வாழ்ந்திடுவோம் வளத்துடனே (சர்வதேச யோகா தினத்துக்கான கவிதை)

எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

traditional-yoga

இளமையாய் வாழவேண்டும் 

இன்பமாய் வாழவேண்டும்

நெடுதுநாள் வாழவேண்டும் 

நிறைந்திடும் மகிழ்ச்சிவேண்டும்

அளவிலா செல்வம்சேர்த்து

ஆனந்தம் பெருக்கிநின்று

மனையொடு மக்களாக

வாழ்வதை விரும்புகின்றோம் !

மண்ணிலே நல்லவண்ணம்

வாழ்ந்திட விரும்பும்போது

எம்மன எண்ணம்யாவும்

இழுக்கிலா இருத்தல்வேண்டும்

தன்னிலை உணர்தல்வேண்டும்

தன்னுடல் பேணவேண்டும்

உண்ணும் நம்உணவுயாவும்

உடலுளம் காக்கவேண்டும் !

உடலினைக் காக்கவேண்டில்

உளமதைப் பேணல்வேண்டும்

உளமது செம்மையானால்

உடலுமே உறுதிகொள்ளும்

உடலுளம் சிறக்கவேண்டில்

உயர்வுடை யோகம்தன்னை 

அயர்விலா செய்வோமாயின்

ஆனந்தம் பெருகுமன்றோ !

காமத்தைப் போக்கவேண்டும்

கோபத்தை ஒழிக்கவேண்டும்

காப்பி ரீஅத்தனையும்

கைவிட்டு விடவும்வேண்டும்

தினமுமே தவறிடாமல் 

தியானமுடன் தொடங்கிநாம்

உயர்யோகம் தனைச்செய்தால்

உயர்ந்துவிடும் எம்வாழ்வு !

யோகக்கலை தனைப்பயின்றால்

யோகமுடன் வாழ்ந்திடலாம்

சாகாத கலையாக

யோகக்கலை மிளிர்கிறது 

முற்கால ஞானிகளால்

முதுசொமாய் வந்திருக்கும்

எக்காலும் பயனைத்தரும்

இக்கலையை ஏற்றுநிற்போம் !

போதைதரும் குடிவகைகள்

புகைத்துநிற்கும் சுருட்டுவகை 

யாவுமெங்கள் வாழ்வினிலே

நலங்கெடுக்கும் நஞ்சாகும் 

யாமிவற்றை அகற்றிவிட்டு

நல்லயோகம் தனைக்கொண்டால்

நாளுமெங்கள் வாழ்வினிலே

நல்லயோகம் விளையுமன்றோ !

உடலுரத்தைத் தரும்பயிற்சி

உளவுரத்தைத் தருவதில்லை

உளமடங்கி வந்துவிடின்

உயர்வாழ்வு அமைந்துவிடும்

உளமடங்கா நிலையினிலே

உடல்கூட உருக்குலையும்

உடலுளத்தைக் காப்பதற்கு

உயர்மருந்து யோகமன்றோ !

நோயற்று வாழ்வதற்கும்

நோயணுகா இருப்பதற்கும்

தாய்போன்று வாய்த்ததுவே 

யோகக்கலை ஒன்றேதான்

வாழ்வதற்கு யோகக்கலை

வரமாக அமைந்திருக்கு

வாஞ்சையுடன் நாம்பயின்று

வாழ்ந்திடுவோம் வளத்துடனே !

யோகா (நன்றி: விக்கிபீடியா)

Leave a Reply

Your email address will not be published.