பாடாண் திணை!

பாகம்பிரியாள்

அடியே உனக்கென்ன, பொழுது போக்க
ஆயிரம் வழிகள் இருக்கு!
மலர்களைத் தொடுக்கும் சாக்கில்
மணிக்கணக்காய்ப் பேசி மகிழலாம்.
கோவிலின் குளக்கரையில் அமர்ந்து
கால் அளைந்து விளையாடலாம்!
அண்டை வீட்டு வாண்டுகளை
அரட்டி உருட்டி உறவு கொண்டாடலாம்!
எதுவும் இல்லையென்றால் உன்
ஒய்யாரக் கூந்தலை அள்ளி முடியலாம்.
ஆனால் நேரம் பார்த்து நமட்டுச் சிரிப்போடு
நீ எறிந்த காதல் கல்,
சலனங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
வருவாய் என எண்ணி எண்ணியே
கை நுனிகள் எல்லாம் தேய்ந்துவிட்டன.
ஓட்டமாய் ஓடிய கால்கள் எங்கு கொலுசொலி
கேட்டாலும் அப்படியே கட்டுப்பட்டு நின்று விடுகின்றன.
சோற்றை அளைந்து அளைந்து கோபுரமாக்கியே
சீரழிகின்றன என் சிந்தனைகளும், அன்னை இட்ட அருமை உணவும்!
இரவெல்லாம் வெட்டவெளிப் பார்த்து பார்த்து,
நட்சத்திரங்களும் எனக்கு நட்பாகிவிட்டன.
பேச்சற்று நின்றாலும் துருத்திப் போல் என்
மூச்சுக் காற்று நினைவுகளை வருத்திக்கொண்டிருக்கிறது.
கால்சட்டைக்குப் பொருத்தமில்லா வண்ணமும், கலைந்து போன
மேல் சட்டையும் என்னைக் கேலிப் பொருளாக்கிவிட்டதடி.
இலக்கியக் காதலெல்லாம் எனக்கு வேண்டாமடி
அருகில் இருந்து உறவு கொண்டாடினால் அதுவே போதும் எனக்கு!

(பின் குறிப்பு: காதலில் பாடுபடும் ஆண்மகனின் ஒழுகலாறுகள் பற்றிக் கூறுவது பாடாண் திணை 🙂

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க