், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள். சோழரின் படை வலிமை சிறக்கும். தமிழகம் முழுவதும் சோழர் ஆட்சியின் கீழ் வரும். கடல் கடந்தும் வெல்வார்கள். இதை எல்லாம் சாத்தியமாக்கிய மகாதேவர் புகழைப் பறை சாற்றுவதற்காக உலகிலேயே பெரிய லிங்கம் அமைப்பார்கள். வானை முட்டும் விமானங்கள் கட்டுவார்கள். சோழப் பேரரசு அழிந்தாலும் செயற்கரிய சாதனையான இந்தக் கோயில்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நின்று சோழர் பெருமையைப் பரப்பிக் கொண்டிருக்கும். அரன் நாமமே சூழ்க, வையகம் துயர் தீர்க” என்று வாழ்த்தினார்.

முற்றும்

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க