திவாகர்.


இந்தப் பாட்டி எப்பவுமே இப்படித்தான்.. பாட்டியைப் புரிந்து கொள்ளவே முடியாது.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதைப் போகப் போக நீங்களே புரிந்துகொள்வீர்கள். இத்தனைக்கும் என் பாட்டி ஒன்றும் பழங்காலப் பெருமை பேசும் பெரிசு இல்லவே இல்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். நான் மட்டுமா!!, என் கூடவே இரண்டு வருடங்கள் சென்னையில் ஹாயாக காலத்தை ஓட்டி விட்ட பாட்டியைப் பார்த்த யாருமே, இந்தக் கிழவி மாயவரத்துக்குப் பக்கத்திலிருந்து வந்த பஞ்சாங்கப்பாட்டி என்று சொல்லமாட்டார்கள்.

பார்ப்பதற்கு மட்டுமல்ல, பேச்சும் நாகரீகமாகவும், இருக்கும், நல்லது சொல்லும்போதும் நயம்படச் சொல்வதில் படு கெட்டிக்காரி. என் நண்பர்கள் கூட என் பாட்டியிடம் நேரம் காலம் தெரியாமல் பேசிக் கொண்டிருந்த பொழுதுகள் உண்டு. அந்தக் கால கவாஸ்கரிடமிருந்து இந்தக் கால தோனி வரை அலுக்காமல் கை விரல் நுனியில் விஷயஞானம் இருப்பதைப் போலக் காட்டிக் கொள்வதிலும் சாமர்த்தியசாலி.

சினிமாவைப் பற்றியும் அதிகம் பேசுவாள். ஆனால் இந்தக் கால விஜய், ஜீவா, த்ரிஷா பற்றித்தான் பேசுவாளே தவிர அதிகமாக சாவித்திரி, சிவாஜி என்றெல்லாம் போகமாட்டாள்.. அவளுக்குப் பிடித்தாலும் கூட.

”என்னதான் சொல்றான் உங்க ரவி.. அதைச் சொல்லு முதல்ல” பாட்டி நான் உள்ளே வந்தவுடனே என்னைக் கேட்டது இந்தக் கேள்வியைத்தான்.

”பாட்டி.. அவன் சொல்றதெல்லாம் பொய்ன்னு கோர்ட் சொல்லிடும் போலிருக்கு. இன்னிக்கி அங்க நடந்ததைப் பார்த்தா அப்படித்தான் தோணுது”.

”விவரமா சொல்லுடா”

என் நண்பன் ரவி தன்னுடைய மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக, உடனடியாக விவாகரத்துக் கோரி அவனுடைய மனைவி கோர்ட்டில் வழக்குப் போட்டிருந்தாள். இது நடந்து ஆறேழு மாதங்கள் ஆனாலும் விசாரணை என்னவோ இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. இன்று அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு கோர்ட்டுக்குப் போயிருந்தேன்.

கண்றாவியாகத்தான் இருந்தது என்றாலும் விவாகரத்துக் கொடுத்தாலும் பரவாயில்லை, எங்கே இவனை ஜெயிலில் போட்டு விடுவார்களோ!! என்ற பயமும் கூடவே இருந்தது. இத்தனைக்கும் இந்த விவாகரத்து வாங்குவதற்கு அவன் மாமியார்தான் ஒரு வலுவான காரணம் என்பது அந்தக் கோர்ட்டிலே விவரமாகவே தெரிந்தது.

“பாட்டி, அந்த மாமியார்க்காரி இன்னிக்குப் போட்டோ ஒண்ணை ஜட்ஜ்கிட்டே ஆதாரமா கொடுத்திருக்கா.. ரவியோட கை விரல் ரெண்டு மூணு அவ கன்னுத்துல பதிஞ்சாமாதிரி.. ’அவ எப்படி இதையெல்லாம் போட்டோ எடுத்தாள்’ன்னு லேடி ஜட்ஜ் கேட்டாங்க..

இவன் அடிச்ச வேகத்துல சுருண்டு போய் பொண்ணு விழுந்துட்டாளாம். விஷயம் கேள்விப்பட்டு கடகடவென இவன் வீட்டுக்குப் போனவ, கன்னத்துல பதிஞ்ச இவன் விரல்களைப் பார்த்து கோபம் வந்து வீட்லே கேமராவைத் தேடிக் கண்டுபிடிச்சு க்ளோசப் ஷாட்’ல இவளே போட்டோ எடுத்தாளாம்..”

“என்னடா இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? இவ வீட்டுக்குப் போற வரைக்கும் இந்தப் பொண்ணு சுருண்டு கிடந்தாளாம். போட்டோ எடுக்கற அளவுக்கு பொறுமையா அவளுக்கு கன்னத்துல கைரேகை இருந்ததா?.. அந்த நேரத்துல கேமரா எப்படி கிடைச்சுதாம்?”

நான் பாட்டியைப் பரிதாபமாகப் பார்த்தேன். “பாட்டி, இந்தக் கேள்வியெல்லாம் இவனோட வக்கீல் கேட்டுப் பார்த்தாச்சு.. ஆனா ஜட்ஜம்மா கண்டுக்கவே இல்லே.. இதுல கிண்டலா வேற இவனைப் பார்த்து கேள்வி கேக்கறா..”

”என்னவாம்”

”இவன் எடுத்ததுக்கெல்லாம் ‘நான் அவளைத் தொடக்கூட இல்லை மேடம்’ ன்னு அடிக்கடி சொன்னானா, அந்தம்மா ‘அது எப்படிய்யா தொடாமயா அத்தனை நாள் அவளோட வாழ்க்கை நடத்தினே?’ன்னு கேட்டவுடனே அவுங்க எல்லோரும் ஒரே சிரிப்புதான் போ.. எங்களுக்கெல்லாம் வயிறு எரிஞ்சதுதான் பாக்கி..”

பாட்டியும் கொஞ்சம் பரிதாபத்தோடுதான் பதில் சொன்னாள்.. “பாவம்டா ரவி.. ஏண்டா, நிஜம்மாவே இவன் அவளை அப்படி அடிச்சுருப்பானோ..”

“அடிக்கலைங்கறான் பாட்டி. அவங்க குலதெய்வம் மேல சத்தியம் பண்றான்.. ’கை ஓங்கினது வாஸ்தவம்தான்.. அடிக்கறா மாதிரி அவகிட்டே போனதும் வாஸ்தவம்தான்.. ஆனா அவளை அடிக்கலே.. அத்தனையும் நாடகம்டா.. அவ அம்மாக்காரி பண்ற வேலைடா’ ங்கிறான் பாட்டி,ஆனா இவனும் அப்படிப்பட்டவன் இல்லே பாட்டி..”

”ஆத்திரத்துல சும்மா கையை ஓங்கிண்டு கிட்டக்க வந்திருக்கான், அவ்வளவுதான், அது சரி,போட்டோ எப்படி எடுத்தாளாம் அவ அம்மா?”

”அதுதான் இவனுக்கும் ஆச்சரியமா இருக்கு.. ஏதாவது குங்குமம், சிகப்பு மை வரைஞ்சு போட்டு எடுத்திருக்கலாம். போட்டோல எல்லா மாயமும் செய்யலாம்.. இவன் வக்கீல் என்னவோ ‘போட்டோ சாட்சி எல்லாம் இப்போ, இந்தக் காலத்துல நிக்காது சார்’னு தைரியம் சொல்றார்.”.

பாட்டி ஏனோ மௌனமாகிப் போய்விட்டாள். ரவிக்காகக் கவலைப் படுகிறாளா இல்லை, அந்த மாமியாரின் திறமைக்காக வருத்தப்படுகிறாளா என்று புரியவில்லை.. மௌனம் மௌனம்தான். அன்று முழுவதும் பேசவில்லை..

அடுத்தநாள் காலையில் என்னை ஷேர் காரில் அழைத்துப் போக என் அலுவலக நண்பர்கள் மூன்று பேர், (இது தினப்படி வழக்கம்தான், பாட்டிக்கும் ரொம்ப தோஸ்த்) வந்தார்கள். அவர்களிடமும் பேசவில்லை. நண்பர்கள் என்னை போகும் வழியில் கேட்டார்கள். ’என்னடா, பாட்டி அவுட் ஆஃப் மூட் ஆக இருக்காங்க. ராத்திரி ஏதாவது தண்ணீ பார்ட்டிக்குப் போயிட்டு லேட்டா வந்தியா.. பாவம்டா பாட்டியை மனசு நோகடிக்காதே.. தண்ணி அடிச்சாலும் சீக்கிரம் வீட்டுக்குப் போ.. கிழவியைக் காக்க வெக்காதே’ என்று செல்லமாக திட்டுகள் வேறு..

எனக்கே புரியவில்லை. அதுகூட ரவியின் விஷயம் சொன்னவுடன்தான் இப்படி.. ஏன் பாட்டிக்கு என்ன ஆச்சு.. ரொம்பக் கவலைப் படறாளோ.. இல்லை.. பாட்டி அப்படி இல்லை.. இதைவிட கவலை தரும் விஷயங்களைக் கேள்விப்பட்டவள்..  அனுபவசாலி..

சாயந்திரம் அதே மூடில்தான்.. ராத்திரி வரை இப்படியே தொடர்ந்துகொண்டிருந்த பாட்டியை சாப்பிட்டு முடித்தவுடன் பொறுக்கமுடியாமல் நானே சீண்டினேன்.. ”பாட்டி.. என்ன ஆச்சு உனக்கு.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னைத் திட்டறாங்க..”

“உன்னை எதுக்குடா திட்டணும்?’

“ஆஹா.. வாயைத் திறந்துட்ட.. இதுக்குதான் என்னைத் திட்டினாங்க.. நீ காலைல அவங்ககிட்டே ஏதும் சரியா பேசலியாம்.. நான் ஏதாவது சொல்லிட்டேனோன்னு கேட்டாங்க.. அட போடா’ன்னேன்.. அவங்க நம்பலே..”

“ஆனா, அந்த ரவியை நான் நம்பறேண்டா.. அவன் அடிச்சுருக்க மாட்டான்..”

பாட்டி இன்னமும் அந்த ரவி அடித்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். “ஐய்யோ பாட்டி, அதான் நீ மூட் அவுட்டா..  லொட லொட’ன்னு பேசற கிழம் ஏன் ஒரு நாள் முழுக்கா பேசலைன்னு இப்பதான் புரியறது..”

”அட போடா பைத்தியமே.. அனுபவப்பட்டவ, எனக்கில்ல இந்த விஷயமெல்லாம் புரியும்.. ஏதோ ஞாபகத்துல அப்படியே இருந்துட்டேன்.. அவ்வளவுதான்..”

”அய்.. பாட்டி.. என்ன அனுபவம்.. தாத்தாகிட்டே அப்பப்போ அடி வாங்கினியா?.. இருக்கமுடியாதே.. எங்கம்மா சொல்வாளே.. தாத்தா ரொம்ப பயந்தாங்கொள்ளின்னு..” நம்பாமல் சிரித்தேன்.

‘அடேய் நிறுத்துடா.. போ, போய் படுத்து தூங்கற வழியைப் பாரு..”

“இல்லே.. நீ சொன்னாதான் தூக்கமே வரும்.  இப்போ புது டென்ஷனைக் கிளப்பி விட்டுட்டே.. எப்படி தூக்கம் வரும்..”

அப்படி இப்படி என்று சிறிது நேரம் பிகு செய்த பிறகு பாட்டி சொல்லத்தான் செய்தாள்.

 

ஸ்வர்ணல‌ஷ்மிக்கும் நாராயணனுக்கும் விவாகமாகி நான்கு வருடங்களானாலும், பெயர் நன்றாகப் பொருந்திய அளவுக்கு ஏனோ மனம் பொருந்தவில்லை போலும்.

ஸ்வர்ணல‌ஷ்மியின் கை, எப்போதுமே ஒன்பது படி ஓங்கிதான் நிற்கும். இவன் நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் பேசினால் இன்னமும் குற்றமாக அவனை இழுக்கடிக்க ஆரம்பித்தாள். சிலபேருக்கு சில விஷயங்களில் இப்படித்தான் விதி விதித்தபடி நடக்கும் என்ற உலகநியதியைப் புரிந்து கொண்ட நாராயணனும் மனையாள் ஸ்வர்ணல‌ஷ்மியின் போக்கின் படியே போக தன்னைத் தயார்படுத்திக் கொண்டான்..

கல்யாணமான புதிதில் சுவு, சுவர்ணா என்றெல்லாம் கூப்பிட்டவன், நாளாக நாளாக முழுப்பெயரையும் கஷ்டப்பட்டு நாவில் பழகிப் பிறகு மெதுவாகக் கூப்பிட்டு (அப்படி கூப்பிடும் சந்தர்ப்பங்களும் குறைவுதான் என்றாலும்) பேசப் பழகிக் கொண்டான். ஸ்வர்ணல‌ஷ்மி அவனை தன் இஷ்டம் போல ஆட்டிய அதே சமயத்தில் அவன் சம்பந்தப்பட்ட சொந்தங்களையும் விட்டு வைக்கவில்லை.

யார் வந்தாலும் தடாலடிதான்.. யார் பேசினாலும் பேசினவர்களுக்கு நாவினால் சுட்ட புண்தான்.. உதட்டுச் சுழிப்புதான்.. எல்லோருமே தன்னைப் பார்த்து அஞ்சும் அளவுக்கு இந்த நான்கு வருடங்களில் ஸ்வர்ணல‌ஷ்மி தன்னை வளர்த்துக் கொண்டதற்கு அவளுக்குப் பெருமிதம் கூட உண்டு. அந்தப் பெருமிதத்துக்குதான் ஒரு நாள் பங்கம் வந்தது.

சீனிவாசன், மதுரையில் பழக்கடை வியாபாரி, நாராயணனுடைய சித்தி மகனானாலும், சொந்த தம்பி போல பழகுவான். அதே சமயம் இவனிடமோ இவன் மனைவியிடமே உறவு முறையும் உள்ளதால் மரியாதை கொடுக்காமல்தான் பேசுவான்.

சாதாரணமாகவே ஸ்வர்ணல‌ஷ்மிக்குப் பயந்து அவன் கூடப்பிறந்த சொந்தங்களும் பெற்றவர்களும் இவர்களின் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டாலும், அப்படியும் வருடத்துக்கு இரண்டு நாட்கள் இப்படி எப்படியாவது யாராவது, சொந்தம் வைத்துக் கொண்டு வந்து செல்வர் என்பதால் ஸ்வர்ணல‌ஷ்மியும் ஏராளமாகவே பொறுமை காத்தாள்..

அன்று இரவு, இலை போட்டு சோறு பரிமாறும்போதுதான் அவள் அலட்சியத்தால் சோறு சற்று இலைக்கு அப்பால், அவன் மடக்கி உட்கார்ந்த இடத்தில், முழங்கால் மீது தெறித்து விழுந்தது. ஆனால் அப்படி விழுந்த சோற்றினைப் பார்த்தும் அவள் கண்டு கொள்ளவில்லை.

அவனே பொறுக்கி இலையில் போட்டுக்கொள்ளட்டுமே என்ற அர்த்தத்தில், பதிலுக்கு உதட்டைப் பிதுக்கி சற்றுக் கேலியாகப் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றவளை சீனு பெயர் சொல்லிக் கூப்பிட்டான், பக்கத்தில் உட்கார்ந்திருநத நாராயணனுக்கு நெஞ்சு ‘தடக்… தடக்’ என வேகமாக அடித்துக் கொண்டாலும் சீனு விடவில்லை.

“என்ன அண்ணியார் ஸ்வர்ணல‌ஷ்மி அலட்சியமாக இப்படித்தான் பரிமாறுவாரோ, சோறு இப்படி ஏன் விழுந்தது என்பதற்கு பேசாமல் போனால் எப்படி?” இப்படி கேட்டதோடு நிற்காமல் மேலும் அவளை வார்த்தையால் பொசுக்கினான் சீனு.

“ஓஹோ.. புரிந்துவிட்டது! பேசினால் தன் பெயரில் உள்ள சுவர்ணமெல்லாம் இலையில் விழுந்துவிடும் என்று பயமா” சீனு ஹாஹாஹா என்று சிரித்துக் கொண்டே பேசும்போது நாராயணன மெதுவாகவே பதில் சொன்னான்.

“டேய்.. எதுக்குடா ஸ்வர்ணல‌ஷ்மி வம்புக்குப் போறே?.. சாப்பிட்டு விட்டு ராத்திரிக்கு வண்டிக்குப் போறவன், கொஞ்சம் நல்ல பேரை வாங்கிண்டுதான் போயேன்.”

கோபம் பொங்கி வந்தது சீனுவுக்கு..”எதுக்குடா நல்ல பேரு.. எதுக்குன்னேன்.. அலட்சியமாக கால் மேல சோறைப் போட்டுட்டு கிண்டலா வேற பாக்கறா.. இந்தா பாருடா.. உன் இடத்திலே நான் இருந்தேன்’னு வெச்சுக்க.. நல்லா பெரிய கழியை எடுத்துண்டு நாலு சாத்து சாத்தி, ’இப்படியாடி வந்தவங்களை அவமானம் பண்ணுவே’ன்னு கோபமா கத்தி ருத்ரதாண்டவமே ஆடியிருப்பேன்.. நீ கோழைடா.. பொண்டாட்டிக்குப் பயந்தவன் வீட்டுல வந்து நான் சோறு சாப்பிடறேன் பாரு” என்று தன் தலையில் தானே அடித்துக் கொண்டாலும், ஸ்வர்ணல‌ஷ்மியின் வயிற்றெரிச்சலை அதிகமாக்க வேண்டுமென்றே நன்றாக வ்யிறு பொங்க தின்று விட்டுதான் எழுந்தான்.

சாப்பாடு நன்றாக சாப்பிட்டதாலோ என்னவோ, நடந்த விஷயமும் அவன் மனதில் உடனடியாக அகன்றது போலும். கிளம்பும்போது தான் மதுரைக்கு எடுத்துச் செல்லவிருந்த ஆப்பிள் கூடைகளில் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தான். போகும்போதே இன்னொன்றையும் சொன்னான்.

“டேய்.. ஆஸ்திரேலியா ஆப்பிள்ன்னு கடகடவென கடித்து தின்னுடாதே.. இப்பல்லாம் வண்டு, பூச்சி கூடைங்களுக்குள்ளேயே வந்துடறதாம்.. ஆஸ்திரேலியாக்காரனே லெட்டர் போட்டுருக்கான்.. அந்த வண்டு சாதாரண வண்டு இல்லே.. விஷ வண்டு.. எடுத்துத் தூரப் போடாதே.. பாவம் பார்க்காம ‘கசக்’குனு நசுக்கிப் போட்டுடு. சின்ன வண்டுதானேன்னு விவரம் தெரியாம விட்டுட்டோம்னா, மனுஷனைக் கடிச்சு வெச்சதுன்னு வெச்சுக்க, யாரு போய் படுக்கைலேயே கிடக்க முடியும்?..”

எச்சரித்துவிட்டு சென்றுவிட்டான். நாராயணன் முதலில் இவன் சொன்ன வண்டைப் பற்றி நினைத்து சற்று பயந்தாலும், அவன் போனால் போதும் என்றுதான் இருந்தது. அவன் கவனம் முழுவதும் அவன் மனைவியின் போக்கு எப்படி இருக்கப்போகிறதோ என்றே கவலைப் பட்டது, ‘ஐய்யோ.. இப்போது ஸ்வர்ண ல‌ஷ்மியை நாம் சமாதானப்படுத்த வேண்டுமே.. கடவுளே.. எப்படி.. அவள் முகத்தில் முழிக்க முடியுமா..’

அவன் நினைத்தது சரிதான். கட்டிலில் கண்ணை மூடி நெற்றியில் கையை மடித்துப் படுத்துக் கொண்டிருந்த ஸ்வர்ணல‌ஷ்மி மனதுக்குள் வெந்து கொண்டிருந்தாள்.. ’நாலு சாத்து சாத்த வேண்டுமாம்.. ஓஹோ.. ம்ம்.. சாத்திருவாரா.. இவன் பேச்சைக் கேட்டுண்டு சும்மா எப்படி இருந்தார்.. இவர் இல்லே இந்த தம்பிக்காரனை நாலு சாத்து சாத்தியிருக்கணும்.. வரட்டும்.. ஓஹோ.. என்ன சாகஸம், எவ்வளோ தைரியம். சாத்துவாரோ.. சாத்துவாராம் சாத்து..’

கண்ணை மூடியிருந்தவளுக்கு நாராயணன் வந்து உள் கதவை மூடும் சப்தம் கேட்டது. எப்படி சொல்லி இந்த ஆளைத் திட்டலாம்.. அவன் ‘சாத்து’ன்னு சொல்றவரைக்கும் இவர் கை பூ பறிச்சுண்டிருந்ததோ.. சித்தி மகன்னு பார்க்காம, வந்தவனை ரெண்டு சாத்து சாத்தியிருக்க வேணாம்.. அதுசரி, இந்த மனுஷன் ஏன் ஒண்ணும் பேசாம அங்கயே நிக்கறாரு..’ என்றெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வர்ணல‌ஷ்மி. சந்தேகம் தீர கண்ணைத் திறந்து பார்த்தவளுக்கு திடீரென நெஞ்சுக்குள் அதிர்ச்சி.. ‘ஐய்யோ, நிஜமாவே இந்த மனுஷன் கையில் பெரிய கழியோடு நிக்கறாரே!!..’

உள்ளே நுழைந்த நாராயணன், முதலில் பயத்தோடுதான் வந்தான். அப்படி வந்தவன் கண்களுக்கு கோபக்கார ஸ்வர்ணல‌ஷ்மியின் முகம் படுவதற்கு முன் அவள் மேல் ரவிக்கையில் உட்கார்ந்திருந்த வண்டுதான் பட்டது. சிகப்பு ரவிக்கையில் சின்னக் கருப்பு வண்டு..

’சீனு சொல்லியிருக்கிறானே, சின்ன வண்டுதான்.. பாத்து விட்டால் பாவம் பார்க்காமல் ஒரு நசுக்..’ ஹைய்யோ ஸ்வர்ணல‌ஷ்மி.. அந்த வண்டு உன் மேலேயா.. விடுவேனா.. இரு இரு..நான் உன்னை எப்படியாவது காப்பாத்திவிடுவேன்’ என்று மனதுக்குள் கறுவியபடி, சுற்றுமுற்றும் பார்த்த நாராயணன் கண்களுக்கு ஓரத்தில் துணி உலர்த்தும் கம்பு ஒன்று பட்டது. சட்டென எடுத்தான்.

கையில் அதை விசிறி சக்கரவட்டம் போல அடித்துக் கொண்டு வந்தான். அவன் கண்கள் முழுவதும் அவள் ரவிக்கையின் மேல் பாகத்தில் இருந்தது. அங்கேயே இருந்த வண்டுக்கு, எமன் தனக்கு நாராயணனின் கம்பு வடிவில் வருகிறான் என்று எப்படித் தெரிந்ததோ, சட்டென கீழே இறங்கி கட்டிலின் அந்தப்பக்கம் நகர்ந்தது.

‘ஆஹா.. இப்போது தெரிந்தவுடன் விட்டு விடுவேனா.. ”உன்னால் எத்தனை பேருக்கு ஆபத்து.. உன்னை ஒரே அடியாக அடித்து ஒழிக்காமல் விடமாட்டேன் பார்” என்று கோபமாகக் கத்தியபடி நாராயணன் மறுபடியும் பின்வாங்கி ஸ்வர்ணல‌ஷ்மியின் தலையருகே வந்தான். கண்களில் கோபம்.. ஆங்காரம், எப்படியும் வண்டைப் பிடித்து நசுக்கி ஸ்வர்ணல‌ஷ்மியையும் காப்பாற்றியே ஆகவேண்டும்.. என்று நினைத்தவன், வண்டு அவள் தலைப்பக்கத்திலிருந்து கட்டில் மேல் விளிம்பில் செல்லும்போது சர்ரியாக ஓங்கி ஒரே போடுபோட்டான்…

வெற்றிக் களிப்புடன் ஸ்வர்ணல‌ஷ்மியின் முன், கழியோடு வந்தவனுக்குப் பயங்கர அதிர்ச்சிதான் காத்திருந்தது. ‘ஐய்யய்யோ என்னை மன்னிச்சுடுங்க..’ என்ற குரலோடு அலறிக் கொண்டிருந்த ஸ்வர்ணல‌ஷ்மியை வாய் பேசாமல் ‘ஸ்வ.. ஸ்வ’.. என்று தனக்குள் ஏதோ பேசி அதுவும் நாக்குக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வராமல் தவிக்க, யாதுமறியாமல் நாராயணன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

சொல்லி முடித்த பாட்டியை ஆவலோடு பார்த்தேன்.. “ஸ்வர்ணல‌ஷ்மி பாட்டிகிட்டே இவ்வளோ பெரிய விஷயம் இருக்கா” என்று ஆவலோடு பாட்டியைக் கட்டிக் கொண்ட எனக்கு திடீரென ஒரு சந்தேகம்.

“ஏன் பாட்டி, தாத்தா வண்டுக்காகத்தான் அடிக்க வந்தார்ங்கிற விஷயத்தை நீ உடனே கறந்திருப்பியே.. அப்படி அவர் சொன்னதும் நீ என்ன செஞ்சே?”

“அந்த பாவி மனுஷர் அப்பவெல்லாம் இந்த வண்டு விஷயமே சொல்லலடா.. அத்தோட எனக்கு அந்த ஒரு அதிர்ச்சில உங்க தாத்தா மேலே ஒரு பயம் வந்துடுச்சு.. அந்த மனுஷரும் இதைப் பத்தி அப்புறமும் பேசலை.. எனக்கோ அந்தக் கழியைப் பாக்கறச்செல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத பயம்.. ஆனா ஒண்ணு, எங்க ரெண்டு பேருக்கும் மத்தில அந்நியோன்னியம் பெருகறதுக்கு அந்தக் கழிதான் ரொம்ப உதவி செஞ்சது. இதெல்லாம் சொன்னா உனக்கு விளங்காது.. ஆனா நாலு குழந்தை பெத்து, ஒரு நல்ல நாள்ல அதுங்களோட நாங்க ரெண்டு பேரும் விளையாடறச்சே ஒரு மாம்பழம் நறுக்கிட்டிருந்தேன்.. அப்ப அதுலேருந்து ஒரு வண்டு வந்து வெளியே விழுந்துச்சு. இவர் உடனே காலால நசுக்’குனு நசுக்கிட்டாரு.. ‘ஐய்ய.. எதுக்குங்க அந்த வாயில்லா ஜீவனைப் போயி இப்படி நசுக்கிட்டிங்கன்னேன்..’ அப்பத்தான் அவர் சாவகாசமா இந்த பழைய வண்டு கதையை சொல்றார்னா பாரேன்…”

“அன்னிக்கு நான் மட்டும் உன்னை இந்த வண்டுகிட்டேயிருந்து காப்பாத்தாட்டி இப்போ எப்படி சுவர்ணா இத்தனை குழந்தைகளோட உன்னால விளையாடமுடியும்’ னு ஆதங்கமா சொல்றார்டா”.

என் மனக்கண்ணில் தாத்தா இளமை சுறு சுறுப்போடு அந்த வண்டை அடிக்கும் சாகஸமும் பாட்டி நடுங்கி ஒடுங்கிப் போனதும் இன்னொருமுறை ஓடியது..

“ஓஹோஹோ.. பாட்டி.. புரிஞ்சுச்சு.. நீ ஏன் நம்ம ரவிக்குப் பரிந்து பேசறேன்னு.. அப்ப நீ சொல்றது சரிதான்.. ரவி கூட பாவம் எதுக்கு கையை ஓங்கினானோ..” என்று கேட்டவன் பாட்டியை மறுபடியும் சீண்டினேன்.

“பாட்டி, அது ஒரு அம்பது அறுபது வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம். இதே போல ஒரு சூழ்நிலைல இன்னிக்கி நீ இருந்து தாத்தாவும் விஷயம் தெரியாம அப்படி ஒரு வண்டுக்காக கழியாட்டம் ஆடி இருந்தா என்ன பண்ணுவே”

பாட்டி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது..

“சொல்லு பாட்டி.. இந்த காலத்துல நீ என்ன பண்ணியிருப்பே..”

பாட்டி யோசித்தாள். ”ம்ம்.. சொல்லமுடியாதுடா.. இப்ப இருக்கற சூழ்நிலைல என்ன வேணும்னாலும் செஞ்சிருப்பேன்..”

 

(இக்கதையில் சொல்லப்பட்ட ஸ்வர்ணல‌ஷ்மி-நாராயணன் சம்பவம் எழுத்தாளர் தேவனின் பழைய ஒரு சிறுகதையை தழுவி எழுதப்பட்டதாகும். சிறுகதையின் பெயர் நினைவில்லை என்றாலும் அந்த அருமையான கதை அப்படியே மனதில் பதிவானதால் ஏற்பட்ட தாக்கம் – திவாகர்)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “வண்டு

 1. கதை மிக நன்றாக இருக்கிறது. நல்ல அர்த்தம் பொதிந்த கதை! அந்த ரவி விஷயத்தைத் தொங்கலில் விட்டதுதான் கொஞ்சம் உறுத்தியது!

 2. திவாருக்குச் சிறு கதை, கணவர்களுக்கோ பெரிய உதை. தொடாமலே வாழ்ந்தீரா என்ற நீதிபதி வினா நகைச்சுவையா நளினமா?
  நேற்று ஒரு தமிழ்ப் புலவர் இதே சூழ்நிலை பற்றிக் கூறி, பூனைக் குட்டிகள் தாய்மீது வழக்குப் போடவேண்டும், தம்மைக் கவ்விக் கொண்டு போவதற்கு எதிராக என்றார்.
  பெண்களுக்கு நாணம் போல் ஆண்களுக்குக் கோபம், பெண்களுக்கு நாக்கு நீண்டால் ஆண்களுக்குக் கை நீளாதா? என்றார்.
  ஆண் பெண் உறவுச் சிக்கலின் நெடுங்கதையே சிறுகதையாக.
  தேவனுக்கு நன்றி சொன்ன நயத்தக்க நாகரீகத்தை என்னவென்பது!

 3. swarnalakshmi paatti super paatti. Ravi really paavamthaan. fruit (mango) insects are in general harmless. Dhevan clearly manipulated that insect from Australia, so poisonous, so you have got a marvellous theme. Hail Dhevan.

  Devan.

 4. Patti has got lessons of life. Experienced. But the question answered by patti in last line was the real situation of today’s couples. They can do take any decision based on emotional outpouring. Nice one sir.

 5. Vivaram theriyatha swarnalakshmi patti oruvelai vivaram therincha appo enna panniyiruppal? Manasu kurukurukuthu.

 6. தேவனின் அருமையான கதையை தன் கதையின் உள்கதையாக வைத்து சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறாய். மிக நன்றாக இருக்கிறது.

  பாட்டியின் கதை முடிவு சரி, ரவியின் முடிவு? (ஆனால் இக்காலத்தில் பெண்ணூரிமை தானே உயர்ந்திருக்கிறது. முடிவு தெரிந்ததே. பாவம் ரவி.)

 7. ””வண்டு**எழுதிய கைக்கு ,பூச்செண்டு ,
  ரவி,நிகழ்காலம் ,பாட்டி பழய காலம்,
  பாட்டியின் பழய அரசியை ,
  உன் பேனா வடித்த புதிய சாதம்
  பட்டியே ,கதைக்கு ஊன்று கோலாக
  மாற்றிய திறமைக்கு ,”ஓஓஓஓஓஓ ”
  ‘பழத்தாள்’குமரன்’ குன்றேறினான்
  ‘பழத்தாள்,கவுண்டன் ,செந்திலும் அடித்துகொண்டனர்,
  பழவண்டு ஒரு உறவை ,ஒன்றுசேர்த்து ,,
  சற்று பொறு ,,,,,
  என் முதுகில் என்னவோ ஊர்கிறது ,,,பார்
  ”’அட ,,,வண்டு,,,,!!!.. .தேவா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *