கீதா சாம்பசிவம்

Geetha Sambasivamகண் முன்னே விதவிதமாய்ப் பட்டாடைகள். எல்லாம் புடைவைகளே. பல நிறங்களில் ஜொலித்தன. அனைத்தும் நல்ல தரமான காஞ்சிப் பட்டு, ஆரணிப் பட்டு, மைசூர்ப் பட்டு போன்றவை. ஒன்றில் நிறம் நன்றாயிருந்தால் இன்னொன்றில் பார்டர் கண்ணைப் பறித்தது. வேறொன்றில் தலைப்பு தூக்கி அடித்தது. அப்பாவுக்கு எல்லாத்தையுமே சுதா விரும்பினாலும் ஒண்ணும் நஷ்டம் இல்லை. எடுத்துக் கொடுக்கத் தயாராகவே இருந்தார்.  கடைக்காரரும் சுதாவைச் சமாதானம் செய்யும் நோக்கில், “இப்போவே இருந்து வாங்கினால் தான் நாளைக்குக் கல்யாணம் ஆகும்போது பட்டுப் புடைவைகள் நிறைய இருக்கும் பாப்பா. எடுத்துக்கோ, அதான் அப்பா சொல்றார் இல்லை?? இப்போல்லாம் தீபாவளிக்கு நல்ல பட்டு யார் எடுக்கிறாங்க? எல்லாம் பாலியெஸ்டர் பட்டிலேயும், கல்யாணி காட்டன்னு வர பொய்ப் பட்டிலேயும் போய் விழறாங்க. உன்னோட அப்பா பார், நல்ல காஞ்சிப் பட்டே எடுத்துத் தரேன் என்கிறார்” என்றார்.

சுதா அசையவே இல்லை. ஒன்பதாம் வகுப்பு முடித்துப் பத்தாம் வகுப்பினுள் நுழைந்திருக்கும் சுதா, வயதுக்கு வந்து சில மாதங்களே ஆகி இருந்தன. அந்த வருடக் கோடை விடுமுறையின் போது வயதுக்கு வந்திருந்தாள். படிப்பு சம்பந்தமாக எது கேட்டாலும், அவளுடைய சகோதரர்களுக்குக் கிடைக்கிறாப் போல் சுதாவுக்கு அப்பா வாங்கித் தர மாட்டார். கேட்டால், “நீ படிச்சு என்ன செய்யப் போறே? நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரியறதே! அதுவே ஜாஸ்தி! நீ வயசுக்கு வந்ததும் பள்ளிக்கு அனுப்பினாத் தானே!  கல்யாணம் பண்ணிக் கொடுத்தா என்னோட கடமை முடிஞ்சது. அப்புறம் உன் பாடு, உன் புருஷன் பாடு!” என்று சொல்லிவிடுவார். சகோதரர்களை விடவும் அவளுக்குப் படிப்பு நன்றாகவே வந்தது. ஆகையால் வயதுக்கு வந்ததில் இருந்தே சுதாவுக்குப் பள்ளிக்குத் திரும்ப அப்பா அனுப்புவாரா, மாட்டாரா என்று சந்தேகமாய் இருந்த சூழ்நிலையில் பள்ளிக்குச் சென்று வருவதே பெரிய விஷயம் தான்.

அப்பாவுடன் திடீரென ஏற்பட்ட இந்த விரோதத்தால் நிலை குலைந்தது சுதாதான். தான் வயதுக்கு வந்த விஷயம் அவ்வளவு பெரிய ஒன்றா?? ஊரில் உள்ள பெண்கள் அனைவருக்குமே இது நடக்கும் தானே? சுதாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் ஒருவேளை தீபாவளிப் பண்டிகைக்குத் துணி எடுக்கும் விஷயத்தில் அப்பா கொஞ்சமானும் விட்டுக் கொடுப்பார் என்றே எதிர்பார்த்தாள். அவள் சிநேகிதிகள் அனைவருமே பாவாடை, தாவணி அல்லது சல்வார், குர்த்தா, துப்பட்டாவுடன், இன்னும் சிலர் நவநாகரீக உடையான காக்ரா, சோளி என்று எடுத்திருந்தனர். அவள் என்ன கேட்டாள்? அப்பா நிச்சயமாய் சல்வார், குர்த்தாவுக்கு அநுமதி தரப் போவதில்லை. ஆகையால் பாவாடை, தாவணி தானே கேட்டாள்? அதை எடுத்துக் கொடுத்தால் என்ன?? இந்தப் புடைவைகளை விடவும் அவை விலை குறைவு, மலிவு என்பதோடு அப்பாவுக்கும் பணம் மிச்சம். ஆனால் அப்பாவோ விடாப்பிடியாக இருந்தார். சுதாவும் விடவில்லை. கடையிலேயே வைத்துச் சொன்னால் தான் சரி என்ற தீர்மானத்திற்கு வந்தவள் போல, “எனக்குத் தீபாவளிக்குப் பாவாடை, தாவணி எடுக்கலைனா துணியே எடுக்கவேண்டாம். என்னிடம் இருப்பதிலேயே நல்லதாய் உடுத்திக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டாள். அங்கே அந்தச் சூழ்நிலையில் கடைக்காரர் முன் எதுவும் பேசமுடியாமல் அப்பா, அவள் கேட்டாற்போலவே பாவாடை, தாவணி எடுத்துவிட்டார்.

தீபாவளி அன்று ஒருநாள் தான் அந்தப் பாவாடை, தாவணியை உடுத்தினாள். அதன் பின்னர் பள்ளிக்குச் சீருடையில் போகவேண்டி இருந்ததால் உடுத்த முடியவில்லை. இப்போது பள்ளியில் பரிக்ஷைகள் முடிந்து விடுமுறை விட்டாச்சு. இனி அதை உடுத்தலாம். ஆசையோடு தன் பெட்டியைத் திறந்த சுதா அதிர்ச்சி அடைந்தாள். அங்கே ஒரு பாவாடை, தாவணியைக் காணோம். பெட்டி காலியாக இருந்தது. என்ன ஆச்சு எல்லாம்???  ஒருவேளை அம்மா எங்கேயானும் எடுத்து வைத்திருப்பாளா? ஆனால் அம்மா இதில் எல்லாம் தலையிட மாட்டாள். முடியவும் முடியாது. வீட்டில் அப்பாவுக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. அன்றாட சமையலில் இருந்து, அம்மா எங்கேயானும் கோயில், கடைகள் என்று போவது வரையிலும் அப்பாவைக் கேட்காமல் செய்ய முடியாது. அம்மாவைக் கேட்டால் சொல்லுவாளா?? ஒருவேளை அப்பா ஏதேனும் செய்திருப்பாரோ?? அம்மாவின் புடைவைகளை எல்லாம் கிழித்து எரித்து அமர்க்களம் செய்தாரே அன்றொரு நாள். சுதாவிற்கு அந்த நாள் நினைவில் மோதியது.  அம்மாவும் அப்பாவும் அப்படி ஒன்றும் சுமுகமாய் வாழ்க்கை நடத்தவில்லை என்பதைச் சுதா புரிந்துகொள்ளும்போது அவளுக்குப் பத்து வயது ஆகி இருந்தது. என்ன காரணம் என்றே புரியாமல் அப்பா எல்லாவற்றுக்கும் அம்மாவைக் கன்னா, பின்னாவென்று திட்டித் தீர்ப்பார். சில சமயம் அடிகளும் விழும். அம்மா எப்படிப் பொறுமையோடு இருந்தாள், இருக்கிறாள் என்று சுதாவிற்கு ஆச்சரியமாய் இருக்கும்.

அன்று அம்மா, கோயிலுக்குப் பக்கத்து வீட்டு மாமியுடன் சென்றுவிட்டுத் திரும்பி வந்தாள். கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. கோயிலில் ஏதோ உபந்நியாசம். அந்த மாமி உட்கார்ந்ததால் அம்மாவும் உட்கார வேண்டியதாயிற்று. அப்பாவும் அதே உபந்நியாசத்துக்குச் சென்றிருந்தார் தான்.  ஆனால் கூட்டத்தில் அம்மாவுக்கு வரக் கொஞ்சம் நேரமாயிற்று. அப்பா முன்னால் வந்துவிட்டார். எப்போவுமே தானே எடுத்துப் போட்டுக்கொண்டுதான் சாப்பிடுவார். அது போலத் தான் அன்றும் சாப்பிட்டார். ஆனால் இனம் புரியாத கோபம் அம்மா மேல் பொங்கிக்கொண்டு வந்தது. திட்டிக் கொண்டிருந்தார். அம்மா வீட்டுக்கு வந்தால் அப்பா வீட்டுக் கதவைச் சார்த்திவிட்டார். அம்மா எங்கே போவாள்? சுதா கத்தினாள்! “அம்மாவை உள்ளே விடு!” அது வரைக்கும் அப்பாவின் செல்லம் என்று வர்ணிக்கப்பட்டு வந்த அவள், அன்று ஒரு பெண்ணாக மாறி இன்னொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்ததும், அப்பாவால் கடுமையாகத் தாக்கப்பட்டாள். என்றாலும் அவள் போய்க் கதவைத் திறந்து அம்மாவை உள்ளே விட்டாள். மறுநாள் காலை அம்மாவின் புடைவைகள் உடுத்தி இருந்தது தவிர அனைத்தும் அப்பாவால் எரிக்கப்பட்டுக் கிழிக்கப்பட்டன. அது போல் ஏதேனும் செய்திருப்பாரோ??

ஆனால் அப்பா இப்படிச் செய்கிறார் என்பதை யாரும் நம்பக் கூட மாட்டார்கள். அம்மாவின் புடைவைகளை எரித்ததும் கிழித்ததும் கூட அவர் தான் செய்ததாய்க் காட்டிக்கொள்ளவே இல்லை. அம்மா அஜாக்கிரதையாக விளக்கு ஏற்றும்போதும், அடுப்பில் வேலை செய்யும் போதும் இருந்ததாகச் சொல்லிவிட்டார். அதற்கென வருந்துபவர் போல் முகத்தையும் வைத்துக்கொண்டு அம்மாவுக்காக வெளி உலகுக்குத் தெரியவென உருகினார். அனைவரும் அதுவே உண்மை என நம்பவும் நம்பினார்கள். சுதா அப்போதும், “இல்லை, இல்லை, அவை எல்லாம் அப்பாவால் தான் எரிக்கப்பட்டன!” என்று கத்தினாள். ஆனால் அவள் இவ்வளவு செய்யும் அப்பாவை எதிர்த்துப் பேசுகிறாள். அப்பா கொடுத்த அதிகச் செல்லத்தினால் அப்பாவையே குறை கூறும் அளவுக்கு மாறிவிட்டாள் என்று பெயர் வரும் அளவுக்கு அப்பா அவளைப் பற்றிய கருத்தை அனைவரிடமும் பதிய வைத்துவிட்டார். இது அடுத்த அதிர்ச்சி சுதாவுக்கு.

இப்போது மூன்றாவதாக அவள் உடுத்தும் உடைகளைக் காணோம். கீழே பெரியப்பாவின் குரல் கேட்கிறது. இந்தப் பெரியப்பா இல்லை என்றால் அவளால் படிக்கவே முடியாது. அவளுக்குப் புத்தகங்கள் வாங்கவும், மற்ற பள்ளிச் செலவுகளுக்கும் அவர் தான் பணம் கொடுக்கிறார்.  அப்பாவிடம் பணமே இல்லைனு சொல்ல முடியாது. அதான் சுதாவிற்குப் பட்டுப் புடைவையே வாங்கத் தயாராக இருக்கிறாரே? புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க முடியாதா? ஆனால் அவருக்கு அதில் இஷ்டமில்லை. ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கிக் கொடுங்கனு கேட்டதுக்கு வாங்கியே கொடுக்கவில்லை. அதனாலேயே சுதா கணக்கை முக்கிய பாடமாக எடுத்துப் படிக்க முடியவில்லை. தட்டச்சு, புக் கீப்பிங் போன்ற செக்ரடேரியல் கோர்சில் படிக்க வேண்டி இருந்தது. அதில் வெறும் பொதுக்கணக்குத் தான். இங்கேயும் ஆனால் கிராப் நோட்டு வாங்கணும், அதை எப்படியோ ஒரு மாதிரியா சமாளிக்கிறாள். சுதாவிற்குக் கல்யாணம் செய்து கொடுக்கவேண்டும். அதுதான் அவர் குறிக்கோள். அதையும் பெரியப்பா மூலமே தள்ளிப் போட்டுவிட்டுப் பள்ளிக்குப் போய் வருகிறாள் சுதா. இப்போ அதையும் கெடுத்துவிடுவாரோ? எதுக்கும், பெரியப்பா இருக்கும்போதே அப்பாவிடம் உடைகளைப் பற்றிக் கேட்பது நல்லது என்று தோன்ற, சுதா கீழே சென்றாள்.

“அப்பா, என் பெட்டியிலே இருந்த என்னோட பாவாடை, தாவணி எல்லாம் எங்கே? அதுவும் தீபாவாளிப் பாவாடையை ஒரே தரம் தான் கட்டினேன். திரும்பக் கட்டிக்கலாம்னு பார்த்தால் ஒரு பாவாடை, தாவணியையும் காணோம்” என்று கேட்டாள். அப்பா அர்த்த புஷ்டியாகப் பெரியப்பாவைப் பார்த்துவிட்டுச் சிரித்தார். சுதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவைப் பார்த்தாள். அம்மா உலகத்தின் சோகத்தை எல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். வாய் திறந்து எதுவும் பேசவில்லை. திரும்பவும் சுதா அப்பாவிடம் கேட்க,  அப்பா, உடனேயே, “ஏம்மா, நீ தானே அந்த ரங்கன் பெண்களுக்குக் கொடுத்துடு, நான் இனிமே பட்டுப் புடவைகளோ, இல்லாட்டி டிசைனர் புடைவைகளோதான் கட்டிக்கப் போறேன்னு சொல்லிட்டுக் கொடுக்கச் சொன்னே? மறந்துட்டியா?” அப்பா குரலில் கிண்டல், இளக்காரம், கேலி.
“அடப் பாவி, நீ ஒரு அப்பாவா?” தன்னையுமறியாமல் சுதா கேட்க, அப்பா உடனே, பெரியப்பாவைப் பார்த்து, “அண்ணா, நான் என்ன சொன்னேன் உன்கிட்டே! இவள் போக்கே இப்படித்தான் கொஞ்ச நாட்களா இருக்கு. அவள் தான் கொடுக்கச் சொன்னாள். உடனே எனக்குப் புடைவை வந்தாகணும்னு வேறே சொன்னா. மேல்கொண்டும் படிக்கமாட்டேன், எனக்குக் கல்யாணம் பண்ணிவைனும் சொல்றா அண்ணா! ஆனால் இப்போ உன் எதிரே இப்படி நாடகமாடறா பார்த்தியா?” என்றார். சுதாவிற்குத் துக்கம் பொங்கி வந்தது.

ஓவென்று அழ ஆரம்பித்தாள். அவளை வெறுப்புடன் பார்த்த பெரியப்பா, எழுந்து வீட்டுக்குப் போக, அப்பா, போர்க்களத்தில் வெற்றியடைந்த வீரனைப் போல் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.