அண்ணாகண்ணன்

Annakannan

அண்மையில் சென்னையில் நான் பங்கேற்ற நிகழ்வுகள் சிலவற்றை இங்கே பதிகிறேன்

========================================

சென்னை பெரியார் திடலில் 26.08.2010 அன்று  நிகழ்ந்த பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1794ஆம் நிகழ்வுக்குச் சென்றேன். ஒரிசா சிவ.பாலசுப்பிரமணியன் பி+, ‘குமரிக் கண்ட கடலியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில் காட்சியுரையுடன் பேசினார். கடலில் தமிழர் நிலத்தின் பல பகுதிகள் மூழ்கியுள்ளன என்றும் அது தொடர்பான தம் ஆய்வின் வளர்ச்சிப் போக்குகளையும் எடுத்துரைத்தார். கடலில் ஆமைகளைப் பின்தொடர்ந்து தமிழர்கள் சென்றனர் என்றார். உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைச் சான்று காட்டினார்.

மக்களின் நம்பிக்கைகளையும் பதிந்தார். தேரி மண் கொண்ட மக்களிடம் உங்கள் மண் ஏன் சிவந்துள்ளது எனக் கேட்டதற்கு, கடலில் உள்ள ஒரு தீவு பொசுங்கியதால் அந்த வெப்பத்தில் இந்த மண் சிவந்துவிட்டது எனக் கூறினார்களாம். தமிழகக் கடலோரத்தை ஒட்டி, எரிமலை இருந்ததற்கான வாய்ப்புகளை மறுக்க இயலாது என்றார்.

========================================

சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 28-08-2010 அன்று நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கில் பங்கேற்றேன். காட்சியுரையுடன் சொற்பொழிவு்கள் அமைந்தன. கட்டற்ற மென்பொருள்களை அடுத்து எந்தெந்தத் துறைகளுக்கு விரிவாக்கலாம் என மா.சிவகுமார் அடையாளம் காட்டினார். குமரகுருபரர் கல்லூரி மாணவர்கள் தமிழ் சார்ந்த சில திட்டங்களை மேற்கொண்டு வருவதை முனைவர் முத்துக்குமார் கூறினார்.

உரை-ஒலி, ஒலி-உரை மாற்றி, எழுத்துணரி, எழுத்துப் பெயர்ப்பு – மொழிபெயர்ப்பு, கட்டற்ற தமிழ்த் தரவு…. உள்ளிட்ட தலைப்புகளில் பலரும் உரையாற்றினர்.  ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் (ஆமாச்சு) ஒருங்கிணைத்தார்.  என் ஆலோசனைகள் சிலவற்றையும் வழங்கினேன்.

இந்த நிகழ்வு தொடர்பான நிழற்படங்கள் இங்குள்ளன:

* http://www.flickr.com/photos/saga123/archives/date-taken/2010/08/28/

* http://picasaweb.google.com/viky.nandha/TamConf?authkey=Gv1sRgCOOSg5aGjfnyjAE

========================================

எழுத்தாளர், நண்பர் ஜெயகுமார் (கார்கில் ஜெய்) – ஜெயலட்சுமி (ஜெயா) ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னை நங்கநல்லூரில் 2010 ஆகஸ்டு 28 அன்று மாலை நடைபெற்றது. நான் நேரில் சென்று வாழ்த்தினேன். 29 அன்று காலை இவர்களின் திருமணம் நடைபெற்றது. இளம் இசைக் கலைஞர் ஒருவர் சிறப்பாகக் கீபோர்ட் வாசித்தார். மணமக்கள் நீடூழி வாழ்க.

========================================

எழுத்தாளர், நண்பர் ஜே.எஸ்.ராகவனின் மகன் பாலச்சந்தர் – கிருத்திகா ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னையில் 30.08.2010 அன்று நடந்தது. என் அம்மாவுடன் நேரில் சென்று வாழ்த்தினேன். அடாது மழை பெய்தாலும் விடாது சென்று வாழ்த்தினோம். நண்பர்கள் பலரையும் சந்தித்து மகிழ்ந்தேன்.

========================================

எழுத்தாளரும் ஊடக நண்பருமான இரா.நாகப்பனின் தங்கை ரேவதி – பூபாலசந்திரன் ஆகியோரின் திருமணம், 27.08.2010 அன்று நடந்தது. அதற்கு நேரில் செல்ல இயலாமையால், 30.08.2010 அன்று, அவர்களின் வீட்டிற்குச் சென்று நானும் என் அம்மாவும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

========================================

அம்பத்தூர் கம்பன் கழகத்தி்ன் 20ஆம் நிகழ்ச்சி, 31.08.2010 அன்று மாலை நிகழ்ந்தது.

முனைவர் சங்கீதா பழனி, ‘இளைஞர்க்குக் கம்பன்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். குடி இன்பமே குடும்பம் ஆயிற்று எனப் போகிற போக்கில் கூறிச் சென்றது, புதுமை. அன்பு, ஒழுக்கம், விருந்தோம்பல்… உள்ளிட்ட சிலவற்றைக் கம்பனிடமிருந்து இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என எளிய கதைகளுடன் பேசினார்.

பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ‘கம்ப சூத்திரம்’ என்ற தலைப்பில் சொற்பெருக்கு ஆற்றினார்.  கம்பன், முடிச்சினை ஓரிடத்தில் இட்டுவிட்டு, அதனை அவிழ்க்கும் விதத்தினை ஆறாயிரம் பாடல்களுக்கு அப்புறம் வைத்துள்ளான் என்றார். இதற்குச் சில எடுத்துக்காட்டுகளையும் அழகுற விரித்துரைத்தார். கம்ப ராமாயணத்தை உரை வழியே அல்லாது. மூலத்தி்ல் படித்துப் புரிந்துகொள்ளும் தம் வழக்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.

மண் என்பது இறுகியது; அவ்வாறு அல்லாதது (மண் + அல்) மணல்; ஊழ் என்பது விதிப்படி நடப்பது; விதிப்படி அல்லாதது (ஊழ் + அல்) ஊழல் என்ற அவரின் விளக்கம் அருமை.

அது போன்றே, சத்தியம் என்பது இயல்பாக இருப்பது. அதனை வாயால் உரைப்பது வாய்மை; உள்ளத்தால் உரைப்பது உண்மை; மெய்யால் (அதாவது செயலால்) உரைப்பது மெய்மை என்றார். வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் இணைந்ததே சத்தியம் என்பதை எளிமையாக விளக்கினார்.

கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன், வரவேற்புரை ஆற்றினார். செல்வி சரண்யா இறை வணக்கம் இசைத்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பர்வீன் சுல்தானா பரிசுகளை வழங்கினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *