இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)
— சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே!
இனிய வணக்கங்கள்.
இங்கிலாந்து அரசியல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு வாரம் இந்தவாரம். இதோ உங்கள் முன்னால் மற்றொரு மடலுடன் நான்.
1957ம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்தின் ஆறுநாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொருளாதாரக் கூட்டு முன்னணியைத் தோற்றுவித்தது. அந்நாடுகள் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, லக்ஸம்பேர்க், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியனவாகும்.
அந்நாளில் இக்கூட்டு முன்னணியின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலானதொரு பொது வியாபாரக் கூட்டுறவை ஏற்படுத்துவதாகும்
1973ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் கன்சர்வேடிவ் கட்சியின் கையிலிருந்தது. அப்போது இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் மறைந்த திரு எட்வேர்ட் ஹீத் (Edward Heath) பதவி வகித்தார்.
இவரது தலைமையின் கீழிருந்த இங்கிலாந்தும் இந்த ஐரோப்பிய பொருளாதார வியாபாரக் கூட்டுறவில் இணைந்து கொண்டது.
அது “ஐரோப்பிய பொருளாதாரக் கழகம் ” (Europeon Economic Council ) எனும் பெயருடன் ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், அயர்லாந்து, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய பன்னிரண்டு நாடுகளாக விரிவு அடைந்தன.
அதைத் தொடர்ந்து வந்த 1974ம் ஆண்டு தேர்தலில் பிரதானக் கட்சிகள் இரண்டும் தேர்தல் விஞ்ஞாபனமாக இக்கூட்டுறவில் தொடர்ந்து இருப்பதா இல்லையா எனும் தீர்மானத்திற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்தது.
தேர்தலில் ஹரால்ட் வில்சன் ( Harold Wilson ) தலைமையிலான லேபர் கட்சி சிறுபான்மை பலத்துடனான அரசமைத்தது. அவ்வரசின் பலவீனத்தின் பொருட்டு அடுத்த வருடமே அரசு கலைக்கப்பட்டு அடுத்தொரு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதே லேபர் கட்சி அதே பிரதமருடன் பெரும்பான்மை பலத்துடன் அரசமைத்தது.
அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மிகவும் ஒரு குழப்பமான நிலையிலேயே லேபர் கட்சி கலந்து கொண்டது, இருப்பினும் பிரதமர் ஹெரால்ட் வில்சன் ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டுறவுடன் நடத்திய பேச்சுக்களின் பலனாக லேபர் கட்சியும் இக்கூட்டுறவில் தொடர்ந்து நீடிப்பதை ஆதரித்தது. விளைவு இவ்ஐரோப்பிய கூட்டுறவில் இங்கிலாந்தும் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 17,378,581 வாக்குகளும் எதிராக 8,470,073 வாக்குகளும் விழுந்தன.
விளைவு இங்கிலாந்து அக்கூட்டுறவில் தொடர்ந்து இணைந்திருந்தது. வெறும் பொது வியாபாரநோக்கில் இணைக்கப்பட்டது என்று கூறப்பட்ட இக்கூட்டுறவின் கொள்கை விரிவானது. வியாபாரம் மட்டுமல்லாது நிதி, அரசியல் போன்ற இணைவுகளும் இதன் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவ்வரசியல் விரிவாக்கத்தின் பின்னணியாக 1992ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள மாஸ்ட்ரிக் ( Maastricht ) எனும் இடத்தில்; 1958ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஐரோப்பிய கூட்டுறவு ஒப்பந்தம் மீளப் பரிசீலிக்கப்பட்டு பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு “மாஸ்ட்ரிக் ஒப்பந்தம்” எனக் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது இங்கிலாந்தின் பிரதமராக ஜான் மேஜர்(John Major) பதவி வகித்தார். இவ்வொப்பந்தத்தின் பிரகாரமே ஐரோப்பிய ஒன்றியம் ( Europeon Union) எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பொது நாணயமாக “யூரோ” வைக் ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையில் பொருட்கள், மனிதர்கள் ஆகியோர் தடையின்றி இடம் பெயரலாம் என்பதுவும் விதியாக அமைக்கப்பட்டது. இவ்விதிக்கு அப்போதே இங்கிலாந்தும் வேறு சில நாடுகளும் தமது ஆட்சேபத்தைத் தெரிவித்திருந்தன.
இதன்போது இவ்வொன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஜி.டி.பி அதாவது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களும், அந்நாட்டின் சர்விஸ் நிறுவனங்களினால் ஈட்டப்படும் வருவாயும் ஒன்று சேர்ந்த கூட்டுப் பொருளாதார அளவின் 60% வீதமே கடனாக வைத்திருக்கலாம் என்பதுவும் இந்த ஜி.டி.பியின் 3% லுமே வருடாந்த நிதிநிலையில் துண்டு விழலாம் என்றும் விதி வகுத்துக் கொண்டன. இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்” எனும் ஒரு நிதிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து வருவது என்று முடிவெடுக்கப்பட்டது. இப்பொறிமுறையைக் கடைப்பிடிக்கும் அந்தந்த நாடுகள் தமது நாணயங்களைப் பாவிப்பில் வைத்திருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் மார்கிரெட் தாட்ச்சர் ( Margret Thatcher) அவர்களின் தலையில் இருந்த கன்சர்வேடிவ் அரசு நிதியமைச்சராக இருந்த ஜான் மேஜரினால் “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்”(இ.ஆர்.எம்) என்றழைக்கப்படும் பொறிமுறையினுள் நுழைந்தது.
வந்ததே பாருங்கள் பொருளாதார சுனாமி !
இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி படிப்படியாக அதிகரித்து அரசாங்க வட்டி வீதம் 15% ஆக உயர்ந்தது. அதிகபட்ச நடவடிக்கையாக இங்கிலாந்து 1992ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி தன்னை “எக்ஸ்சேஞ்ச் ரேட் மெக்கானிசம்”(இ.ஆர்.எம்) என்றழைக்கப்படும் பொறிமுறையினுள் இருந்து விடுவித்துக் கொண்டது. இது நடந்த புதன்கிழமை இன்றும் இங்கிலாந்து அரசியல் உலகில் “கருப்புப் புதன்கிழமை” ( Black Wednesday) என்றழைக்கப்படுகிறது. இங்குக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இந்த இ.ஆர்.எம் எனும் பொறிமுறைக்குள் செல்லக்கூடாது எனும் காரணத்தினால் எழுந்த சர்ச்சையினால் அதற்கு ஆதரவளித்த முந்தைய நிதியமைச்சர் நைஜல் லோசன் (Nigel Lawson) பதவியை இராஜினாமா செய்தார் என்பதுவே.
இந்தப்பின்னணியில் உருவான ஐரோப்பிய ஒன்றியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது அரசியல் அபிலாஷைகளை அதிகரித்துக் கொண்டது. இவ்வரசியல் அபிலாஷையின் அதிகரிப்பை இங்கிலாந்து மக்கள் விரும்பவில்லை. “யூரோ” நாணயம் 1999ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி சர்வதேச நாணய அரங்கில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து இந்த நாணயத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமது பொருளாதார நிலையில் ஜந்து இலக்குகளை நிர்ணயித்து அவ்ஐந்து இலக்குகளையும் அடைந்தால் மட்டுமே தாம் யூரோ நாணயத்திற்கு மாறுவோம் எனும் நிபந்தனையை விதித்தது.
தமது நாட்டின் இறையாண்மை சூறையாடப்படுகிறது என்பது இவர்களினது அபிப்பிராயம். தமது நாட்டின் சட்ட திட்டங்களை வகுக்கும் உரிமை தமக்கே இருக்க வேண்டுமே அன்றி எங்கோ இயங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பட்டால் தமது தனித்துவத்தை இழப்பதைப் பலர் விரும்பவில்லை. இந்நிலையில் சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னால் தன்னாட்சி அமைத்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இவ்ஐரோப்பிய ஒன்றியத்தில் தம்மை இணைத்துக் கொண்டன.
இங்கே ஐரோப்பிய ஒன்றியத்தின் சுயபாதுகாப்பு நோக்கம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. முந்தைய சோவியத் யூனியனின் பாகங்களாக இருந்த இக்கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தம்முடன் இணைப்பது தமக்கு பாதுகாப்பானது எனும் காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல முக்கிய நாடுகளின் எண்ணம். ஆனால் இணைந்து கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை விடப் பின் தங்கிய நிலையிலே உள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்துவார்கள் எனும் எதிர்பார்ப்புக்கு மாறாகப் பல கிழக்கு ஐரோப்பிய மக்கள் இலகுவாக மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கும் வசதியைப் பயன்படுத்தி மற்றைய நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளார்கள்.
இதன் விளைவே இன்றைய இங்கிலாந்து அரசின் அரசியல் நெருக்கடி.
இங்கிலாந்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் அடிப்படை வசதிகள் அதாவது வேலையற்றோருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிகளைப் பெறுவது மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட இலகுவானது என்பதால் இங்கிலாந்துக்குப் படையெடுக்கும் இக்கிழக்கு ஐரோப்பிய மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேநேரம் இங்கிலாந்தில் பல பொதுப்பணித்துறை திட்டங்கள் பொருளாதார நெருக்கடியால் கைவிடப்பட்டுள்ளது. மக்களின் உதவிப்பணத்தின் அளவுகள் பலருக்கு மட்டுப்படுத்தப்படுகின்றன. எமது நாட்டில் எமது வாழ்வாதாரத்தில் பல பாதிப்புகள் ஏற்படுத்தப்படும் இந்நிலையில் எப்படி இத்தனை ஐரோப்பியர்கள் தம்நாட்டில் இருந்து இங்கு இடம்பெயர முடியும்? இதற்கொரு முடிவில்லையா ? என்பதே மக்களின் பொது ஆதங்கம்.
இங்கிலாந்து ஒரு சிறிய தீவு பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் நாடாக இருந்தாலும் மக்களின் தொகை அதிகரிப்பினால் கல்வி, தேசிய சுகாதார சேவை, வேலை வாய்ப்பு என்பன மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றது. தெரிந்தோ, தெரியாமலோ, சரியாகவோ, தவறாகவோ இதற்கெல்லாம் காரணமாக இவ்ஐரோப்பியர்களின் வரவு பூதாகரமாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சில பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவளிப்போர் எனக் கருதப்படும் சிலரை அவர்களது சொந்தநாடுகளுக்கு நாடு கடத்தும்படி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டினால் அவர்களை நாடுகடத்த முடியாத நிலைக்கு இங்கிலாந்து அரசாங்கம் தள்ளப்பட்டது.
மேலும் இவ்ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் இங்கிலாந்துக்குள் வரும் வெளிநாட்டவரின் வருகையை அவதானிக்க முடியாது அல்லாடும் ஒருநிலையும் காணப்படுகிறது. இவை அனைத்தின் விளைவாகவும் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் வலுத்தும், இதனை முன்னிலைப் படுத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு வலுத்தும் வருகிறது. அதுமட்டுமின்றி இவ்ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் வகித்தல் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் பலவருடங்களாகத் தலையிடியாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது.
இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் டேவிட் காமரன் அவர்கள் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2017ம் ஆண்டு முடிவடைவதற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நிலைத்திருப்பதா ? இல்லையா ? எனும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவேன் என்று உறுதியளித்தார். அவர் 2017ம் ஆண்டு வரை காலக்கெடு விதித்த காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இங்கிலாந்து தான் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமானால் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளைத் தான் முன்னெடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையைக் காக்க முயற்சிப்பதற்காகவே .
சளைக்கவில்லை பிரதமர் தான் வேண்டும் மாற்றங்களை வகைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து தமது கோரிக்கைகளின் நியாயத்தைச் சுட்டிக் காட்டினார். புயல் வேகத்தில் சுழன்றடித்து பல சந்திப்புகளைச் சந்தித்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது அமைச்சரவைக்குள் இருக்கும் அமைச்சர்கள் பலரை தனது பக்க நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை வேறு ! இன்று அதாவது 18ம் திகதி ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றுகூடி இங்கிலாந்துப் பிரதமரின் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுக்கிறார்கள்.
இம்முடிவு பிரதமருக்குச் சாதகமாக அமைந்தால் அவர் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருக்க வேண்டும் என்று வாதிட்டு இச்சர்வ ஜனவாக்கெடுப்பை வருகிற ஜூன் மாதம் 24ம் திகதி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முடிவு அவருக்கு எதிராக அமைந்தால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது. இங்கிலாந்து இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை நாடுகள் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அரசியல் அவதானிகளின் கணிப்பின்படி இம்முடிவு இங்கிலாந்து பிரதமருக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.
சர்வஜன வாக்கெடுப்புக்குச் சார்பான, எதிரான வாதங்கள் சுறுசுறுப்பாக முன்வைக்கப்படுகின்றன.
இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அமைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கானகத்தின் நடுவே விடப்பட்ட ஒரு குழந்தையின் நிலை போலத்தான் இருக்கும். ஏனெனில் இதற்கு முன்னால் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்ததே இல்லை. பல பங்குச் சந்தைகளின் பொருளாதார ஏற்ற, இறக்கங்கள் இன்றைய ஐரோப்பிய தலைவர்களின் முடிவிலேயே தங்கியுள்ளது.
இதுவே பிரதமராக டேவிட் காமரன் பதவி வகிக்கும் கடைசி முறை. அவரின் சாதனை இங்கிலாந்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவது என்பதை அவர் விரும்புவாரா என்ன ?
நாளை விடை பகரும்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படம் உதவி: http://www.dailymail.co.uk/news/article-2803377/Support-staying-European-Union-surges-23-year-high-thanks-rise-Ukip.html