சாம்பலை உடம்பில் பூசி……….

0

விசாலம்

Vishalamஅந்தக் காலத்தில் இருந்த வீரத் தாய்மார்களை இப்போது காண முடிவதில்லை. பள்ளியில் மாணவனைக் கொஞ்சம் கோபித்துக்கொண்டால் போதும் ஆசிரியருடன் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். பெற்றோர்கள் செல்லம் அதிகம் கொடுக்கிறார்களோ? அல்லது அவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் செல்வங்களுடன் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையினால் குழந்தைகள் கேட்டது எல்லாம் வாங்கித் தருகின்றனரோ?

தில்லியில் லோகமான்ய திலக் ஜெயந்தி, ஆகஸ்டு ஒன்றாம் தேதி விமரிசையாக நடக்கும். எல்லா மராட்டியர்களும் அதில் பங்கு ஏற்பார்கள். அத்துடன் சில மந்திரிகளும் வருவார்கள். நாங்களும் மாணவ மாணவிகள் சிலரை அழைத்துக்கொண்டு காலை 8 மணிக்கு லோகமான்ய திலக் அவர்களின் சிலைக்குப் போய் மாலை அணிவித்து வணக்கத்துடன் மரியாதை செலுத்துவோம். குழந்தைகளுக்குத் தேசபக்தி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் ஒரு தடவை  மிகவும் வெப்பத்துடன் புழுக்கமும் சேர்ந்து ஒரு மாணவன் மயக்கமுற்று கீழே சாய்ந்தான். அவனை ஓடிப் போய் தாங்கி, பின் எலக்ட்ரால் கொடுத்து, கொஞ்சம் பிஸ்கட்டுகளும் கொடுக்க, அவன் பழைய நிலைமைக்கு வந்தான்.

ஆனாலும் அவன் வீட்டில் இது தெரிய, அவனது தாய் “நல்ல தேசபக்தி கத்துக் கொடுப்பது! அந்த திலக்ஜியைப் பற்றித் தெரிந்து கொண்டால் இந்தியா சரியாகிவிடுமா!  எல்லாம் நேரமும் வேஸ்ட். என் குழந்தை மயக்கம் போட்டு விழுந்தானாம்” என்று கன்னா பின்னா என்று பள்ளிக்கு வந்து திட்டினாள். அவள் குழந்தை என்று சொன்னது ஒன்பதாவது படிக்கும் மாணவன் தான். எத்தனை வயதானாலும் தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே!

அந்தத் தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று எனக்கு தெரியுமாதலால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டிலும் தேசப் பற்று மிகுந்து தேசத்திற்காகத் தியாகம் செய்த திருப்பூர் குமரன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயரை விரட்டிய கட்டபொம்மன்….. இதுபோல் எத்தனை பேர் இருந்தார்கள்!

ஆனாலும் சர்தார்ஜி பஞ்சாபிகள் போல் வீரம், தீரம் ஊட்டி வளர்க்கும் தாய், தமிழ்நாட்டில் அத்தனை இல்லையோ எனத் தோன்றுகிறது.  தீபாவளியின் போது சர்தார்ஜியின் இரண்டு வயது குழந்தையின் கையில் பட்டாசு இருக்கும். நம்மைப் போல் பார்ப்பவர்களுக்கு மனம் திக் திக் என்று இருக்கும். ஆனால் சர்தார்ஜி குடும்பம் கவலையே படாது.

தெருவைத் தாண்டிப் போகும் போதும் தமிழ் அன்னை “கையைப் பிடிச்சுக்கோடா செல்லம்” என்று அந்தப் பையனின் கையைப் பிடித்து அழைத்துப் போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பஞ்சாபிக் குழந்தை, கையைப் பிடித்தாலே உதறிவிடும். அத்துடன் அந்தக் குழந்தையின் பெற்றோர்களும் மிகவும் கோழையாக வளர்க்க விரும்பமாட்டார்கள். இதை  நினைக்கும் போது எனக்கு ஒரு வீரத் தாயின் கதை ஞாபகம் வருகிறது. அந்த வீரத்தாய் தன் மகனின் அஸ்தியை என்ன செய்தாள் தெரியுமா?

ஒருவன் இறந்துவிட்டால் அவனுடைய சாம்பல், நல்ல நதியில் தூவப் படுகிறது. சிலர் காசிக்குச் சென்று கங்கையில் கரைப்பார்கள். அன்னை இந்திரா காந்தி அவர்களின் அஸ்தி இமயமலையிலும் கூட ஹெலிக்காப்டரில் எடுத்துச் சென்று மேலிருந்து தூவினார்கள். ஆனால் ஒருவனது சாம்பலை அந்தக் கிராமத்தில் இருக்கும் இளம் தாய்மார்கள் ஒவ்வொருவரும் தங்கள் வயிற்றில் பூசிக்கொண்டார்கள். ஏன் என்றால் தங்களுக்கும் இது போல் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பதால் தான்.

Bhagat Singhஆம், அந்த வீர மகன், எல்லோராலும் போற்றப்பட்ட மகன், நாட்டுக்காகத் தன் உயிரையே கொடுத்தத் தியாகி இளஞ்சிங்கம் ஸர்தார் பகத் சிங் தான்.

1931இல் மார்ச் 23ஆம் தேதி, பகத் சிங்கைத் தூக்கிலிட்டு, பின் வெள்ளையர்கள் அவனை எரித்த சாம்பலை அவன் தாய்க்கு அனுப்பி வைத்தனர்.  அந்த வீரத் தாயைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தூக்குத் தண்டனையிலிருந்து தப்ப, பாவம் அந்தத் தந்தை மனம் சோர்ந்துபோய் ஒரு கருணை மனு கொடுத்தால் மகனைக் காப்பாற்றலாம் என்று வக்கீல் சொல்லக் கேட்டு, ஒரு மனு பத்திரம் வாங்கியும் வந்தார். தன் மனைவியைக் கூப்பிட்டார்.

“பகத் சிங்கின் தாயே, நமக்கு நம் மகன் வேண்டாமா? இந்தக் கருணை மனுவில் ஒரு கையெழுத்துப் போடு. நான் போட்டுவிட்டேன். நீதான் பாக்கி” என்று அந்தப் பத்திரத்தைக் கொடுத்தார். அந்தத் தாய் அதை வாங்கிப் பொறுமையாகப் படித்தார். பின் சுக்குக் சுக்காகப் பத்திரத்தைக் கிழித்துப் போட்டார்.

“மானமில்லையா எனக்கு? வெள்ளையினிடம் போய் உயிர்ப்பிச்சை கேட்க வேண்டுமா? என் மகன் வெள்ளையனுக்கு எதிராக நின்று ஜெயித்து  வெள்ளையனை வீழ்த்தினான் என்ற பெருமையிலே அவன் சாவதை நான் விரும்புவேனே தவிர, கருணை மனுவைப் பெற்று உயிர் வாழ்வதை நான் விரும்ப மாட்டேன். அவன் கோழையில்லை, வீரன். என் மகன் வீரன். அவன் புகழோடு மடிவதைப் பார்த்தாலும் பார்ப்பேன். வெள்ளையன் தயவில் உயிருடன் அலைவதை ஒருக்காலும் விரும்ப மாட்டேன்”

ஆஹா, இப்படி ஒரு தாயா? இரண்டு கரங்களையும் கூப்பி, வணங்கத் தோன்றுகிறது அல்லவா?

========================

படத்திற்கு நன்றி: வி்க்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.