இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(114)

செண்பக ஜெகதீசன்

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.   (திருக்குறள்-306: வெகுளாமை) 

புதுக் கவிதையில்…

சேரந்தவரை அழித்துவிடும்
சினமென்னும் நெருப்பு,
அது
உறவு என்னும்
உயிர்த்துணை தெப்பத்தையும்
சுட்டெரித்துவிடும்…! 

குறும்பாவில்…

சேர்ந்தவரையும் அழித்து,
உதவிடும் உயிர்த்தெப்பத்தையும் அழித்திடும்
கோப நெருப்பு…! 

 மரபுக் கவிதையில்…

அருகில் சென்று சேர்ந்தவரை
  –அடியோ டழித்துக் கெடுக்கின்ற
பெருகி வந்திடும் கோபமெனும்
  –பற்றி எரியும் நெருப்பதுதான்,
நெருங்கி உதவிடும் உறவென்னும்
   -நல்ல துணையாம் தெப்பத்தையும்
உருவே சிறிதும் தெரியாமல்
  –ஒன்று மிலாமல் அழித்திடுமே…! 

லிமரைக்கூ…

சினநெருப்பு சேர்ந்தவரைக் கொன்றுவிடும்,
உறுதுணையாம் உறவுத்தெப்பத்தை
அழிப்பதிலும் அதுவேதான் வென்றுவிடும்…! 

கிராமிய பாணியில்…

நெருப்பு நெருப்பு பெருநெருப்பு
நெருங்கினா அழிச்சிடும் பெருநெருப்பு,
கொலத்தக் கெடுக்கும் பெருநெருப்பு
கோவந்தான் அந்தக் கொடுநெருப்பு… 

அது
ஆளமட்டும் அழிக்காது
அடுத்துக்கொடுத்து ஒதவிசெய்யும்
ஒறவுத்தொணயாம் தெப்பத்தயும்
ஒண்ணாச்சேத்து அழிச்சிடுமே… 

நெருப்பு நெருப்பு பெருநெருப்பு
நெருங்கினா அழிச்சிடும் பெருநெருப்பு,
கொலத்தக் கெடுக்கும் பெருநெருப்பு
கோவந்தான் அந்தக் கொடுநெருப்பு…!

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  நன்று.
  இறைப் பணியில் இருப்பதால் தான் சிந்தனை சிறக்கிறது.

  சேர்ந்தாரை உறவை
  அழிக்கும்
  சினம்

  சொல்வனம் மற்றும் கீற்று ஆகிய மின்னிதழ்களையும் பாருங்கள்.

Comment here