தித்திக்குதே திருக்குறள் – 9 – சொல்லவல்லாயோ கிளியே!

திவாகர்

c1241a91-cbbc-41d0-ab7b-cdaf29b6e745

அமுதகீதம்போல என்பெயரை எப்படியோ

குமுதா குமுதாவென இனிமையாய்நீ

பேசினாலும் என்னுள்பொங்கும் இன்பத்துக்கு

ஊசியளவும் உன்பேச்சு இணையாகுமோடி

நேற்றுவந்த கிள்ளைமொழிக் கிளியே

சற்றே குமுதாகுமுதா எனக்கூவாமல்

நடந்தகதை அத்தனையும் கேளடி

தொடர்கதையாய் ஆயிரம் நாட்களடி

நான்கண்டேன் வேதனையும் சோதனையும்

அன்றொருநாள் அல்லிக்குளத்திலே அடியாள்

நீராடும்போது மன்னரவர் பார்த்துவிட்டாரடி

சீரும்சிறப்புமாய் என்னைக் கல்யாணம்

செய்வேனெனச் சொன்னவரை சீண்டவில்லையடி

வாய்பேச்சு வேண்டாம் வந்துஎம்தந்தையைப்

பாருமென பொல்லாமன்னரை புறக்கணித்தேனடி

பாரிலேநல்ல பெயருமில்லைதான் பார்க்கும்

ஊர்ப்பெண்களிடம் பாதகம்வேறு செய்பவராம்

கர்வமே தலைக்கொண்டு மாமல்லனாய்

யாருக்கும் தொல்லையாய் இருப்பவராம்

யார்தான் முன்வருவாரடி இவரைமணம்செய்ய?

ஆனாலும் அவருமென்னைக் கவர்ந்ததனால்

முன்வைத்தேன் ஒருகோரிக்கை அவரிடம்

நான்வணங்கும் நாரணனை அவர்வணங்கி

தானதர்மங்கள் அன்னமிடலென ஆயிரம்நாட்கள்

ஏதுதுன்பம் வரினும் தொடர்ந்துசெய்துவந்தால்

பேதைநான் மாலையிடுவேன் அவர்க்கேயென

வீம்பாகச் சொன்னேனடி செல்லக்கிளியே

நம்பினார் அவரென்னை அதுமுதலாய்

நாளுமிந்த ஊரிலே விருந்தோம்பல்தான்

ஆளும்அரசனெனும் பேற்றையும் மறந்து

பிள்ளை மனங்கொண்டு விருந்திட்டாரடி

நாளாகநாளாக அவர்விருந்தும் அதன்சுவையும்

நாடுதோறும் வீடுதோறும் பெரும்பேரானதடி

கடுகத்தனை சிரமமுமிலாமல் வந்தவர்க்கெலாம்

பசியாற மனமகிழ்ந்துவிருந்திட்டார் வந்தவரும்

ருசித்து உண்டாரடி ரசித்துமகிழ்ந்தாரடி

காலமிது காலமடி கலியாளும்காலமடி

சீலமிகு அடியவர்கள் நாள்தோறும்

அதிகமானோரடி, விருந்துண்டால் கலியன்

அதிமதுர விருந்தொன்றே உண்டாமென்றாரடி

ஓராயிரம்நாட்களென ஏன்கேட்டேனோகி்ளியே

வருவோர்க்கெல்லாம் விருந்தோம்பி விருந்தோம்பி

ஏராளமாய் அவர்செல்வம் கரைந்துபோனதே

அரசராயிருந்தவர் ஆளும்பதவி போனதே

கடன்வாங்கினாரடி கிளியே காசுவேண்டியதால்

உடனிருந்தோரை தனைவிடுத்து ஓடவைத்தாரடி

கலங்கவில்லையடி கிளியே விருந்தினர்மனக்

கலக்கம் விரும்பவில்லையடி கிளியேஅதனால்

விருந்துச்செலவுக்குப் பொன்வேண்டி நாளும்

பெரும்பொருள்வாங்க வழிஏதும் இல்லாது

கொடும்கள்வனாகிப் போனாரடி கிளியேநான்

படுகின்ற தொல்லைகளை நாரணனும்கண்டானோ

ஏழைஇவள் சொல்லொன்றினால் மாமல்லன்

பாழும் கொள்ளையில் ஈடுபட்டானென

நேற்றிரவு அவனேஇவரெதிரே இவர்மேல்

பற்றுமிகக்கொண்டு செல்வந்தன்போல வந்தானடி

’கலியனே! உன்பலங்கொண்டு முடிந்தாலென்

கால்கழலினை எடுத்து விருந்துச்செலவுக்கு

உன்னிஷ்டம்போல பயன்படுத்துக’ என்றானடி

நாராயணனென அறியாத என்மன்னவர்தாம்

கார்வண்ணன் கால்வளையம்கழற்ற முயன்றாரடி

பாரளந்த பரமனவன் சீரடியில்தலைவைத்து

கூர்பல்கொண்டு கழல்கடிக்கும் வேளையில்

வாய்தவறி பல்லொன்று பாதத்தில்பட்டதுவே

பாய்விரித்த பாம்பணையில் பள்ளிகொண்டவன்

நேர்வந்து நின்று என்னவரை ஆட்கொண்டான்

’சீர்பெற்ற தமிழால்எனை எந்நாளும் பாடுக!

உனைஉணர்வாய் கலியாஉலகுக்கே ஒப்பாவாய்

திருமகள்போல் உள்ளவளாம் குமுதாவோடு

திருமங்கைமன்னனாய் இனிதாயிரு’ என்றான்.

சொல்லவல்லாயோ கிளியே! பசித்தவர்

எல்லோர்க்கும் ஆயிரம்நாளாய் மனமகிழ்ந்து

விருந்தளித்த என்னவர்க்கு நாராணனேமுன்வந்து

விருந்துக்குவிருதாக தன்னையே அவர்க்களித்தான்

தெள்ளியதமிழாய் நாவினிக்க அவர்பாடுவதைக்கேள்

கிள்ளைமொழியால் நீயும்கற்பாய் அவர்தமிழை.

குமுதாகுமுதா எனவென்பெயரைப் பேசாமல்

அமுதமாய் கலியாகலியா எனசொல்லநீவல்லாயோ!!

*************************************************************************************

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று. (திருக்குறள் – 83)

நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

தித்திக்குதே திருக்குறள் – 9

(விருந்தோம்பல் என்றதும் ஏனோ குமுதாவும் திருமங்கை ஆழ்வாரும் எங்கள் சொந்த ஊர் திருநகரியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட படைப்பு இது. திருவள்ளுவர் எல்லா விஷயங்களுக்கும் ஒரு குறள் வைத்திருப்பதால் இதற்கும் ஏற்ற ஒரு குறளை வைத்து எழுதப்பட்டது.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *