வாரணாசிக் கரப்பான் பூச்சிகள்

தமிழ்த்தேனீ

Tamil theneeகாசி என்பது இந்துக்களின் புனித ஸ்தலம். இப்படிப்பட்ட காசியின் புனித வரலாற்றை எனக்கு நினைவூட்டியது ஒரு சாதாரண கரப்பான் பூச்சி  என்பதே மிகவும் விசேஷமான செய்தி. இந்தக் கரப்பான் பூச்சியைச் சாதாரணக் கரப்பான் பூச்சி என்று நான் சொன்னதே தவறு. காலம் காலமாக, எல்லாவித இயற்கை உற்பாதங்களையும் கடந்து, எவராலும் அழிக்க முடியாத அளவுக்கு எதிர்த்து நின்று, இன்று வரை தன் இனத்தை  வெற்றிகரமாகப் பெருக்கிக்கொண்டிருக்கும் சிரஞ்சீவி இந்தக் கரப்பான் பூச்சிகள், மிக உத்தமமான  கரப்பான் பூச்சிகள் என்பதை நான் பயணித்த பெங்களூர் எக்ஸ்ப்ரஸ் வண்டியில் என்னுடைய பயணச் சீட்டைச் சரிபார்க்க வந்த அதிகாரி சொல்லும்போதுதான் எனக்கே இந்த ஞானோதயம் உண்டானது என்றால் அது மிகையல்ல.

இரவு மணி 11.30. பெங்களூர் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் குளிர்சாதன இருக்கையின் கீழே பெட்டிகளை வைத்துவிட்டு, அப்பாடா இரண்டு நாட்களாகத் தூக்கமில்லை, காலையில் பெங்களூர் சென்று சேரும்வரை இன்றாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளக்கை   அணைத்துவிட்டு, படுக்கையில் படுத்தேன். காதில் ஏதோ குறுகுறுவென்றது. எழுந்து விளக்கை எரியவிட்டுப் பார்த்தால் ஒரு சிறிய கரப்பான் பூச்சி.

ஆஹா  நம் காதில் இந்தக் கரப்பான் பூச்சி  உள்ளே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற எண்ணமே என்னைத் திடுக்கிட வைத்தது.  பார்த்துக்கொண்டிருக்கும் போதே படுக்கையில் நிறைய கரப்பான் பூச்சிகள் மேயத் தொடங்கின. சற்று நேரத்தில் அந்த அறை முழுவதுமே கரப்பான் பூச்சிகள். அந்த அறையில் இருந்த அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக்கொண்டிருந்தனர். என்னால் தூங்க   முடியவில்லை.
பயணச்சீட்டைப் பரிசோதனை செய்யும் அதிகாரியை அழைத்து, “என்ன இது, இப்படி  கரப்பான் புச்சிகள் இருந்தால் எப்படி தூங்குவது?” என்றேன் நான். அதற்கு அந்த அதிகாரி, “சார் இந்தக் கரப்பான் பூச்சிகளைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். இவை அத்தனையும் வாரணாசி என்னும் புனித ஷேத்திரத்திலிருந்து வந்தவை” என்றார் நமட்டுச் சிரிப்புடன்.

உடனே நான், “அப்படியா! அப்படியானால் இவைகளைக் கையெடுத்து கும்பிடத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டு கைகளை மேலே உயர்த்தி, வாரணாசி கரப்பான் பூச்சிகளுக்கு ஒரு கோவிந்தா போட்டேன்.

அந்த அதிகாரி உடனே சிரித்தார்! சரி எப்படியும் தூங்கப் போவதில்லை இவரிடமாவது  பேசிக்கொண்டிருப்போம் என்று அவர் வேலைகளை  முடித்துவிட்டு வரும் வரையில் காத்திருந்தேன். அவரும் வந்து  நட்பு முகத்துடன் என் பக்கத்தில் அமர்ந்தார். “என்ன சார் செய்ய முடியும் நீங்க என்கிட்ட சொல்றீங்க. நான்  மேலிடத்தில் சொல்ல முடியும். அவ்வளவுதான் என்றார். ஆனால் மேலிடத்திலும் அவர்கள் மிக அக்கறையுடன் பொறுப்பாகத்தான் செயல்படுகிறார்கள். குறிப்பாக இந்தப் பெட்டி வாரணாசியிலிருந்து வந்த  தொடர் வண்டியிலிருந்து பிரித்து, பெங்களூர் செல்லும் இந்த வண்டியுடன் இணைத்திருக்கிறார்கள்.

“நீங்களே  யோசித்துப் பாருங்கள். வாரணாசியிலிருந்து வரும் தொடர் வண்டியில் பிரயாணம் செய்வோர் அனைவருமே தொடர்வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே  உணவுப் பொருட்களை உண்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் மீதமாகும் உணவுப் பொருட்களை அதற்குண்டான குப்பைத் தொட்டியில் போட்டால் நல்லது. அப்படியில்லாமல் கண்ட கண்ட இடங்களில் போடுகிறார்கள், அந்த உணவுப் பொருட்களை மோப்பம் பிடித்துக் கரப்பான் பூச்சிகள் வருகின்றன. அரசாங்கத்தையே குறை கூறிக்கொண்டிருப்பதை விடுத்து நாமும் நம்முடைய பொறுப்பை உணர்ந்து  நடந்துகொண்டால் ஓரளவு சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அதன் மூலமாக ஆரோக்கியத்தையும் நாம் பெற முடியும்” என்றார்.

“ஆமாம், தொடர் வண்டியில் இணைக்கப்படும் பெட்டிகளைச் சுத்தப்படுத்துகிறீர்களே. பிறகும் எப்படி இந்தக் கரப்பான் பூச்சிகள் வருகின்றன?”  என்றேன்.

“சார், இந்தப் பெட்டிகளை எல்லா ஜன்னல்கள், கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு ஒரு குறிப்பிட்ட சிறிய மாத்திரையை வைப்பார்கள். அந்த மாத்திரை சற்று நேரத்தில் காற்றில் கரைந்து ஒருவிதமான ரசாயன மாற்றம் ஏற்படுத்தி, அந்தப் பெட்டியில் உள்ள அனைத்துக் கரப்பான் பூச்சிகளையும் கொன்றுவிடும். அதன் பிறகு குறிப்பிட்ட நேரம் கழித்து, இந்தப் பெட்டியைச் சுத்தம் செய்வார்கள். அதன் பிறகே இந்தப் பெட்டிகளை இணைக்கிறோம்” என்றார்.

“சரி, இவ்வளவு செய்தும் கரப்பான் பூச்சிகள் இருக்கிறதே எப்படி?” என்றேன் நான். அதற்கு அவர், “அதுதான் விசேஷம், நாம் செய்த  புண்ணியம், பெட்டிகளை ஜன்னல், கதவுகள் எல்லாம் மூடலாம். ஆனால் இந்த இணைப்புப் பெட்டிகள் மொத்தமாக இருக்கும் மிகப் பெரிய இடமான கேரேஜில் இந்த மாத்திரைகளை வைத்து மூடிவைக்க முடியாது. அங்கே  உணவுப் பொருட்கள் இருக்கும் இணைப்புப் பெட்டிகளை நோக்கி இந்தக் கரப்பான் பூச்சிகள் படையெடுத்து ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியாது. இந்தப் பெட்டி வாரணாசியிலிருந்து வந்தவுடன் அதிலிருந்து  பிரித்துச் சுத்தம் செய்ய நேரமில்லாமல் உடனே  இந்த  ரெயிலுடன் இணைக்கப்பட்டதால் நம்மால் வாரணாசி கரப்பான் பூச்சிகளைத் தரிசனம்  செய்ய முடிந்தது. அது நம் கொடுப்பினை என்றார்.”

வெகு வேகமாக விரைந்துகொண்டிருந்த வண்டி, அப்போது காமசமுத்ரா என்னும் ஸ்டேஷனைக் கடந்து சென்றது. இந்தக் காமசமுத்ரத்தில் நாம் என்ன செய்தாலும் சில விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பது புரிந்தது.

பயணச்சீட்டுப் பரிசோதகர், “நான் மீண்டும் ஒரு முறை உள்ளே சென்று என்னிடம் புகார் கொடுப்பவர்களைச் சந்தித்து  வருகிறேன். நீங்கள் இந்த வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் மகத்துவத்தை உணர்ந்து யோசித்துப் பாருங்கள்” என்று கூறிவிட்டுப் போனார்.

நானும் வாரணாசியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். வருணா, அசி  என்னும் இரு நதிகள் சங்கமிக்கும் இடமாக இந்தப் பகுதி அமைந்திருப்பதால், இந்த இரு நதிகளின் சங்கமத்தால் வாரணாசி என்னும் பெயர் பெற்றது. இந்த இடத்தில், புகழ் பெற்ற காசி விஸ்வநாதர். ஆலையத்தில் சைவர்கள் வழிபடும்  பன்னிரண்டு லிங்கங்களுள் ஒரு முக்கியமான லிங்கமான ஜோதிலிங்கம் இருக்கும். இந்த ஷேத்திரம்  உத்திரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்துவும் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்குச் சென்று, அங்கே  உள்ள கங்கையில் நீராடி புனித ஸ்தலங்களைத் தரிசித்து வந்தால் முக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பட்ட ஷேத்திரமான காசிக்குச் செல்லும்போது தாங்கள் மிகவும் விரும்பும் ஏதேனும் ஒன்றை இனி வாழ்நாளில் உபயோகப்படுத்த மாட்டேன் என்னும் உறுதி எடுத்துக்கொள்வது வழக்கம்.

சூரிய வம்சத்தில் தோன்றிய சகரன் என்னும் மன்னன், அஸ்வமேத யாகம் செய்தான். இதைக் கண்ட இந்திரன், தன்னுடைய இந்திர பதவி பறிபோய்விடுமோ என்று பயந்து, அச்வமேத யாகத்துக்கு என்று தேர்வு செய்து வைத்திருந்த குதிரையைத் திருடிக்கொண்டு போய், இமாலயத்தில் தவம் இயற்றிக்கொண்டிருந்த கபிலர் என்னும் மஹாமுனியின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தான். இதை அறியாத மன்னன் சகரனின் புதல்வர்கள் அஸ்வமேத யாகத்திற்கு வைத்திருந்த குதிரையைத் தேடிக்கொண்டு வரும்போது அந்தக் குதிரையை கபிலரின் ஆஸ்ரமத்தில் கண்டு அவர்தான்  அந்தக் குதிரையை திருடிக்கொண்டுவந்து கட்டி வைத்திருக்கிறார் என்று தவறாக எண்ணி அவரைத் துன்புறுத்தினர். ஒரு தவரும் செய்யாத  கபிலர் கோபமடைந்து மன்னன் சகரனின் பிள்ளைகளையும், அவர்களுடன் வந்த அனைவரையும் தன் தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். இதை அறிந்த சகரன் மிகவும் விரக்தி அடைந்து, அவனுடைய பேரன் அம்சுமானுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் அடைந்து தவம் செய்து, சொர்க்கம் புகுந்தான்.

கபில முனிவரின் கோபத்துக்கு ஆளான இளவரசர்கள் யாருக்குமே முக்தி கிடைக்கவில்லை. அம்சுமான் மன்னனின் அரண்மனைக்கு வந்த தவஸ்ரேஷ்டர்கள் கபிலரின் தவ வலிமையால் எரிந்து போனவர்களின் சாம்பலின் மீது தேவலோகத்தில் பிரவகிக்கும் கங்கையின் நீரைத் தெளித்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறியதால் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் செய்தான். ஆனால் அவனால் இயலாமல் போனது. அம்சுமானின்  குமாரன் அசமஞ்சன் தானும் பெரு முயற்சி செய்தான். அவனாலும் முடியவில்லை. அசமஞ்சனின்  குமாரன் பகீரதன், அந்த முயற்சியைத் தொடர்ந்தான்.

பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வரும் நோக்கில் கடுந்தவம் செய்தான். இதைத்தான் பகீரதப் பிரயத்தனம் என்பர். அவனது தவத்தை ஏற்று, கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன. இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.

காசிக்கு போவது என்பது அந்தக் காலத்தில் மிகவும் கடினமான  ஒரு செயல். பிரயாணம் மட்டுமல்ல, காசிக்குப் போவதற்குக் கொடுப்பினை இருந்தால்தான் போய்வர முடியும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத ஒரு ஆன்மீக நம்பிக்கை.

ஒன்று மிக நன்றாகப் புரிந்தது! கொடுப்பினை இருந்தால்தான் வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் தரிசனமும் கிடைக்கும். ஆமாம் என்னைத் தவிர அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மேல் வாரணாசிக் கரப்பான் பூச்சிகள் வர்ண பேதமில்லமல், ஜாதி வித்தியாசம் பார்க்காமல், ஆண் பெண் பேதமில்லாமல், கீழ் ஜாதி, மேல்ஜாதி பேதமில்லாமல், வர்ணாஸ்ரம தர்மங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

நான் வாரணாசிக் கரப்பான் பூச்சிகளையும், அவை ஊர்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரையுமே ஒரு வித பயத்துடன், பக்தியுடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வாரணாசிக் கரப்பான் பூச்சிகள்

 1. Arumai ! 🙂 idho ingayum onnu odi kondu irukirathu.. itharkku sontha ooru ethuvo..irunthaalum oru kumbidu pottu veikiren 😛

 2. தமிழ்த்தேனீ ஐயா,

  கரப்பான் பூச்சிகளை வைத்து ஒரு நல்ல கட்டுரை எழுதி உள்ளீர்கள்.

  படிக்கவும் நல்ல சுவையுடன் இருந்தது.

  கரப்பான் பூச்சிகளுக்கு நீங்கள் போட்ட கும்பிடு நல்ல நகைச்சுவை.

  அன்புடன்,

  தி.பொ.ச.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *