பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 7

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுப்பிய கேள்வி:

றகரம் தனித்தனியாதலையோ, ஒன்றிலிருந்து மற்றொன்றாவதையோ குறிக்கும் சொற்களில் எழுத்தாக வருகிறதே?

அற, இற, ஈறு, ஏற, கற, கீற, கூற, சிறை, சீற, சுற, சூற, திற, தேற, நற, நிற, மற, பற, பாற, பிற, பீற, புற, பெற, பேறு, பொறை, மற, மாற, மீற, முறை, வற, வாறு, விற, வீறு, வேறு (என்ற விகுதிகள் சேரா) மொழிப் பகுதிகளைக் காண்க.

யாவிலும் றகரம் உண்டு. யாவும் தனியாதலைக் குறிப்பன.

வேர் எவ்வாறு?

வல்லின றகரம் இவ்வாறு வருவதற்குக் காரணம் உண்டா?

நெஞ்சறையில் இருந்து வெளிவரும் காற்றுச் சற்றே வலிந்த முயற்சியால் அண்பல் அடைப்பொலியாக, நுனிநா நடுங்க அல்லது விசிற வருவதா றகர ஒலி? அதுவும் காரணமா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்பு சமூக மரபால் (social convention) ஏற்படுவது; அது இயற்கையாக இணைந்தது அல்ல. காலப்போக்கில் சொல்லின் வடிவம் மாறினால் அதன் பொருள் மாறுவதில்லை; சொல் சுட்டும் பொருளின் தன்மை மாறினால் சொல் வேறாவதில்லை. மரம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் tree. வெவ்வேறு ஒலிகளால் அமைந்த இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருகின்றன; இரண்டு சொற்களும் ஒரு வகையான தாவரத்திற்குப் பெயர் வைப்பதில் இரு வேறு சமூக மரபுகளைத் தாங்கி நிற்கின்றன.

சொற்கள் ஒலிகளின் சேர்க்கையால் உருவாகின்றன. ஒரு சொல்லின் ஒலிகளுக்கும் அது சுட்டும் பொருளுக்கும் இயற்கையான தொடர்பு இல்லை. ஒலிக்குப் பொருள் ஏற்றும் சமூக மரபும் இல்லை. இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு. சில நிறங்களை மன உணர்வுகளோடு இயைபுபடுத்தும் மரபு இருப்பது போல, சில ஒலிகளை இனிமை, கடுமை போன்ற மனநிலைகளோடு இயைபுபடுத்தும் மரபும் இருக்கிறது. இந்த மரபைக் கம்பன் போன்ற கவிஞர்கள் பயன்படுத்தி, கவிதை அனுபவத்தை வளமாக்குகிறார்கள்.

ஆ, ஐயோ போன்ற வியப்பிடைச் சொற்கள் வலி போன்றவற்றை அனுபவிக்கும்போது வெளிப்படும் ஒலிகளை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. படபட, வழவழ போன்ற ஒலிக் குறிப்புச் சொற்கள் (onomatopoeic words) அவற்றின் பொருளை நேரடியாகப் பிரதிபலிக்காவிட்டாலும்,  பிரதிபலிப்பது போன்ற ஒரு மனத்தோற்றத்தைத் தருகின்றன.

மேலே உள்ள கேள்வியில் உள்ள சொற்களில் உள்ள ஒலிக்குறியீடும் (sound symbolism) ஒரு விதிவிலக்கு. றகரம் உள்ள சில சொற்களில் ‘துண்டாதல், வேறாதல்’ என்ற பொருள் பொதுமையாக இருப்பதாகக் கருதினால் றகத்திற்கு அந்தப் பொருளுணர்வை ஏற்றும் மரபு இருக்கிறது என்று கொள்ள வேண்டும். றகரத்தின் ஒலிப்பிறப்பிற்கும் இந்தப் பொருளுணர்வுக்கும் தொடர்பு இல்லை. தொடர்பு மனதில் இருக்கிறது; அது மரபால் மனதில் இடம் பெறுகிறது. இந்தச் சொற்கள் முதன்முதலாக வழக்கிற்கு வந்தபோது இவற்றின் பொதுமைப் பொருளைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தால் அவை உருவாக்கம் பெறவில்லை.

ஒலிக்கும் பொருளுக்கும் இயற்கையான தொடர்பு இருந்தாக வேண்டுமென்றால் ஒரு மொழியில் எண்ணிறந்த சொற்கள் உருவாக முடியாது. காதல் போன்ற உணர்வுகளையும் ஆபத்து பற்றிய எச்சரிக்கை போன்ற செய்திகளையும் வெளிப்படுத்தும் குறியீடுகளில் ஒலிகள் நேரடியாகப் பொருளைத் தருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இந்த வழக்கை மற்ற உயிரினங்கள் இன்றும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன. மனித மொழியின் வளர்ச்சியும் அதன் மூலம் மனித குலத்தின் வளர்ச்சியும், ஒலிக்கும் பொருளுக்கும் உள்ள நேரடித் தொடர்பு அறுந்த பிறகே சாத்தியமானது.

===============================================

கவிஞர் நெப்போலியன் எழுப்பிய கேள்வி:
அடைமான‌ம்  / அட‌மான‌ம். எது ச‌ரியான‌ வார்த்தை for ‘mortgage’?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழ்ப் பேரகராதி அடைமானம் என்ற வடிவத்தைத் தருகிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி அடமானம் என்ற வடிவத்தைத் தருகிறது. வின்ஸ்லோவின் அகராதியிலும் ஃபெப்ரீஷியஸின் அகராதியிலும் அடமானம் என்ற வடிவத்தையே பார்க்கிறோம். இதுவே இன்று பெரும்பான்மை வழக்கு.

அடைமானம் என்ற வடிவம், ‘பெறு’ என்ற பொருள் கொண்ட அடை என்ற சொல்லிலிருந்து பிறக்கிறது. இதுவே இந்தச் சொல்லின் பழைய வடிவம். பெறுமானம், வருமானம் என்ற சொற்களில் உள்ள பெயராக்க விகுதியான – மானம் அடைமானத்திலும் இருக்கிறது. ‘சுற்று’ என்ற பொருள் கொண்ட புடை என்ற சொல்லிலிருந்து பிறந்த புடைவை என்ற சொல் இன்று புடவை என்ற வடிவத்தில் வழங்குகிறது. சொல்லுக்கு நடுவில் ஐகாரம் அகரமாகக் குறுகுவது பொது விதி.

அடிச்சொல்லைச் சிதைக்காமல் ஒரு சொல்லை அடையாளம் காட்டும் வடிவமே சரியானது என்று சொல்வது மொழியைக் கட்டிப் போடுவதாகும். மொழியில் மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மாற்றம் எல்லாம் பிழை அல்ல. பிழை அல்லாத மாற்றத்தைப் பெரும்பான்மை வழக்கு அடையாளம் காட்டுகிறது. பழமை என்பதாலேயே ஒரு சொல்லின் வடிவம் சரியானதாக ஆகிவிடாது. பெரும்பான்மை வழக்கே சரியான வழக்காகிறது. மக்களுக்காக மக்களால் கட்டப்படுவதுதானே மொழி.

===============================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *