உன்னைக்குறைகூறல் நேர்மையாமோ?

மீனாட்சி பாலகணேஷ்

ஏழெட்டுச் சிறுமியர்; தமது வழக்கமான சிற்றில் விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அழகான சிறிய வீட்டைக்கட்டுகிறாள் ஒருத்தி. மலர்களாலும் கிளிஞ்சல்களாலும் சோடனைசெய்கிறாள் இன்னொரு சிறுமி. பக்கத்தில் அழகான பள்ளம் ஒன்றினைத் தோண்டி, அதில் நீரைநிரப்பித் தாமரைக்குளம் அமைத்துவிட்டாள் வேறொருத்தி. தாமரை எனும் பெண் ஓடோடிச்சென்று பக்கத்துக்குளத்திலிருந்து மலர்ந்த தாமரைமலர்கள் இரண்டினைப் பறித்துவந்து அதில் மிதக்கவும் விட்டுக்களிக்கிறாள். எல்லாரும் தாமிழைத்த இச்சிறு வீட்டைச் சுற்றிநின்று பாடிக்களிக்கிறார்கள்: கைகொட்டி ஆடுகிறார்கள்!

‘ஆத்தோரம் வீடுகட்டி, அழகான தோட்டம் வைத்து
பாத்திருந்தோம் கண்ணாலே பரவசமா இந்நாளே!
தாமரைப் பூங்குளமாம் அதிலேதுள்ளும் மீன்களுமாம்
நாமெல்லாம் ஆடிடுவோம் நன்றாகப் பாடிடுவோம்’

திடீரென்று ஓடோடி வருகிறான் ஒரு குறும்புக்காரச்சிறுவன். உயர்ந்து எழும்பி இவர்கள் சிற்றிலைச்சிதைக்கக் காலைத்தூக்கியபடி தாவுகிறான். எல்லாரிலும் பெரியவளான மங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை அவ்வப்பொழுது எதிர்பார்த்தே பழக்கம். தக்கசமயத்தில் சென்று அந்தச்சிறுவனை- அவன் பெயர் குமரன்- பின்புறத்திலிருந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தாவுவதைத் தடுத்துவிடுகிறாள்.
மற்ற சிறுமிகளுக்கெல்லாம் ஒரே ஆத்திரம். அவனை அடிக்காதகுறைதான். அவனோ பெரிய இடத்துக்குழந்தை. வயதிலும் மிகச்சிறியவன். ஐந்தேபிராயம் நிரம்பியவன். அதனால்தான் யோசிக்கிறார்கள். சிவகாமிக்கு அழுகையே வந்துவிட்டது. சிலகணங்களில் அவர்கள் அழகான சிற்றில் சிதைந்திருக்குமே! காலையிலிருந்து முதுகெல்லாம் நோகும்படி, மணலைக்கொழித்துப் பார்த்துப்பார்த்து அமைத்த சிற்றிலல்லவோ?

தன்முயற்சி தடைப்பட்டு விட்டதால், கைகால்களை உதைத்துக்கொண்டு, மங்கையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் குமரனை அவள் இப்போது தன் இடுப்பில் எடுத்துக்கொண்டு, நல்லவார்த்தைகள் சொல்லி, கையில் ஒரு கொய்யாக்கனியைக் கொடுத்து, மரத்துக்கிளியைப் பிடித்துத்தருகிறேன் என ஆசைகாட்டி சமாதானம் செய்கிறாள். மற்ற சிறுமியர் கேட்கின்றனர்: ஐந்துபிராயத்துக் குழந்தைக்குப் புரியுமோ புரியாதோ அவர்கள் சொல்வது; ஆனால் அவன் சிவனின் குமரனல்லவா? பராசக்தி அன்னையின் மைந்தனல்லவா? தகப்பன் சாமியல்லவா? ஏன் புரியாது? அவர்கள் கேட்பதனை நாமும் செவிமடுப்போமா?



“உன்தாய் பெரும் தவம்செய்து உன்னைப் பெற்றெடுத்தாள் குமரா! எல்லாக்கடவுள்களையும் அழைத்துக்காப்பிட்டு உன்னைத் தொட்டிலில் கண்வளர்த்தினாள். நீ தவழ்ந்து உன் திருமுகத்தை நிமிர்த்திச் செங்கீரை மொழிவதனைக்கேட்டும், ஆடுவதனைக்கண்டும் இன்புற்றாள். தாலாட்டுப்பாடி உறங்கவைத்தாள். பின் நீ எழுந்து உட்கார்ந்த பருவத்தில் உன்னை இருகரங்களையும் குவித்துச் சப்பாணி கொட்டவைத்தாள் அல்லவோ? உன் கொழுவிய சிவந்த கன்னங்களில் முத்தமிட்டும் மகிழ்ந்தாள். நீ நடைபழகும் காலத்தில், “அப்பா வா,” என உன்னை அழைத்து, கொஞ்சிக்குலாவி மகிழ்ந்து எடுத்து அணைத்துக்கொண்டாள். உனக்கென்ன குறைவைத்தாள்? ஒன்றும் இல்லை.

“பின்னர் அந்திப்பொழுதில் வானில் உலாவரும் அம்புலியைக் காட்டிச் சோறும் ஊட்டினாள். நீ சிறிது வளர்ந்ததும், வெளியே வீதியில்போய் விளையாடி வா அப்பா என்று உன்னை அனுப்பிவைத்தும் விட்டாள். உன் குறும்புப்புத்தியை அவளறியாது இருப்பாளா என்ன? இவ்வாறு எங்கள் சிற்றிலைச் சிதைக்க நீ முயன்றதனால் உன்னை எதற்காகக் குறைகூறுவது? இவ்வாறு உன்னை வளர்த்த தாயையல்லவோ நாங்கள் நொந்துகொள்ள வேண்டும்? இப்போதாவது கூறுகிறோம். அவள் அன்னை பராசக்தி; அவளை ‘பிள்ளையை வளர்த்த அழகைப்பார்,’ என்று குறைகூறுதல் நன்றாகவா இருக்கும்? குறுக்குத்துறை எனும் இவ்வூரில் வாழும் நிமலனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என வேண்டுகின்றனர்.

குறுநகைபுரியும் இளங்குமரன் இவர்கள் வேண்டுதலுக்கு இரங்கமாட்டானா என்ன?

முந்தித் தவமே புரிந்துன்னை
முயன்று பெற்றுக் காப்பாற்றி
முகமே தூக்கிச் செங்கீரை
மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
குந்திக் கரத்தால் சப்பாணி
கொட்டச் செய்து முத்தமிட்டுக்
கூவியழைத்து வருகவெனக்
கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
அந்திப் பொழுதைக் கடந்துவரும்
அம்பு லிகாட்டிப் பின்னருனை
ஆடி நீவா எனமறுகில்
அனுப்புந் தாயர் தமைவிடுத்து
நொந்திங் குன்னைக் குறைகூறல்
நேர்மை யாமோ உணர்ந்திதனை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
நிமலா சிற்றில் சிதையேலே
(குந்தி- அமர்ந்து; மறுகில்- வீதியில்)

(குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

~~~~~~~~~~

சரி; கதையிலிருந்து இலக்கியத்துக்குள் சிறிது புகுவோம். பெண்கள் கூற்றாக, சிற்றில்பருவத்துப் பிள்ளைத்தமிழ்ப்பாடலை இயற்றிய புலவர் வித்துவான் தி. சு. ஆறுமுகம் சிவதாசன் ஆவார். இது குறுக்குத்துறையில் வாழும் முருகப்பிரான்மேல் இயற்றப்பட்டது. இப்பாடலின் இலக்கியநயம் யாதெனில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் எட்டாவது பருவமாக அமையும் சிற்றில்பருவத்திற்கு முன்பு ‘சிற்றிலை அழிக்காதே’ எனச்சிறுபெண்கள் வேண்டும் பாடலில், இயல்பாகவே வரும்விதத்தில் பிள்ளைத்தமிழின் மற்ற முதல் ஏழுபருவங்களையும் (காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழுபருவங்கள்) வரிசைப்படுத்திக் கூறியிருப்பதுதான். பாடலின் பொருளோடு இவை இயைந்து வருவது அருமையிலும் அருமை. இவ்விலக்கிய நயங்களுக்காகவே பிள்ளைத்தமிழ் நூல்களை ஊன்றிப்படிக்கவேண்டும்!

~~~~~~~~~

இளங்குமரனைக் கண்ணுற்ற சிறுமியருக்கு அவன்பால் தாய்ப்பாசம்தான் மிகுகிறது! “ஏதோ அறியாப்பிள்ளை! சிற்றிலை அழிக்க முற்பட்டான். போனால் போகட்டும். நம்முடன் விளையாடச் சேர்த்துக்கொள்வோம்,” என்கிறாள் சிவகாமி.

“வா குமரா! எங்களுடன் அமர்ந்து நாங்கள் சமைத்த இந்தச் சிறுசோற்றை உண்டு மகிழ்வாய்.” என்று பெருந்தன்மையுடன் விருந்தோம்புகிறாள் செங்கமலம். அவள், தன்அன்னை இவர்கள் சிற்றில் விளையாட்டிற்காகவெனப் புதியதாகச் செய்தளித்த வெல்லப்பணியாரம், கடலைச்சுண்டல் முதலானவற்றை, வட்டிலில் கொண்டுவந்திருக்கிறாள். மங்கை புளியஞ்சோறு கொண்டுவந்திருக்கிறாள். விளையாட வரும்வழியில் தகப்பன்மார்களைக்கேட்டு, தோட்டத்திலிருந்து சில மாங்கனிகளையும், இளம் நுங்குகளையும் கூடக்கொணர்ந்துள்ளனர் இச்சிறுமியர். திட்டமிடுவதில் தம் தாய்மார்களையும் விஞ்சிவிட்டனர்போலும்! இலைகள் போடப்பட்டு பரிமாறப்பட்ட உணவு சிறுவர்கள் வாயில் நீர் ஊறச்செய்கிறது! ஆனந்தத்தை உண்டுபண்ணி, பகையை மறக்கச்செய்து, கூடியிருந்து உண்ணச் செய்கிறது.

“ஆமாமடா குமரா, சிற்றிலை அழிப்பதனைமட்டும் செய்யவேண்டா! உண்டு களிப்பாயாக. நாங்கள் செய்த பலவிதமான தின்பண்டங்களை முதன்முதலில் உனக்குத்தான் படைக்கிறோம் தெரியுமா? நாங்களே இன்னும் தின்றுபார்க்கவில்லை. எங்களுக்கு உன்மீது எத்துணை அன்பு (பக்தி) பார்த்தாயா? எங்கள் சிறுவீட்டினை அழிக்காதேயப்பா,” என்கிறாள் தாமரை.

சிவகாமி குறும்பு கொப்பளிக்க, “ஒருமுறை இந்தப் பண்டங்களை நீ உண்டுவிட்டாயானால் போதும்; பின்பு, நாங்கள் எப்போது திரும்பச் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்து உண்போம் என மறுபடியும் மறுபடியும் நீயே கேட்பாய் முருகா! அத்துணை சுவைமிகுந்தவை இவையாம்,” எனக்கூறி நகைக்கிறாள்.

“அவனைப் பக்கத்தில் இருத்திக்கொண்ட மங்கை சொல்வாள்: “உனக்கன்றி வேறு எவருக்கு இவற்றையெல்லாம் நாங்கள் ஆசையாகக் கொடுப்போம். வா, வந்து உண்டுமகிழ்வாயாக! மாறுபடாத வளங்கள் நிறைந்த தண்மையான துறைகள் கொண்ட குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் செல்வனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே! குழந்தைச்சிறுமிகளாகிய எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே!”

ஆவலுடன் சிறுமியர் குமரனுடன் சிறுசோறு உண்டுகளிக்கின்றனர். நமக்குக்கூட அவர்களிடம் சிறிது பொறாமையும், அச்சிறுமிகள் சமைத்திருக்கும் உணவுக்காகச் சிறிது ஆசையும், இதைப் படிப்பதனால் உள்ளத்தில் பெரும்உவகையும் எழுகின்றன.

உருகா யோநீ உளம்விரும்பின்
உவப்பா யெம்பா லுடனமர்ந்தே
உண்டு மகிழ்வாய் சிற்றிலிதை
உலையா தருள்செய் தேகிடுவாய்
முருகா சிறியர் யாம்பெரிதும்
முயன்று செய்த பலபண்டம்
முன்னா லுனக்கே படைக்கின்றோம்
முயலாதேயெம் மில்சிதைக்க
ஒருகா லுண்ணின் மறுகாலும்
உண்டா வுண்டா எனக்கேட்பாய்
உனக்கல் லாது யார்க்கிவைதாம்
உவந்தே யளிப்போம் ஏற்றிடுவாய்
திருகா வளஞ்சேர் ஆவடுதண்
துறையார் குறுக்குத் துறைவாழும்
செல்வா சிற்றில் சிதையேலே
சேயேம் சிற்றில் சிதையேலே.
(திருகா- மாறுபடா)

(குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

இது ஓர் அருமையான பிள்ளைத்தமிழ் நூல். சமீபகாலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். குறுக்குத்துறை எனும் இடத்தைப்பற்றி, நூலின் தொடக்கத்திலுள்ள ,
‘அகழ்சேர் பொருநை யணிகரைபால்
அழகார் பதியாம் நெல்வேலி
அணித்தாம் குறுக்குத் துறைதங்கி
அன்பர்க் கருளுந் திருக்குமரன்’ எனும் பாடலால் இது திருநெல்வேலியருகில் அமைந்தவிடம் என அறிகிறோம். ஆசிரியர் பெயரும் கடைசிப் பாடலில் கிட்டுகிறது.
வேறு அதிகமாகச் செய்திகள் கிடைக்கவில்லை.
ஆயினும் தமிழ்ச்சுவை நிரம்பிய அழகான நூல்.
~~~~~~~~
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

~~~~~~~~~~~~~~~~~

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *