தியாகி முத்துக்குமார் பற்றி, நடிகர் சத்யராஜ் பேச்சு
தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அவர்களுக்கு ஆதரவாக தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தியாகி முத்துக்குமாரின் ஆவணப் படம் ‘ஜனவரி 29’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிரகதீஸ்வரன் இயக்கியுள்ள இந்த ஆவணப் படம், 2010 ஆகஸ்டு 29 அன்று மாலை, சென்னையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் வெளியிடப்பட்டது.
விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர் இருவரும் கலந்துகொண்டு ஆவணப் படத்தின் முதல் பிரதியை வெளியிட, முத்துக்குமாரின் தந்தை குமரேசன், சென்னை நகர ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் இருவரும் பெற்றுக்கொண்டனர்.
அதன் பிறகு, நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “அனைத்துத் தமிழ் உணர்வாளர்களுக்கும் வணக்கம். இந்த அரிய வாய்ப்பினை எனக்குத் தந்த அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாதிரி ஒரு படம் பார்த்துவிட்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்தப் படம் நிறைய பேசியிருக்கிறது, அதற்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நல்லதுரை, செல்வராஜ் முருகையன் அவர்களுக்கும், படத்தின் இயக்குநர் பிரகதீஸ்வரன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முத்துக்குமாரின் கோடிக்கணக்கான சகோதரர்களில் ஒருவராக இருந்து இந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
பத்திரிகையில் முத்துக்குமார்னு ஒரு இளைஞன் சாஸ்திரி பவனுக்கு முன்னாடி தீக்குளிச்சிட்டார்ங்றதை நான் பார்த்தேன். அட, என்னப்பா இந்தத் தம்பி, தமிழர்களைப் பற்றித் தெரியாமல் இப்படி ஒரு முடிவு எடுத்திட்டாரே, ஒரு உயிர் வேஷ்டா போயிடிச்சேன்னு கவலைப்பட்டேன். ஒரு தம்பி அவசரப்பட்டுட்டார்னு நினைத்தேன். அதன் பிறகு நான் அவருடைய அறிக்கையைப் படித்த போதுதான் தெரிந்தது, அவர் பெரிய அரசியல் ஞானியாக வந்திருக்க வேண்டியவர், இப்படி அவசரப்பட்டு தீக்குளிச்சிட்டாரேன்னு நினைத்தேன்.
இப்போது, புகழேந்தி தங்கராஜ் பேசியதைக் கேட்டபோதுதான் தெரிந்தது, அந்தத் தியாகம் எங்கே போய்ச் சேர்ந்திருக்கிறது என்று. ஒரு பெரியாரோ, காரல் மார்க்ஸோ, அம்பேத்காரோ அவசரப்பட்டு தீக்குளித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு.
அடுத்த தலைமுறைக்கு இந்தப் போராட்டத்தோட வலி தெரியாம போடியிடிச்சினு, நான் சினிமா நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். ஏன்னா, அகதிகளாக வெளிநாட்டுக்குப் போன தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு இந்த வலி தெரியுமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை இயக்கத்துக்கு அனுப்புறீங்கன்னு அந்தத் தமிழர்களைப் பார்த்துக் கேட்ட குழந்தைகளைப் பற்றிய விஷயம் எல்லாம் எனக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிய வாய்ப்பும் இல்லை. கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு பொறந்த, வளர்ந்த நம்மோளோட குழந்தைகள் கிராமத்துக்குப் போகமாட்டேன் என்கிறாங்க. நமக்கு அந்தப் பொங்க சோறு வைத்துச் சாப்பிடனும், மாட்டு வண்டியில போவனும், டூரிங் டாக்கீஸ்ல உட்கார்ந்து வாத்தியார் படம் பார்த்ததும் நாம ரசிக்கலாம். ஆனால் குழந்தைகள் ரசிக்க மாட்டங்கிறாங்க. அவங்களுக்கு சத்யம் காம்ப்ளக்ஸ்ல படம் பார்த்தாதான் பிடிக்குது.
அப்படி இருக்கும் போது, போராட்டக் காலத்தில் புலம் பெயர்ந்து போன தமிழர்களுக்கு அந்த உணர்வு இருக்கத்தான் செய்யும். ஆனால், அமெரிக்காவிலயும், ஜெர்மனியிலயும் பிறந்த குழந்தைகள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். ஏன்னா? என்னோட சொந்தக்காரங்களைப் பார்க்க நான் வெளிநாடு போயிருந்த போது அவங்களே தமிழை மறந்திட்டிருக்காங்க. அப்படி இருந்த தமிழர்களை இந்த முத்துக்குமாரின் தியாகம் மாற்றியிருக்கிறது என்றால், நிச்சயம் இந்த முத்துக்குமாருடைய உயிர் வீணாக போகல.
முத்துக்குமார் தோத்துட்டாருன்னு சொல்றாங்க. கண்டிப்பா முத்துக்குமார் தோற்கவில்லை. எப்போ முத்துக்குமாருக்குச் சிலை வைக்கப் பயப்படுறாங்களோ அப்பவே முத்துக்குமார் ஜெயிச்சிட்டார். சில பேர்தான் போராடுவாங்க. அவங்க எல்லாம் பல நூல்களையும் படித்து ஆழமா தெரிஞ்சிகிட்டவங்க. ஆனால் நான் அப்படி இல்லை. பல படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நான் பேசும்போது தமிழின உணர்வைப் பற்றி நான் பேசும் போது அங்க நான் புத்திசாலி மாதிரியும், பெரிய ஆள் மாதிரியும் தெரியும். ஆனால், இங்கே அப்படி தெரியாது. ஏன்னா? இங்க இருக்குறவங்கிட்டதான் நான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இவங்க எல்லாம் என்னுடைய ஆசிரியர்கள்.
இந்த படம் எடுத்த பிரகதீஷ்வரனுக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய இயக்குநர் அமீர் சார் சொன்னமாதிரி, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஒரு மாதிரியான தைரியம் இருக்கும். சிறைக்குச் செல்கின்ற அளவிற்குத் தைரியம் என் தம்பி செந்தமிழன் சீமானுக்குத்தான் இருக்கு. சத்தியமா சொல்றேன் எனக்கு இருக்காது.
இப்போ பேசும் போதுகூட மனசுல கணக்கு போட்டுத்தான் பேசிக்கிட்டு இருக்கேன். எங்கயாவது கொஞ்சம் பேசிட்டாலும் மாட்டிக்குவமே. வெளிப்படையாகச் சொல்றேன், நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுறேன். சொகுசா பொறந்து, வசதியா வளர்ந்தவன் நான். அதனால் என்னால கண்டிப்பா ஜெயிலுக்குப் போக முடியாது. அதனால்தான், அமீர் ஸார் சொன்ன மாதிரி என் மனத்தில் உள்ளதை எல்லாம், சொன்னால் இந்த ஜென்மத்தில் நான் வெளிய வரவே முடியாது. ஒரு வருடம் எல்லாம் கிடையாது. நான் அங்கேயேதான் இருக்கணும். என்னை அறியாம எம்ஜிஆர் பாட்டை முணுமுணுப்பேன், அதே மாதிரி இருந்திருப்பேன். நான் நடித்த கடைசிப் படம் வெளிவரப் போகிற ‘இரண்டு முகம்’ படமாதான் இருக்கும். அதனால் யார் யார் எங்க நின்னு போராடணுமோ அவங்க, அவங்க அங்க நின்னு போராடணும்.
போராட்டங்களுக்குப் பலவிதமான ஒத்துழைப்பு தேவைப்படுது. பொருளாதார ஒத்துழைப்பு, கவிஞர்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படும். தட்டி எழுப்பும் படங்களை எடுக்கும் இயக்குநர்கள் இருக்குறாங்க. முத்துக்குமார் இருந்தார்னா நினைத்துப் பாருங்கள். அவர் ஒரு ஐந்து படம் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும். உலகத்தையே புரட்டிப் போட்டிருப்பார். இந்த ஆவணப் படத்தை நான் பார்த்துட்டேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை இருக்குறவங்களுக்குச் சொல்றேன், இந்த ஆவணப் படத்தை இந்துக்கள் அவங் வீட்டில் பகவத்கீதை பக்கத்திலும், இஸ்லாமியர்கள் குர்ஆன் பக்கத்திலும், கிறிஸ்தவர்கள் பைபிள் பக்கத்திலும் வைக்க வேண்டும். தந்தை பெரியாரின் வழி நடப்பவர்கள் பெரியார் களஞ்சியத்தின் பக்கத்தில் வையுங்கள். கம்யூனிச வழி பின்பற்றுவர்கள் மார்க்ஸின் அந்த நெடுவழிப் பயணத்தின் பக்கத்தில் வையுங்கள்.
அந்தக் காலத்தில் அண்ணா சொன்னார். தமிழனின் ஒவ்வொரு வீட்டிலும் உலக வரைபடம் இருக்க வேண்டும் என்று சொன்னார். இந்த உலகம் உருவான காலத்திலேயே எல்லா நாட்டிலயும் தமிழனுடைய வீடு இருந்திருக்கும்னு நினைத்துத்தான் அவர் சொல்லியிருப்பார்னு நான் நினைக்கிறேன். அது மாதிரி இந்த உலகத்தில் விடுதலை என்பது ரொம்ப முக்கியம். அது இன விடுதலையாகட்டும், பண விடுதலையாகட்டும், வஞ்சிக்கப்பட்ட தலித் இன மக்களின் விடுதலையாகட்டும், அடிமைப்பட்டிருக்கும் பெண்ணின் விடுதலையாக இருக்கட்டும். இப்படி விடுதலையை நோக்கித்தான் உலகம் போயிட்டு இருக்கு. அந்த விடுதலையைக் கண்டிப்பா அவர்கள் அடைவார்கள். உலகம் உருவான போது எல்லா நாடுகளும் உருவாயிட்டதாக இல்லை, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒரு நாடு உருவாகியிருக்கிறது. சில காலகட்டத்தில் பல நாடுகள் சேர்ந்து ஒரு நாடாக உருவாகியிருக்கிறது. பல குறுநில மன்னர்கள் ஆண்ட நாடு, பிரிட்டிஷ்காரனை எதிர்க்க பிரிட்டிஷ் இந்தியாவாக இதை உருவாகியது இல்லையா?. அதனால், அத்தியாவாசியப்படும் போது ஒரு புது நாடே உருவாகலாம் இல்லையா?.
அதனால் யாருமே துப்பாக்கி ஏந்துகிறதை விரும்புறதில்லை. வேலைக்குப் போறது, வீட்டுக்கு வர்றது, குழந்தைங்க, மனைவி இப்படி சந்தோஷமாக வாழ்வது. சனி, ஞாயிறுகளில் பீச் சினிமா இப்படி போறதைத்தான் விரும்புவாங்க. அவன் எந்த நேரம் வந்து நம்மளைய எவனாவது சுட்டுடுவானோங்ற நினைப்பில் யாரும் வாழ மாட்டார்கள். அதனால் காட்டுக்குள் வாழணும்னு யாரும் ஆசைப்பட மாட்டான். நான் போகமாட்டேன். ஏன்? அந்த வாழ்க்கை நல்லா இருக்குமா? அந்த நிலைக்குத் தள்ளப்படுறதினாலதான் அப்படி ஆகுறான். முடியாத பட்சத்தில்தான் அப்படி போறான். அந்த முடியாத பட்சம் கண்டிப்பாக அவனுக்கு வெற்றியைத் தேடி தரும். அதனால் முத்துக்குமாருடைய தியாகம் வீண் போகாது என்று கூறி. அவருடைய தாய், தந்தையருக்கும், அவருடைய சகோதரி அவர்களுக்கும், அந்தக் குடும்பத்தார் அவர்களுக்கும். எந்த நேரத்தில் எந்த உதவி வேணும்னாலும் என்னைக் கேளுங்க அப்படின்னு சொல்லிக்கிறேன்.
போனை நான் எடுத்து, ஹலோ சத்யராஜ் பேசுறேன்னு சொல்வேன். இப்போ அதை கொஞ்சம் மாற்றி வணக்கம்னு சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். ஏன்னா? சில நேரத்தில் அந்த ஆங்கில வார்த்தை வரும்போது சீமான் முகம் எதுக்க வந்து நிக்கும்.
இந்த ஆவணப் படத்தில் சொல்லியிருக்காங்க, முத்துக்குமார் பேசும் போது தூய தமிழில் பேசுவார். அவர் பேசும் போது எங்களுக்குச் சிரிப்பா வரும்னு சொல்றாங்க. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கொள்கையோடு வாழ்ந்திருக்கிறார் அந்த மனிதர். அந்தத் தம்பி விட்டுப்போன பணியைப் பருத்திவீரன் மூலம் பெரிய பெயர் வாங்கிய அமீர் அவர்களிடம் நான் ஒப்படைக்கிறேன். உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் அவர். ஒரு படைப்பு எப்போதும் வசூலில் தோல்வி அடையக்கூடாது. அதே நேரத்தில் அவார்ட் வாங்கணும்.
இந்த மாதிரி நேரத்தில் புரட்சித் தலைவருடைய பாடல்தான் எனக்கு ஞாபகம் வரும். சிரித்து வாழ வேண்டும் பாடலில் ஒரு வரி வரும். ‘ரசிகன் இல்லாத அழகும் கலையும் தூய்மை கொள்ளாத மான்’. அதனால் ரசிகன் இல்லாத அழகு எதற்கு? அதே மாதிரிதான் பருத்திவீரன் 300 நாள் ஓடியது, அதே நேரத்தில் அந்தப் படம், விருதுகளைப் பெற்றது. அதனால்தான் அது எல்லோருக்கும் தெரிந்தது. வெறும் அவார்ட் மட்டும் வாங்கியிருந்தா யாருக்குத் தெரியும்? அமீர் ஸார் எந்த கமர்ஷியல் விஷயங்களையும் விட்டுடாதீங்க. குத்துப் பாட்டு ஒன்றுக்குப் பத்தா வைங்க. நாம ஜெயிக்கணும், நாம சொல்ற கருத்தும் மக்கள் மத்தியில் போய்ச் சேரணும். அதைத்தான் எம்.ஜி.ஆர். செய்தார் அவருடைய முகத்தின் வாயிலாகப் பட்டுக்கோட்டையாரினுடைய பாடல் வரிகள் வெளிவந்ததுதான் இடுப்பில் இருந்த துண்டு, தோளுக்குப் போனது. அதுதான் சினிமாகாரனுடைய பணி. அதை அமீர், சிபிசந்தர் போன்றவர்கள் செய்யணும். யாரை எல்லாம் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும். அதை ஒரு தமிழ் சினிமா செய்தது என்ற பெருமை இருக்கணும். அந்த அளவிற்கு நான் ஒரு இயக்குநர் கிடையாது. அதை அமீர் செய்யணும்.”
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
விழாவில் இயக்குநர் அமீர், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் சிபிசந்தர், கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாலமுரளிவர்மா ஆகியோரும் கருத்துரை வழங்கினார்கள். இந்த ‘ஜனவரி 29’ ஆவனப் பட இயக்குநர் பிரகதீஸ்வரன், தயாரிப்பாளர்கள் நல்லதுரை, செல்வராஜ் செ.முருகையன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.
செம்மஞ்சேரியில் பெருஞ்சித்திரனாரின் மகள் இறைபொற்கொடி நடத்தி வரும் தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆயிரம் நோட்டு, புத்தகங்களை ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் நன்கொடையாக வழங்கினார். முன்னதாக நடிகர் சத்யராஜ், முத்துக்குமாரின் படத்திற்குத் தீபம் ஏற்றினார். ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்குப் பிறகு நிகழ்ச்சி தொடங்கியது. தயாரிப்பாளர் நல்லதுரை வரவேற்று, நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளைத் திரைப்பட இயக்குநர் ஐந்துகோவிலான் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளைக் கருப்புக்குரல் கலை அமைப்பினர் செய்திருந்தனர்.