கிராமங்கள் விடியலைப் பெறும் தொலை நோக்கு எது?

0

கா இரி சதிஷ்  எம்.ஏ., பி.எட்.

 

     ’இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறுகிறார்.  அப்படிப்பட்ட கிராமங்கள் இந்தியாவில் வாழ்கின்றனவா என்பது ஐயப்பாடே.  கிராமம் கிராமமாகச் சென்று பட்டியலும் புள்ளி விவரங்களும் சேகரித்தாலும் அப்பட்டியல் மற்றும் புள்ளி விவரங்களைக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே.  அப்படி திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் அவை முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்றால் அங்கும் முட்டுக்கட்டை தான் எஞ்சி நிற்கிறது.  ஏன் இந்நிலை ?

     கிராமங்களின் விவசாய வளம்,   மிகவும் அபரிமிதமாக இருக்கிறது.  அதனை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டால் கிராமங்கள் தன்னிறைவை எட்டி பெருத்த நகரங்களுக்கு இணையாக எழுந்து நடை போடும்.  இளைஞர்களில் எத்தனை சதவீதம் பேர் விவசாயத்தை ஒரு பாடமாக எடுத்துப் பயில தயாராக இருக்கிறார்கள்?  இம்மாதிரியான பயிலல் தான் கிராமங்களில் விவசாயப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.  இளைஞர் சார் விவசாய கொள்கை ஒன்று மட்டும் தான் கிராமங்களில் ஒட்டுமொத்த மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

     அரசின் இலவசங்கள் அவர்களின் ஆட்சி சிறப்பை எடுத்துரைக்கின்றன.  அவ்விலவசங்கள் ஏற்றத்தைத் தருமா என்பது எத்தனை அளவு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  அரசு உழைக்கும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தித் தருதல் வேண்டும்.  இத்தகைய முயற்சி முத்தாய்ப்பாக விவசாயத்தில் பின்பற்றப்பட வேண்டும்.

    விவசாயம் சார் படிப்புகளை பொறியியல் படிப்புக்குச் சமமாக எத்தனைக் கல்லூரிகள் தத்தமது கல்லூரிகளில் தொடங்க முன் வருகின்றன.  விவசாயிகள் சேற்றில் கை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை எத்தனைப் பேர் உணர்ந்திருக்கின்றனர்?  தகவல் தொழில் நுட்பம் அத்தியாவசியமான ஒன்று என்ற போதிலும் அதற்காக விளை நிலங்களை ஆக்கிரமித்து தொழில் புரட்சியை ஏற்படுத்துதல் எவ்வகையில் நியாயம் எவ்வகையில் பொறுத்துக் கொள்ள இயலும்?

     விவசாயிகளின் அன்றாட வாழ்வியலை சீர் தூக்கி அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து – தொலை நோக்குச் சிந்தனையை அடியாகக் கொண்டு மரபு சார்ந்த வாழ்வாதாரங்களை பாதிக்காதத் திட்டங்களை அரசு செயல்படுத்திடுதல் விவசாயிகளின் முன்னேற்றப் பாதையைச் சீர் படுத்தும் ஓர் வழியாகும்.

     விவசாயத்தில் மீஉயர் கவனம் செலுத்தும் நாடுகள் தான் தன்னுடைய நாட்டின் வாழ்வியலை உச்ச நிலைக்குக் கொண்டு செல்கின்றன.  மற்ற நாடுகளுடன் போட்டி இடத்தக்க உன்னத நிலையை எய்துகின்றன.  சப்பானியர்களின் சுறுசுறுப்பும் இந்தியர்களின் உடல் உழைப்பும் என்கிற இவ்விரண்டு சூத்திரங்களும் இணையப் பெற்றால் இந்தியா தலை நிமிர்வை எட்டும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை!

     அரசியல், விவசாயத்திற்கு ஊன்று கோலாக இருந்து விவசாயம் வீழ்ச்சியைச் சந்திக்காதவாறு விழிப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.  கல்வியில் விவசாயத்தின் சாயம் மிகுதியும் பூசப்பட்டால் மட்டும் தான் விவசாயம் மறு வாழ்வியலை அடையும் என்பதும் இங்கு எடுத்து வைக்க வேண்டிய மிக முக்கியக் கருதுகோள்!  இத்தகைய நிலையை இலக்காகக் கொண்டு நாம் செயல்படுவோமாயின் கிராமங்கள் சென்னைப் பட்டணத்திற்கு இணையாக புதுத் தோற்றம் பூணும்.

                     ———

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.