இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 2
அவ்வைமகள்
இரேணுகா இராசசேகரன்
உணர்வும் அறிவும் இயைந்த தேடல் வெகு சுவாரசியமானது
உணர்வும் அறிவும் இயைந்த தேடல் வெகு சுவாரசியமானது. மனிதனது உள்ளத்தில் ஐயம் ஒன்று முளைத்துவிட்டால் – அந்த ஐயத்தைத் தீர்த்தே ஆகவேண்டும் என்கிற வெறி பிறக்கும். மனம் எதிலும் தங்காது. தனக்குள் எழுந்துள்ள ஐயத்தைத் தீர்க்கும் சரியான விளக்கத்தைத் தேடி அது ஓடும். ஓடும் வழியில், ஒரு வேளை எவரேனும் விளக்கம் தந்தால், ஒரு வினாடி நின்று கவனிக்கும். தரப்பட்ட அந்த விளக்கம் விளங்கக் கூடியதாய் இருந்தால் அமர்ந்து யோசிக்கும். ஆனால், விளங்காத விளக்கத்தைக் காண நேரிட்டால், “தூ” என்று துப்பாத குறையாய் வெகுளும். ஆனால் சோர்ந்து போகாது! வேட்கை எண்ணம் மேலும் கூட ஓடும் – ஓடிக்கொண்டே இருக்கும். அன்றாட வாழ்விலோ பிற ஜனங்களுடன் வாழ்ந்தாலும் அவர்களிலிருந்து விலகி தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும், சொல் மறக்கும் சுற்றம் மறக்கும், சூழல் மறக்கும். தொலைவும் பயணமும் பொருட்டில்லையெனும்படியாய் உலகின் எந்த மூலைக்கும் சென்று தன் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள எத்தனிக்கும். இடம்பெயர்ந்தும், நாடு கடந்தும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தும் கூட ஒடி ஓடித் தேடும் – விடாமல் தேடும்.
ஆனால் இந்த ஒட்டத்தில், ஒன்றில் மட்டும் தெளிவு இருக்கும். அது என்னவென்றால் – வழக்கமான கல்விசார் அமைப்புக்களில் தனது ஐயத்திற்கு விடை கிடைக்காது என்பதே அது. எனவே, தேடல் வேட்கை, கல்விக்கூடங்களையும் ஆசிரியப்பெருந்தகைகளையும், முறைசார்க் கல்வியையும் அறவே புறக்கணிக்கும். விசாலப் பார்வையுடன் விரிந்து பரந்த நோக்கிலே சுற்றியுள்ள அனைத்தையும் அது காணும் – பரிசோதிக்கும். யதார்த்த சாகரங்களிலே குதித்து மூழ்கித்தேடும் முத்தான விளக்க முத்துக்கள் கிடைக்குமா என்று.
ஸ்டீவ் ஜாப்ஸிற்கு உண்டாகிய இறை தேடல் உணர்வு இத்தகையதான வீரியமும் வலிவும் கொண்டதாய் இருந்தது. அவர் ஒரு அசாதாரண மனிதர். சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரண மனிதர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால் அது அவர்களுடைய தேடல் தீவிரம் தான்! சாதாரண மனிதர்கள் சாதாரணமாய்த் தேடுகிறார்கள் – அசாதாரண மனிதர்கள் அசாதாரணமாய்த் தேடுகிறார்கள்.
மனம் எனும் தோணி பற்றி செல்லும் வாழ்க்கைக்கும் மதி எனும் தோணி பற்றி செல்லும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். முன்னதில் மனம் வாகனம் பின்னதில் அறிவு வாகனம். மனத்திற்கும் அறிவிற்கும் உள்ள வித்தியாசம் ஒரு படகிற்கும் கப்பலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்போல.
அறிவியல்-பொறியியல் ரீதியாகப்பார்த்தால் படகும் கப்பலும் நீர் வழி வாகனங்கள் எனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாகனங்கள் தாம். ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களோ ஏராளம். முன்னது நீரின் வெளிப்பரப்பில் மிதப்பது, நீரோட்டத்துடன் செல்வது – நீரோட்டத்தின் ஒவ்வொரு சலனத்திற்கும் இலக்காவது. குறைந்த தொலைவே பயணிக்க வல்லது. நீரோட்டம் கொஞ்சம் கடுமையாக ஆனாலும் பயணிக்க முடியாதது வெகுசுலபமாக விபத்துக்களைச் சந்திக்ககூடியது. இழுவைத்திறனும் கொள்திறனும் குறைவான அளவே உள்ளது. படகுப் பயணம் குறைத்த நாட்களே. படகில் பயணிப்போர்க்கு அதிக பாதுகாப்புகள் இல்லை -அதிக வசதிகள் இல்லை.
கப்பலோ கடுமையான கட்டமைப்பும் உறுதியும் கொண்டது. நீரின் சலனங்கள் அதற்கு ஒரு தூசி மாதிரி, எந்த நீர் அதனைக் கவிழ்க்க வல்லதோ, அதையே தனக்கு ஒத்தாசை செய்யுமாறு தன்வசப்படுத்தி, நீரின் பரப்பில் வெறுமனே மிதக்காமல் நீருள் பாதி அமிழ்ந்து, நீரை ஆலிங்கனம் செய்வதைப்போல ஒரு வெளிப்புறக் காட்சியைக் கொடுத்துக்கொனடே நீரை இறுக்கிப் பாதத்தில் பிடித்துக்கொள்ளும் மகா சாமர்த்தியம் உள்ள வாகனம் கப்பல். முயலகனைக் காலில் அழுத்தியபடி மோனப் புன்னகையுடன் ஆரவாரம் ஏதுமின்றி வெகு யதார்த்தமாய் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் தட்சிணாமூர்த்தித் தத்துவத்தின் அறிவியல் எடுத்துக்காட்டு கப்பல் எனலாம்.
பொம்மலாட்டம் ஆடாமல் நீரில் நிலையாய் நிற்பது கப்பலின் திறம். பிரம்மாண்ட இழுவைத்திறனுடன் கம்பீரமான மகா உறுதியுடன், அதிக தூரம், அதிக வேகம், அதிகக் கொள்திறன் – என்று அதிக ஆற்றலுடன் – அதிக விசையுடன் செல்லும் வாகனம் கப்பல். கப்பல் பயணத்தை நெறிப்படுத்த – கண்காணிக்க ஓராயிரம் கட்டுப்பாட்டுக் கருவிகள் – எனவே கப்பல், மோசமான வான் நிலையிலும் கடல் சீற்றத்திலும் கூட அச்சமின்றி செல்ல வல்லது. கப்பலில் பயணம் நீண்ட காலத்தன்மையுடையது. பயணம் நீண்டது தான், சேருமிடம் வெகு தொலைவு தான் என்றாலும் கப்பல் பிரயாணத்தில் விபத்துக்களோ மிகக்குறைவு. ஒன்றிரண்டு பேர்மட்டுமே அல்லாமல் பல்லாயிரம் பேரைப் பாதுகாப்பாய் கடலைக் கடக்க வைக்கும் வல்லமை உடையது கப்பல்.
இது நிற்க.
சரி, வாழ்வெனும் கடல் பயணத்தில், மனம் எனும் படகில் ஏறுவதா அல்லது அறிவெனும் கப்பலில் ஏறுவதா என்பதை நிர்ணயிப்பது எது? இது ஒரு மிகப் பிரம்மாண்டமான கேள்வி. ட்ரில்லியன் டாலர் வினா எனலாம். சொல்லப்ப்போனால், உலகின் பல்வேறு மதங்களும் அவற்றின் சமயங்களும் இவ்வினாவைப்பற்றியே எழுந்தவையாய்ப் பரிமளிக்கின்றன. மனத்தைப் பற்றியும் அறிவைப் பற்றியும் சமயங்கள் ஒவ்வொன்றும் எண்ணிறந்த வியக்கியானங்களைப் பொழிந்து சென்றிருகின்றன. சொல்லப்போனால், மனம் எனும் படகில் சாதரணப் பல்லோரும் ஏறிப் பயணித்து மாண்டு போவதை எல்லா சமயங்களுமே சித்திரமாய்த் தீட்டுகின்றன. மனமார்கத்துக்காய், மதியைத் தகவமைத்துக் கொள்ளும் – துணைக்கழைத்துக்கொள்ளும் சாதாரண மனித நடவடிக்கைகளால் எழும் விபத்துக்களையும் ஆபத்துக்களையும் சமயங்கள் யாவும் மனிதக் கதைகளைக் கொண்டே விளக்கிக் காட்டுகின்றன.
இந்நிலையில், அவ்வப்போது மகா மனுஷ்யர்கள் இவ்வுலகில் அவதரிக்கிறார்கள். இவர்களை அவதாரப் புருஷர்கள் என்று சொல்வதுண்டு. “புருஷ” என்றால் “ஆண்“ எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. “புருஷ” என்பது ஆண் – பெண் எனும் இருபாலருக்குமே பொதுவானது. புருஷ என்றால் சுற்றி நிகழும் சலனங்களுக்கு இலக்காகாத உறுதித்தன்மை உடையவர் என்பது பொருள். இவர்களைப் பிரபஞ்ச மனிதர்கள் என்பதுண்டு – விண்ணிலும், மண்ணிலும், வெளியிலும், கடலிலும் ஓராயிரம் சலனங்கள் எழுந்தாலும், பிரபஞ்சம் எவ்வாறு நிலைத்து நிற்கிறதோ அவ்வாறு இருப்பவர்கள் என்பது பொருள்.
மகா மனுஷ்யர்கள் அசாதாரணமானவர்கள். ஆனால் அவர்கள் யாவரும் சாதாரண மனிதர்களாகவே பிறந்தார்கள் – வளர்ந்தார்கள். ஆனால், அவர்கள், வாழ்க்கைக் கடலில் பயணித்தது மதியெனும் கப்பலில் – மனம் எனும் தோணியில் அல்ல. எந்த ஒன்று அவர்கள் இதனைச் செய்யுமாறு செய்தது? என்று நீங்கள் வினவுகிறீர்கள்.
விடை: ஒற்றைப்பதம்: சமூகப் பிரக்ஞை.
சமூகப் பிரக்ஞையுடன் எழும் தேடல், இறையுணர்வையும் தழுவி எழும் பாங்கை பல அவதாரப் புருஷர்களிடமும் காண்கிறோம், இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸின் தேடல் நவீன யுகத்தில், ஒரு புரட்சிகரமான நிகழ்வு என்றால் அது மிகையாகாது.
தொடருவோம்